தாவர சங்கமம் – 3 : அறவி

கலைகளின் நகரமாகவும், பல்லவர்களின் தலைநகராகவும் இருந்த கச்சி என்னும் காஞ்சி[புரம்] என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காமாட்சியாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு மதுரை மீனாட்சிக்கு அடுத்தபடியாக காஞ்சி காமாட்சி நம் எல்லோரது மனத்திலும் பதிந்திருக்கிறாள்.
அதிலும் அவள் வேறெந்த ஊரிலும் இருப்பதுபோல் சிவனோடு அதாவது, சிவக்கோயில்களில் ஒரு தனிச் சன்னிதியாக இல்லாமல் தனித்து பெருங்கோயிலில் வீற்றிருந்து அரசாட்சி செலுத்தும் இடமாக காஞ்சி இருப்பது பலரும் அறிந்ததே என்றாலும், காமாட்சிக்கு உள்ள பல்வேறு பெயர்களில் ‘அறம் வளர்த்த நாயகி’ என்றொரு பெயர் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
[அதனால்தான் இவ்வூரில் உள்ள வெறெந்தக் கோயிலிலும் அம்பிகைக்கென தனியாகச் சன்னிதியோ, கோயிலோ கிடையாது. ஏகாம்பரேசுவரர் ஆலயத்திலும் மாவடிக் கந்தன் சன்னிதிக்கு அருகில் ஏலவார்க்குழலியின் சிறு சன்னிதி மட்டுமே உள்ளது.]
முன்பொருநாள் உமையம்மை தனது கண்களை விளையாட்டாக மூடி பிரபஞ்சத்தையே இருளடையச் செய்ததற்குப் பரிகாரமாக, பூவுலகில் பழமைவாய்ந்த காஞ்சி மாநகருக்குச் சென்று, மாமர நிழலின் கீழ் அமர்ந்த தன் இருப்பிடத்தினைச் சேர்ந்து பூசிக்கச் சொன்னார். அம்மையும் அவ்வாறே வந்து செய்ய, அப்போது திருவிளையாடல் புரிய எண்ணிய சிவபெருமான் அங்குள்ள கம்பை ஆற்றில் பெருவெள்ளம் கரைபுரண்டு வருமாறு செய்தார்.
அதனைச் சற்றும் எதிர்பாராத அன்னை, எங்கே தான் பூசிக்கும் மண்ணாலான லிங்கத்தின்மேல் பெருகிவரும் வெள்ளம் அலைக்கும் என அச்சம் கொண்டு, உயர் காதலோடு தன்னிரு கைகளாலும் மார்புடன் சேர்த்து தழுவிக் கொண்டார். அதனால் மனங்குழைந்த சிவனார், அம்மையின் தனத் தழும்பும், கைவளைத் தழும்பும் தன்மீது தோன்ற வெளிப்பட்டு அருள் புரிந்ததோடு, அவளது விருப்பத்திற்கிணங்க இருநாழி நெல்லளித்து அதைக்கொண்டு உலகம் உய்ய அறம் வளர்க்கும்படி வரம் தந்தார்.
அன்னையும் அதனை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, அங்குள்ள வேளாளர்களிடம் கொடுத்து உழவுத்தொழிலைப் பெருக்கி முப்பத்திரண்டறம் வளர்த்து வந்ததாகச் சொல்கிறது தலபுராணம். இதனை,
‘ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி…’
என அபிராமி அந்தாதியில் (57) அபிராமிப் பட்டரும்,
‘எக்குலம் குடிலோடுலகி யாவையும்
இற்பதிந்திரு நாழி நெல்லால் அறம்
எப்போதும் பகிர்வாள் குமரா என உருகேனோ’
என திருப்புகழின் 246 ஆவது பாடலிலும்,
‘உமையாள் சேர்ந்தருள் அறம் உறு
சீர் காஞ்சியில் உறைவோனே’
என 338 ஆவது பாடலிலும் அருணகிரிநாதரும் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம்.
இந்நிகழ்வை இன்னும் தெளிவுற இயம்புகிறது, சேக்கிழாரின் பெரியபுராணம் (திருக்குறிப் – 69, 70, 71).
‘மாறி லாதஇப் பூசனை யென்றும்
மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி
ஈறி லாதஇப் பதியினு ளெல்லா
அறமும் யான்செய அருள்செய வேண்டும்……’
‘…….இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக
இகப ரத்திரு நாழிநெல் லளித்துக்……..‘
‘…….புண்ணி யத்திருக் காமக்கோட்டத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.‘
அதாவது, காஞ்சியில் இருந்துகொண்டு மாறேதும் இல்லாத பூசனை எப்போதும் அங்கே விளங்கிட எம்பிரான் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டருளி, முடிவிலாத அப்பதியினுள் இருந்து எல்லா அறங்களையும் தான் வளர்த்திட திருவருள் செய்திடல் வேண்டுமென்று முதற்பாடலிலும்… உமையம்மை விரும்பியவாறு இடையறாது அறத்தை வளர்த்திடும் வித்தாக, இம்மை மறுமை ஆகிய இரண்டிற்கும் ஏதுவாக இருநாழி நெல்லைக் கொடுத்து (உயிர்களின் இம்மைக்கு ஒரு நாழி, மறுமைக்கு ஒரு நாழி) சிவபெருமான் அருள் புரிந்ததை இரண்டாம் பாடலிலும்… அம்மை காமக்கோட்டத்தில் வீற்றிருந்து இல்லறம் இனிது பெருகவும், கருணையினால் உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் பெருக உற்ற காதலினால் நீடி நிலைத்திருக்கவும் முப்பத்திரண்டறம் வளர்த்ததை மூன்றாம் பாடலிலும் காணலாம்.
அறம் என்ற சொல்லுக்கு பொதுவாக தருமம், புண்ணியம், தகுதியானது, சமயம், ஞானம், அறச்சாலை, நோன்பு, தீப்பயனுண்டாக்குஞ்சொல், தருமதேவதை, சுகம், இதம், நல்வினை, ஐயம், ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுப்பது, நோயாளிகளுக்கு இலவசமாக மருந்தீகை, நலமானது, இன்பம், கற்பு, யமன் என பத்தொன்பது பொருள்களை தருகின்றன தமிழ் லெக்சிகன் அகராதியும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும்.
கூடவே, அறத்துக்கு அறவி, செம்பொருள், தருமம், நன்று, நேர்மை, பெரும்பொருள், பொருள், அக்கரம், நல்லது, நலம் போன்ற சில நிகர்ச்சொற்கள் இருப்பதையும்… அறமெனும் சொல்லைக் கொண்டு அருளறம், அறக்கடவுள், அறக்கருணை, அறத்தவிசு, அறத்துறுப்பு, அறம்பாடுதல், அறவழக்கம், அறத்தளி, அறதேயன் அறவன், அறவோலை உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான சொற்கள் உள்ளதையும் காட்டுகின்றன.
‘அறஞ்செய விரும்பு’ என்பது ஒளவையார் வாக்கு (ஆ.சூ – 1). அதே ஒளவையார், ‘இல்லறம் அல்லது நல்லறம் அன்று‘ என்கிறார் இன்னோர் இடத்தில் (கொன்.வே – 3).
‘வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை‘ என்பார் வள்ளுவர் (221).
‘……..வறிஞர்க்கென்றும்
நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்‘ இது அருணகிரிநாதர் (கந்தரல.18).
‘யாவர்க்குமாம் இறைவர்க்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே‘ இது திருமூலர் (திருமந்.252).
அணிகலம் இல்லாதவர்க்கு அணிகலமாகவும், அழகு இல்லாதவர்க்கு அழகாகவும், நோயாளர்களுக்கு நன் மகிழ்ச்சியாகவும், பிறவாய்ப்புகள் இல்லாதவர்க்கு வாய்ப்பாகவும், துணிவில்லாதவர்க்கு துணிவாகவும், உணவில்லாதவர்க்கு உணவாகவும் அமைந்துள்ள ஒன்றே அறம் என்கிறது நீதிநூல் (42 : 20).
‘அணியிலார்க் கணியாம் வாய்ந்த அழகிலார்க் கழகாம் நீண்ட
பிணியினார்க் கெக்க ளிப்பாம் பேறிலார்க் கன்ன தாமுள்
துணிவிலார்க் குணர்வெல் லாமாம் துப்பிலார்க் கொப்பில் துப்பாம்
தணிவில்பாக் கியங்க ளெல்லாம் தருமமல் லதுவே றுண்டோ’
அதே நீதிநூல் (42 : 18), அமுதுக்கு முன்னர் வேறு இனிமையான பொருள்கள் இல்லை; கதிருக்கு முன்னர் வேறு ஒளிமிக்க சுடர்கள் இல்லை; முத்திக்கு முன்னர் வேறு உயரிய இன்பம் இல்லை; அதைப்போல அறத்திற்கு ஒப்பான செல்வம் எதுவும் இல்லை என்றும்… நாலடியார் (118), வெள்ளை, சிவப்பு, கறுப்பு என எத்தனை நிறப் பசுக்களில் கறந்தாலும் அவற்றின் பால் தூய வெண்மையாகவே இருக்கும். அதுபோல அறத்தை எத்தனை வகைகளில் செய்தாலும் அதன் பயன் ஒன்றுதான் என்றும் சொல்கிறது.
‘இன்னமு தத்தின் முன்வே றினிமையும் உளதோ பானு
முன்னமோர் சுடரும் உண்டோ மோக்கத்திற் சுகம்வே றுண்டோ
துன்னற மேநல் லோர்க்குத் துகளறு செல்வ மாகும்
அன்னதை அன்றி வேறோர் ஆக்கமும் வேண்டும் கொல்லோ.‘
‘ஆவேறு உருவின ஆயினும் ஆபயந்த
பால்வேறு உருவின அல்லவாம்; – பால்போல்
ஒருதன்மைத்து ஆகும் அறம்; நெறி ஆபோல்
உருபு பலகொளல் ஈங்கு.’
இவ்வாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் அறம் பற்றி நம் முன்னோர்கள் கூறியிருப்பதை வைத்துப் பார்க்கையில், அந்தந்த சூழ்நிலைகளில் அவற்றை அனுசரித்துச் செய்யப்படும் நற்செயல்களே அறம் எனத் தெளியலாம்.
இன்னும் ஒருபடி கீழே இறங்கிச் சொல்லப்புகுந்தால், சாதாரணக் குடியானவன் ஒருவன் குறையிரந்து நிற்போர்க்கு குறுநொய் கொடுப்பதிலிருந்து, வெண்கொற்றக் குடையுடைய வேந்தன் ஒருவன் கொலையிற் கொடியாரை கொடுவாளால் ஒறுப்பது வரை அறமென்றே சொல்லலாம்.
இப்படிப்பட்ட அறம், ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்திரண்டை, இல்லறத்தார்க்கென்று இக்காஞ்சியில் தான் வளர்க்கப் போவதாக, தன்மூலமாக மற்றோரையும் வளர்க்கச் செய்ய அது ஏதுவாக இருக்கும் என்பதாக சிவனிடம் கேட்டுப் பெற்று, காமக்கோட்டத்தில் இருந்துகொண்டு நீடுலகங்களுக்கு ஆதாரமாய் வளர்த்திருக்கிறாள் அன்னை காமாட்சி. அதுவும் என்னென்ன தெரியுமா?
‘ஆதுலர் சாலை, ஓதுவார்க்கு உணவு, அறு
சமயத்தோர்க் குணவு, பசுவுக்கு வாயுறை,
சிறைச்சோறு, ஐயம், நடைத் தின்பண்டம், மகச்சோறு,
மகப்பெறு வித்தல், மகவளர்த்தல், மகப்பால்,
அறவைப்பிணம் சுடுதல், அழிந்தோரை நிறுத்தல்,
வண்ணார், நாவிதர், வதுவை, பூணூல், நோய்மருந்து,
கண்ணாடி, நாளோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய்,
பெண்போகம், அட்டூண், பிறரறங் காத்தல்,
தண்ணீர்ப் பந்தர், மடம், தடாகம், கா,
ஆவுரிஞ்சு நடுதறி, ஏறுவிடுத்தல்,
விலையுயிர் கொடுத்துக் கொலைஉயிர் மீட்டல்
இச்செயல் முப்பத் திரண்டுஅறம் என்ப.’ (திவாகரம் – 2459)
அதாவது,
1. ஆதுலர் சாலை – நோயாளிகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் உணவும் உறையுளும் வழங்கும் சாலை அமைத்தல்.
2. ஓதுவார்க்கு உணவு – நன்னெறிகளை கற்பவர்களுக்கு நல்ல முறையில் கல்வி புகட்டி உணவளித்தல்.
3. அறுசமயத்தோர்க்கு உணவு – சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணபத்தியம், கௌமாரம் என்னும் அறுவகை சமயத்தார்க்கும் உணவு வழங்குதல்.
4. பசுவுக்கு வாயுறை – பசுவிற்கு பசும்புல்லை அரிந்த உணவாகக் கொடுத்தல்.
5. சிறைச்சோறு – சிறையில் அடைபட்டிருப்போர்க்கு நல்ல உணவு தருதல்.
6. ஐயம் – யாசகம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் இயன்றதை செய்தல்.
7. நடைத் தின்பண்டம் – வழிப்போக்கர்களுக்கு தின்பண்டம் நல்கல்.
8. மகச்சோறு – யாருமற்ற குழந்தைகளுக்குப் பசியாற்றுதல்.
9. மகப்பெறுவித்தல் – எளியோர்க்கு கைமாறு கருதாது மகப்பேறு பார்த்தல்.
10. மகவளர்த்தல் – ஆதரவற்ற குழந்தைகளை தாய் போல் வளர்த்தல்.
11. மகப்பால் – தாயைப் பறிகொடுத்த குழந்தைகளுக்கும், தாய்ப்பால் சுரக்காத தாயின் குழந்தைக்கும் பாலூட்டுதல்.
12. அறவைப் பிணம் சுடுதல் – நாதியற்றோரின் உடலுக்கு ஈமச்சடங்கு செய்து, தகனம் செய்ய உதவுதல்.
13. அழிந்தோரை நிறுத்தல் – வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்களில் தவிக்கும் மக்களுக்கு வேண்டியவை தந்து வாழ்வித்தல்.
14. வண்ணார் – எழை எளியோர் துணி துவைக்க உதவுவதோடு, வண்ணார்களுக்கு தரவேண்டிய கூலியை தாமதிக்காமல் கொடுத்தல்.
15. நாவிதர் – ஏழை எளியோர் முடிவெட்டவும், முகச்சவரம் செய்யவும் உதவுவதோடு, நாவிதர்களுக்கு தரவேண்டிய கூலியை உடனே தருதல்.
16. வதுவை – எழைப் பெண்களுக்கும், திருமண வயது நெருங்கியும் திருமணமாகாமல் தவிக்கும் முதிர்கன்னிகளுக்கும் வரன் தேடிக் கொடுத்தும், திருமணம் செய்துவைத்தும் உதவுதல்.
17. பூணூல் – வேண்டுவோரை தேடிப்போய் பூணூல் வழங்குதல்.
18. நோய் மருந்து – நோயாளிகளுக்கு இன்சொல் கூறி மருந்தளித்தல்.
19. கண்ணாடி – ஒருவர் தங்களை ஒழுங்குபடுத்தி சரிசெய்துகொள்ள கண்ணாடி தருதல்.
20. நாளோலை – கைமாறு எண்ணாது தகவல் அறிவித்தல்.
21. கண்மருந்து – கண்நோய்க்கு வேண்டிய மருந்தளித்தல்.
22. தலைக்கெண்ணெய் – பரட்டைத் தலையோடு இருக்கும் ஏழை எளியோருக்கு தலைக்கு எண்ணெய் வழங்குதல்.
23. பெண்போகம் – தனக்குரிய பெண்ணிடம் முறையான இன்பம் அனுபவிக்க வழியில்லாதவர்க்கு உரிய தனியிடம் அமைத்துத் தருதல்.
24. அட்டூண் – காலநேரம் பார்க்காமல் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தல்.
25. பிறரறங் காத்தல் – பிறர் பேணும் அறம் காத்து நிற்றல்.
26. தண்ணீர்ப்பந்தர் – தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர்ப் பந்தல் உருவாக்குதல்.
27. மடம் – வழிப்போக்கர்கள் உண்டு இளைப்பாறிச் செல்ல மடம் அமைத்தல்.
28. தடாகம் – உயிர்கள் நீர் அருந்த குளம் தோண்டி, அவற்றில் மீன் உள்ளிட்டவை வாழ வழிவகை செய்தல்.
29. கா – நிழல் தரும் மரங்கள் நட்டு பூஞ்சோலை அமைத்து, அங்கே வரும் பறவைகளுக்கு உணவும் நீரும் தந்து உதவுதல்.
30. ஆவுரிஞ்சுதறி – பசுக்கள் மேயும் இடங்களிலும், கொட்டில்களிலும் அவை தம் உடலை தேய்த்துக்கொள்ள உராய்ஞ்சிக்கல் நிறுவுதல்.
31. ஏறுவிடுத்தல் – பசுக்களை சினைப்படுத்த தரமான எருதுகள் கொடுத்து உதவுவதோடு, அவற்றை சரிவரப் பேணுதல்.
32. விலைஉயிர் கொடுத்துக் கொலைஉயிர் மீட்டல் – கொலைக் களத்தில் பொருள் கொடுத்து சிற்றுயிர்களை வாங்கிக் காத்தல்.
இவ்வாறு முப்பத்திரண்டு அறத்தை, அதுவும் ஆதரவற்ற சிறுவர்கள் தொடங்கி முதியோர்கள் வரைக்கும், சிறு புல்பூண்டுகள் தொடங்கி பெருமரங்கள் வரைக்கும், புழுபூச்சிகள் தொடங்கி பசுக்கள் வரைக்குமான தாவர சங்கமங்களின் மீது கொண்ட தாய்மை பாசத்தால் வளர்த்திருக்கிறாள் அன்னை.
இங்கே ‘பசு தன் உடலைத் தேய்க்க தறி அமைப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் அறமாகுமா? அல்லது அத்தனைப் பெரிய அம்மை போய் இத்தனைச் சிறிய அறங்களை செய்வதா?’ எனக் கேட்பின், ‘மிகச் சிறிய அறமே என்றாலும், அது தக்கவர்களுக்கு செய்யும்போது மிகப் பெரிய அறமாகிவிடும்’ என்பதே பதில்.
அதுவும் எவ்வாறு தெரியுமா? ஆலம் விதை மிகச் சிறிதாக இருந்தாலும், யானை குதிரை தேர் காலாள் ஆகிய நான்கு படைகளும் தங்கும் அளவுக்கு விரிந்து நிழல் தரும் மரமாக முளைத்து வளர்கிறதல்லவா, அதுபோலத்தான் என்கிறது நாலடியார் (38).
‘உறக்கும் துணியதுஓர் ஆலம்வித்து ஈண்டி
இறப்ப நிழல்பயந் தாஅங்கு – அறப்பயனும்
தான்சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால்
வான்சிறிதாப் போர்த்து விடும்.’
எது ஒன்றையும் தன்னிலிருந்து தொடங்குதல் தலையாயது என்பது சான்றோர் மொழி. அவ்வகையில் காஞ்சியிலிருந்து அன்னை தான் எண்ணிய முப்பத்திரண்டறத்தை தன்னறமாக, எவ்வித பிரதிபலனும் பாராது தன்னிலிருந்து தொடங்கி வளர்த்திருக்கிறாள். அதனால் உயிர்கள் மகிழ்வுடன் வாழ்ந்ததோடு, ஆயக்கலைகளும் சிறப்போடு வளர்ந்திருக்கிறது. அதனாலேயே காஞ்சி மற்றெல்லா நகரங்களைக் காட்டிலும் நிகரில் கலைநகரமாக விளங்கியிருக்கிறது. ஆம்!
‘இப்பூமியில் எத்தனை எத்தனையோ ஊர்கள் இருக்க, ஏன் காஞ்சியில் வந்து அம்மை அறம் வளர்க்கவேண்டும்?’ என இங்கே இன்னொரு கேள்வி எழலாம். இதுதானே பஞ்ச பூதங்களில் பூமியை குறிக்குமிடம். இங்கேதானே சிவன் மண்ணாக இருக்கிறான். அப்போ, காஞ்சி என்பது காஞ்சி மட்டுமல்ல… ஒட்டுமொத்த உலகும் அடங்கியதுதான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
தாய்மை ஒருபோதும் தனக்கான சுயநலமாக இருக்காது என்பதற்கு அவள் வளர்த்த இம்முப்பத்திரண்டறப் பட்டியலை ஒருதடவை வாசித்தாலே போதும். இவ்வாறு தானே வந்து, தன் மூலமாக இப்புவியில் அறம் வளர்த்த நாயகி இருக்கும் காஞ்சியில், இன்று எத்தனை வகையான அறங்கள் வளர்க்கப்படுகிறது என்று பார்த்தால், அந்த அறத்தி முன்னால் நாமெல்லாம் சிறு துகளினும் துகளினும் துகள் அளவுக்குக் கூட அறம் வளர்க்கவில்லை என்பது தெரியும்.
எது ஒன்றும் வளர்க்கப்படுகையில் பல மடங்காய்ப் பெருகும் என்பது இயற்கை விதி. ஆனால் இவ்வறம் விஷயத்தில் அவ்வாறு இல்லாமல் சுருகி ஓர் அறமாவது இன்றைக்கு வளர்க்கப்படுகிறதா? எனத் தேடும் அவல நிலைக்கு இப்பூமியை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம்.
இந்நிலை மாற ஒரே வழி, அவள் வளர்த்த முப்பத்திரண்டறத்தில் நம்மால் இயன்றதை தன்னறமாகக் கொண்டு எந்நிலையிலும் விடாமல் வளர்ப்பதுதான்.
தெய்வம் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும், உம்மிலும் இருக்கும் எம்மிலும் இருக்கும் என்பது நிஜம் என்றால், அத்தெய்வம் வளர்த்ததை நாமும் வளர்ப்பதுதானே முறை? அதுதானே அறத்தில் தலையாயது? ஆம், அப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.
(கொலுசு – பிப்ரவரி 2023 இதழில் வெளியானது.)
*