சொல்லின்றி எதுவுமற்றவன்! – 039
பொதுவாக எல்லோரும் காதல் பாடல்கள் அல்லது குத்து பாடல்கள் எழுதி சட்டெனப் பிரபலமாக நினைக்கையில், நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து சமூகம் சார்ந்த அக்கறையுடன் தனிப்பாடல்கள் எழுதி வந்தீர்கள்; வருகிறீர்கள்?
எல்லாவிதமான பாடல்களும் இங்கே தேவைதான் என்றாலும், தனிப்பாடலின் நோக்கமாக, பலமாக நான் நினைப்பது திரைப்பாடல்களில் செய்யமுடியாததை இதிலே செய்யலாம் என்பதுதான். அப்படியிருக்க அதே காதல் பாடல்களை; குத்து பாடல்களை ஏன் இங்கேயும் எழுதவேண்டும்? என்று நினைத்தேன்.
இந்த எனது கேள்விதான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் குரல் கொடுத்து ‘மனிதா… மனிதா…’ பாடலையும், விவசாயிகளின் ஒருமித்தக் குரலாக ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’ பாடலையும், பணத்துக்காக ஓட்டை விற்கும் மக்களை கண்டித்து ‘ஓ, மக்களே’ போன்ற பல பாடல்களையும் தொடர்ந்து எழுத வைத்தது.
ஒரு பாடலால் உடனே பிரபலமாகவேண்டும், பல பார்வையாளர்களை போய் சேரவேண்டும் என்பதைவிட, நான் எழுதும் பாடல் எனது மனத்துக்கு திருப்தியாக இருக்கவேண்டும். அதைக் கேட்கும் ஒருவரது வாழ்விலாவது நன்மையை விதைக்கவேண்டும். ஒருபோதும் யாரும் முகம் சுழிக்கும்படி இருந்துவிடக்கூடாது என்பதே முக்கியமாகப் பட்டதால், இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்.
நாங்கள் நினைத்திருந்தால் தரம் தாழ்ந்த வரிகளையும், ஆபாச காட்சிகளையும், இசைக்கோர்ப்பையும் பாடலில் வைத்து ஒரே நாளில் நீங்கள் சொல்வதுபோல் பிரபலம் ஆகியிருக்கமுடியும். அதெல்லாம் வேண்டாம், அது எங்கள் நோக்கமும் இல்லை என்றுதான் விட்டுவிட்டோம்.
[இன்னும்]
*