”பெரு நிகழ்வின் சிறுதுளி’’ – ‘ஏலேலோ பாட்டு’ நூல் என்னுரை

”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.
எந்தவொரு பெருஞ்செயலும் ஏதோவொரு சிறு புள்ளியில்தான் தொடங்கும் என்பார்கள். அப்படித்தான் தொடங்கியது எங்களின் இந்த ‘ஏலேலோ பாட்டு’. அதுவும், தோழி விதார்த்தி வழியாக முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நண்பரும் இசையமைப்பாளருமான திரு. ஷ்ரவன் கலை அவர்களைச் சந்தித்தபோது பேச்சின் நடுவே உதித்த எண்ணம் வழியாக.
உடனே தொடங்கலாம் என்றுதான் நினைத்தோம். போதிய வசதி, வாய்ப்பின்மையால் அடுத்தாண்டு, அடுத்தாண்டு என தள்ளித் தள்ளி 2020 வரைக்கும் வந்துவிட்டோம். இனியும் தள்ளிப் போடக் கூடாது என கடந்த செப்டம்பர் மாத மத்தியில் சந்திக்கையில் பேசி, எங்கள் முகநூல் பக்கத்தில் (செப்டம்பர் இருபதாம் தேதி முன்னோட்டப் பாடல்வழி) அதற்கான அறிவிப்பை உடனே வெளியிட்டோம்.
‘என்னது 100 நாள், 100 பாட்டு, 100 நொடியா? கேட்கவே வியப்பா இருக்கே’ என ஒரு சிலரும், ‘இதெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை. அதுவும் நீங்க ரெண்டு பேர் மட்டும் சேர்ந்து, சுத்தமா வாய்ப்பே இல்லை’ என இன்னும் சிலரும் சொல்ல… எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் எங்கள் முடிவில் உறுதியாக இருந்தோம்.
செப்டம்பர் 23 ஆம் தேதி ‘போறா’ பாடலோடு ஆரம்பமானது இப்பெரும் பயணம். ‘இவங்க என்னதான் செய்யப் போறாங்க?’ எனப் பார்க்க காத்துக் கொண்டிருந்த பலரும் வியந்து, ‘நூறு நொடிக்குள்ள, அதுவும் இவ்வளவு அழகா பாட்டு பண்ணமுடியும்னு கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கல. வாழ்த்துக்கள்’ என்றார்கள்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பாடல்கள், புதுப்புது முயற்சிகள். கிட்டத்தட்ட தொடாத இடமே இல்லை என்னும் அளவுக்கு அவ்வளவு மெனக்கிடலோடு அனைத்துப் பாடலையும் உருவாக்கினோம். ‘மழை வான் மறப்ப’ என புறநானூறு காலத் தமிழிலும், ‘ஹக்பிக் ஹக்பிக்’ என இன்றைய தொழில்நுட்பக் காலத் தமிழிலும் ஒருசேர எழுதினேன். அதிலும் கூகுள் ராஜா, சுயமிக்காரன், குளம்பி காதல், அவளும் நானும், மஞ்சள் மேகமே, குறுந்தொகை கண்ணால, கனவியே போன்ற பல பாடல்கள் யாரும் எதிர்பாராதது.
தொடர்ந்து கேட்டு வந்தவர்கள் கேட்பதோடு நிற்காமல், அதுகுறித்த தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர ஆரம்பித்தார்கள். யாரென்று தெரியாத பல புதிய ரசிகர்கள் எங்களை நோக்கி வந்தார்கள். பலர் எங்களின் பயணத்தில் இணைந்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். சில நண்பர்களும் தங்களின் பங்களிப்பை தர முன்வந்தார்கள். ஆரம்பத்தில் எப்படி நூறுநாளை எட்டப் போகிறோம் என்று உள்ளுக்குள் இருந்த ஒருவித பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி ஒருகட்டத்தில் இல்லாமல் போய்விட்டது.
உரையல், ககனம், கைக்கிளை, மறப்ப என ஈராயிரம் ஆண்டுகால பழைய தமிழ்ச் சொற்களை ஒரு பக்கமும்… அணில்காய், அவிஞ்சிப்பழம், டிப்பிடிப்பி, அரசங்கல், கப்பை, ஓணாங்கொடி, வர்ணக்கோல், மஞ்சம்புல் என தமிழ் சினிமா இதுவரை கேட்டிராத எங்கள் கிராம சொற்கள் ஒருபக்கமும் என நான் எழுத, இசையமைப்பாளர் திரு. ஷ்ரவன் கலை அவர்கள் தன் பங்குக்கு புதுப் புது முயற்சிகளை வாய்க்கும் இடத்திலெல்லாம் செய்து காட்டினார்.
இப்பாடல் பயணத்தில் மைமை, மனவில், ஒளிலி உள்ளிட்ட இன்னும் எத்தனையோ புதுப்புது சொற்களை உருவாக்கித் தந்திருக்கிறேன்.
தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் ‘மழை வான் மறப்ப’ பாடலையும், ‘கானகா’ பாடலையும் குறிப்பிட்டு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது நான் சற்றும் எதிர்பாராதது. அதுவும் ”புறநானூறு தமிழில் இன்றைய இளைஞர்களும் கேட்டு ரசிக்கும்படி எழுதியது பாராட்டுக்குரியது. அதேநேரம், கானகா பாடலில் வார்த்தைகளை திருப்பிப் போட்டாலும் அதே வார்த்தையாக வரக்கூடியவாறு பாடல் முழுக்க எழுதியுள்ளது வியப்பாக உள்ளது. மிகுந்த பாராட்டும், வாழ்த்தும்” என்றதை, எங்களின் நூறு நாள் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.
2021 ஆம் ஆண்டை நூறு பாடல்களோடு வரவேற்க வேண்டும் எனும் பெரும் சவாலோடு தொடங்கிய எங்களின் இப்பயணம், நினைத்தது போல் டிசம்பர் 31, 2020 அன்று நூறாவது பாடலோடு நிறைவுபெற்றது. நடுநடுவே பற்பல தடைகள். யாவற்றையும் கடந்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளோம். பெரும் எண்ணிக்கையில் பார்த்துக் கேட்டுக் கொண்டாடவில்லை என்றாலும், கண்டு கேட்ட யாவரும் மனதாரப் பாராட்டினார்கள்.
‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி’ என்பது உலகில் இதுவரை யாரும் செய்யாதது, முயன்றுகூட பார்க்காதது. அவ்வகையில் பார்த்தால் இதுவோர் உலக சாதனை. அதுவும் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரின் பங்களிப்போடு நிகழ்த்தப்பட்ட பெரும் சாதனை. அனைத்தும் அன்றன்றே உருவாக்கி வெளியிடப்பட்ட பாடல்கள். இனி பலரும் இதுபோன்று செய்ய முயற்சிக்கலாம். சிலர் செய்தும் காட்டலாம். என்றபோதும் இதன் முதல் ஆரம்பப்புள்ளி நாங்கள்தான்.
எங்களைத் தொடர்ந்து தற்போது கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் எங்களின் ‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி’ என்பதையொட்டி ‘100 பாடல்கள் – 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள்’ என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அவருக்கு இதோ இந்நூல் வழியாக எங்கள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
இத்தனைப் பெரிய நிகழ்வு சாத்தியமாக முதல் முக்கியக் காரணம் இசையமைப்பாளர் திரு. ஷ்ரவன் கலை அவர்கள். அவரது உழைப்பு நிகர்சொல்ல முடியாத பேருழைப்பு. வருங்காலங்களில் இசைத்துறையில் பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்தவுள்ள அவருக்கு இந்நூலை பேரன்போடு சமர்ப்பணம் செய்கிறேன்.
எங்கள் ‘ஏலேலோ பாட்டு’ பயணத்தில் உறுதுணையாக இருந்து பங்களிப்பு நல்கிய ஒவ்வொரு உள்ளங்களுக்கும், இந்நூல் வெளியாக மிக முக்கியக் காரணமாக இருந்த நண்பர் ராம் அவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் இத்தருணத்தில் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்நூலின் மற்றுமொரு சிறப்பு நான் பெரிதும் மதிக்கும் படைப்பாளுமை திரு. ரவிசுப்பிரமணியன் அவர்கள் தந்துள்ள முன்னுரை. கவிஞர், ஆவணப்பட இயக்குனர் என்பதைத் தாண்டி நான் கண்டு பழகிய மிகச் சிறந்த மனிதர்களில் இவரும் ஒருவர். அவருக்கு என் பேரன்பும், நன்றியும்.
‘100 நாள் – 100 பாடல் – 100 நொடி’ எனும் பெரு நிகழ்வின் சிறுதுளி மட்டுமே இந்நூல். இச்சிறு துளியில் மூழ்கி பெருநிகழ்வின் அங்கமாகப் போகும் யாவருக்கும் எங்கள் அன்பும் வாழ்த்தும்!
– வடிவரசு
ஜனவரி 01, 2021
சென்னை – 34
*
”பஞ்சுகிட்டங்கியின் மூலையில் சாதுவாய்க் கிடக்கும் அறமெனும் சிறு கங்கு.” – ரவிசுப்பிரமணியன்.