அன்பு சுவர்

இதுவரை செல்லாத புதுப்புது பாதை வழியாக புதிய இடங்களுக்கு நடந்து போய் வருவது மிகப் பிடித்த ஒன்றெனக்கு. அதிலும் செல்லும் வழிகளிலும், இடங்களிலும் எதிர்படும் மனிதர்களையும், அவர்களது முகங்களையும், செயல்களையும் கவனிப்பது அலாதிமிக்கது. அவ்வாறு சில தினங்களுக்கு முன் எங்கள் வீடிருக்கும் ஜமீன் பல்லாவரம் பகுதியில் நடைசென்று வரும்போது கவனித்த ஒன்றை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. ஆம்!

அன்றைய தினம் விடிகாலையில் சற்று சீக்கிரமாகவே எழுந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்துவிட்டு, எங்காவது புது வழியில் நடந்து சென்று எங்கேனும் ஓரிடத்தில் உட்கார்ந்து சில கட்டுரைகளை நகர்பேசியில் வாசித்துவிட்டு வரலாம் எனப் புறப்பட்டேன்.

எண்ணியது போல் பல்லாவரம் மலையை ஒட்டிய புது வழியில் நடந்து போய் ஓர் அம்மன் கோயில் முன்புறம் இருந்த பெரிய திட்டின் மீது உட்கார்ந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாக வாசித்துவிட்டு, இன்னொரு புதுத்தெருவுக்குள் நுழைந்து அத்தெரு முனையில் இருந்த தேநீர் கடையில் தேநீர் பருகிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு வர நினைத்து தர்கா சாலையில் எதிர்வரும் மனிதர்களையும், வாகனங்களையும் கவனித்தபடி வந்துகொண்டிருந்தேன்.

ஓர் எண்பது வயதானப் பாட்டி ஐந்து வயதானக் குழந்தையுடன் (அவர் பேத்தியாக இருக்கும் என நினைக்கிறேன்) இடது பக்கமாக கட்டிடக் குவியல்களுக்கு முன்பிருந்த சுவர் ஓரமாக நின்றுகொண்டு சாலையில் வருவோர் போவோரையும், நடுநடுவில் அங்கிருந்த சுவரையும் பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர்களையே கவனித்துக்கொண்டு மிக மெதுவாக அவ்விடத்தைக் கடந்தேன். அங்கே கண்ட காட்சி ஒன்று என் மனத்தை சட்டென நெகிழச் செய்துவிட்டது. அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகில் இருந்த சுவரில் ‘அன்பு சுவர்’ என எழுதியிருந்தது. கீழே வரிசையாக அலமாரிகள். ஒவ்வொன்றிலும் பழைய மற்றும் புதிய ஆடைகள். முழுவதும் இல்லாமல் அதேநேரம் மிகக் குறைவாகவும் இல்லாமல் ஓரளவுக்கு இருந்தது.

சாலையின் மறுபுறம் வந்து எங்கள் வீட்டுக்குப் போகும் தெருமுனையில் நின்றுகொண்டு அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன நினைத்தாரோ பாட்டி, சட்டென்று அதிலிருந்து ஓர் ஆடையை எடுத்துக்கொண்டு சிறுமியின் கையைப் பிடித்து வேகமாகக் கூட்டிக்கொண்டு சாலையைக் கடந்து, நான் நின்றிருந்த தெருவுக்குள் நுழைந்து சற்று தூரத்தில் இருந்த பெரிய புங்கை மரத்தடியில் போய் நின்றுகொண்டு தன் பேத்திக்கு அந்த பச்சை நிற கவுனை ஆசையாக அதேநேரம் அரிபிரியாக மாட்டிவிட்டார்.

கண்டதும் கண் கலங்கிவிட்டது. அதற்கு மேல் என்னால் அங்கே நிற்க முடியவில்லை. நடந்து வேகமாக வீட்டுக்கு வந்து உட்கார்ந்து நெடுநேரமாகியும் அந்நிகழ்வு என்னை பெரிதும் தொந்தரவு செய்தது. அதிலும் அன்பு சுவர் கீழே இருந்த ‘இருப்போர் கொடுக்க; இல்லாதோர் எடுக்க’ என்னும் வாசகம் நினைக்க நினைக்க நெகிழச் செய்தது.

இத்தனைக்கும் அந்த சுவர் இருப்பது ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவு வாயில் அருகே. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் கடந்துபோகும் முக்கியச் சாலையில். பெரும் செல்வந்தர்களும் அடுத்தவேளை சோற்றுக்கு அல்லாடும் வயிற்றுப் பாடர்களும் வாழும்பகுதியில்.

பார்ப்பதற்கு இது ஏதோ மிகச் சாதாரணதென்று தோன்றலாம். இதில் என்ன பெரிய சிறப்புள்ளது எனக் கேட்கலாம். உண்மையில் தம்மிடம் இருப்பதை மனமுவந்து இல்லாதோர்க்கு தர எண்ணுவோர்க்கும், இல்லாமையில் உழன்றுகொண்டு இருக்குமிடம் தேடுவோர்க்கும்தான் இதன் அருமை என்னவென்று தெரியும், புரியும்.

ஒற்றைக் கிழிந்த ஜட்டியை மட்டுமே அணிந்திருந்த அந்தச் சிறுமிக்கு அம்மூதாட்டி அக்கவுனை போட்டுவிட்டதும், ஏதோ ஒரு துணிக்கடையிலிருந்த மொத்த ஆடையும் தனக்குக் கிடைத்ததுபோல் அத்தனை மகிழ்வுற்றாள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அப்படித்தான் இதை எடுத்துக் கொண்டேன். இச்சிறுமி போல் இன்னும் எத்தனை எத்தனையோ சிறுவர், சிறுமிகள் தொடங்கி பெரியவர்கள் வரை அச்சுவரால் பயன் பெற்றிருப்பார்கள். இனியும் பெறுவார்கள். ஆம்!

ஏற்கனவே இதுபோல் வெளிநாடுகளில் (ஏன் நம் நாட்டில் கூட இருக்கலாம்) இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னைக் கேட்டால் பகுதிக்கொன்று இருக்க வேண்டும் என்பேன். அதில் ஆடை தொடங்கி… புத்தகங்கள், உணவுப் பொருட்கள், தேவையற்ற வீட்டு உபயோகப் பொருட்கள் என எதை வேண்டுமானாலும் வைக்கலாம். கொடுக்க எண்ணுவோர்க்கும் பெற நினைவோர்க்கும் ஒரு பாலமாக, ஒரு சுவராக அது இருக்கவேண்டும். அவ்வளவே!

‘அன்பு சுவர்’ எத்தனைப் பொருத்தமானப் பெயர் என மனைவியிடம் சொன்னேன். ‘ஆமா’ம் எனச் சொல்லிவிட்டு போய் வீட்டிலிருந்த சில புதிய மற்றும் பழைய ஆடைகளை எடுத்து ஒரு பையில் போட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்தென்ன, சென்று அன்பு சுவரில் அவற்றை வைக்கவேண்டியதுதான்!

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=