அரம்பு போற்றுதும் – 054 : பல் தேய்க்கப் போறன்

செப்டம்பர் 05, 2026
*
ஐ அவ்வப்போது தனது பல் துலக்கியை எடுத்துக்கொண்டு பல் துலக்கி விளையாடுவதை கடந்த சில நாட்களாக வாடிக்கையாக வைத்திருக்கிறான்.
ஆரம்பத்தில் நாங்களும் எதுவும் சொல்லாமல் ஆனால், ‘கீழே எங்கேணும் வைக்காமல் இருக்கிறானா?’ என்று மட்டும் கவனித்துக்கொண்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று முதல் தடவையாக, ”ஐ பப்பா… காலையில தூங்கி ஏன்ச்சதும் மட்டும்தான் பல்லு வெளக்கணும். அதுக்கப்பறம் பிரஸ் எடுக்கக் கூடாது’’ என்று சொல்லி வாங்கிக்கொண்டோம்.
உடனே எதையோ தீவிரமாக யோசித்தவன், ஓடிப்போய் தனது விளையாட்டுப் பொம்மைகளில் இருந்த ‘பின்க்கு’ என்னும் முயல் பொம்மையை எடுத்துவந்து, ”பின்க்கு பப்பா இப்பதான் தூங்கி ஏன்ச்சி. நான் பல்லு வெளக்கறன்’’ என்றான்.
அதாவது, முயல் பொம்மை இப்போதுதான் தூங்கி எழுந்ததாம். அதனால் அதற்கு பல் துலக்கி விடுகிறேன் என்கிறான்.
எதுவும் கூறாமல் சிரித்துக்கொண்டு, சிறிது நேரம் மட்டும் கொடுத்துவிட்டு திரும்பவும் வாங்கிக்கொண்டோம்.
உடனே மறுபடியும் ஓடிப்போய் குரங்கு பொம்மையை எடுத்து வந்து, ”கொரங்கு பாப்பா இப்பதான் தூங்கி ஏன்ச்சி. நான் பல்லு வெளக்கறன்’’ என்றான்.
”சரி” என்று மீண்டும் கொடுத்தோம்.
இப்படி வரிசையாக தன்னிடம் இருந்த அனைத்து பொம்மைகளையும் எடுத்துவந்து எல்லாவற்றுக்கும் பல் துலக்கி விட்டவன், அடுத்து மொம்மைகள் எதுவும் இல்லாததால் என்ன செய்வது என்று புரியாமல் ஓடிப்போய், தனது புத்தகத்தில் ஒன்றை எடுத்துவந்து அதில் இருக்கும் முயல் தொடங்கி மயில் வரையான படங்களுக்கு பல் துலக்கப் போவதாகச் சொன்னான்.
”சரி” என்று அதற்கும் சிரித்துக்கொண்டே தந்துவிட்டு, அடுத்து என்ன செய்யப்போகிறான் என ஆவலோடு காத்திருந்தோம்.
சட்டென்று புத்தகத்தை வைத்துவிட்டு ஓடிவந்து என் கையைப் பிடித்துக்கொண்டு, ”அப்பா… வந்து கரடி மாமா பாட்டுப் போடு’’ என்றான்.
அதாவது, எனது மடிக்கணியைத் திறந்து, இணையத்தில் ‘கரடி மாமா’ பாடல் போட வேண்டுமாம். அதில் வரக்கூடிய கரடிக்கு இவன் பல் துலக்கப் போகிறானாம்.
‘அடேய் மகனே… இன்னிக்கி இதுக்கு ஒரு முடிவே இல்லையாடா…?’ என்று மனத்துள் கேட்டுக்கொண்டு, அவனை அதிலிருந்து எப்படியாவது திசை திருப்ப எண்ணி ஆச்சர்யக் குரலில் சொன்னேன். ”ஐ பப்பா… மாடியில பெரிய பட்டாம்பூச்சி ஒண்ணு வந்திருக்காம். வா, போயி பாக்கலாம்.’’
அவனோ, உடனே ஆர்வமாகி ஆனால், கொஞ்சம்கூட திசை திரும்பாமல் இப்படிக் கேட்டான். ”அப்பா… பட்டாம்பூச்சிக்கு பல் வெளக்கலாமா…?’’
நானோ, அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வெறுமே தலையை மட்டும் மிக மிக மெல்லிதாய் அசைத்து வைத்தேன்.
*