அரம்பு போற்றுதும் – 051 : ஐ வீடு

ஆகஸ்ட் 25, 2026

*

கடந்த ஜூன் மாதத்தில் ஒருநாள் மாலை அருகில் இருக்கும் பெரிய கடைக்குப் போய் ஐ கட்டடம் கட்டி விளையாடுவதற்காக Building Blocks வாங்கி வந்திருந்தோம்.

ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளாதவன், அவ்வப்போது நாங்கள் அதைக் கொண்டு அவன் முன்னால் விதவிதமான கட்டடங்கள் தொடங்கி, உருவங்கள் வரை செய்வதைப் பார்த்துவிட்டு ஆர்வம் கொண்டு கட்டத் தொடங்கினான்.

இது ஒருபுறம் இருக்க, இன்று முன்னிரவு ஏழு மணி இருக்கும். எதையோ தீவிரமாகக் கட்டி விளையாடிக்கொண்டிருந்தவன், சட்டென்று அனைத்தையும் வேகமாகக் களைத்துப் போட்டுவிட்டு என்னிடம் வந்து, ”அப்பா… வரவே மாட்டுது’’ என்றான்.

எதுவும் தெரியாதது போல, ”என்ன சாமி வரமாட்டுது?’’ என்று கேட்டேன்.

”ஐ பாப்பா வீடு வரவே மாட்டுது.”

”ஐ பாப்பா வீடா…? வருமே… போய் இன்னொருவாட்டி கட்டு.”

”இல்ல. வரவே மாட்டுது.”

”வரும் பப்பு… முயற்சி பண்ணு.”

”இல்ல. வரவே மாட்டுது.”

”ஒரே ஒருவாட்டி மட்டும் முயற்சி பண்ணு. கண்டிப்பா வரும்.’’

இம்முறை எனது கையைப் பிடித்து இழுத்தபடி, ”அப்பா வந்து கட்டு’’ என்றான்.

”சரி, இருடா வர்றன்’’ என்றுவிட்டு, கையில் இருந்த புத்தகத்தை எட்டி மேசைமேல் வைத்துவிட்டுப் போய் ஓர் அழகான வீடு கட்டினேன்.

அதில் கதவு, சாளரம் எல்லாம் வைத்துவிட்டு மகிழ்வோடு அவனிடம் சொன்னேன். ”ஐ பப்பு… இதோ, வந்துர்ச்சி பாரு. ஐ பாப்பா வீடு.’’

உடனே அழப்போவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, ”இல்ல. ஐ பப்பா வீடு வேணும்’’ என்றான் மறுபடியும்.

நானும் விடாமல் சொன்னேன். ”இதான் சாமி, ஐ பாப்பா வீடு.’’

சட்டென்று அழுதுகொண்டு எழுந்தவன், ”இல்ல. அப்பா… ஐ பாப்பா வீடு கட்டவே மாட்றீங்க’’ என்றுவிட்டு கோபித்துக்கொண்டு வேகமாக முன்கதவு நோக்கி ஓடிப்போனான்.

பின்னாலேயே சென்று நானும் ஒருவாறு சமாதானம் சொல்லிக் கூட்டிவந்து வெறொரு வீட்டைக் கட்டினேன்.

அதுவும் ஐ பாப்பா வீடு இல்லை என்றான்.

இன்னொன்று இன்னொன்றென சுமார் பத்து வீடுகளுக்கு மேல் கட்டியிருப்பேன். ம்ஹூம்.

இறுதியில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவனாய், அப்படியே அவன் பெயர் போலவே ஒன்றை அடுக்கிக் காட்டி, ”இதான் ஐ பப்பா வீடு’’ என்றேன்.

உடனே சற்றும் எதிர்பாராத வகையில் உற்சாகமானவன், ”ஐ பப்பா வீடு வந்துர்ச்சிடா’’ என்று இரு கைகளையும் வேகமாக ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

‘அப்பாடா… ஒருவழியா இவன் கேட்ட வீட்டக் கட்டிட்டோம்டா சாமி’ என்று பெருமூச்சு விட்டபடி சென்று மேசைமீது வைத்து வந்த புத்தகத்தை எடுத்தேன்.

அதற்குள் அவன் மறுபடியும் என்னைக் கூப்பிடும் குரல் கேட்டது.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=