அரம்பு போற்றுதும் – 048 : அப்பாகிட்ட என்ன பிடிக்கும்?

ஆகஸ்ட் 12, 2026
*
விளையாட்டாக ஐயிடம் இன்று கேட்டேன். ”ஐ பப்பு… அப்பாகிட்ட உனக்கு என்ன பிடிக்கும், சொல்லு.’’
உடனே பொட்டும் யோசிக்காமல், ”பூச்சிக் கண்ணு’’ என்றான்.
”என்னது, பூச்சிக் கண்ணா…?’’ என்று கேட்டேன்.
சட்டென மொத்தப் பற்களும் தெரியச் சத்தமாகச் சிரித்தவன், ”தத்தத் தமன்னூ’’ என்றான்.
”டேய்… என்னடா சொல்ற? அப்பாவுக்கு ஒண்ணும் புரியல. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு.’’
”கொத்தா பக்கு.”
‘ரைட்டு. நாமளாவே வலைவீசி நல்லா மாட்டிக்கிட்டோம்’ என்று நினைத்துக்கொண்டு கேட்டேன். ”சரி பப்பு… வேற என்னலாம் புடிக்கும், சொல்லு.’’
”காக்கவ்.’’
”வேற?”
”போத்தன்னு மண்ணு.”
”அப்பறம்?”
”ஆதுமண்ணு கட்கும்.”
”அப்பறம்?”
”குத்தான்.”
”வேற?”
”சொதி காட்கும்.”
”வேற?”
”தங்கும்.”
”அப்பறம்?”
”தாபங்.”
”அப்பறம்?”
”சிக்கா காக்கும்.”
”வேற?”
”இப்பிதிகா மண்ணு மண்ணு.”
இருவரும் விடுவதாக இல்லை.
”அப்பறம் சாமி?’’
”கக்குறன்.’’
”அப்பறம்?’’
”தண்ணுங்.’’
”வேற?’’
”கும்மான்.’’
”வேற?’’
”தத்துடா.’’
ஒருகட்டத்தில் போதும் என்று தோன்ற, ”சரிடா பப்பு… உனக்கு அப்பாகிட்ட நறையா நறையா புடிக்கும்னு நல்லாவே தெரியுது. அதனால இதோட விட்ருவோம்’’ என்றுவிட்டு, ‘இதற்கெல்லாம் என்ன அர்த்தம்?’ என்ற அரும்பெரும் ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடாமல், மெதுவாக எழுந்து தேநீர் போட்டு எடுத்து வருவதற்காக சமையலறைக்குப் போனேன்.
எதுவும் கூறாமல் வெறுமே தலையாட்டிக் கேட்டுக்கொண்டவன், பின்னாலேயே வந்து அடுப்பில் தேநீர் வைத்ததும் என்னைக் கட்டிக்கொண்டு சொன்னான். ”கக்கி ரிக்கா.’’
‘போச்சிடா… நாமளே விட்டாலும் இவன் விடமாட்டான் போலயே’ என்று நினைத்துக்கொண்டு, அவனை அதிலிருந்து விடுவித்து ஓராயிரம் மைல் தூரத்துக்குக் கூட்டிப் போக ஒரு மாபெரும் திட்டத்தை அங்கேயே; அப்போதே தீட்டத் தொடங்கினேன்.
*