அரம்பு போற்றுதும் – 046 : புக்கு சட்டை போடாத அப்பா

ஆகஸ்ட் 02, 2026
*
கோடம்பாக்கத்தில் இருக்கும் நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக இன்று மாலை வேக வேகமாகக் கிளம்பிக்கொண்டிருந்தேன்.
மதிய உணவுக்குப் பிறகு ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த ஐ, சட்டென எழுந்து உட்கார்ந்து நான் சட்டை அணிவதை பார்த்துவிட்டு, ”புக்கு சட்ட போடாத அப்பா’’ என்றான்.
உடனே திரும்பிப் பார்த்து, ”வாவ்… அப்பு பாப்பா தூங்கி ஏன்ச்சாச்சா?” என்று கேட்டேன்.
‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு சொன்னதையே இன்னொரு தடவை சொன்னான். ”புக்கு சட்ட போடாத அப்பா.”
‘என்னது புக்கு சட்டையா? இவன் எதை சொல்றான்?’ என்று வினவியபடி அவன் முன்பாகப் போய் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கேட்டேன்.. ”என்ன பப்பு சொல்ற…? அப்பாவுக்குப் புரியல.’’
வேகமாக எழுந்தவன், என்னையும் நான் அணிந்திருக்கும் சட்டையையும் ஒருதடவை பார்த்துவிட்டுப் போய், புத்தக அடுக்கில் இருக்கும் எனது நூல்களில் ‘எங்க கல்யாணம்’ எடுத்து வந்து அதில் நான் அணிந்திருக்கும் சட்டையைத் தொட்டுக் காட்டி, ”புக்கு சட்ட போடாத அப்பா’’ என்றான்.
‘ஓ, இததான் தலைவன் புக்கு சட்டைன்னு சொல்றானா…? சரிதான்’ என்று நினைத்துக்கொண்டு, ”ஏன் பப்பு?’’ என்று கேட்டேன்.
உடனே முகத்தை தீவிரமாக மாற்றிக்கொண்டு, ”போடாத’’ என்றான்.
என்ன சொல்வது எனத் தெரியாமல், ”இன்னிக்கி ஒருநாள் மட்டும் போட்டுக்கவா…? ப்ளீஸ்’’ என்று கேட்டேன்.
இம்முறை மிக அழுத்தமானக் குரலில், ”வேணாம்’’ என்றான் தலையாட்டியபடி.
மறுபடியும் அதே வார்த்தைகளை கெஞ்சும் தொணியில் கேட்டுப் பார்த்தேன். ம்ஹூம்.
இறுதி அஸ்திரமாக நூலில் எனக்கும் மதிக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் திருவள்ளுவர் சிலையைக் காட்டி, ”அப்பு… இதோ, இருக்காருல்ல வள்ளுவர் தாத்தா… அவருதான் சாமி, இன்னிக்கி அப்பாவ இந்தப் புக்கு சட்ட போட்டுட்டு வர சொல்லியிருக்காரு. அதான் அப்பா போட்டுட்டுப் போறன்’’ என்றுவிட்டு அவனிடமே கேட்டேன். ”தங்கப் புள்ள நீயே சொல்லு… வள்ளுவர் தாத்தா சொன்னா நாமக் கேக்கணும்தான…?’’
உடனே ‘ஆமாம்’ என்று தலையாட்டினான்.
‘அப்பாடா… தப்பிச்சோம்’ என்று சொல்லிக்கொண்டு, தக்க தருணத்தில் காப்பாற்றிய பொய்யாமொழிப் புலவருக்கு ஒற்றை வார்த்தையில் ஓராயிரம் நன்றியை மனத்துள் உரைத்துவிட்டு, எட்டி அவன் நெற்றியில் ஓர் ஆசை முத்தம் இட்டுவிட்டு, இன்னும் இன்னும் வேகமாகக் கிளம்பிப் போனேன்.
*