அரம்பு போற்றுதும் – 044 : ஐ துடைப்பம்

ஜூலை 27, 2026

*

சுடச்சுட தேநீர் போட்டு எடுத்துப்போய் மாடியில் இருக்கும் சிறு திண்ணையில் உட்கார்ந்து, ஐ’யுடன் கதை பேசியபடி மேற்கு வானில் செம்மை பரப்பி மறையப்போகும் கனலியை பார்த்து ரசித்தவாறு ஒவ்வொரு மிடராகப் பருகிக்கொண்டிருந்தேன்.

நடுநடுவில் வந்து, ”அப்பா… பாக்கலாமா?” என்று கேட்டு குவளையில் இன்னும் எவ்வளவு தேநீர் இருக்கிறதென பார்த்துவிட்டுப் போனவன், அங்கே பொருத்தியிருந்த இரும்புப் பழுப்பை பிடித்தபடி, அதன் கீழே இருந்த சிமிண்ட் கட்டையை சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

தேநீர் குடித்து முடித்ததும் குவளையை வாசப்படி அருகில் ஓரமாக வைத்துவிட்டு எழுந்து போய், அவனுக்கு எட்டாமல் மேலே வைத்திருந்த தென்னந் துடைப்பத்தை எடுத்து, ”பப்பு… நீ அதுமேல ஏறி நின்னு பாத்துட்டு இரு. அப்பா, மாடிய சூப்பரா பெருக்கிட்டு வர்றன். அப்பறம் நாம விளையாடலாம்’’ என்றேன்.

‘சரி’ என்று நல்ல பிள்ளை போல தலையாட்டிவிட்டு அங்கிருந்த சிமெண்ட் கட்டைமேல் ஏறி உட்கார்ந்தபடி, நான் மாடியின் ஒரு பக்கத்திலிருந்து பெருக்குவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் மொத்தமாகப் பெருக்கி ஒரு மூலையில் கூட்டிவிட்டேன். இன்னும் வாருவது மட்டும்தான் பாக்கி.

அதுவரை அமைதியாக இருந்தவன், அதற்குமேல் பொறுக்க முடியாமல் கீழே இறங்கி, அங்கே சுவர் ஓரமாக விழுந்திருந்த ஒற்றை துடைப்பங் குச்சியை எடுத்துக்கொண்டு என்னருகில் வந்து நின்று, ”அப்பா போதும்… ஐ பாப்பா பெருக்கு’’ என்றான்.

அதாவது, ‘அப்பா, நீங்கப் பெருக்கினது போதும். எழுந்து போய் ஓரமா உட்காருங்க. இனி நான் பெருக்குகிறேன்’ என்றான்.

”வேணாம் பப்பு… நீ போயி உக்காரு. நான் பாத்துக்கறன்’’ என்றேன்.

”வேணாம்… ஐ பெருக்கு’’ என்றான்.

கையில் வைத்திருந்த ஒற்றைக் குச்சியை பார்த்துவிட்டு, ”சரி… எத வச்சி பெருக்குவ?’’ என்று கேட்டேன்.

”இத வச்சி” என்றான், பல்லைக் காட்டி.

‘சரியாப் போச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ”சரிடா, நல்லா பெருக்கு’’ என்றுவிட்டு திண்ணையில் போய் உட்கார்ந்து என்ன செய்கிறான் எனப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பெருக்கிக் கூட்டிய குப்பையில் இருந்து சிறிய காகிதங்களையும், பக்கத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களையும், பிய்ந்து விழுந்த சிறு ஓலைகளையும் ஒன்றடுத்து ஒன்றாக எடுத்துப்போய் பெருக்கிச் சுத்தமான இடத்தில் போட்டுவிட்டு, பிறகு தான் வைத்திருந்த குச்சியால் அதைத் தள்ளி வந்து (அதாவது, பெருக்கி வந்து) மறுபடியும் கூட்டிய குப்பையில் சேர்த்தான்.

‘ஆக, இவனது பெருக்கல் இதுதானா?’ என்று கண்டுகொண்டு, அவனிடமிருந்து என்னையும், பெருக்கின அக்குப்பைகளையும் காத்தருள எந்தத் தெய்வத்திடம் வேண்டுவது என்று தெரியாமல், எனக்குத் தெரிந்த எல்லா தெய்வங்களிடமும் ஒருசேர வேண்டிக்கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=