அரம்பு போற்றுதும் – 043 : தட்டு திங்கள் பாட்டி

ஜூலை 25, 2026
*
முன்னிரவு ஏழரை மணி இருக்கும். மதி எனது எழுத்தறைக்குள் உட்கார்ந்து, ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ மலையாள மொழியாக்க நாவல் வாசித்துக்கொண்டிருந்தாள்.
நடுவீட்டில் அமர்ந்து என்னுடன் Buiding Blocks வைத்து வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்த ஐ, பக்கத்தில் சிறு தட்டில் வெட்டி வைத்திருந்த வாழைப் பழத்தை குத்தி உண்பதற்காக முள் கரண்டி ஒன்று எடுத்து வருவதாக சொல்லிவிட்டு சமையலறைக்குப் போனான்.
எப்போது சென்றாலும் உடனே வேண்டியப் பொருளை எடுத்து வருபவன், வெகு நேரமாக வராததால் எழுந்து என்ன செய்கிறான் எனப் பார்ப்பதற்காகப் போயிருந்தேன்.
கழுவிக் கூடையில் வைத்திருந்த தட்டுகளில் ஒன்றை எடுத்து பக்கத்தில் இருந்த சுவர் நோக்கிக் காட்டி மின்விளக்கு வெளிச்சத்தில் பட்டு அது வட்டமாக ஒளிர்வதைப் பார்த்து எதையோ குசுகுசுவென்று பேசிச் சிரித்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் மறைந்து நின்று அவனுக்குத் தெரியாமல் பார்த்திருந்துவிட்டு பக்கத்தில் போய் கேட்டேன். ”என்னடா, பப்பு… பண்ணிட்ருக்க?’’
சட்டென்று திரும்பி உற்சாகத்தில் உரத்துக் கத்திவிட்டு, ”வாவ்… தட்டு திங்கள் பாட்டி’’ என்றான்.
கேட்டதும் சிரித்துவிட்டு, ”என்னது, தட்டு திங்கள் பாட்டியா?’’ என்று கேட்டேன்.
‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு, மறுபடியும் தட்டை சுவரில் ஒளி படுமாறு காட்டி, ”தட்டு திங்கள் பாட்டி’ப்பா’’ என்றான்.
”வாவ்… சூப்பர்டா, பப்பு’’ என்றுவிட்டு, அவன் அதற்கு வைத்த பெயரை எண்ணி மகிழ்ந்து சிரித்துக்கொண்டு, வேண்டுமென்றே வம்புக்கு இழுக்கும் நோக்கில் இப்படிக் கேட்டேன். ”சரி பப்பு, இது பாக்க ஞாயிறு தாத்தா மாதிரியும் இருக்கே… ஏன், ஞாயிறு தாத்தா’ன்னு சொல்லாம… திங்கள் பாட்டி’ன்னு சொல்ற?’’
உடனே கொஞ்சம்கூட யோசிக்காமல், ‘இதுகூட உங்களுக்குத் தெரியலையா, அப்பா?’ என்பது போல ஒரு கூர்த்தப் பார்வை வீசிவிட்டுச் சொன்னான். ”ஞாயிறு தாத்தா, தூங்கப் போயி.’’
‘சரிதான். இவன் நம்மளவிட தெளிவா இருக்கான்… ஏமாத்த முடியாது’ என்று நினைத்து உளத்துள் மெச்சிவிட்டு, ”ஆமாம், பப்பு… ஞாயிறு தாத்தாதான் தூங்கப் போயிட்டாருல்ல… அப்பா மறந்துட்டன். அதான், தெரியாமக் கேட்டுட்டன். அப்பா, சாரி… மன்னிப்பு’’ என்று தலைதாழ்த்தி இரு கைகளையும் ஒரு சேர நெஞ்சில் வைத்துச் சொல்லிவிட்டு, அங்கே மேடை மேல் இருந்த முள் கரண்டிகளில் ஒன்றை அவனுக்காக எடுத்துக்கொண்டு நடுவீட்டுக்கு வந்து உட்கார்ந்து, விட்ட இடத்திலிருந்து அவன் கேட்ட பெரியக் கரடி மாமாவுக்கு வீடு கட்டத் தொடங்கினேன்.
அப்போதும் அவன் வராமல் அங்கேயே நின்றுகொண்டு, தான் உருவாக்கிய ‘தட்டு திங்கள் பாட்டி’யிடம் எதையோ கூறி சிரிக்கும் இன்னொலி விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தது.
*