மலையாற்றுப்படை – 6 : கொண்டரங்கி மலை

”மலையின் மெளனத்தை புரிந்துகொள்பவர்களால் மட்டுமே மலையின் பேச்சை கேட்க முடியும். மலையின் பேச்சை கேட்பவர்களால் மட்டுமே மலையின் மனத்தை அறிய முடியும். மலையின் மனத்தை அறிபவர்களால் மட்டுமே மலையின் ஆன்மாவை உணர முடியும்.’’

                                                (ஜூன் 26, 2026)

                                                             ***

மலையாற்றுப்படை – 6 : கொண்டரங்கி மலை

இணையத்தில் அடுத்ததாக எம்மலை ஏறலாம் என்று தேடிக்கொண்டிருந்தேன். சட்டென ஒரு மலை கவர்ந்திழுக்கும் விதத்தில் இருக்கக் கண்டு வியப்புற்றேன். அதுவும், அதன் உருவமும், அதற்கென சூட்டப்பட்டிருந்த பொருத்தப் பெயரும் நினைக்கும்தோறும் வியத்துபவை; ஈர்ப்பவை.

திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் அருகில் இருக்கும் கீரனூரில் உள்ளது கொண்டரங்கி மலை. பார்க்க அப்படியே கொண்டை வடிவத்தில் இருப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

நண்பர் ராமும் நானும் அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்து குளித்துக் கிளம்பி, சேலத்திலிருந்து ஈரோடு, தாராபுரம் வழியாகப் பெரும் சுற்றலுக்குப் பிறகு காலை சரியாகப் பத்து மணிக்கு மலையை சென்றடைந்தோம்.

முதல் தடவை இணையத்தில் கண்டபோது வியத்தி ஈர்த்த மலை, ஈரோட்டிலிருந்து தாராபுரம் நெருங்கும்போதும், அங்கிருந்து மலை நோக்கிப் போகும்போதும் அவ்வப்போது கண்ணில் பட்டு மேலும் மேலுமாக ஈர்த்துக்கொண்டிருந்தது.

அந்த ஈர்ப்பு மலையடியில் சென்று நின்றதும் ஆர்வத்தோடு, சிறிது பீதியும் கலந்ததாக மாறியதை மனத்துள் உணர்ந்தபடி முதலில் கொண்டை போன்றும், லிங்கம் போன்றும் காட்சியளித்த அம்மலையின் முதல் படிக்கட்டு அருகில் போய் சில நொடிகள் வெறுமே நின்றுவிட்டு, அங்கே இருந்த கெட்டி மல்லேஸ்வரர் கோயிலுக்குள் சென்று ஈசரையும் அவர்தம் இணையாளையும் வணங்கிவிட்டு, தோளில் மாட்டியிருந்த பையை கோயில் வாசல் அருகில் கழட்டி வைத்துவிட்டு, காலணியை இன்னோர் இடத்தில் ஓரமாக விட்டுவிட்டு, கடந்த இருபது நாட்களுக்கு மேலாக ஈர்த்துக்கொண்டிருந்த மலைமீது முதல் அடி வைத்து ஏற ஆரம்பித்தோம்.

திருவண்ணாமலையைப் போன்று மலையே சிவலிங்கமாக வழிபடப்படும் இக்கொண்டரங்கி மலையின் மொத்த உயரம் 1165.86 மீட்டர். அதாவது, 3825 அடி. எங்கள் திருவண்ணாமலையைவிட சுமார் 1157 அடி உயரமானது. ஏற சுமார் இரண்டு மணி நேரம் ஆகும் என்றார்கள். பாறையில் படிக்கட்டுகள் வெட்டப்பட்டும், பாதுகாப்புக்காக கம்பிகள்; பழுப்புகள் பொறுத்தப்பட்டும் இருந்தன.

கொண்டை என்ற சொல்லுக்கு நாம் அனைவரும் அறிந்த ‘மகளிரின் ஐம்பான்முடியுள் கூந்தலைத் திரளாகச் சேர்த்துக்கட்டும் முடிவகை’ என்னும் பொருள் தவிர்த்து, வேறு என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்று தேடத் தோன்றியது. உடனே, நகர்பேசியை எடுத்து தமிழ் லெக்சிகன் பேரகராதியில் பார்த்தேன். செருக்கு, குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார்வளையம், பறவைச்சூட்டு, ஆணி முதலியவற்றின் குமிழ்த் தலை, இலந்தை, திமில் போன்ற பொருள்களைத் தந்தன.

இவற்றில் கடைசிப் பொருளும் மிகப் பொருத்தமாக இருப்பதாக நினைத்து ஒருதடவை உச்சிமலையை நோக்கி சிரித்துவிட்டு, தொடர்ந்து ஏற ஆரம்பித்தேன்.

நாங்கள் சென்ற நேரம் அவ்வளவாக ஆட்கள் இல்லை என்றாலும், அவ்வப்போது ஓரிருவர் எதிரில் இறங்கி வந்துகொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. வழியோரம் இருந்த கருவேலம் மரங்களைக் காட்டி நண்பரிடம் சொன்னேன். ”என்ன சகோ, இந்த மலையில இவ்ளோ கருவேலம் மரங்கள் இருக்கு?’’

”ஆமாம்” என்றவர், ”இதை இந்தப் பக்கம் இருக்கவங்க உடை முள்னு சொல்றாங்க, சகோ” என்றார்.

சட்டென எனக்கு சங்க இலக்கியத்தில் இம்மரம், ‘சிறியிலை வேலம்’ என்று பாடப்பட்டிருப்பது நினைவுக்கு வர, அங்கிருந்த ஒரு மரத்தின் சிறிய இலையைத் தொட்டு வருடிப் பார்த்தேன்.

பிறகு, பதிற்றுப்பத்து – ஆறாம் பத்தின் 58 ஆவது பாடலாக காக்கைபாடினியார் நச்செள்ளையார் பாடிய,

‘….. கானத்துக்

கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய

சிறியிலை வேலம் பெரிய தோன்றும்…’

என்கின்ற ‘காட்டினிடத்தே ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வீடு பொருந்தியிருக்கின்ற பொரிந்த அடிமரத்தினையும், பொருந்திய சிறிய இலைகளையும் உடைய வேலமரம் பெருகத் தோன்றும்’ என்ற பொருளுடைய வரிகளை மனத்துள் எனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் கூறிவிட்டு தொடர்ந்து ஏற ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில் எளிதாக இருந்த பாதை போகப் போக கடினமாகத் தொடங்கின. எதிரில் வந்த குழுவினர் நாங்கள் கேட்காமலேயே, ”எப்படியும் நீங்க ஏறிப் போறதுக்குள்ள கோயில் மூடிடுவாங்க. அதனால பொறுமையாவே போங்க’’ என்றார்கள்.

எதுவும் கூறாமல் வெறுமே ‘சரி’ என்பது போல தலையாட்டிவிட்டு, மிதமான வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தோம்.

வெய்யில் அவ்வளவாக இல்லாமல் வீசும் காற்றில் இதமாக இருந்தது. அதோடு, வழிநெடுக பாறைகளில் வெண்ணிற பெயிண்ட் அடித்திருந்ததால் கொஞ்சம்கூட பொடி சுடவில்லை.

கால்வாசி மலை ஏறியிருப்போம். பெரும் பாறையை ஒட்டி இருந்த துரிஞ்சி மரம் ஒன்றின் நிழலில் போய் உட்கார்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்தோம். பழனி மலையும், அதன் பின்பாக நீள விரிந்திருக்கும் கொடைக்காணல் மலையும் அழகுற காட்சி அளித்தன. கூடவே, ஆங்காங்கே தென்பட்ட காற்றாலை இயந்திரங்கள் ஒரே நேரத்தில் அவ்விடங்களுக்கு அழகூட்டுவதாகவும், பொறுந்தாததாகவும் இருக்கக் கண்டு சிரித்துக்கொண்டோம்.

நண்பர் கேட்டார். ”கீழே கோயில்கிட்ட இருந்த பெரியவரு சொன்னமாதிரி… இங்கே உண்மையாவே பாண்டவர்கள் வந்து குகைகளை உருவாக்கி இருப்பாங்க நெனக்கிறீங்களா?’’

மெல்லிதாக முறுவலித்து, ”எனக்குத் தெரிந்து இந்தப் பாண்டவர்கள வைத்து… தமிழ்நாட்டுல இருக்க எல்லா ஊரோடயும் குறைந்தது ஒரு கதையாவது இருக்கும்னு நெனக்கிறன், சகோ. இதெல்லாம் வெறும் கதையே தவிர, உண்மையா இருக்க துளிகூட வாய்ப்பு இல்ல’’ என்றுவிட்டு, அங்கிருந்து பார்த்தால் மிகச் சிறியதாக தெரியும் பழனி மலையைக் காட்டி மேலும் சொன்னேன்.

”பழனி மலையில இருக்க முருகனுக்கும், இந்த மலையில இருக்க சிவனுக்கும் மர்மத் தொடர்பு ஒண்ணு இருக்கறதாவும் சொல்றாங்க. அதாவது, மைந்தன் தன் தந்தையைப் பார்த்துக்கொண்டு நிற்பதாவும், இங்கிருந்து நின்றபடியே ஈசனும் சக்தியும் பாலகனுக்கு தரிசனம் கொடுத்ததாகவும்கூட சொல்றாங்க. இதையெல்லாம் பக்தி மட்டும் உள்ளவங்க அப்படியே மறுக்காம ஏத்துக்கலாம். ஆனா, அதுக்கான ஆதாரம் இல்லாம நம்மள மாதிரி ஆளுங்களால ஏத்துக்க முடியாது, சகோ.’’

அங்கிருந்து எழுந்து மேலும் பலவற்றைப் பேசிக்கொண்டு, அடுத்து வந்த மிகக் கடினமான பாதைகள் வழியாக ஆங்காங்கே இருந்த காரை, சூரை, கள்ளி முதலான ஒன்றிரண்டு தாவரங்களை பார்த்துக்கொண்டு [, ஓரிடத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் வில்வ மரம் ஒன்று இருப்பதை பார்த்துவிட்டு], நெடுநெடுவென உயரும் மலையில், ஆளைக் கீழே தள்ளிவிடும் அளவுக்கு வீசும் காற்றில் மிகுந்த எச்சரிக்கையோடு கம்பிகளை பிடித்துக்கொண்டு, எங்கேயும் உட்காராமல் ஆனால், ஆங்காங்கே நின்று மலையின் பிரம்மாண்டத்தை பார்த்து ரசித்தபடி; வியந்தபடி, கிடுகிடுவென ஏறி முக்கால் மலையில் இருக்கும் கோயில் முன்பாக இருந்த தனித்த பூவரசம் மரத்தடியில் சென்று ஆசுவாசமாக நின்றோம்.

”இவ்வளவு உயரத்துல ஒரு பூவரச மரத்தை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, சகோ’’ என்றார் நண்பர்.

”ஆமாம்’’ என்றுவிட்டு சொன்னேன். ”பூவரசம் மரம் பெரும்பாலும் நீர் நிலைய ஒட்டின இடத்துலதான் இருக்கும். இங்கே இவ்வளவு உயரத்துல இருக்குன்னா… கண்டிப்பா இந்த இடம் நீரோட்டம் எப்போவும் இருக்குற இடமாத்தான் இருக்கும். அதான் இவ்வளவு செழிப்பா இருக்கு.’’

கூறிவிட்டு எக்கி கீழ்க் கிளையைப் பற்றி வருடியபடி, சிறு வயதில் அதன் இலைகளில் செய்து ஊதிய பீப்பிகளையும், அதன் காய் போன்று இருக்கும் மொட்டுகளில் பம்பரம் சுற்றி விளையாடிய பசுமையான நாட்களையும் எண்ணிக்கொண்டேன்.

கோயில் மூடியிருந்தது. இருந்தாலும் கதவு இடுக்கு வழியாக விளக்கொளியில் தெரிந்த; மிளிர்ந்த மல்லிகார்ஜூனரை வணங்கிவிட்டு வந்து அங்கே முன்னால் இருந்த பிள்ளையார் அருகில் நின்று, சிறு வெள்ளைக் கோடாகத் தெரிந்த ஏறிவந்த வழியையும், கண்ணுக்கெட்டின தூரம் வரை இருந்த மலைகளையும், நிலங்களையும், ஊர்களையும், மலை அருகில் செல்லும் சாலையில் அவ்வப்போது போகும் வாகனங்களையும், ஆங்காங்கே மெல்லிதாகச் சுற்றியும் சுற்றாமலும் இருந்த காற்றாலைகளையும் சற்று நேரம் பார்த்திருந்துவிட்டு, மறுபடியும் ஏற ஆரம்பித்தோம். 

சட்டென்று கண்டுவிட்டு வந்த கோயிலும், அதில் இருக்கும் சிற்பங்களும் இம்மலையில் உள்ள பாறைகளை மட்டுமே கொண்டு கட்டப்பட்டதாக; செதுக்கப்பட்டதாக வாசித்த தகவல் நினைவுக்கு வர, அதோடு சேர்த்து, ”கி.பி. 750-ல… ராஜா ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்கு நீண்ட நாட்களா குணமாகாத தொழுநோய் ஏற்பட்டதாம், சகோ. அதனால, ஒன்பது சிவன் கோவில்களைத் தேர்ந்தெடுத்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தும்படி ஒரு பண்டிதர் அவருக்கு அறிவுறுத்தி இருக்காரு. அதுல ஒரு கோயில்தான் இந்த மல்லீஸ்வரர் கோயில்னும், அந்தப் பண்டிதர் சொன்னபடி ராஜா கும்பாபிஷேகம் செய்ததால, அவரோட நோய் குணமடைந்ததாவும் கூறப்படுது” என்ற வாய்மொழித் தகவலையும் சொன்னேன்.

”அப்படின்னா… இது பாண்டியர் காலக் கோயில்னு சொல்லுங்க’’ என்றார்.

‘ஆமாம்’ என்பது போல தலையாட்டிவிட்டு சொன்னேன். ”அப்படிதான் சொல்றாங்க. ஆனா, பார்த்தா தெரியல. ஒருவேளை உள்ளே போய் பார்த்திருந்தா உறுதியா சொல்லியிருக்கலாம்.’’

பிறகு அங்கிருந்து சில அடி தூரம் ஏறியதும் பாதையொட்டி வலது பக்கமாக சிறு குகை போன்ற இடத்தைக் கண்டுவிட்டு, அதன் அருகில் இறங்கிப் போய் பார்த்தேன். உடனே, கோயில் தல வரலாற்றில் படித்த காகபஜேந்திரன் மற்றும் கணபதி என்ற இரண்டு துறவிகள் பற்றின கதை நினைவுக்கு வர, அதனை மேலுமொரு தடவை மனத்துள் அசைபோட்டுக்கொண்டேன்.

தங்கள் முன்வினை காரணமாக இருவரும் மீண்டும் காகமாகப் பிறந்து, இம்மலையில் தங்கியிருந்து ஈசனை வழிபட்டுத் தவம் செய்திருக்கிறார்கள். அதிலும் காகபஜேந்திர முனிவருக்கு, மலையின் உச்சியில் ஒரு சிறிய குகைக்கோயில் உள்ளதென்றும், தினந்தோறும் அவர் பொழுது சாயும் நேரத்தில் சிறு புயல் வடிவில் இங்குள்ள ஈசனை வணங்குவதற்காகக் கோயிலுக்கு வருவார் என்றும், அந்தப் புயலானது மலை அடிவாரத்தில் இருந்து தொடங்கி கோயிலுக்குள் நுழையும்போது சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

குளுமையாக இருந்த அந்த இடத்தில் நிகழ்கணம் மறந்து எதையெதையோ நினைத்து நின்றிருந்த என்னை, நண்பர் அழைத்த பிறகுதான் நனவு வந்து திரும்பிப் போனேன்.

மகாசிவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி விழாக்கள் இம்மலையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்றவையும் விசேஷம் என்கிறார்கள். மேலும் இம்மலையில் உள்ள வற்றாத நீரூற்று நீரைத் தெளித்துக்கொண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்றும் நம்பப்படுகிறது.

இம்மலை குறித்து இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஓர் இடத்தின் அசல் எல்லைகள் பூகம்பத்தால் சிதைந்ததால் அவற்றை மீட்டெடுப்பதற்கான வரைபடத்தை உருவாக்க முடிவு செய்திருக்கிறார்கள். அந்த வரைபடத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக அது சிதைந்த இடங்களைக் கண்டறிய மூன்று அணுகல் புள்ளிகளைக் கொண்டிருந்திருக்கிறது. ஒன்று, கொடைக்கானல் மலையிலும், மற்றொன்று திருமலை மலையிலும், இறுதிப் புள்ளி இந்த கொண்டரங்கி மலையிலும் அமைந்துள்ளது.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டமைப்பு ‘முக்கோண ஆய்வு’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டால், புதிய நிலத்தின் அளவீடுகள் குறித்த அறிக்கைகளை உருவாக்க இந்த ஆய்வு பயனுள்ளதாக இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பிறகு பாதை அவ்வளவு கடினமாக இல்லையென்பதால் கிடுகிடுவென ஏறி அடுத்த சில நிமிடங்களில் உச்சி மலையை அடைந்துவிட்டோம். அதாவது, உச்சிக் கொண்டையை.

மொத்தமுமே மிகச் சிறிய இடம்தான். அதன் மையப் பகுதியில் சில வேல்களும், மணியும், ஒரு சிதைவடைந்த தொன்மையான கல் தூணும், அதில் லிங்கமும், காளை உருவும் பொறிக்கப்பட்டிருந்தன. சென்று அதன் முன்பாக நின்று கண்மூடி சில நொடிகள் வணங்கிவிட்டு, சுற்றிலும் பார்த்தோம்.

கடும் வறட்சியான பகுதிதான் என்றாலும், வரைந்த ஓவியம் போல அத்தனை ரம்மியமாக இருந்தன. அதிலும் குறிப்பாக, பச்சைப் போர்வை போல இருந்த கொடைக்காணல் மலைத் தொடரும், அதன் முன்னால் அணிபோல இருந்த சிறிய பழனி மலையும் தாய் சேய் போல இருப்பதாகத் தோன்றியது.

எங்களைத் தவிர்த்து இன்னும் நான்கு பேர் அங்கே இருந்தார்கள். அதில் இருவர், இம்மலையை தினந்தோறும் நான்கு தடவை ஏறி இறங்கும் கோபாலகிருஷ்ணன் என்கிற கரிகால சோழன் என்னும் உள்ளூர் இளைஞர் குறித்தும், அவர் மிக விரைவில் தனது ஆயிரமாவது நாளை நிறைவு செய்து பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தப் போவதாகவும் பேசிக்கொண்டார்கள்.

‘ஒருவாட்டி ஏறுறதுக்கே இவ்வளவு கடினமா இருக்கே… இதுல ஒருநாளைக்கு நாலு தடவை அதுவும், தொடர்ந்து ஆயிரம் நாட்கள்கிட்ட. நெனச்சிப் பாக்கவே பிரம்மிப்பா இருக்கே’ என்று நினைத்துக்கொண்டு மனத்துள் ஒரு தடவை அவ்விளைஞரை மானசீகமாகப் பாராட்டிவிட்டுப் போய் மலை விளிம்பில் இருந்த சிறிய கள்ளி மரத்தின் அருகில் கால்களை கீழே தொங்கப் போட்டுக்கொண்டு கவனமாக உட்கார்ந்தேன்.

சரியாக அந்நேரம் பார்த்து கதிரோனை மூடியிருந்த கருமேகம் ஒன்று மெல்ல விலகியதால், அம்மரத்தின் சிறு நிழல் வந்து என் மேலே பட்டதை உணர்ந்ததும் சட்டென்று, ‘கள்ளி நீழல் கடவுள் வாழ்த்தி’ என்ற புறநானூற்று பாடல் வரி (260) நினைவுக்கு வந்தது.

உடனே, ‘வறண்ட பாலை வழியில் செல்வானுக்குக் கள்ளிச் செடியின் நிழல்தானே கடவுள். அந்தக் கடவுளை வாழ்த்தி’ என்று பொருளுடைய அவ்வரி அப்படியே இப்பெரு மலையின் உச்சியில் உட்கார்ந்திருந்த எனக்கு, இப்போது இந்த சிறு கள்ளி மரத்தின் நிழல்தானே கடவுள் என்று தோன்ற, மெல்ல அதனைத் தொட்டு வருடி வாழ்த்திவிட்டு, எனக்குள் நானே சிரித்துக்கொண்டு அக்கள்ளியிடம் உரைப்பதுபோல இப்படிச் சொல்லிக்கொண்டேன்.

‘இதோ… இந்த மாதம், இம்மலை மேல இருக்க உன் பக்கத்துல உட்கார்ந்திருக்க மாதிரி… அடுத்த மாதம், வேலூர் பக்கத்துல உள்ள கைலாசகிரி மலை மேல இருக்க வேற ஒரு மரத்தடியில; மரத்துப் பக்கத்துல உட்காரப் போறன்.’

உடனே அக்கள்ளி, ‘அப்படியே ஆகட்டும்’ என்று அருள்வது போல அதன்மீது பட்டு வந்த காற்று என்னை இதமாகத் தொட்டு வருடிச் சென்றது.

                                                            ***

ஒரு மலை

ஒவ்வொரு நாளும் புதியது

உயரம்

அகலம்

வடிவம்

அனைத்திலும்.

ஒரு மலை

ஒவ்வொரு நாளும் புதியது

உயிர்ப்பு

உணர்ப்பு

தளிர்ப்பு

யாவிலும்.

ஒரு மலை

ஒவ்வொரு நாளும் புதியது

நேசம்

ஆசை

ஏக்கம்

எல்லாவற்றிலும்.

ஆகையால்தான்

ஒரு மலை

எப்போதும் காத்திருக்கிறது

ஒரு புதிய மனிதன் ஏறுவதற்காக.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=