அரம்பு போற்றுதும் – 042 : அப்பா புக்கு வேணும்

ஜூலை 24, 2026
*
பிற்பகல் சரியாக மூன்றரை மணி வாக்கில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பி, பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் போய் வாகனத்தை நிறுத்திவிட்டு, அங்கிருந்து மின்சார ரயிலில் எழும்பூர் சென்று இறங்கி, எதிரில் இருக்கும் சாலை ஒன்றின் வழியாக மெதுவாக நடந்து கன்னிமாரா நூலகத்துக்குப் போயிருந்தோம்.
ஏற்கெனவே ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் ஐ’யை கூட்டிவந்து எனது புதிய நூல்கள் சிலவற்றை அவன் கையால் அன்பளிப்பாகத் தந்துவிட்டு போன நிகழ்வை நினைவூட்டியபடி உள்ளே நுழைந்து, அங்கிருந்து சென்ற மாதம் எடுத்து வந்திருந்த நூல்களை தந்துவிட்டு, புதிதாக எடுப்பதற்காக இரண்டாவது தளத்தில் இருக்கும் தமிழ் நூல்கள் பிரிவுக்கு நான் மட்டும் தனியாகப் போனேன்.
மதியுடன் சிறிதுநேரம் வெளியிலும் உள்ளிலும் சுற்றித் திரிந்துவிட்டு வந்த ஐ, நான் ஓரிடத்தில் நின்று புத்தகங்கள் தேடிக்கொண்டிருப்பதை கண்டுவிட்டு அருகில் ஓடிவந்து, என் போலவே அவனும் புத்தக அடுக்கில் இருக்கும் நூல்களை எடுத்து ஒரு தேர்ந்த வாசிப்பாளி போல முன்னும் பின்னும் சிலநேரம், உள்ளே புரட்டியும் பார்த்துக்கொண்டிருந்தான்.
ஓர் ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். சட்டென்று அவனை மென்குரலில் பக்கத்தில் வருமாறு அழைத்து, அங்குள்ள ஓர் அடுக்கில் இருந்து எனது ‘முரம்பு’ நாவலை எடுத்துக் காட்டினேன்.
உடனே கண்கள் விரியப் பார்த்து, ”அப்பா புக்கு’’ என்றான்.
”ஆமாம், பப்பு… அப்பா புக்கு’’ என்றேன்.
”வேணும்.”
”எதுக்குடா, தங்கம்?”
”வேணும்.’’
”சரி, இந்தா… பத்தரமா பாரு.’’
உடனே வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் கையிலேயே வைத்திருந்தவன், அதன் எடை தாளாமல் நான் எடுத்துப்போக வைத்திருந்த நூல்களுடன் அதையும் கொண்டுபோய் வைத்தான்.
இன்னும் ஒரே ஒரு புத்தகம் மட்டும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பும்போது, அவன் வைத்திருந்த புத்தகத்தை மட்டும் எடுத்து இருந்த இடத்திலேயே வைக்கப்போவதை பார்த்துவிட்டு வந்து வேகமாகப் பிடுங்கி, ”வேணும்ப்பா’’ என்றான்.
”விடு பப்பு… அத இங்கயே வச்சிடலாம்’’ என்றேன்.
உடனே அடம் பிடிக்கும் குரலில், ”வேணும்’’ என்றான்.
‘போச்சிடா’ என்று சொல்லிக்கொண்டு, ”அப்பா புக்குதான் நம்ம வீட்ல நறையா இருக்கே, சாமி. இது எதுக்கு?’’ என்றுவிட்டு மேலும் சொன்னேன். ”இது நூலகம் புக்குல்ல… இத இங்கயே வச்சிடனும்.’’
அவனோ கேட்பதாக இல்லை. இன்னும் உறுதியானக் குரலில், ”வேணும்ப்பா’’ என்றான்.
அவன் சத்தமாகச் சொன்னதைக் கேட்டு அங்கே உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த பலரும் எங்களை திரும்பிப் பார்த்தார்கள்.
‘சரி, வேறு வழி இல்லை’ என்று நினைத்துக்கொண்டு மிதமானக் குரலில், ”சரி, பப்பு. அத அப்பா கிட்ட கொடு. நான் எடுத்துனு போயி… கீழ ஒரு மாமா இருந்தாங்கல்ல. அவங்கக்கிட்டக் கொடுத்து… எங்களுக்கு வேணும்னு கேட்டு வாங்கிட்டு வர்றன். நீ சின்னப் பையன்ல… அதனால கூட வந்தா தரமாட்டாங்க. நீ போயி அம்மா கூட இரு’’ என்றுவிட்டு, ஒருவழியாக அவனை ஏற்க வைத்து, அடுத்திருந்த புத்தக அடுக்கருகில் நின்றிருந்த மதியிடம் கூட்டிப் போய் விட்டுவிட்டு, முரம்பு நாவலை அவன் பார்க்காதவாறு வழியில் இருந்த மேசைமேல் வைத்து அதன்மீது இன்னொரு புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு, அங்கிருந்து வேகமாக இறங்கி தரை தளத்தில் உள்ள வரவேற்பறைக்கு வந்தேன்.
அப்போது எனது மனம் முழுக்க, ‘இவன் வந்து அப்பா புக்கு எங்கே? என்று கேட்டால்… என்ன சொல்லி தப்பிப்பது?’ என்றே யோசித்துக்கொண்டிருந்தது.
*