அரம்பு போற்றுதும் – 041 : சாமி குளிச்சி 

ஜூலை 22, 2026

*

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாரந்தோறும் திங்கட் கிழமைகளில், தவறாமல் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.

மூன்று காரணங்களுக்காக. ஒன்று, மதி தனது கையால் வில்வ இலை கட்டி சிவருக்குச் சூட்டி வணங்குவது. இரண்டு, கோயிலுக்கு செல்வதால் மிகும் நேர்மறை ஆற்றல். மூன்று, ஐ’க்குள் கோயில் சார் அதாவது, அங்குள்ள சிற்பங்கள், கலைகள் சார் ஆர்வம் விதைப்பது.

அவ்வாறு இன்று காலையில் கோயிலுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த நடராஜரை பார்த்துவிட்டு, ”சாமி குளிச்சி’’ என்றான் ஐ.

உடனே, ஒரு மாதத்திற்கு முன்பு சரியாகச் சொன்னால், ஜூன் 22 ஆம் தேதி ஆனித் திருமஞ்சனத்தன்று வந்திருந்தபோது, கோயில் கொடி மரத்தருகில் வைத்து நடராஜருக்கும் சிவகாமி அம்மைக்கும் நாதஸ்வர மேள தாளத்துடன் மந்திரம் முழங்க, பால், தயிர், திருநீறு, பஞ்சாமிர்தம், சந்தனம், பூ… முதலானவை கொண்டு நிகழ்த்தப்பட்ட மஞ்சனத்தை, நான்கு பக்கமும் சூழ நின்று பார்த்துக்கொண்டிருந்த பெருங்கூட்டத்துக்கு இடையில் புகுந்து கண்டுவிட்டு அவன், ”சாமி குளிச்சி’’ என்றதும், பிறகு, ”கூட்டமா நின்னு எல்லாரும் பாத்து” என்றதும் நினைவுக்கு வர, என்னறியாமல் சிரித்துவிட்டேன்.

சட்டென்று பார்த்துவிட்டு கேட்டான். ”அப்பா… ஏன் சிரிச்ச?’’

”சும்மாதான், பப்பு.’’

”சொல்லு.’’

கூறும் வரை விடமாட்டான் என்பதால் சொன்னேன். ”ஒருநாள் நாமக் கோயிலுக்கு வந்தப்ப… இந்த சாமி அங்கே குளிச்சிட்டு இருந்தாருல்ல. அப்ப, அதப் பாத்துட்டு ஐ பாப்பா நீ சொன்னியே… ‘சாமிக் குளிக்கறத கூட்டமா நின்னு வேடிக்கப் பாக்குறாங்க’ன்னு. அத நெனச்சிதான் பப்பு, சிரிச்சேன்.’’

சொல்லி முடித்ததும் பூட்டிய கம்பிக் கதவுக்கு உள்ளே இருந்த நடராஜரை தலை சாய்த்துப் பார்த்துவிட்டு, ”சாமி பூட்டி வச்சி’’ என்றான்.

”ஆமாம் பப்பு… சாமிய பூட்டி வச்சிருக்காங்க.’’

உடனே எனது சட்டைப்பையை தொட்டுப் பார்த்துவிட்டு, ”அப்பா… சாவி வச்சித் தொற’’ என்றான்.

‘சரிதான். அடுத்து இவன் சாமிய… வீட்டுக்கு எடுத்துட்டுப் போகலாம்னு சொன்னாலும் சொல்வான்’ என்று நினைத்து சுதாரித்துக்கொண்டு, ”அப்பு… அதோ, உள்ள இருக்க சிவன் சாமியப் பாரு… ஒண்ண வா’ன்னு சொல்லி கூப்புட்றாரு’’ என்று கூறி, அங்கிருந்து அவனை வேகமாகக் கூட்டிக்கொண்டு உண்ணாழிகை முன்னால் வந்துவிட்டேன்.

அவன் பாட்டுக்கு ஒன்றும் கூறாமல் ஆனால், ‘எதற்காக சிவன் சாமி… தன்னைக் கூப்பிடுகிறார்?’ என்பது போல தலையை நீட்டி மிகத் தீவிரமாக உள்ளே பார்த்துக்கொண்டிருந்தான்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=