மலையாற்றுப்படை – 5 : புலிகுண்டு மலை

”மனிதர்கள் மலை என்னும் மகத்தான பேருரு முன்னால் ஒவ்வொரு தடவையும் கூசிக் குறுகி சிறுத்துப் போகிறார்கள். ஆனால், மலைகளோ மனிதர் என்னும் நுண்மையான சிற்றுரு முன்னால் ஒவ்வொரு தடவையும் தன் மகத்தான பேருருவைக் கழட்டிவைத்து ஒன்று கலக்கவே விரும்புகின்றது; முற்படுகின்றது.’’
(மே 29, 2026)
***
மலையாற்றுப்படை – 5 : புலிகுண்டு மலை
ஆந்திர மாநிலம் – சித்தூர் மாவட்டம் பெனுமூர் அருகில் உள்ள புலிகுண்டு மலை குறித்து முதன்முதலாக நண்பர் ஒருவர் சொல்லித்தான் கேள்வியுற்றேன். உடனே, இணையத்தில் தேடிப் பார்த்தபோது அதன் தோற்றமே அதிரச் செய்தது. கூடவே, ‘எப்போது வந்து என்மீது ஏறப் போகிறாய்?’ என்று கேட்பது போலவும் இருந்தது. உடனே, மனத்துள் கூறிக்கொண்டேன். ‘இதோ, சீக்கிரமே.’
அன்று கூறிய அவ்வார்த்தைகளை சாத்தியமாக்கும் பொருட்டு, நண்பர் ராமும் நானும் சித்தூரிலிருந்து ஓர் அழகான முற்பகல் வேளையில் மிதமான வெய்யிலோடு புறப்பட்டுப் போனோம்.
சித்தூரிலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புலிகுண்டு மலை, சுற்றியுள்ள சமவெளியில் இருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் இரண்டு கருங்கற் பாறை மலையாகும். அதாவது, மொத்த மலையே இரண்டு பெரிய பாறைகளால் ஆனது என்று சொல்லலாம். அதுவும், செங்குத்தான பாறைகள், குறுகிய மற்றும் சவாலான நடைபாதைகள் கொண்ட ஆபத்தான மலையேற்றத்துக்குப் பெயர் பெற்றது.
தெலுங்கில் ‘புலி’ என்றால் புலி, ‘குண்டு’ என்றால் பாறை என்று பொருள். அதாவது, புலிப்பாறை. ஒருகாலத்தில் இங்கே புலிகள் மிகுதியாக இருந்ததால் இப்பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
மலையை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்துபோனோம். அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இறங்கி, எவ்வழியாகச் செல்வது என்று தெரியாமல் அங்கிருந்த சிறுவனிடம் கேட்டோம். ‘இப்படியே நேராகச் சென்று இடது பக்கமாக வளைந்து போனால்… அங்கே ஒரு கோயில் இருக்கும். அதன் பின்னாலிருந்து ஏறலாம்’’ என்றான்.
அவன் காட்டிய திசையில் உள்ள சிறிய தார் சாலையில் மலையை நடுநடுவில் பார்த்தபடி நடக்கத் தொடங்கினோம். இரண்டு பக்கமும் வரிசையாக மாந்தோட்டங்கள். ஒவ்வொரு மரத்திலும் கொத்துக் கொத்தாய்க் காய்களும், பழங்களும். யாரேனும் தென்பட்டால் கேட்டு ஆளுக்கொன்று பறிக்கலாம் என்று பார்த்தால் ஒருவரும் படவில்லை. ஒருகட்டத்தில் பொறுக்கமுடியாமல் போய் மூன்று காய்கள் பறித்துக்கொண்டு வந்து, ஒன்றை நண்பரிடம் தந்துவிட்டு, ஒன்றை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, இன்னொன்றை தின்றபடி நடக்கத் தொடங்கினேன்.
சுமார் ஒரு கிலோமீட்டர் நடந்திருப்போம். இன்னும் அவன் சொன்ன இடப்பக்கத் திருப்பம் வராததால் (கூடவே, மலையை வேறு தாண்டிவிட்டோம்), அங்கே சாலையோர வேப்ப மரத்தடியில் உட்கார்ந்திருந்த மாடு மேய்க்கும் பெரியவரிடம் சென்று கேட்டோம். ”இதோ, இன்னும் அம்பது அடி நடந்தீங்கன்னா… வழி பிரியும். அதுல போனா கோயில் வரும். அங்கிருந்து மலைக்குப் போகலாம்’’ என்றார், அழகான தமிழில்.
அவர் சொன்னது போல நடந்துபோய் மலையின் கிழக்கு அடிவாரத்தில் இருந்த புலிகுண்டீஸ்வரர் கோயிலை அடைந்தோம். பழைமை மிக்க கோயிலுக்கான தடயம் முன்னால் இருந்த மண்டபத்திலேயே தென்பட்டதால் மகிழ்வுற்றேன்.
நாங்கள் போன நேரம் மொத்தமே நான்கு பேர்தான் இருந்தார்கள். அதுவும் உள்ளூர்க்காரர்கள். சென்று சிவரை வணங்கிவிட்டு, அவ்விடத்தையும் சூழலையும் சில நிமிடங்கள் நின்று உள்வாங்கிக்கொண்டோம். பிறகு எங்களுக்கு முன்னால் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த அழகான இரட்டைப் பாறைகளையும், அவை இரண்டையும் இணைக்கும் இரும்புப் பாலம் ஒன்று இடையில் அமைக்கப்பட்டிருப்பதையும் கண்டோம். அதன்மீது ஏறப்போகும் எண்ணமே பெரும் கிளர்ச்சியை ஈந்தது.
அதன்பிறகு கோயிலின் பின்பக்கமாகச் சென்று பார்த்தோம். வழி இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஓர் இடத்தில் மட்டும் அதுவும், மலையையொட்டி ஒற்றை அடிப்பாதை சென்றது. ‘இதுவாகத்தான் இருக்க வேண்டும்’ என்று நம்பிப் போனோம். பார்த்தால் அது ஓர் ஓடைக்குள் கொண்டுபோய் நிறுத்தியது.
உடனே அதுவும் தவறான வழி என உணர்ந்து, ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேறி மறுபடியும் சாலைக்கு வந்து, இன்னும் கொஞ்சம் தூரம் நடந்துபோய் இடது பக்கமாக மலை நோக்கித் திரும்பி வளைந்து வளைந்து ஏறிப்போகும் தார் சாலை வழியாக நடந்து, அது முற்றுபெரும் இடத்திலிருந்து நீளும் மண் பதையில் சென்று இரட்டைப் பாறையின் பாதத்தில் நின்றோம்.
அங்கே ஏற்கனவே இரண்டு இரு சக்கர வாகனங்களும், ஓர் ஆட்டோவும் நிறுத்தப்பட்டிருந்தன. இளைஞர்கள் இருவரும், அவர்களுக்குப் பின்னாலேயே ஆறு பேர் கொண்ட குடும்பம் ஒன்றும் (அதில் இரு சிறுவர்களும்) அப்போதுதான் மலை ஏறிவிட்டு கீழே இறங்கி வந்துகொண்டிருந்தார்கள்.
ஒரு மலை எடுத்த எடுப்பில் நமக்கு மிக நெருக்கமானதாக ஆகிவிட, அங்குள்ள ஒரே ஒரு தெரிந்த தாவரம் போதுமானது என்று எப்போதும் தோன்றுவதுண்டு. அவ்வகையில் மலையை நெருங்கும்போதே தென்பட்ட மஞ்சம் புல், சிறுவயது முதல் அறிந்த பலதரப்பட்ட நினைவுகளை வாரி வழங்கக்கூடியது.
முதல் மஞ்சம் புல்லைக் கண்டதுமே நண்பரிடம் சொன்னேன். ”இப்போலாம் இந்த மஞ்சம் புல்ல வச்சி கூரை வேயராங்களா தெரியல, சகோ. ஆனா, நான் சிறுவனா இருக்கும்போது இத வச்சிதான் முக்காவாசி வீட்டுக்குக் கூரை வைப்பாங்க. இதோட இந்தக் குச்சிய வச்சிதான் பனையோலையில நாங்களாம் காத்தாடி செஞ்சி சுத்துவோம். பெரியவங்க திருஷ்டி கழிக்க… அக்கம் பக்கத்து வீட்டுலலாம் போயி கூரையில இருந்து கொஞ்சத்த எடுத்துட்டு வந்து… சுத்திட்டுப் போய் நெருப்புல போடுவாங்க. நாங்க மலைக்குப் போகும்போது காரைக்காய் பறிச்சி… இதோட பச்சப் பில்லுல சேர்த்து பாறையில தேச்சி வச்சு… கொஞ்ச நேரத்துல பழுத்ததும் தின்னுவோம்.’’
அவர் தனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் இருப்பதாகச் சொல்லி முறுவலித்தார்.
ஓரமாகச் சென்று செருப்பு கழட்டி விட்டபோது, அங்கிருந்த சிறு செடியில் இருந்து வெளிப்பட்ட செந்நிறக் குளவி ஒன்று (அது விஷக்குளவியா என்று தெரியவில்லை) எனது வலக்கால் முட்டிப் பகுதியில் சுருக்கென கடித்துவிட்டது.
சட்டென வலி தாங்காமல், ”ஆ…’’ என்று கத்தியதும் நண்பர் என்ன ஏதென பதறிப் போய் வந்து பார்த்துவிட்டு, கடித்த இடத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டார். ஆனாலும் வலி கொஞ்சம்கூட குறையவில்லை.
‘சரி, இந்த வலியோடதான் மலை ஏறனும்னு இருக்கு’ என்று நினைத்துக்கொண்டு, எல்லாம் வல்ல இயற்கையாளை மனத்துள் வேண்டியபடி மிதமான வேகத்தில் ஏற ஆரம்பித்தேன்.
சில படிகள் ஏறிச் சென்ற பிறகு, ஓரிடத்தில் சிறிய கல்லால மரம் ஒன்று இருப்பது தெரிந்தது. உடனே மனத்துள், ‘அதன் அடியில் நிச்சயம் ஒரு சாமி சிலை இருக்கும். அது பிள்ளையார் அல்லது தென்முக நம்பி என்று சொல்லக்கூடிய ஆலமர் செல்வனாக அதாவது, தட்சிணாமூர்த்தியாக இருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு அருகில் போய் பார்த்தபோது, ‘ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த’என்று சிறுபாணாற்றுப்படையும், ‘ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்’ என்று புறநானூறும் (198), ‘ஆல் அமர் செல்வன் அணிசால் மகன்விழாக் / கால்கோல்…’ என்று கலித்தொகையும் (83) சீர்மையுடன் பாடியுள்ள ஆலமர் செல்வரே, அந்த அழகான இடத்தில் அத்தனைப் பொருத்தமாக வீற்றிருப்பது கண்டு பேருவகையுற்றேன்.
உடனே, ஆலமர் செல்வர்க்காக இயற்றப்பட்டு சிவாலயங்களில் பொறிக்கப்பட்டிருக்கும், ‘கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறை ஆறங்க முதற்கற்ற கேள்வி / வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்குப்பாலாய் / எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி யிருந்து காட்டி / சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்‘ என்ற பாடலை எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒருதடவை பாடி வணங்கிவிட்டு, அம்மரத்தின் சிறு விழுதுகளை சிறிது நேரம் தொட்டு வருடிப் பார்த்தேன்.
அதன்பிறகு அங்கிருந்து இன்னும் கொஞ்ச தூரம் ஏறிச் சென்றதும் தட்டையான ஒரு பகுதியில் அதாவது, குகையில் சில சன்னிதிகள் பாறை ஒட்டி வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் சுமார் நூறு பேருக்கு மேல் கூடும் அளவுக்குப் பெரிதாக அதோடு, எத்தனைப் பெரிய மழை வந்தாலும் நனையாமல் பாதுகாப்பாக இருக்கும் விதத்திலும் இருந்தது அவ்விடம்.
உடனே, அங்கே ஏதாவது கல்வெட்டோ, ஓவியமோ இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தோம். மொத்த மேற்புறப் பாறையிலும் வெள்ளையடித்திருந்ததால் ஓவியம் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு, கல்வெட்டை மட்டும் தேடினோம். அதுவும் இல்லை. அல்லது எங்கள் பார்வையில் படவில்லை.
சற்று நேரம் உட்காரலாம் என்று ஓர் ஓரமாகப் போய் உட்கார்ந்து, குளுமையாக வீசும் காற்றில் மகிழ்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேடிக்கைப் பார்த்தபடி கதைகள் பேசிக்கொண்டிருந்தோம்.
பிறகு, பாக்கெட்டில் வைத்திருந்த இன்னொரு மாம்பழத்தை எடுத்து பாறையில் தட்டி உடைக்கப் போவதைப் பார்த்த நண்பர், ”வேண்டாம் சகோ, நீங்க சாப்பிடுங்க’’ என்றார். ”சரி’’ என்று தலையாட்டிவிட்டு தின்ன ஆரம்பித்தேன்.
சட்டென்று நண்பர் கேட்டார், ”மாம்பழம் குறித்து நம்மக்கிட்ட இருக்க பழைமையான பாடல்னா… எது, சகோ?’’
உடனே மனம் சங்கக் கடலில் குதித்து மூழ்கித் துழாவ,
‘….…. சேறு சிறந்து,
உண்ணுநர்த் தடுத்தன தேமா’
என்ற பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் வரிகள் (137, 138). நினைவுக்கு வர, ‘கனிகளில் சாறு மிகுதியாக உடைய இனிய மா மரங்கள், உண்பவர்களை வேறு ஒன்றிலும் மனம் செல்ல ஒட்டாமல் தடுத்தன’ என்னும் அதற்கான பொருளோடு சொன்னேன்.
பின்னாலேயே மாவின் பூ தொடங்கி மாவடு வரை பாடப்பட்டிருக்கும் இன்னும் சில பாடல்களும் நினைவுக்கு வர, மனத்துள் ஒருதடவை சொல்லிப் பார்த்து சிரித்துக்கொண்டேன்.
‘தேமா மேனிச் சில்வளை ஆயமொடு’ (சிறுபா – 176)
‘காமர் மாஅத்துத் தாது அலர் பூவின்
வண்டுவீழ்பு அயரும் கானல்’ (குறுந் – 306)
‘இளமாங்காய் போழ்ந்தன்ன கண்ணினால், என் நெஞ்சம்
களமாகக் கொண்டு ஆண்டாய்; ஓர் கள்வியை அல்லையோ?’ (கலித் – 108)
ஓர் இருபது நிமிடம் உட்கார்ந்திருப்போம். மாம்பழம் தின்று முடித்ததும் கொட்டையை அங்கிருந்து கீழே தூரமாக வீசி எறிந்துவிட்டு எழுந்து மறுபடியும் நடக்கத் தொடங்கினோம்.
பாதுகாப்புக்காக இருபுறமும் இரும்புக் கம்பிகளால் சூழப்பட்ட ஒரு குறுகிய பாறைப் பாதை வழியாக சற்று தூரம் போனதும் ஓர் இரும்புச் சுழல் பாதை கண்ணுக்குத் தெரிந்தது. அந்த இடத்தில் இருந்து மெல்ல கீழே எட்டிப் பார்த்தேன். நடுநடுங்கச் செய்யும் விதத்தில் இருந்ததால் கம்பியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, ‘நல்லவேளை பாதுகாப்புக்காக வேலியும், கம்பியும் போட்டிருக்காங்க. இல்லனா ஆபத்துதான்’ என்று கூறிக்கொண்டு, மெதுவாக அதன்மீது ஏற ஆரம்பித்தோம்.
சுழன்று சென்ற பாதை பிறகு ஏணி வடிவான இரும்புப் படிக்கட்டாக மாற, ஒருவர் பின் ஒருவராக ஏறிப் போனோம்.
மலை ஏற்றம் அவ்வளவு கடினமாக இல்லையென்றாலும், பாதை மிகவும் குறுகலாக அதுவும், ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய வகையில் இருந்தது. அதோடு, பாதையின் பாதி தூரம் வரை மட்டுமே வெய்யோன் ஒளி தெரிந்தது. அதன்பிறகு துளிகூட வெளிச்சம் இல்லாததைக் கண்ட நண்பர் தனது நகர்பேசியை எடுத்து ஒளிரவிட்டார். நானோ குத்து மதிப்பாக ஆனால், மிக இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்து ஏறிப் போனேன்.
முதலில் சாதாரண இருட்டாகத் தொடங்கி, ஒருகட்டத்தில் முற்றிலும் இருட்டாக அதாவது, கும்மிருட்டாக; காரிருளாக மாறி பெரும் பீதியை உண்டாக்கியது. கூடவே, கண்ணுக்குத் தெரியாத வெளவால் கூட்டங்களின் பெருங்கூச்சலும், துர்நாற்றமும் வேறு.
இதையெல்லாம் தாண்டி இன்னும் கொஞ்சம் தூரம் ‘உயிரை கையில் பிடித்துக்கொண்டு’ ஏறிப் போனதும், உச்சியை நோக்கி எங்களை வழி நடத்த வந்தது போல ஞாயிறோனின் சின்னஞ்சிறு வெளிச்சக் கீற்று ஒன்று உள்ளே நுழைவதைக் காண்டோம். அப்போதுதான் மலையின் கருவறைக்குள் நுழைந்து செல்வதாக உணர்ந்தேன். அத்தனைக் கதகதப்பாக இருந்தது.
ஆரம்பத்தில் இரும்புப் படிகளும், அதைத் தொடர்ந்து பாறைப் படிகளும் அமைந்து, இறுதியில் மீண்டும் இரும்புப் படிகளுடன் முடியும் அந்தத் தன்னரிய பரவசமூட்டும் வழியில், ‘கரணம் தப்பினால் மரணம்’ என்பதை அவ்வப்போது ஆழ மனத்துள் மீட்டிக்கொண்டு, சுமார் இருபது நிமிடங்களாக மிக மிகக் கவனமாக மேலே ஏறி வந்தோம்.
நாங்கள் ஒருபோதும் எதிர்பாராத இப்பெரும் சவால் மிக்க வழியைக் கடந்து வந்ததும் அடைந்த பிரகாசமான வெளிச்சத்துக்கு முன்பாக ஒரு திடீர் ரோமாஞ்சனத்தை அளித்த தருணத்தை மீள மீள ரசித்துவிட்டு, ‘பாறை இடுக்கின் வழியே வந்த இக்குறுகிய, மூடிய படிக்கட்டுப் பாதைதான் அதிலும் குறிப்பாக, இந்த மீஇருட்டு, எதிரொலிக்கும் சத்தம், வௌவால்களின் நடமாட்டம்; கூச்சல்; துர்நாற்றம் மற்றும் செங்குத்தான பாதைதான் இந்த மொத்த புலிகுண்டு மலையேற்றத்தின் மிக முக்கிய அம்சம்’ என்று மனத்துள் தோன்றிய எண்ணத்தை நண்பரிடம் பகிர்ந்தேன்.
உடனே அதனை ஆமோதிக்கும் விதமாகத் தலையாட்டிவிட்டு, அவரும் சில வார்த்தைகளில் தன் எண்ணத்தை பகிர்ந்தார். ”ஆமா சகோ, இப்படி ஒரு வழி இருக்கும்னு கொஞ்சம்கூட நெனக்கல. ஒரு கட்டத்துல எங்க இருக்கோம், சுத்தி என்ன இருக்கு, அடுத்து என்ன இருக்கும், எப்படி ஏறப்போறோம் எதுவும் தெரியல.’’
அங்கிருந்து இடது பக்கமாகத் திரும்பி பாறைப் படிவுகள் வழியாக இன்னும் சிறிது தொலைவு மேலே ஏறி, வழியில் இருந்த முது துரிஞ்சி மரத்தையும், அதன் கிளைகளில் ஆங்காங்கே காய்கள் போன்று இருப்பதையும் (அது நோய் அல்லது வேறு ஏதாவது காரணத்தால் உண்டானதாக இருக்கலாம்) சில நிமிடங்கள் நின்று தொட்டுப் பார்த்து வருடிவிட்டு, அதன் பக்கத்தில் பாசி படிந்து பச்சை பசேல் என்று இருந்த சுனையையும், அதைத் தாண்டி பாறைகளுக்கு நடுவில் தனித்திருந்த மயில் கொன்றை மரத்தையும்; அதன் பூக்களையும் பார்த்துவிட்டு, அடுத்துள்ள பாறையில் ஏறி மலை உச்சியை அடைந்தோம்.
மிதமான வெய்யில் இப்போது கடுமையாக மாறியிருந்தாலும், வீசும் சில்லென்ற காற்றால் முற்றிலும் மட்டுப்படுத்தி, அந்த இடத்தையும், சூழலையும் ரம்மியமாக்கியதாக உணர்ந்தோம்.
மலையின் கிழக்கு விளிம்பில் போய் ஆசுவாசமாக உட்கார்ந்துகொண்டு, அங்கே புதிதாகக் கட்டியிருக்கும் சிவக் கோயிலையும், சுற்றிலும் தெரிந்த இயற்கைக் காட்சிகளையும் குறிப்பாக, மலைகளையும் (அவற்றில் மிகுதியானவை சூரையாடப்பட்டும்), வறண்ட நிலங்களையும், ஆங்காங்கே மிகுதியாகத் தென்பட்ட மாந்தோப்புகளையும், ஊர்களையும் சொல்லன்றி வெறுமே பார்த்துக்கொண்டிருந்தோம்.
சட்டென்று சில தினங்களுக்குமுன் ஆந்திராவைச் சேர்ந்த வேறொரு நண்பர் சொன்ன, ‘ஜனவரி மாதத்துல மட்டும்தான் இந்த மலை மேல இருக்கக் கோயிலுக்கு பக்தர்கள் அதிகமா வருவாங்க. மற்ற மாதங்கள்ல மலையேற்றம் செய்யறவங்க மட்டும்தான் வருவாங்க. அதோட, இந்த மலையில அந்தக் காலத்துல நிறைய புதையல் இருந்து எடுத்துட்டுப் போனதாகவும் அதுலயும் குறிப்பா, அங்கிலேயர்கள் இந்த மலை மேல எப்போவும் ஒரு கண்ணு வைத்திருந்ததாகவும், அவங்களோடு அந்த பார்வையாலதான் இன்னைக்கு இத்தனை வசதிகள் வந்திருக்குன்னு சொல்வாங்க’ என்ற வார்த்தைகள் நினைவுக்கு வர, எழுந்து மலையின் தெற்குப் பக்கமாகச் சென்று விளிம்பை ஒட்டி நின்று பார்த்தேன்.
ஓர் எலி அங்கிருந்த துளை ஒன்றின் வழியாகப் புகுந்து கோயில் பக்கமாக மெல்ல வெளியே வந்து தலையை நீட்டி என்னையும், அங்கிருந்த கோயிலையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு என்ன நினைத்ததோ, வேகமாக ஓடிப்போய் துளைக்குள் மறுபடியும் நுழைந்து மறுபக்கமாகச் சென்றுவிட்டது.
அப்போதுதான் கவனித்தேன். அங்கிருந்த கோயில் முன்பாக உள்ள பாறையின்மீது தேங்காய் முடி ஒன்று இருந்தது. ‘ஓ, இதுக்குதான் வந்ததா?’ என்று நினைத்தபடி போய் அதை எடுத்துவந்து அந்த வளைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, வேறொரு பக்கமாகச் சென்று நின்று கண்களை மூடி, அதிகாலை மூன்றரை மணிக்கு வீட்டில் எழுந்து குளித்துக் கிளம்பினது முதல் இப்போது இங்கே வந்து மலை உச்சியில் நின்றிருப்பது வரை வரிசையாக உளத்துள் ஓட்டிப் பார்த்துவிட்டு, ‘அடுத்ததா… திண்டுக்கல் மாவட்டதுல இருக்க கொண்டரங்கி மலை ஏறலாம்’ என்று கூறிக்கொண்டு மெல்ல திறந்து பார்த்தேன்.
பயந்து ஓடிப் போன எலி இப்போது திரும்பவும் வந்து தலையை மெதுவாக வெளியே நீட்டி என்னையும், நான் வைத்துவிட்டு வந்த தேங்காவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தது.
***
ஒவ்வொரு முறையும்
முடியில் நின்று
மனத்தால் காண்கிறேன்
உயிர்முனையை.
ஒவ்வொரு முறையும்
மடியில் நின்று
பாதத்தால் அறிகிறேன்
உயிர்த்துள்ளளை.
ஒவ்வொரு முறையும்
அடியில் நின்று
விழியால் காண்கிறேன்
உயிர்த்திரளை.
எனில்,
வேறுவேறு இல்லைதானே?
மலையும் மனிதனும்
மனிதனும் மலையும்
அல்லது
மலைமனிதனும்
மனிதமலையும்.
*