அரம்பு போற்றுதும் – 040 : அப்பாவுக்கு ஒண்ணு ஐ பாப்பாவுக்கு ஒண்ணு

ஜூலை 15, 2026
*
மடிக்கணினியில் எனக்கு எழுத்து தவிர்த்து வேறு ஏதாவது சிறு சிறு வேலைகள் இருக்கும்போது, ஐ’யை கூப்பிட்டு பக்கத்தில் ஓர் இருக்கை போட்டு உட்கார வைத்துவிட்டு, இரண்டு தனித்தனி உலாவிகள் (Browser) திறந்து ஒன்றில் நான் வேலை பார்த்துக்கொண்டு, இன்னொன்றில் அவனுக்குப் பாடல் போட்டு விடுவதுண்டு. அதாவது, திரையில் பாதி அவனுக்கும், மீதி எனக்குமாக.
அவனும் அதனை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, எவ்வித இடையூறும் செய்யாமல் தன் பாட்டுக்கு அமைதியாகப் பார்த்து; கேட்டு ரசித்துக்கொண்டிருப்பான்.
இந்நிலையில் மதியம் ஒரு மணி இருக்கும். கணினியில் எழுதிக்கொண்டிருந்த பக்கத்தை மூடாமல் சிறிதாக்கி (minimize) வைத்துவிட்டு, சமையலறைக்குப் போய் தேநீர் போட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது மதியுடன் மாடியில் தண்ணீர் வைத்து விளையாடிக் கொண்டிருந்தவன், நான் கதவைத் திறந்து வெளியே வந்ததை எப்படியோ தெரிந்துகொண்டு, எப்போது எப்படி அறைக்குள் வந்தான், என்ன செய்தான்? என்றே தெரியவில்லை. திடீரென்று என்னைத் தேடி ஓடி வந்து, ”அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணு’’ என்றான்.
ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த நான், சட்டென்று அதிலிருந்து விடுபட்டு திரும்பிப் பார்த்துக் கேட்டேன். ”என்னடா, அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணு?’’
உடனே பல்லைக் காட்டிச் சிரித்துவிட்டு, ”அங்க, அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணு’’ என்றான் மறுபடியும்.
எதுவோ சம்பவம் நடந்திருக்கிறது என்று மட்டும் உறுதியாகப் புரிந்ததால், ”என்னது, அங்கயா? எங்கே, வந்து காட்டு’’ என்று கூட்டிக்கொண்டு வந்து பார்த்தால், மடிக்கணியில் எதை அழுத்தினான், என்ன செய்தான் என்றே தெரியவில்லை. திரை இரண்டாகப் பிரிந்து, ஒன்று முன்பு போல இயங்கின படியும், இன்னொன்று வெறுமே நீல நிறத்தில் காலியாகவும் இருந்தன.
‘ரைட்டு. இதான், இவன் சொன்ன அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணா?’ என்று நினைத்துக்கொண்டு, அவன் முன்பாகக் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து சோகமானக் குரலில் இப்படிக் கேட்டேன். ”கீ போர்டுல மொதல்ல ரண்டு கீய ஒடச்ச, சரி. அப்புறம் பதினொரு வருசமா நல்லா பாடிட்டு இருந்த… ஒரு ஸ்பீக்கர காலி பண்ண, சரி. அதெல்லாம் ஹார்ட்வேர் பொருள். இல்லாமக் கூட சமாளிச்சிக்கலாம். இப்போ, இப்படி டெக்னிக்கலா சம்பவம் பண்ண ஆரம்பிச்சிட்டியே… இதெல்லாம் உனக்கே நியாயமாடா, பப்பு? சொல்லு.’’
உடனே நான் கூறிய எதையும் காதில் வாங்காதவனாய் சிரித்துவிட்டு, ”அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணு’’ என்றான் மறுபடியும் மடிக்கணினியை சுட்டி.
மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல், ”ஆமாம்டா பப்பு… அப்பாவுக்கு ஒண்ணு… ஐ பாப்பாவுக்கு ஒண்ணு’’ என்று மட்டும் அவன் சொன்னதையே நானும் வராத சிரிப்பை வரவழைத்துக் கூறிவிட்டு, அப்படியே அவனை தூக்கிப் போய் மாடியில் முன்பு போல விளையாட விட்டுவிட்டு, இம்முறை எச்சரிக்கையாக கதவை நன்கு தாழிட்டுவிட்டு, சமையலறைக்கு சென்று தேநீர் எடுத்துக்கொண்டு வந்து, பாதியில் நிறுத்திப் போன எழுத்துப் பணியைத் தொடராமல், அவன் செய்துவிட்டுப் போன அரும்பெரும்பணியை சரி செய்யத் தொடங்கினேன்.
*