அரம்பு போற்றுதும் – 039 : ஐ பாப்பா பள்ளிக்கூடம் போறன்

ஜூலை 13, 2026
*
ஐ அவ்வப்போது கையில் கிடைக்கும் பையை எடுத்து மாட்டிக்கொண்டோ, பொம்மைகளை துணையாக எடுத்துக்கொண்டோ வெளியில் எங்காவது சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு, சிறிது தூரம்; சிறிது நேரம் போய் வருவதுண்டு.
நாங்களும் அதை வளர்த்தெடுத்து ஊக்குவிக்கும் நோக்கில் அது சார்ந்து சில கேள்விகள் கேட்பதுண்டு. உதாரணமாக, அவன் கடைக்கு சென்றுவிட்டு வந்ததாகச் சொன்னால் இப்படிக் கேட்போம். ”ஐ பப்பா… கடைக்குப் போய் என்ன வாங்கிட்டு வந்த?, கடையில என்னலாம் இருந்தது? பால் வாங்குனியே… அதுக்கு எவ்ளோ ஆச்சி?, பப்பம் கடையில பாட்டி என்ன சொன்னாங்க? கடைக்குப் போற வழியில என்னலாம் இருந்துச்சி?’
அதுவே கோயிலுக்கு என்றால், ”எந்தக் கோயிலுக்குப் போயிட்டு வந்த?, அங்கே என்னென்ன சாமிலாம் இருந்தது?, கோயில்ல ஒரு பாப்பா வந்திருந்ததே… அவங்கக்கிட்ட பேசுனியா?, கோயில் உள்ளார என்னென்ன மரம்லாம் இருந்துச்சி?, கோயில் பக்கத்துல மாடு இருக்குமே… அது என்ன பண்ணுச்சி?’’ இப்படிக் கேட்போம்.
அவனும் அப்போதைக்குத் தோன்றும் எதையாவது பதிலாகச் சொல்லி வைப்பான். நாங்களும் கேட்டு ரசித்து மகிழ்வோம்.
இந்நிலையில் இன்று மதியம் ஒரு தோள் பையை எடுத்து, அதற்குள் அவனது இரண்டு சிறிய புத்தகங்களை வைத்துக்கொண்டு, ”ஐ பாப்பா… பள்ளிக்கூடம் போறன்’’ என்று கிளம்பினான்.
”சரிடா பப்பு…. பாத்து பத்திரமா போயிட்டு வா’’ என்றேன்.
சென்று வாசல் கதவு அருகில் சிறிது நேரம் நின்றுவிட்டு வந்தவன், பையை சுவர் ஓரமாகக் கீழே கழட்டி வைத்துவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்து, ”நான் பள்ளிக்கூடம் போயி வந்துட்டன்’’ என்றான்.
”சூப்பர்டா தங்கம்… போய் என்னலாம் படிச்ச?’’
”எதுவும் இல்ல.’’
”ஏன்?”
”இல்ல.”
”பள்ளிக்கூடத்துல யாருலாம் இருந்தாங்க?”
”நறையா அண்ணா, அக்கா. அப்புறம் ஒண்ணு பாப்பா.”
”வேற?”
”மிஸ்ஸு, ஆயா.”
”ஓ, அவங்க எதுவும் உனக்கு சொல்லித் தரலயா?”
‘இல்ல’ என்று தலையாட்டினான்.
”சரி, நீயாவது அவங்களுக்கு எதனா சொல்லித் தந்துட்டு வந்திருக்கலாம்ல.’’
உடனே எதையோ யோசித்தவன், ”அ ஆ இ ஈ… சொல்லி’’ என்றான்.
”வாவ்… சூப்பர் பப்பு. அப்புறம் என்னலாம் சொல்லித் தந்த?”
”ஒண்ணு, ரண்டு… சொல்லி.”
”வாவ்… அப்புறம்?”
”ஞாயிறு, திங்கள்… சொல்லி.”
”வாவ்… சூப்பர்டா தங்கம். வேற?”
’’அவ்ளோதான்’’ என்று சொல்லிவிட்டு மறுபடியும் பையை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு, இன்னொரு கையில் கீழே இருந்த குரங்கு பொம்மையையும் துணைக்கு எடுத்துக்கொண்டு, ”ஐ பாப்பா… பள்ளிக்கூடம் போறன்’’ என்றுவிட்டு முன்பை விட இம்முறை வேகமாகக் கிளம்பினான்.
‘மீண்டுமா, பப்பு?’ என்று கேட்க வாய் வரை வார்த்தைகள் வந்து கேட்காமல் நிறுத்திவிட்டு, ”பாய்’’ மட்டும் சொல்லி அனுப்பினேன்.
அப்போது என் மனத்தில் தோன்றியது இதுதான். ‘ஒரு குரங்கை துணையாகக் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்பவன், எனக்குத் தெரிந்து இச்சென்னை மாநகரத்திலேயே இவனாகத்தான் இருப்பான்.’
கூடவே, ‘இம்முறை யார் யாருக்கு, என்னென்னவெல்லாம் சொல்லித் தரப் போகிறானோ?’ என்ற கேள்வியும்.
*