அரம்பு போற்றுதும் – 038 : பாப்பா சிரிக்க மாட்டுது

ஜூலை 06, 2026
*
‘காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு, அப்படியே இரண்டு கிலோமீட்டர் தாண்டி இருக்கும் சரவணா செல்வரத்தினம் கடைக்குப் போய் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களையும், தனக்கு ஓர் ஆடையும் வாங்கி வரலாம்’ என்றாள் மதி.
‘சரி’ என்று மூவருமாகக் கிளம்பிப் போனோம்.
அடிக்கடி செல்லும் கடைதான் என்றாலும் இன்று ஐ, புதிதாகப் பார்ப்பது போல ஆங்காங்கே நிற்க வைத்திருந்த பொம்மைகளை வியப்புடன் பார்த்து வந்தான்.
‘சரி’ என்று நாங்களும் கண்டும் காணாமல் இருந்தோம்.
திடீரென ஓரிடத்தில் இருந்த என் வயதொத்த ஜூன்ஸ் டி-சர்ட் அணிந்திருந்த பொம்மையை பார்த்துவிட்டு நின்று, ”அப்பா… மாமா, என்ன பண்றாங்க?’’ என்று கேட்டான்.
‘ரைட்டு, இன்னிக்கு இதுதான் இவன் ஆயுதமா?’ என்று எண்ணி மெல்லிதாகச் சிரித்துவிட்டு சொன்னேன். ”மாமா… சும்மா நின்னுட்டிருக்காங்க, பப்பு.’’
உடனே, அடுத்துள்ள பெரிய கண்ணாடி அருகில் இருந்த நடுத்தர வயது புடவை அணிந்த பெண் பொம்மையை காட்டி அவனாகவே சொன்னான். ”அப்பா… அத்த, சும்மா நின்னுட்ருக்காங்க.’’
”ஆமாம்’’ என்றேன் தலையசைத்து.
இப்படியே ஒவ்வொரு பொம்மையாகப் பார்த்து எதையாவது கூறிக்கொண்டு வந்தவன், அடுத்ததாக சிறார்களுக்கான ஆடைகள் இருக்கும் பகுதிக்குள் ஓடிப்போய், அங்கிருந்த குழந்தை பொம்மை ஒன்று கை கொடுப்பது போல ஒரு கையை நீட்டியிருப்பதை பார்த்துவிட்டு அதன் அருகே சென்று நின்று, எட்டி தானும் கை கொடுக்க முற்பட்டான். எட்டவில்லை.
உடனே திரும்பி என்னை அழைத்துத் தூக்கச் சொல்லி கை கொடுத்துவிட்டு, மொத்தப் பற்களும் தெரிய சிரித்துச் சொன்னான். ”ஐ பாப்பா, பாப்பாவுக்குக் கை கொடுத்து.’’
சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டு, ”சூப்பர் பப்பு’’ என்றேன்.
தொடர்ந்து ஆங்காங்கே இருந்த பொம்மைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்துவிட்டு, அங்கிருந்து புறப்படும்போது ஒரு பொம்மை அருகில் ஓடிப் போய் நின்றுகொண்டு சொன்னான். ”அப்பா… பாப்பா, சிரிக்க மாட்றாங்க.’’
நான் வேண்டுமென்றே, ”பாப்பாவுக்கு சிரிக்கத் தெரியாது, பப்பு. அதான் சிரிக்க மாட்றாங்க’’ என்றேன்.
உடனே அடம் பிடிக்கும் குரலில், ”அப்பா… பாப்பாவ சிரிக்க சொல்லு’’ என்றான்.
வாங்கின பொருட்களை எல்லாம் எடுத்துப் போய் வரிசையில் நின்று பணம் செலுத்திக்கொண்டிருந்த மதி, ”வாங்க போலாம்” என்றாள் கை காட்டி.
திரும்பி அவனைப் பார்த்து, ”ஐ, பப்பு… வா, அம்மா கூப்பிட்றாங்க. போலாம்’’ என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டுவிட்டு இன்னும் அதிகமாக அடம் பிடிக்கும் குரலில், ”பாப்பாவ சிரிக்க சொல்லு’’ என்றான்.
சற்று தள்ளி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பணிப்பெண் பக்கத்தில் வந்து, ”உங்க அம்மா கூப்பிட்றாங்க, போகலயா நீ?’’ என்று கேட்டதும், என்னைப் பார்த்துவிட்டு அழும் குரலில் சொன்னான். ”அப்பா… பாப்பாவ சிரிக்க சொல்லு.’’
அவனது அடம் எல்லை மீறினதை உணர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்போதைக்குத் தோன்றியதை சொன்னேன். ”ஐ பப்பு… பாப்பாவுக்கு வாய்ல புண்ணு வந்திருக்காம், சாமி. அதான் சிரிக்க மாட்றாங்க. நாளைக்கு புண்ணு சரியானதும், ஐ பாப்பா மாதிரி அழகா சிரிப்பாங்க. அப்ப வந்து நாமப் பாக்கலாம், சரியா?’’
உடனே நான் சொன்னது உண்மைதானா என்று சந்தேகப் பார்வை வீசி அப்பொம்மையை உற்று நோக்கிவிட்டு, உண்மைதான் என்பது போல தலையை லேசாக மேலும் கீழும் ஒருதடவை அசைத்துவிட்டு, அங்கிருந்து சற்று தள்ளி கண்ணாடி தடுப்புக்கு அந்தப் பக்கமாக இருக்கும் படிக்கட்டை எட்டிப் பார்த்துவிட்டு, ”அப்பா… நகரும் படிக்கட்டுல போலாமா?’’ என்று கேட்டான்.
‘அப்பாடா, தப்பித்தோம்’ என்று நினைத்துக்கொண்டு, ”வா, பப்பு இப்பவே போலாம்’’ என்று கூறி மேற்கொண்டு அவனை எந்தப் பொம்மையையும் பார்க்க விடாமல் கூட்டிக்கொண்டு அங்கிருந்து வேகமாக வந்துவிட்டேன்.
*