மலையாற்றுப்படை – 4 : சங்ககிரி

”மலையின் உண்மை உயரத்துக்கும், காணும் நம் மனத்தின் கற்பனை உயரத்துக்கும் அதிக வித்தியாசம் உண்டு. முன்னதை விட பின்னது யாருக்குக் குறைவாக இருக்கிறதோ, அவர் முதல் அடியை வைக்காமலே பாதி மலை ஏறியவர் ஆகிறார்.’’

                   (ஏப்ரல் 10, 2026)

                         ***

மலையாற்றுப்படை – 4 : சங்ககிரி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 1805 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட சங்ககிரி மலையை ஏற, சேலத்தில் உள்ள நண்பர் அறையிலிருந்து ஒரு வெள்ளிக்கிழமைக் காலை சற்று தாமதமாகவே புறப்பட்டுப் போனோம். 2300 அடி உயரம் என்பதால் எளிதில் ஏறிவிடலாம். அதோடு, பக்கத்தில் (35 கிலோமீட்டர் தூரத்தில்) இருப்பதுமே எங்கள் தாமதத்திற்குக் காரணம்.

சேலம் மாவட்டம் – சங்ககிரி வட்டத்தில் உள்ள ‘சங்ககிரி துர்க்கம்’ என்னும் சங்ககிரி மலை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மீதுள்ள கோட்டை, விஜயநகர அரசர்களால் பதினைந்தாம் நூற்றாண்டில் முதன்முதல் கட்டப்பட்டு வர்த்தகப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது. பின் ராணுவ துருப்பாக திப்பு சுல்தானுக்கும், கொங்கு நாட்டிற்கான வரிவசூல் கிடங்காக ஆங்கிலேயர்க்கும் பயன்பட்டது.

இம்மலை குறித்தும் இதன்மேல் உள்ள கோட்டை பற்றியும் முதல்தடவை அறிந்தபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அதுவும், ஆள் இறங்கும் குழி, உருட்டிவிட்டான் பாறை, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை… என விதவிதமான தண்டனை முறைகள் உருவாக்கப்பட்டு [; கண்டுபிடிக்கப்பட்டு], இங்கே ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒற்றை வரியில் சொல்வதென்றால், விதவிதமான தண்டனை தரவே காலம் காலமாகப் பயன்படுத்தப்பட்ட மலை இது.

பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்து, மலை அடிவாரத்தில் இருந்த அரசுப் பள்ளியையும் மசூதியையும் பார்த்தபடி போய், ‘மைசூர் கேட்’ என்று அழைக்கப்படும் கோட்டையின் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைந்தோம். இருவர் அப்போதுதான் மலை ஏறிவிட்டு வேர்வையில் நனைந்தவாறு கீழே வந்துகொண்டிருந்தார்கள்.

நண்பர் அவர்களிடம் ஆர்வத்தோடு கேட்டார், ”மலை மேல கூட்டம் நிறைய இருக்கா?’’ எங்களது கேள்வியே தவறு என்பதுபோல சிரித்துவிட்டு, ”இல்ல, போய் பாருங்க’’ என்றார்கள்.

கற்களை அடுக்கி மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்த நுழைவு வாயில் கடந்து உள்ளே சென்று, அங்கிருந்த கீழ் அரணில் சிவன் கோயிலையும், முன்னால் இருந்த உடைந்த நந்தி சிலையையும், நீரில்லா சிறு குளத்தையும் முதலில் பார்த்துவிட்டு, அதைத் தாண்டி கோட்டையின் மூன்றாவது வாயிலில் இருக்கும் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குப் போனோம். தற்போது வழிபாட்டில் உள்ள அக்கோயில் பூட்டியிருந்தது.

உள்ளே சென்று கல்யாண மண்டபத்தில் உள்ள வேலைப்பாடு மிக்கத் தூண்களையும், தொல்லியல் துறை புனரமைத்த கோயிலின் பகுதியையும் கண்டுவிட்டு, திப்பு சுல்தான், தீரன் சின்னமலை சார்ந்த பல வரலாற்று நினைவுச் சின்னங்களையும், இன்ன பிற ஆயுதங்களையும், நகைகள் மற்றும் பிற கலைப்பொருட்களையும் காணலாம் என நினைத்தது நடக்காமல் போன வருத்தத்தோடு, கோயில் முன்பாக இருந்த கல் தூண் அருகில் போய் சிறிதுநேரம் நின்றுவிட்டு, மலையின் கம்பீரம் முன்னால் துளி போல கட்டப்பட்டிருந்த அக்கோயிலை ஒற்றைப் பார்வையில் நோக்கிவிட்டு ஏற ஆரம்பித்தோம்.

மூன்று பக்கம் செங்குத்தான பாறைகளும், ஒருபக்கம் மட்டும் ஏறக்கூடிய தன்மையிலும் இருந்தது மலை. அதன் தொடக்கத்திலேயே மிக அதிகமாக துரிஞ்சி மரங்கள் இருப்பது கண்டதும் உள்ளம் பூரிக்கத் தொடங்கிவிட்டது. காரணம், வேர் முதல் காய் வரை நன்கு பரிச்சயமான தாவரம் என்பதாலும், சிறு வயது தொடங்கி அதனோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்ததாலும்.

ஆசையோடு சென்று ஒரு சிறு மரத்தின் கிளையைப் பிடித்து வருடிவிட்டு, இலை பிய்த்து லேசாகக் கசக்கி முகர்ந்து பார்த்தேன். பால்யம் நினைவுறுத்தும் அதே ஈர்க்கும் வாசனை.

பிறகு நண்பரிடம் துரிஞ்சி, துரிஞ்சல், உசிலை, அரப்பு… என்று வெவ்வேறு பெயர்களால் வெவ்வேறு ஊர்களில் அத்தாவரம் அழைக்கப்படும் தகவல் தொடங்கி, அதன் இலைகள் தலையில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுவது வரைக்கும் சொல்லிக்கொண்டு நடந்தேன். அவரும் நடுநடுவே தனக்குத் தெரிந்ததையும், அவை சார்ந்த அனுபவங்களையும் கூறி வியத்தினார்.

ஏற ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது, இது பார்க்கத்தான் சிறிய; எளிய மலை போல இருக்கிறது. பாதை முழுக்க நெட்டாக இருப்பதால் நிச்சயம் கடும் மெனக்கிடலைக் கோரப்போகிறது என்று.

நண்பரிடம் சங்ககிரியைச் சேர்ந்த முக்கிய ஆளுமையான ச.து.சு. யோகியார் என்னும் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகி குறித்து விரிவாகப் பேசிக்கொண்டு குறிப்பாக, அவர் மொழிபெயர்த்த ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ நாவல் தொடங்கி, வால் விட்மேன் கவிதை வரை, மிதமான வேகத்தில் ஏறினேன்.

ஐந்தாவது வாயிலை அடுத்து படைவீரர்கள் தங்குமிடம் ஒன்று சிதைவடைந்த நிலையில் காணப்பட்டன. சென்று ஓர் ஓரத்தில் நின்று பார்த்துவிட்டு, அடுத்து சற்று தூரத்தில் இருந்த இஸ்லாமியர் வழிபாட்டுத் தலத்தையும், அதனருகில் மர்மமான சுரங்கப்பாதை ஒன்று இருப்பதையும் கண்டுவிட்டு, நேர்த்தியாகக் கல் பாவிய படிக்கட்டுகள் வழியாக ஏறிப் போய், அங்கிருந்த ஆலி மரம் ஒன்றின் அடியில் உட்கார்ந்தோம்.

குப்தகிரி என்பது இம்மலைக்கு உள்ள மற்றொரு பெயர். திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேயே ராணுவம் இதை ஒரு பெரிய ராணுவப் புறக்காவல் நிலையமாகப் பயன்படுத்தியது. அதோடு, இக்கோட்டையில் கல்லறைகள், ஒரு மரணக் கிணறு, ஒரு தானியக் கிணறு, இரண்டு மசூதிகள், ஒரு தர்கா, இரண்டு பெருமாள் கோயில்கள் மற்றும் ராணுவ நிர்வாகக் கட்டடங்கள் இருந்ததை (அவற்றில் சில இப்போதும் இருப்பதை) நண்பரிடம் சொல்லிக்கொண்டு எழுந்து, மெதுவாக நடந்து ஆறாவது வாயில் அருகில் இருந்த வெடிமருந்துக் கிடங்கை சென்று பார்த்தோம்.

அதுவரை ஓணான், குருவி, பட்டாம்பூச்சி தவிர எவ்வுயிரும் கண்ணில் படாமல் இருந்தது. சட்டென்று ஓரிடத்தில் ஐம்பதுக்கும் அதிகமானக் குரங்குகள், வழியோரம் இருந்த ஆலி மரத்தில் ஏறிக்கொண்டு (சில வழியிலும், ஓரத்திலும் அமர்ந்துகொண்டு), அதன் காய்களைப் பறித்துத் தின்பது கண்டு ஆச்சரியப்பட்டோம்.

இருவருக்கும் சேர்த்து ஒரே ஒரு போத்தல் தண்ணீர் மட்டுமே கொண்டுபோயிருந்ததால், அதைக் குரங்குகளிடம் இருந்து காக்க எண்ணி சிறு குச்சி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டேன்.

துரிஞ்சி தவிர்த்து கள்ளி, பூங்கத்தாழை, சூரை, பீவேலன், காட்டு கனகாம்பரம், மஞ்சம்புல், புங்கை, சொத்துக்கிளா, வேம்பு, மயில்கொன்றை, காரை, ஆலி… முதலான பல தாவரங்கள் ஆங்காங்கே இருப்பதை பார்த்துக்கொண்டு, எங்கேயும் உட்காராமல் மிதமான வேகத்தில் ஏறிப்போய், சரியாக பாதி மலையில் வளைவு அருகே ஓர் ஓரமாக இருந்த சிவலிங்கத்தைக் கண்டுவிட்டு மகிழ்வோடு நின்றோம்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு யாரோ வந்து வழிபட்டு விளக்கு ஏற்றிவிட்டுப் போனதற்கான தடையம் அங்கே இருப்பதை நண்பருக்குக் காட்டிவிட்டு, அருகில் இருந்த சிறிய கல் ஒன்றின்மீது வேர்வை வழிய உட்கார்ந்தேன்.

சட்டென்று எதிர்பாராத வகையில் ராமலிங்க வள்ளலார் நினைவுக்கு வந்தார். பின்னாலேயே அவர் பாடிய,

‘கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி

உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்

பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்

பற்றேன் சிவானந்தப் பற்றே என்பற்றெனப் பற்றினனே’

என்ற திருவருட்பா பாடலும் (4745) நினைவுக்கு வர, என்னை அறியாமல் நெகிழ்ந்துபோய் சின்னதாக சிரித்துக்கொண்டேன்.

அதைக் கண்டுவிட்டா அல்லது தற்செயலாகவா தெரியவில்லை. நண்பர், ”என்னாச்சு சகோ?’’ என்று கேட்டார். சொன்னேன்.

பதிலுக்கு ஒன்றும் கூறாமல் ஏதோ சிந்தையில் ஆழ்ந்தவர், சில நொடிகள் கழித்து அதிலிருந்து விடுபட்டவராய் முன்னால் இருந்த பெரும் பாறைகளில் கருப்பாக வழிந்திறங்கி காய்ந்து போயிருந்த கறைகளைக் காட்டிச் சொன்னார். ”குறிஞ்சி மாதிரி இந்தப் பூங்கத்தாழையும் பன்னிரண்டு வருசத்துக்கு ஒரு தடவைதான் பூக்கும், சகோ. அப்படிப் பூத்ததும் அதுவே தானா பட்டுப்போய் நீரா; கறையா வழிய ஆரம்பிச்சிடும். அவ்வாறு உண்டானக் கறைதான் இதெல்லாம். அவ்வளவு சீக்கிரம் இது மறையாது.’’

அதுவரை அறியாத தகவல் என்பதால் வியப்போடு கேட்டுக்கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன்.

முக்கால் மலை ஏறியிருப்போம். திடீரென்று இரண்டு இளைஞர்கள் சத்தம் இல்லாமல் வேகமாக இறங்கி வருவதைப் பார்த்துவிட்டு நிறுத்திக் கேட்டோம். ”இன்னும் எவ்வளவு தூரம் ஏறணும்?’’ திரும்பி உச்சிமலையை பார்த்துவிட்டு, ”இன்னும் பத்து நிமிஷம்தான், ஏறிடலாம்’’ என்றார்கள்.

மகிழ்வோடு தலையசைத்து அனுப்பிவிட்டு, இன்னும் கொஞ்ச தூரம் ஏறினதும் பெரிய கோட்டை சுவர் தெரிய ஆரம்பித்தன. கூடவே, சுவரில் முளைத்து பிளந்து விரிந்து வளர்ந்திருக்கும் பெரிய ஆல மரம் ஒன்றும் இருப்பது தெரிந்தது.

ஒரு கட்டடம், அது எவ்வளவு வலிமையாக கட்டப்பட்டிருந்தாலும் சரி, அதில் ஓர் ஆலோ அரசோ முளைத்துவிட்டால் போதும். அது சிறிது சிறிதாக அக்கட்டடத்தை அசைக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் இல்லாமல் செய்துவிடும் விந்தையை ஆச்சர்யத்தோடு எண்ணிக்கொண்டு, அதன் அருகில்; நிழலில் போய் நின்றோம்.

மனித சஞ்சாரம் பொட்டும் இல்லாமல், தாவரங்களின் மெல்லிசைவும், தூரத்தே விட்டுவிட்டு ஒலிக்கும் புள்ளினக் குரலும் மட்டுமே கேட்க, அவ்விடமும் சூழலும் ஒரே நேரத்தில் ரம்மியமாகவும், பீதியாகவும் மாறுவதாக உணர்ந்தோம்.

நகர்பேசி எடுத்து நேரம் பார்த்தேன். பத்து மணி ஆக ஐந்து நிமிடம் இருந்தன. மெல்ல நடந்து ஒன்றரை மணி நேரமாகக் கற்களால் செதுக்கப்பட்ட படிகளில் செங்குத்தான பல வழிகளைக் கடந்து, மலையின் மேலே இருக்கும் தமிழகத்தின் உயரமான மலைக்கோட்டையின் ஒன்பதாவது வாயிலுக்குப் போனோம்.

பதினேழாம் நூற்றாண்டில் ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக அறியப்படும் அக்கோட்டையின் வாயிலில், 1799 என்ற ஆண்டு பொறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து, ‘இது நிச்சயம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களால் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு, இருபுறமும் கதவு மாட்டப் பொறுத்தப்பட்டிருந்த இரும்பில் ஒன்றை தொட்டுப் பார்த்தேன். மிகக் குளுமையாக, காலத்தின் ரேகையை உணர முடிவதாக இருந்தன.

அங்கிருந்து மேலும் நடந்து, இடது பக்கமாக மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தை போய் பார்த்துவிட்டு வந்து, கோட்டையின் உள் முகப்பு வாயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த திட்டில் உட்கார்ந்தோம்.

மலையடிவாரத்திலிருந்து புலிமுக வாயில், கல் கோட்டை வாயில், கடிகார வாயில், ரண மண்டபம், புதுக்கோட்டை வாயில், ரொக்க திட்டி வாயில், இடி விழுந்தான் பாறை, கம்பெனி வாயில் என ஒன்பது நுழைவாயில்களைத் தாண்டி, பூத முகமும் கஜேந்திர மோட்சமும் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த பத்தாவது அதாவது, கோட்டை கடை வாயிலுக்கு வந்து உட்கார்ந்திருப்பது எண்ணி ஆசுவாசமாய் தூணில் சாய்ந்து மேலே பார்த்தேன்.

விதானத்தில் அரவம் ஒன்று உவாவை விழுங்க முற்படும் சிற்பம் அழகாகச் செதுக்கியிருந்தார்கள். அதன் அருகிலேயே பாம்பு ஒன்று சில தினங்களுக்கு முன்பு வந்து மிகப் பொருத்தமாக தோல் உரித்துப் போட்டுப் போயிருப்பதை புன்னகைத்தவாறு நண்பரிடம் காட்டிவிட்டு, அங்குள்ள சுவரில் இருந்த விந்தையான சிற்பத்தை எதேச்சையாகக் கண்டேன்.

எத்திசையில் இருந்து பார்த்தாலும் ஒரு குரங்கு உருவம் தெரிவது போல அத்தனை தத்ரூபமாக செதுக்கியிருந்தார்கள். கண்டதும் முதலில் மகிழ்ச்சியாகவும், பிறகு அதன்மீது யாரோ வண்ணம் கொண்டுவந்து பூசி சிதைத்திருப்பது எண்ணி வருத்தமாகவும் இருந்தது.

நான்கைந்து ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டு, கீழே தரையில் சிறிய வண்டு ஒன்று எங்கிருந்தோ தூக்க முடியாமல் புழு ஒன்றை தூக்கிப்போவதை சில நொடிகள் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்து உள்ளே நடக்க ஆரம்பித்தோம்.

மலையில் உள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கிப் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், அதை எடுத்ததற்கான தடையம்; அறிகுறி ஓரிடத்தில்கூட தென்படாததையும், கோட்டை கட்ட உபயோகப்படுத்தப்பட்ட செங்கற்கள் மிக உறுதி வாய்ந்ததாக உள்ளதையும் பார்த்து வியந்தோம்.

கூடவே, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் கோட்டையும் மலையும் இருந்தாலும், துளிகூட பாதுகாப்பும், பராமரிப்பும் இல்லாமல் மிகப் பரிதாபமான நிலையில் இருப்பது கண்டு வருந்தினோம்.

அங்கிருந்த சுனை ஒன்றினைக் கடந்து கோட்டையின் மத்தியில் இருந்த சென்ன கேசவப்பெருமாள் கோயிலுக்குப் போனோம். அதுவும் பூட்டியிருந்தது. மிகப் பழைமை வாய்ந்த அக்கோவில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மட்டுமே பூஜை செய்யப்படும், பிற நாட்களில் உற்சவர் மலை அடிவாரத்தில் கொண்டுபோய் வைக்கப்படும் தகவலை நண்பர் சொன்னார்.

கேட்டபடி அங்கிருந்த தூண் ஒன்றில் சாய்ந்துகொண்டு, கீழே தெரியும் ஊரையும், சாலைகளையும், நிலப்பரப்பையும், தூரத்தில் மங்கலாய்த் தென்பட்ட சேர்வராயன் மலைத்தொடரையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

பிறகு, அங்கிருந்த தீபத் தூண்மீது வாணலி வைத்திருப்பது கண்டு புன்னகைத்துவிட்டு, கோட்டை சங்கு வடிவம் கொண்டதாலும், கிரி என்றால் மலை என்று பொருள் தருவதாலும்தான் அம்மலைக்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாகக் கூறப்படும் தகவலை மனத்துள் ஒருதடவை அசைபோட்டுவிட்டு, அங்கிருந்து மெதுவாக நடந்து, தண்டனைகளின் கோட்டையாக இருந்த வளாகத்தில் ஆங்காங்கே இருந்த ஆள் இறங்கும் குழி (பாம்பு, தேள் முதலான கொடிய விஷ சந்துக்கள் இருக்கும் சிறிய வாயில் மட்டுமே கொண்ட குழிக்குள், ஒருவரை குற்றத்துக்கு ஏற்ப நாட்கள் வகுத்து இறக்கிவிட்டு மூடிவிடுவார்கள். அதனைக் கடந்து உயிருடன் இருந்தால் விடுதலை. இல்லையென்றால் மரணம். அப்படி ஒருவர்கூட தப்பித்ததில்லை என்பது வரலாறு), தோல் உரிச்சான் மேடு (கை கால்கள் கட்டப்பட்டு, முதுகு மற்றும் உடலின் பகுதிகளில் தோல் உரிய சாட்டையடிகள் குற்றத்திற்கு ஏற்ப அளிக்கப்படுவது), தொங்கவிட்டான் குகை (கால்களில் கட்டப்பட்டு தலைகீழாகக் குகைக்குள் தொங்கவிடுவது), உருட்டிவிட்டான் பாறை (கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயரமான பாறை மீதிருந்து உருட்டிவிட்டு தண்டனை நிறைவேற்றுவது) போன்றவற்றை சென்று ஒருவித நடுக்கத்தோடு பார்த்துவிட்டு, இறுதியாக தீரன் சின்னமலை தூக்கிலிட்டதாக சொல்லப்படும் இடத்தை பார்த்தோம். சுட்டெரிக்கும் வெய்யில் உருவில் அவ்விடமே மரண ஓலம் கேட்பதாக இருந்தன.

சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்துவிட்டு, அருகில் இருந்த தக்கண மரத்தருகில் சென்று தீரன் சின்னமலை குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு, எப்படி அவரை கொண்டுவந்து தூக்கிட்டிருப்பார்கள் என்பதை கற்பனையாக விரித்துப் பார்த்துவிட்டு, கீழே விழுந்து காய்ந்து கிடந்த காய்களை அள்ளித் தூக்கிப்போட்டு காற்றில் அவை சுழன்றுகொண்டு விழுவதை ரசிக்க மனமின்றி வெறுமே பார்த்துவிட்டு, மலை விளிம்பு ஒட்டி கட்டப்பட்டிருந்த தஸ்தகீர் மகான் தர்காவை போய் பார்த்தோம்.

நண்பர் மிக முக்கியமான ஒரு கேள்வியை எழுப்பினார், ”அது எப்படி சகோ, எல்லா இந்துக் கோயில்கள் இருக்க மலை மேலேயும் வந்து திட்டமிட்டு ஒரு தர்கா கட்டி இருக்காங்க?’’ எனக்கு அவரது கேள்வியில் உள்ள நியாயமும், ஆதங்கமும் புரிந்ததால் எதுவும் கூறாமல் மெல்லிதாய் முறுவலித்துவிட்டு, எதிரில் இருந்த இன்னொரு மண்டபத்தை சென்று பார்த்தோம்.

அண்மையில் ஆட்கள் வந்து சோறாக்கி உண்டு தங்கிவிட்டுப் போனதற்கான அடையாளங்கள் இருந்தன. அதில் எதிர்பாராத வகையில் ஒரு பேம்பர்ஸ் சுவர் ஓரமாகக் கிடந்ததை நண்பர் சுட்டிக் காட்டினார். அளவில் பெரிதாக இருந்ததால் அது நிச்சயம் குழந்தையது இல்லை என்று சொல்லிக்கொண்டு வெளியே வந்து, அங்கிருந்த பெரிய பாறை ஒன்றில் ஓடிப்போய் ஏறினோம்.

சுற்றிலும் நிறைய சுனைகள் இருப்பதையும், சுட்டெரிக்கும் வெய்யிலிலும் அதில் நீர் வற்றாமல் உள்ளதையும் பார்த்துவிட்டு, ”இவ்வளவு சுனைகள் இருக்கும் மலையை எங்குமே கண்டதில்லை. அதோடு, இத்தனை வற்றாத சுனைகள் இருப்பதால்தான் இந்த இடத்தை கோட்டை கட்ட தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்’’ என்றுவிட்டு, அருகில் இருந்த துரிஞ்சி மரக் கிளை ஒன்றைப் பற்றி கீழே இறங்கி, இன்னொரு பாறை வழியாக ஏறி உச்சி மலைக்குப் போனோம்.

நாலா புறமும் சரிபாதி துரிஞ்சியும் கள்ளியும் பாறைகளுமே தெரிந்த அந்த மலை உச்சியில் நின்றுகொண்டு, மெல்ல கண்கள் மூடி அதுவரை அங்கே கொல்லப்பட்ட எண்ணிலா உயிர்களுக்கு ஒருசேர சில மணித்துளிகள் அஞ்சலி செலுத்தினேன்.

பிறகு, சற்று தள்ளி முது கள்ளி மரத்தருகில் நின்று தூரத்தில் எதையோ உன்னித்துப் பார்த்துக்கொண்டிருந்த நண்பரிடம், ”அடுத்ததா, ஆந்திராவுல இருக்க புலிகுண்டு மலை ஏறலாம்’’ என்றுவிட்டு, அங்கிருந்து கிடுகிடுவென நடக்க ஆரம்பித்தேன்.

                        ***

ஏக்கத்தோடு

பார்த்துக்கொண்டிருக்கிறது

மலை.

சுட்டெரிக்கும் வெய்யிலின்

கம்மலொலி கமழ்கிறது

பாறையின் தேகமெங்கும்.

தனிமையின் வழியை

கால்களால் கிழித்தபடி வருகிறான்

ஒற்றொருவன்

ஆயிரமாயிரம் சொற்களோடு.

சடுதியில் ஏக்கம் தீர்ந்து

குதூகளிக்கத் தொடங்குகிறது மலை

முன்னிலும்

முன்னிலும்

முன்னதாய்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=