அரம்பு போற்றுதும் – 037 : மை வச்சப் பள்ளிக்கூடம்

ஜூலை 01, 2026
*
இரு சக்கர வாகனத்தில் சென்று மதியை அருகில் இருக்கும் அவள் பகுதி நேரமாகப் பணிபுரியும் மருத்துவமனையில் விட்டுவிட்டு, நானும் ஐயும் அதனைச் சுற்றி இருக்கும் தெருக்களில் நடந்தபடி வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தோம்.
அங்குள்ள ஒரு தெருவில்தான் எங்கள் பகுதிக்கான அங்கன்வாடி மையம் உள்ளது என்பதால், அதைக் கடக்கும்போதெல்லாம் அவனிடம் காட்டி, ”என்ன பப்பு, இந்தப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போறியா?” என்று கேட்பேன்.
அவனும் உற்சாகமாகத் தலையாட்டி, ”போறன்” என்பான்.
இதுநாள் வரை இவ்வாறு சொல்லி வந்தவன், இன்று அவ்வழியாக வரும்போது காட்டிக் கேட்டதும், ”இல்ல’’ என்றான்.
உடனே நான், ”ஏன்டா பப்பு, என்னாச்சி?’’ என்று கேட்டேன்.
அதற்கு அவன், ”ஐ பாப்பா… மை வச்சப் பள்ளிக்கூடம் போறன்’’ என்றான்.
இது நான் எதிர்பாராத பதில் என்பதால் மறுபடியும் கேட்டேன். ”என்னது, மை வச்சப் பள்ளிக்கூடமா? அது எங்கடா, பப்பு இருக்கு?’’
சட்டென்று தனது கையை நீட்டி, இரு தினங்களுக்கு முன்பாக அதில் பக்கத்தில் இருக்கும் வேறொரு பள்ளிக்கூடத்திற்குப் போய் போலியோ சொட்டு மருந்து போட்டபோது மை வைத்ததை சுட்டிக் காட்டி, ”இங்க மை வச்சப் பள்ளிக்கூடம்’’ என்றான்.
அப்போதுதான் அவன் எந்தப் பள்ளியை சொல்கிறான் என்று புரிந்தது.
உடனே சத்தமாகச் சிரித்துவிட்டு, ”அது பெரிய அண்ணாங்க; அக்காங்க’லாம் படிக்கறப் பள்ளிக்கூடம், சாமி. நீ சின்னப் பையன்ல… அதனால இங்கதான் படிக்கணும்’’ என்று சொன்னேன்.
சொல்லி முடிப்பதற்குள் அடம் பிடிக்கும் குரலில், ”மை வச்சப் பள்ளிக்கூடம் வேணும்’’ என்றான்.
”சரிடா, நீ மை வச்சப் பள்ளிக்கூடத்துலயே படி’’ என்று கூறி சிரித்துவிட்டு, அவன் முதன்முதலில் எங்களுக்கு வைத்த ‘ஊ, ஒள’ பெயர்கள் தொடங்கி, இப்போது பள்ளிக்கு வைத்திருக்கும் ‘மை வச்சப் பள்ளிக்கூடம்’ வரையான பல பத்துப் பெயர்களை ஒவ்வொன்றாக உளத்துள் மீட்டி முறுவலித்துக்கொண்டு, அங்கிருந்து மெல்லமாக நடந்து மருத்துவமனை முன்பாக வந்து, அங்கே ஓரமாக நிறுத்தியிருந்த வாகனத்தில் போய் தோதாக உட்கார்ந்துகொண்டு, மதியின் வருகைக்காகக் காத்திருந்தேன்.
அப்போது அவன் வண்டியில் இருந்த வட்டக் கண்ணாடியில் தன் முகம் பார்த்து ரசித்துச் சிரித்துக்கொண்டு, அடுத்தப் பெயர் வைக்கும் உன்னதப் பணியில் மும்முரமாக மூழ்கியிருந்தான்.
*