அரம்பு போற்றுதும் – 030 : ஐ பப்பா பிரசு வேணும்

மே 22, 2026
*
ஐக்கு பல் துலக்கிவிடுவது என்பது நான்கு மலை ஏறி இறங்குவதற்கு சமமான காரியம். அதனால்தான் மதி நைசாக அவ்வரும்பெரும் பணியை என்னிடம் ஒப்படைத்துவிட்டாள். நானும் வழக்கம்போல தியாகச் செம்மலாக மாறி அப்பணியை தட்டாமல் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டு செவ்வனே ஆற்றத் தொடங்கினேன்.
இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பல் துலக்கிவிட்ட பிறகு அவனிடமிருந்து பல் துலக்கியை (tooth brush) வாங்குவது என்பது அதைவிட பெரிய காரியம். அதாவது, எட்டு மலை ஏறி இறங்குவதற்கு சமம். அதிலும், பல் துலக்கியை தராமல் ஏமாற்ற அவன் கண்டுபிடிக்கும் புதுப்புது வழிகளையும், அதற்காக மேற்கொள்ளும் எத்தனத்தையும் எழுத ஆரம்பித்தால் அதுவே தனி நூலாகிவிடும்.
உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். இன்று காலை குளிப்பதற்கு முன்பு வழக்கம்போல பல் துலக்கிவிட்டேன். அதைத் தொடர்ந்து குளிக்கும்போதும், குளித்த பிறகும் பல் துலக்கியை கையிலேயே வைத்துக்கொண்டு, அவ்வப்போது அதை வைக்கச் சொன்னாலோ அல்லது வாங்க முற்பட்டாலோ வாயில் வைத்துத் தீவிரமாக பல் துலக்குவதாக பாவனை செய்தவன், இன்று புதிதாக வேறோர் ஆயுதத்தையும் கையில் எடுத்துக்கொண்டான்.
அதாவது, வீட்டிலிருக்கும் பொம்மைகள் ஒவ்வொன்றையாக எடுத்து பல் துலக்கிவிட்டவன், மதியம் நெருங்கும்போது பொம்மைகள் எதுவும் மீதம் இல்லாததால் மேசை, புத்தகம், சறுக்கு… என்று எதெல்லாம் கண்ணில் படுகிறதோ அதற்கெல்லாம் பல் துலக்கத் தொடங்கினான்.
இறுதியாக மதிய உணவு உண்டுவிட்டு உறங்கப்போகும் நேரமும் வந்தது. ‘இப்போது என்ன செய்கிறான், பார்ப்போம்’ என நாங்களும் ஆர்வத்தோடு காத்திருந்தோம்.
கையில் வைத்திருந்த பல் துலக்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொண்டவன், அப்படியே உறங்கிவிட்டான். ‘சரி, சிறிது நேரத்தில் விட்டுவிடுவான். எடுத்து மறைத்து வைத்துவிடலாம்’ என்று பார்த்தால், கொஞ்சம் கூட விடுவதாக இல்லை.
அதோடு, மூன்று மணிநேரம் ஆழ்ந்து உறங்கிவிட்டு எழுந்தவன், அருகில் இருந்த எங்களிடம் ஒரு வார்த்தைகூட பேசாமல் நேராக தனது பொம்மைகளை தேடிப்போய், தன் விருப்ப பொம்மைகளில் ஒன்றான பின்க்கு’வை எடுத்துவந்து மடியில் படுக்க வைத்து அதன் இரு பற்களையும் துலக்கத் தொடங்கினான்.
இதனை ஒருபோதும் எதிர்பார்த்திராத நாங்கள், ”என்னது… மறுபடியும் மொதல்ல இருந்தா…?” என்று ஒருவரை ஒருவர் விழியால் கேட்டுக்கொண்டு, அம்மீத நாளுக்கான பெருமூச்சை அப்போதே விட்டுக்கொண்டோம்.
*