அரம்பு போற்றுதும் – 028 :  தேய்ப்பம் தடவி சரி பண்றன்

மே 10, 2026

*

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் விடிகாலை மிகச் சீக்கிரமாக எழுந்து கிளம்பி அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்றுவிட்டு மாலை சற்று தாமதமாக வீட்டுக்கு வந்திருந்தேன்.

விளையாட்டு பொம்மைகள் தொடங்கி, பாத்திரப் பண்டங்கள் வரை யாவும் சகட்டுமேனிக்கு வீடெங்கும் பரவிக்கிடக்க, ஒருவித பீதியோடு உள்ளே நுழைந்தேன். அப்போதுதான் இவற்றுக்கெல்லாம் தலையாய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ஐ தனது புதிய போத்தலில் தண்ணீர் குடித்துவிட்டு எனது எழுத்து மேசையில் நிற்க வைப்பதற்கு பதிலாக தெரியாமல் சாய்த்து வைத்துவிட்டான். அதனால் அதில் இருந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக சொட்டிப் பரவி பக்கத்தில் இருந்த ஒலிபெருக்கிக்குள் (speaker) போய்விட்டது.

கண்டதும் பதறி ஓடிவந்து எடுத்துப் பார்த்தால் ஒலிபெருக்கி முழுக்க நீர் பரவியிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் வேகவேகமாகத் துடைத்துவிட்டு, மடிக்கணினியில் ஏதாவது நீர் பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். நல்லவேளை இல்லை. மாறாக, மடிக்கணினி வைத்திருந்த தாங்கியில் பட்டிருந்தது.

‘இது மட்டும் இல்லையென்றால், மடிக்கணினி இந்நேரம் அவ்வளவுதான்’ என்று நினைத்துக்கொண்டு, ஒலிபெருக்கியை எடுத்துப்போய் அரிசி வைத்திருக்கும் பெரிய பாத்திரத்திற்குள் நீர் முழுதாக உலர வேண்டி புதைத்து வைத்தேன்.

ஒருநாள் முழுக்க உள்ளேயே இருக்கவிட்டு எடுத்துவந்து பொறுத்திப் பார்த்தேன். எண்ணியது போல இயங்கவில்லை. பெரும் வருத்தத்தோடு அவனைக் கூப்பிட்டுக் காட்டிவிட்டு சொன்னேன். ”டேய் பப்பு… இனிமே அப்பா மேசை மேல எப்பயும் தண்ணி வைக்கக்கூடாது, செரியா? தண்ணி வச்சதால பாரு, கெட்டுப்போச்சு. இனிமே இதுல பாட்டுப் பாடாது.’’

அவனும் ஏதோ புரிந்தது மாதிரி முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தலையாட்டினான். இது இத்தோடு முடிந்தது.   

அதன்பிறகு அவ்வப்போது எனக்கோ மதிக்கோ கை கால் வலிக்கிறது என்று சொன்னால் போதும், வேகமாக பக்கத்து அறைக்கு ஓடிச்சென்று எண்ணெய் அல்லது லோஷன் (இதற்கு அவன் வைத்த பெயர் தேய்ப்பம். அதாவது, தேய்க்கப் பயன்படுவதால் இப்பெயர்) எடுத்துவருவது போல பாவனை செய்து தடவிவிட்டு, ”இப்போ வலி சரியாச்சா?’’ என்று கேட்பான்.

நாங்களும் அப்போதைக்கு, ”கொஞ்சம் சரியாய்டிச்சி’’ என்றோ, ”நல்லா சரியாய்டிச்சி பப்பு… நன்றி’’ என்றோ சொல்வோம்.

இது இப்படி இருக்க, இன்று மதியம் என்ன நினைத்தானோ தெரியவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்தவன், சட்டென்று வேகமாக எழுந்து பக்கத்து அறைக்குப் போய்விட்டு வந்து மேசையில் இருந்த ஒலிபெருக்கியில் விரல் வைத்துத் தேய்த்துக்கொண்டிருந்தான்.

எட்டிப் பார்த்துவிட்டு, ”என்னடா, அப்பு செய்யறா?’’ என்று கேட்டேன்.

”தேய்ப்பம் தடவுறன்’’ என்றான்.

”எதுக்கு, சாமி?”

”தண்ணிப் பட்டு கெட்டுப்போச்சி… சரி பண்றன்.’’

”ஓ… சரி பண்றியா? நல்லா பண்ணு’’ என்று சிரித்தபடி சொல்லிவிட்டு எழுந்து, பதினோர் ஆண்டுகளுக்கு முன்பு மடிக்கணினியோடு சேர்த்து ஆசையாக வாங்கி வந்த அந்த ஒலிபெருக்கி, அவனது கள்ளங்கபடமற்ற மெனக்கிடலில் எப்படியாவது சரியாகிவிட வேண்டும் என்று யான் பெரிதும் மதிக்கும் தில்லைக் கூத்தனை உளமார வேண்டிக்கொண்டேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=