அரம்பு போற்றுதும் – 024 : காய் நகர்பேசி

ஏப்ரல் 19, 2026
*
நாங்கள் எது செய்தாலும் உன்னித்துக் கவனிக்கும் ஐ, நகர்பேசியில் பேசுவதை பார்த்துவிட்டு அதேபோல அவ்வப்போது பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.
ஆரம்பத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளாமல்தான் இருந்தோம். ஆனால், ஒரு கட்டத்தில் அவன் மிகச் சரியாக யாராவது ஒருவரது எண்ணுக்கு அழைத்துவிடுவதையும், புலனம் திறந்து யாருக்காவது குரல்வழி எதையாவது பேசி அனுப்பிவிடுவதையும் பார்த்துவிட்டு, ‘இனி இது வேலைக்காகாது’ என அவனுக்கென்று பழுதடைந்த ஒரு பழைய நகர்பேசியை எடுத்துத் தந்து, ”இதுதான் இனிமே ஐ பாப்பாவோட ஃபோன். இதுலதான் இனி பேசணும்’’ என்றோம்.
அவனும் மகிழ்வோடு ‘சரி’ என்று தலையாட்டி வாங்கிக்கொண்டு, அதுமுதல் அடிக்கடி அதை எடுத்துக்கொண்டு நாங்கள் நடந்தபடி பேசுவது போல அவனும் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பேசுவதாக அவர்கள் பெயர் சொல்லி, ‘ஹலோ, சாமிக்கண்ணு தாத்தா… எங்க இருக்கீங்க?’, ‘ஹலோ, ரேவதி அத்தை… எங்க இருக்கீங்க?” என்றெல்லாம் பேசத் தொடங்கினான்.
இதன் அடுத்தக் கட்டமாக எழுதுகோல் தொடங்கி, நகர்பேசி சார்ஜர் வரைக்கும் எது கையில் கிடைக்கிறதோ, அதை எடுத்து காதில் வைத்து நகர்பேசியாக பாவித்துப் பேசுவதை கடந்த சில மாதங்களாக செய்து வந்தவன், இன்று அதன் உச்சமாய் சமையலறையில் பொரியல் செய்வதற்காக மதி கழுவி வைத்திருந்த வாழைக்காயை எடுத்துக் காதில் வைத்துக்கொண்டு, ”ஹலோ, சாமிக்கண்ணு தாத்தா… நல்லா இர்க்கீங்களா? ஐ பாப்பா, தோச சாப்டன். நீங்க சாப்டீங்களா?’’ என்று ஏதேதோ பேசிக்கொண்டு மாடிக்குப் போனான்.
எழுந்து பின்னாலேயே போய் என்ன செய்கிறான் என்று பார்த்துவிட்டு வந்து அமர்ந்தேன்.
அடுத்த சிறிது நேரத்தில் வெட்டி பொரியல் செய்வதற்காக வைத்திருந்த வாழைக்காயைக் காணோம் என்று தேடிக்கொண்டு வந்து கேட்டாள் மதி.
எதுவும் கூறாமல் மென்மையாகச் சிரித்துவிட்டு, நடுவீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஐயிடம் போய் கேட்கச் சொன்னேன்.
‘நான்தான் எடுத்துவைத்து விளையாடுவதாக’ எண்ணி என்மீது சந்தேகப் பார்வை வீசிவிட்டுப் போய் ஐயிடம் அவள் கேட்க, அவனோ எதையும் காதில் வாங்காதவனாய் மிகத் தீவிரமாக தன் ஒவ்வொரு பொம்மைகளாக எடுத்து மடியில் படுக்கப் போட்டு, தாலாட்டு பாடி தட்டிக்கொடுத்து தூங்க வைத்துக்கொண்டிருந்தான்.
மறுபடியும் வந்து என்னிடம் கேட்டு, ”தெரியாது’’ என்றதும் கடுப்பானவள், ”இன்னிக்கிப் பொரியலே கிடையாது, வெறும் ரசம் மட்டும்தான்’’ என்றுவிட்டுப் போனாள்.
நானும் ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு வேலையில் மூழ்கிப்போனேன்.
ஓர் ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். ஐ யாரிடமோ ஃபோன் பேசுவது கேட்க, மெல்ல எழுந்து சத்தமின்றி எட்டிப் பார்த்தேன்.
நடுவீட்டில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு, ஊரிலிருக்கும் சாமிக்கண்ணு தாத்தாவிடம் வாழைக்காய் நகர்பேசியில் அத்தனைத் தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தான்.
பொரியலை விட ஐ பேச்சு மிக முக்கியமாகப் பட்டதால், அது குறித்து மதியிடம் எதுவும் சொல்லாமல் வந்து, நான் பாட்டுக்கு மறுபடியும் என் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
*