நீங்கமற இருப்பவன்

நண்பன் மணி (எ) வரதராஜன் (ஒளிப்படத்தில் முதலில் இருப்பவன்) மரணித்து இன்றோடு 193 நாட்கள் ஆகின்றன. எப்போதும் கூப்பிடு தூரத்தில் இருக்கும் அவனுக்கு இன்று பிறந்தநாள். கூப்பிட மனம் எண்ணினாலும் கூப்பிடும் தொலைவில் அவன் இல்லை.

அவன் வாட்ஸ்அப் லாஸ்ட் சீன் காலை 9:14 காட்டுகிறது. இப்போது நேரம் காலை 10:52. இதை எப்படி எடுத்துக்கொள்வது? நிச்சயம் இது அவனாக இருக்காது என்பதை புத்தி உறுதிபட சொன்னாலும் மனமானது ஏற்க மறுக்கிறது.

இப்போதுதான் அவன் சென்னைக்கு வந்து என்னைப் பார்த்துப் பேசிவிட்டு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தின் முன்புள்ள தேநீர்க் கடையில் உட்கார்ந்து தேநீர் பருகிவிட்டுப் போனதுபோல் இருக்கிறது. அந்த முகம், அவ்வார்த்தைகள் எதுவும் மறக்கவில்லை. அந்த இடம், அக்காட்சி துளியும் மாறவில்லை. என்றபோதும் அவனிப்போது உயிருடன் இல்லை என்பதை நான் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ஒருவேளை அவன் மரணிக்காது இருந்திருந்தால், இந்த வாட்ஸ்அப்  லாஸ்ட் சீன் அவனாக இருந்திருந்தால், என் அளவுக்கு மகிழ்வோன் வேறு யாராவது இருப்பார்களா தெரியவில்லை.

ஒருவரது இறப்புக்குப் பின் வரும் அவரது பிறந்த நாளினை அவ்வளவு எளிதில் கடக்க முடியவில்லை. நண்பனான எனக்கே இக்கதி என்றால், பெற்ற தாய் தந்தையரின் நிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

முதன்முதலில் அவன் எனக்கு அறிமுகமானது 2006இல். அதுவும் இளங்கலை வகுப்புத் தோழனாய். மூன்று ஆண்டுகள் உடன் படித்திருந்தாலும், ஒரே விடுதியில் தங்கியிருந்தாலும் அவ்வளவு நெருக்கமெல்லாம் கிடையாது. நெருங்கி பழகினதெல்லாம் கடந்த நான்காண்டுகளாகத்தான்.

அதுவும் இன்னொரு நண்பனின் திருமணத்திற்காக திருப்பத்தூர் போயிருந்தபோது தற்செயலாக அவன் நினைவு வந்து ஆம்பூரில் இருக்கும் அவனை அழைத்தேன். அடுத்த சில நிமிடங்களில் வந்தவன், என்னை தன் காரில் கூட்டிக்கொண்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆம்பூர் என எங்கெங்கோ சுற்றித் திரிந்தான். பலநாள் பேசாததையெல்லாம் பேசித் தீர்த்தான். ஒரு ரூபாய் கூட என்னை செலவிட விடாமல் பார்த்துப் பார்த்து எனக்கு ஒவ்வொன்றையும் வாங்கித் தந்தான். அதிலும் அன்று அவன் வாங்கித் தந்த ஆம்பூர் ஸ்டார் பிரியாணியும், அதன் சுவையும் இப்போதும் எனக்குள் இருப்பதாக உணர்கிறேன்.

அதன்பிறகு அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்களில் எங்கிருந்தாலும் தவறாமல் அழைத்துவிடுவான். அதுவும் நான் எங்காவது தனிமையில் இருந்தால் என்னை வரச்சொல்ல அல்லது அவன் வந்து கூட்டிச் செல்ல. தன் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்ப புதிதாக ஒரு வாழ்த்துச்செய்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்க.

அவன் இல்லாத இவ்வாறரை மாதங்களில் எத்தனையோ விழா நாட்கள் வந்திருக்கின்றன. மறக்காமல் அவனுக்குத் தர வாழ்த்துச் செய்திகளும் எழுதி வைத்திருந்தேன். ஆனால் அவனது அழைப்பு மட்டும் வரவில்லை. வாழ்த்துச் செய்தி எழுதித்தரும் எனக்கு இப்படியென்றால், ஒவ்வொரு விழா நாளிலும் அவன் வாழ்த்துச் செய்தியை பெற்று மகிழ்ந்தவர்கள் நிலை என்னவாக இருக்கும்?

இரவு பகல் பாராமல் உழைக்கும் பேருழைப்பாளி என்பேன் அவனை. எவ்வளவு பெரும் பாசக்காரன் அவன் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்வேன். ஒன்று… கடந்தாண்டு தொடர் வீடடைவு காலத்தில் அறையில் சமைக்க வாய்ப்பற்று பல மாதங்களாக அம்மா உணவகத்தில் பார்சல் வாங்கிவந்து மூன்று வேளையும் நானும் என் அறை நண்பனும் உண்பதை எப்படியோ தெரிந்துகொண்டு ஒருநாள் மாலை ஆறு மணி வாக்கில் அழைத்தவன், ”இன்னைக்கு போயி சாப்பாடு வாங்காத, வடி’’ என்றான். ”ஏன் வரதா?’’ என்றேன். ”ஒனக்கும் ஒன் ரூம்மெட்டுக்கும் ஆம்பூர்லருந்து பிரியாணி வாங்கி கொடுத்துவுட்ருக்கன். இன்னும் ஒருமணி நேரத்துல ஒன் கைக்கு வந்துடும்’’ என்றான். அவன் சொன்னதுபோல் அவனது நண்பர் வழியாக உணவு வந்துசேர்ந்தது. நீண்ட நாட்களுக்குப் பின் நானும் என் அறை நண்பனும் அன்றிரவு வயிறார ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.

இரண்டு… ஒருநாள் சென்னை வந்திருந்தவன், ”வடி, எதாது படத்துக்கு போலாமா?’’ என்றான். அவன் கேட்கும்போது முன்னிரவு பத்து மணி இருக்கும். ‘சரி’ என்றேன். இன்னொரு நண்பரை உடன் கூட்டிக்கொண்டு காசி திரையரங்கில் ‘ஓ மை கடவுளே’ படத்துக்குப் போயிருந்தோம். பார்த்துவிட்டு வெளியில் வரும்போது நள்ளிரவு இரண்டு மணி. அங்கிருந்து தன் காரில் கூட்டிவந்து அறையருகில் விட்டவன், பாக்கெட்டிலிருந்து நான்காயிரம் ரூபாய் பணம் எடுத்துத்தந்து, ”இந்தா வடி, இத வச்சிரு… ஏன்னு ஊருக்கு போயி சொல்றன்’’ என்றான். ‘சரி, யாரிடமோ தரச் சொல்லி அல்லது எதையாவது வாங்கிவைக்க சொல்லி தருகிறான் போல’ என நினைத்துக்கொண்டு வாங்கிக்கொண்டேன். ஊருக்கு சென்றதும் காலையில் அழைத்தவன், ”அத ஒன் செலவுக்கு வச்சிக்கோ வடி. இன்னும் எதனா வேணும்னாலும் உரிமியா கேளு… ஒரு எழுத்தாளன் நீ, ஒரு நண்பனா ஒன்ன எப்பயும் எதுக்கும் கஷ்டப்பட வுடக்கூடாதுன்னு நெனக்கிறன்… அதான்’’ என்றான். கேட்டதும் கண் கலங்கிவிட்டது.

ஒவ்வொரு மரணமும் ஏதேனும் ஒரு பாடத்தை தன் சார்ந்தவர்களுக்கு கற்றுத் தந்துவிட்டுதான் செல்கின்றன. அவ்வகையில் அவனது மரணம் கற்றுத்தந்த பாடம் என இரண்டினை சொல்வேன். ஒன்று, எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், எப்படி ஓடிஓடி உழைத்தாலும் தம் உடல்நிலையை எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக நேரத்திற்கு உண்ண வேண்டும், முடிந்தவரை வெளிஉணவை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது மருத்துவமனை சென்று நம் உடல்நிலையை பரிசோதிக்க வேண்டும். சிறு மாற்றம் நம்மில் தெரிந்தாலும் அதை உடனே பொருட்படுத்திப் பார்க்க வேண்டும்.

இரண்டாவது, நாம் என்னதான் இல்லாதவர்களுக்கு உதவினாலும், ஆயிரம் நல்லது செய்தாலும், மாதந்தோறும் கோயில் கோயிலாக சென்று வந்தாலும், இயற்கைக்கு எதிராக ஒரு தீமையை செய்யும்போது அல்லது அத்தீமைக்கு உடந்தையாக இருக்கும்போது அதற்கானப் பலனை நிச்சயம் ஏதோ ஒருவகையில் ஒருநாள் இல்லை ஒருநாள் அனுபவித்தே ஆகவேண்டும்.

கேட்க மிகச் சாதாரணதது போல் தோன்றும் இவ்விரு பாடங்களை ஒவ்வொருவரும் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதை அவனது இறப்புக்குப்பின் பார்க்கும் பலரிடமும் கூடுதல் அக்கறையோடு சொல்லி வருகிறேன்.

வருடக்கணக்காக உடல்நிலை சரியில்லாத தன் அன்னையை தனது ஊரிலிருக்கும் மருத்துவமனை தொடங்கி சென்னையில் இருக்கும் மருத்துவமனைகள் வரைக்கும் கூட்டி வந்து காட்டி அவரோடு மாதக்கணக்கில் தங்கியிருந்து தாயன்போடு பார்த்துக் கொண்டவன், பார்ப்பவர்களிடமெல்லாம் உடல்நிலையை பார்த்துக்கொள்ளச் சொல்லிச் சொன்னவன், யார் எங்கே தன் முன்னால் பசியோடு இருப்பதைக் கண்டாலும் ஓடிப்போய் உணவு வாங்கித் தந்து அவர்களது பசியை ஆற்றிவிட்டு வந்தவன், தன் சார்ந்தவர்களுக்கு கேட்காமலேயே தேடிச் சென்று உதவியவன், கடைசியில் தனக்கு மஞ்சள் காமாலை இருந்ததை தெரிந்தும் ஒருவரிடமும் சொல்லாமல் அது தன்னை ஒன்றும் செய்யாது என்னும் குருட்டு நம்பிக்கையில் அதற்கான சிறு மருத்துவத்தையும் எடுத்துக்கொள்ளாமல் இருந்து, கடைசியில் தன் ஒவ்வொரு உறுப்புகளையும் அடுத்தடுத்த நிமிடங்களில் செயலிழக்கவிட்டு, தன் மரணத்தை தடுத்து நிறுத்தும் அல்லது தள்ளிப் போடும் வாய்ப்பு தன்னிடம் இருந்தும் அதைச் செய்யாமல் தானே வரவழைத்துக் கொண்டவனை என்ன சொல்வது?

‘சுவரு இருந்தாதான் சித்திரம் வரைய முடியும்’ என்பார்கள் ஊரில். உடலெனும் சுவரை கொஞ்சம் கொஞ்சமாக அழிய விட்டு, ஒருகட்டத்தில் மொத்தமாய் இல்லாமல் ஆக்கிவிட்டு வெற்றிடத்தில் சித்திரம் வரைய நினைத்தவனை எப்படி எடுத்துக் கொள்வது?

முப்பத்தி மூன்று வயது. வீட்டுக்கு ஒரே பையன். இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. சாக வேண்டிய வயதா இது?

பிறப்போர் எவரும் இறப்பர் என்பது என்னதான் பொதுவிதியாக இருந்தாலும் சில இறப்புகள் நியாயமற்றதாக ஏற்கமுடியாததாக நிகழ்ந்துவிடுவதுண்டு. அவ்வகையில் அவனது இறப்பு நியாயமற்ற ஏற்கமுடியாத ஒன்று என்றாலும், மரணம் என்பது ஒருவகையான விடுதலை என்னும் கோணத்தில் பார்க்கும்போது ஓரளவுக்கு என்னால் அதை ஏற்கமுடிகிறது.

மரணம் ஒருவரது பருப்பொருளான இருப்பை இப்பூமியில் இல்லாமல் ஆக்குவதுதானே அன்றி முற்றிலும் ஒருவரை இல்லாமல் ஆக்குவதன்று. அவ்வாறு நோக்கின் பருப்பொருளான இருப்பால் அவன் இங்கே இல்லாது போனாலும் என் போன்றோரின் உள்ளத்திலும் எண்ணத்திலும் ஓர் அருவமாக, வார்த்தையாக, செயலாக, நிகழ்வாக இருந்துகொண்டுதான் இருக்கிறான்.

அப்படி என்னுள் நீங்கமற இருக்கும் அவனுக்கு இதோ என் பிறந்தநாள் வாழ்த்தை முதல் தடவையாக கண்ணீரோடு சொல்கிறேன். ‘அன்பு வரதா… என் இனிய முதலழுகை தின வாழ்த்துகள்டா மச்சான்’.

(கடந்தாண்டு அக்டோபர் நான்காம் தேதி எழுதியது)

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=