அரம்பு போற்றுதும் – 017 : அம்மம் மாதிரி இருக்கு

மார்ச் 8, 2026
*
ஐ புதிதாக எதையாவது காட்டிக் கேட்கும்போது, சில நேரம் அவனுக்கு நன்கு புரிய வேண்டும்; பதிய வேண்டும் என்பதற்காக, ‘இது அதுமாதிரி இருக்குல்ல… அது இதுமாதிரி இருக்குல்ல’ என்று ஒப்பிட்டுச் சொல்வதுண்டு.
அதை எப்படியே பிடித்துக்கொண்டவன், கடந்த சில தினங்களாக எதைக் கேட்டாலும், ‘இது அதுமாதிரி இருக்கு. அது இதுமாதிரி இருக்கு’ என்று சொல்லத் தொடங்கினான்.
உதாரணமாக, சென்ற வாரம் நண்பர் ஒருவர் தன் மகனை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்திருந்திருந்தார். அவர் மகனுக்கு ஐயை விட அரை வயது அதிகம். என்றாலும் பார்க்க அப்படியே ஐ அளவுக்குதான் இருந்தார். இதனால் ஐயிடம் அவரை, ”அண்ணா சொல்லு’’ என்றதற்கு, ”இல்ல, பாப்பா மாரி இருக்கான்’’ என்றுவிட்டு, ”பாப்பா’’ என்று அழைத்ததைச் சொல்லலாம்.
இந்நிலையில் இன்று மாலை சரியாக ஞாயிறோன் உறங்கப்போகும் நேரத்தில், இரு சக்கர வாகனத்தின் முன்பாக ஐயை நிறுத்திக்கொண்டு ரயில் நிலையம் நோக்கிப் போனோம். சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தவன், சட்டென்று வானில் செந்நிறப் பொட்டு போன்று மிக அழகாக ஒளிர்ந்த அந்திக் கனலியைப் பார்த்துவிட்டு, ”அப்பா, ஞாயிறு தாத்தா தூங்கப் போறாரு’’ என்றான்.
உடனே நான், ”ஆமா பப்பு, தாத்தா தூங்கப் போறாரு’’ என்றேன்.
என்ன நினைத்தானோ சட்டென்று, ”ஞாயிறு தாத்தா அழகா இர்க்காரு’’ என்றான்.
நாங்கள் ஒருசேர சிரித்துவிட்டுக் கேட்டோம். ”சரி, பப்பு… ஞாயிறு தாத்தா வேற எப்படி இருக்காரு?’’
நொடியும் தாமதிக்காமல், ”அம்மம் மாரி இர்க்காரு’’ என்றான்.
இந்தப் பதிலை நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அத்தோடு இப்படி ஒரு பதிலை கனவில்கூட நினைக்கவில்லை.
உடனே மதி சொன்னாள். ”இப்படி ஒரு உவமைய… இந்த உலகத்துல யாருமே இதுவரைக்கும் சொல்லியிருக்க மாட்டாங்க.’’
அதை ஆமோதிக்கும் விதமாகத் தலையாட்டிவிட்டு, வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஐ நெற்றியில் ஒரு பாராட்டு முத்தம் இட்டேன்.
உடனே அவன் மகிழ்ச்சியில் குதித்தபடி, ”அப்பா, முத்தா தயிர் சோச்சி மாரி இர்க்கு’’ என்றான்.
எதுவும் சொல்லாமல் சத்தமின்றி மனத்துள் சிரித்துக்கொண்டு, வாகனத்தை முன்னிலும் இதமாக இயக்கத் தொடங்கினேன்.
*