அரம்பு போற்றுதும் – 016 : குளிர்சாதனப் பெட்டி

மார்ச் 3, 2026
*
சில மாதங்களுக்கு முன்பு வரை வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியை திறக்கத் தெரியாத ஐ, ஒருநாள் எப்படியே திறக்கக் கற்றுக்கொண்டான். அதுமுதல் அப்பெட்டி படும் பாட்டை இந்த உலகத்தில் இருக்கும் எந்தவொரு குளிர்சாதனப் பெட்டியும் படாது என்று மிகச் சுருக்கமாக அதேநேரம், உறுதியாகச் சொல்லலாம்.
உதாரணமாக, வீட்டில் நாங்கள் இருவருமாக சேர்ந்து ஒருநாளைக்கு அதிகபட்சம் பத்து தடவை அதனை திறந்து மூடுவதாக வைத்துக்கொண்டால், அவன் நான்கு மடங்கு அதாவது, நாப்பது தடவை திறந்து மூடுவான். அதோடு முடிந்ததா என்றால், இல்லை.
உள்ளே இருக்கும் தக்காளி முதல் தயிர் வரையானவற்றை வெளியே எடுத்து வைப்பது; போடுவது; கொட்டுவது. வெளியே இருக்கும் பொம்மை முதல் ஆடை வரையானவற்றை உள்ளே எடுத்துப் வைப்பது; போடுவது; கொட்டுவது. உள் இருப்பவற்றில் ஒன்றை இன்னொன்றுடன் வைப்பது; போடுவது; கொட்டுவது. குளிர் அளவை அவ்வப்போது எங்களுக்குத் தெரியாமல் அதிகமாக்கி பால் முதலானவற்றைக் கெட்டியாக்குவது. உள்ளிருக்கும் மின்விளக்கை அணைப்பது; போடுவது. தக்காளி முதலானவற்றை உறைவிப்பானில் (Freezer) வைப்பது… என நாள்தோறும் புதிதுபுதிதாக எதையாவது செய்துகொண்டே இருப்பான்.
அந்த வகையில் இன்று, ஊரிலிருந்து அக்கா கொடுத்தனுப்பிய மட்டை உறிக்காத தேங்காய்களில் ஒன்றை எடுத்துப் போய் தெரியாத மாதிரி உள்ளே மறைத்து வைத்துவிட்டான்.
பால் எடுப்பதற்காகப் போன நான் அதனை எதேச்சையாகப் பார்த்துவிட்டு, முதலில் மதியைக் கூப்பிட்டுக் காட்டினேன்.
பிறகு ஒன்றும் தெரியாதது போல அறைக்குள் புத்தக அடுக்கில் இருந்து புத்தகங்களை வரிசையாக எடுத்து தனது சிறிய மேசை மேல் வைத்து அடுக்கிக்கொண்டிருந்தவனை அழைத்து வந்து, ”இது என்னடா, பப்பு?’’ என்று கேட்டேன்.
மொத்தப் பற்களும் தெரியச் சிரித்தவன், ”இளநீர்” என்றான்.
அவனுக்கு மட்டை உரிக்காத தேங்காய்கள் அனைத்தும் இளநீர்தான்.
”சரி, இத எதுக்கு இங்க கொண்டு வந்து வச்சிருக்க?”
ஏதோ மிகப்பெரும் ரகசியம்; காரணம் ஒன்றை கூறப்போவது போல சில நொடிகள் யோசித்தவன், ”சும்மாப்பா’’ என்றுவிட்டு வேகமாக ஓடிப்போய் திரும்பவும் புத்தகங்களை எடுத்து விட்ட இடத்திலிருந்து அடுக்கத் தொடங்கினான்.
நாங்கள் எதுவும் பேசாமல் வெறுமே முறுவலித்துக்கொண்டு அத்தேங்காவை, எப்படியும் அது இன்னும் அரை மணி நேரத்துக்குள் குளிர்சாதனப் பெட்டிக்குள் வந்துவிடும் என்று தெரிந்தும், எடுத்துப் போய் சமையலறையில் இருந்த இடத்திலேயே மறுபடியும் வைத்தோம்.
*