அரம்பு போற்றுதும் – 007 : இன்னும் சுச்சி

பிப்ரவரி 02, 2026

*

புத்தக அடுக்கருகில் உட்கார்ந்து கன்னிமாரா நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கவிஞர் சுகுமாரனின் ‘வெளிச்சம் தனிமையானது’ கட்டுரை நூலை மிகத் தீவிரமாக வாசித்துக்கொண்டிருந்தேன்.

சமையக்கட்டில் மதியுடன் கதை பேசி விளையாடிக்கொண்டிருந்த ஐ, சத்தமில்லாமல் பூனை போல அறைக்குள் நுழைந்து, மேசை மேல் இருந்த டேப் எடுத்துக்கொண்டு வந்து என்னருகில் அமர்ந்து, என்போலவே சுவரில் சாய்ந்துகொண்டான்.

வரிகளிலிருந்து மெல்லப் பார்வை விலக்கி, கையில் டேபோடு இருக்கும் ஐயை பார்த்துவிட்டு, ‘போச்சிடா, இன்னைக்கு என்ன வரைய சொல்லப் போறானோ?’ என மனத்துக்குள் நினைத்த நொடியே, ”அப்பா, காத்தாடி வரை’’ என்று சொன்னான்.

சட்டென்று சென்ற வார சறுக்கு வரைந்த நிகழ்வு மனக்கண்ணில் வந்து போக, வேண்டுமென்றே கேட்டேன். ”ஐ பப்பு… நாம வேற எதுனா இன்னைக்கு புதுசா வரையலாமா?’’

வேகமாகத் தலையாட்டி, ”இல்ல’’ என்றவன், ”காத்தாடி வேணும்” என்றான்.

இதை அவன் வெறுமே சொல்லவில்லை. ஆணையிட்டான்.

‘சரி, வேறு வழியில்லை’ என்று வாங்கி வேகமாக வரைந்துவிட்டு, அடுத்து அவன் சொல்வதற்கு முன்பாக நானே கேட்டேன். ”அடுத்து என்ன பப்பு, வரையணும்?’’

ஏற்கெனவே பட்டியல் தயாராக இருப்பது போல வேகக் குரலில், ”சுச்சி” என்றான். வரைந்தேன்.

”அடுத்து என்ன வரையணும்?”

”சுச்சி.”

”அதான் வரைஞ்சாச்சே, பப்பு.”

உடனே அடம் பிடிக்கும் குரலில்; தோரணையில், ”ம்… வேணும்’’ என்றான்.

இன்னொரு சுவிட்ச் போர்டு வரைந்தேன்.

”அடுத்து?’’

”சுச்சி.”

”எதுக்குடா, இன்னொரு சுச்சி?”

மறுபடியும் அதே அடம் பிடிக்கும் குரலில்; தோரணையில் கேட்டான். ”ம்… வேணும்.’’

சரியென்று இன்னொரு சுவிட்ச் போர்டும் வரைந்தேன்.

அடுத்து நான் கேட்பதற்கு முன்பாக அவனாகவே, ”இன்னும் சுச்சி” என்றான்.

எதுவும் சொல்லாமல் வரைந்தேன்.

திரும்பவும் கேட்டான்.

வரைந்தேன்.

இப்படி ஒன்றல்ல. இரண்டல்ல. டேபில் கொஞ்சம் கூட இடம் இல்லாத அளவுக்கு வரையோ வரையென்று ‘சுச்சு சுச்சாக’ வரைந்துவிட்டுக் கேட்டேன். ”இப்பப் போதுமாடா, பப்பு?’’

சட்டென்று அப்போதும் போதாதவனாய் தலையாட்டியவன், ”இன்னும் சுச்சி’’ என்றான்.

‘செரியப்போச்சி’ என்று நினைத்துக்கொண்டு, தாழ்ந்த குரலில் அல்லது கெஞ்சும் குரலில் அல்லது அழும் குரலில் சொன்னேன். ”ஐ பப்பு… அவ்ளோதான் சாமி. இதுக்கு மேல சுச்சி வரைய எடமே இல்ல. நீயே பாரு.’’

வரைந்த டேபை அவனிடம் நீட்டினேன். சந்தேகத்தோடு வாங்கிப் பார்த்துவிட்டு, ‘ஆமாம்’ என்பதாகத் தலையாட்டியவன், அவ்வளவு நேரமாகக் ‘கஷ்டப்பட்டு’ வரைந்த அத்தனை சுச்சுகளையும், காத்தாடியையும் ஒரே அழுத்தில் அழித்துவிட்டு, மொத்த இடமும் காலியானது காட்டிச் சிரித்து, ”இன்னும் சுச்சி’’ என்றான்.

நானோ வேறு வழி இல்லாமல் மறுபடியும் முதலில் இருந்து வரைய ஆரம்பித்தேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=