அரம்பு போற்றுதும் – 005 : சறுக்கு சறுக்கல

ஜனவரி 28, 2026
*
சில மாதங்களுக்கு முன்பு தம்பி பிரபாகரன், ஐ எழுதி; வரைந்து விளையாடுவதற்காக ஒரு விளையாட்டு டேப் (Tab) வாங்கி வந்து தந்திருந்தார். அதனை அடிக்கடி இல்லையென்றாலும், எப்போதாவது எடுத்து வைத்து எதையாவது எழுதி; வரைந்து (அதாவது, கிறுக்கி), ‘அது இதுவென்றும், இது அதுவென்றும்’ சொல்லிக்கொண்டிருப்பான். உதாரணமாக, ஒரு சிறிய கோடு போட்டுவிட்டு ஐ என்றும், அதன் பக்கத்தில் இன்னொரு கோடு போட்டு அ என்றும், நான்கைந்து வட்டம் போன்று நீளக் கிறுக்கிவிட்டு அப்பா என்றும், இன்னொரு இடத்தில் அதே போன்று கிறுக்கி அம்மா என்றும் சொல்வான்.
இந்நிலையில் இன்று மாலை திடீரென்று எழுந்துபோய் மேசை மேல் வைத்திருந்த டேப்பை எடுத்துவந்து என்னிடம் தந்து மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைக் காட்டி வரைய சொன்னான். வரைந்தேன். பிறகு, சுவரில் இருந்த மின்விளக்கைக் காட்டி வரைய சொன்னான். வரைந்தேன். இப்படி மேசை, நாற்காலி, சாளரம், நாட்காட்டி… என எதுவெல்லாம் அவன் கண்ணுக்குப் படுகிறதோ அதையெல்லாம் காட்டி வரைய சொல்லிவிட்டு, கடைசியாக அவன் பிறந்தநாளுக்கு பெங்களூரிலிருந்து தோழி ஒருவர் வாங்கி அனுப்பியிருந்த இரு படி ஏணியுடன் கூடிய சறுக்கை (slide) வரைய சொன்னான். அதையும் தெரிந்தளவுக்கு வரைந்தேன்.
அவ்வளவு நேரமாக உட்கார்ந்திருந்தவன், உடனே எழுந்து வரைந்த அந்த சறுக்கின் மீது அமர்ந்து அதாவது, டேப் மேலே அமர்ந்து, ”சறுக்கல” என்று சொன்னான்.
அவன் செய்கையும், சொன்ன சொல்லும் புரிந்தாலும் புரியாதமாதிரி பாவனை காட்டி (சிரிப்பு அடக்கிக்கொண்டு) இன்னொரு தடவை கேட்டேன்.
அவனோ, சற்றுக் கோபமானக் குரலில் உடன் இன்னொரு சொல்லை இணைத்து, ”சறுக்கு சறுக்கல” என்றான்.
இம்முறை மிகவும் பொறுமையாக அவனுக்குப் புரியும்படி சொன்னேன். ”இது சும்மா வரைஞ்ச சறுக்குல்ல… அதனால இதுல ஏறி உட்கார்ந்து சறுக்கலாம் முடியாது, பப்பு. அதோ, இருக்குப் பாரு உண்மையான சறுக்கு. அதுலதான் சறுக்க முடியும். போய் சறுக்கு, செரியா?’’
நான் சொன்னது புரியாமல் அல்லது புரிந்தும் ஏற்காதவனாக மறுபடியும், ”சறுக்கு சறுக்கல’’ என்று சொன்னான்.
திரும்பவும் சொன்னேன்.
என்ன நினைத்தானோ, இம்முறை சட்டென்று எழுந்தவன், வரைந்திருந்த சறுக்கையும் ஏணியையும் கீழே இருக்கும் பொத்தானை அழுத்தி அழித்துவிட்டு, மறுபடியும் முதலிலிருந்து வரைய சொன்னான்.
வரைந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்னமே அறிந்ததால் எச்சரிக்கையாகி, அவனை அதிலிருந்து வெளியே கூட்டிப்போகவும், தப்பிக்கவும் நினைத்து, ”ஐ பாப்பா… மாடியில ஒரு பெரிய பட்டாம்பூச்சி வந்திருக்கான். அதுக்கு மாடுக்கு இருக்கமாதிரி நாலு காலும், ரண்டு கொம்பும், ஒரு வாலும் இருக்கான். வா, போயி பாப்போம்’’ என்று கூறி மாடியில் இருந்த மதியிடம் கூட்டிப்போனேன்.
சென்றதும் முதல் வேலையாக பட்டாம்பூச்சியை தேடிப் பார்த்தவன், அது இல்லாததால் என்னிடம் பேசாமல் உள்ளே ஓடிச்சென்று தனது டேப்பை எடுத்துவந்து, இம்முறை எனக்குப் பதிலாக மதியிடம் தந்து, ”அம்மா, சறுக்கு வரை’’ என்றான்.
நான் பாட்டுக்கு எதுவும் சொல்லாமல், ஒன்றும் நடக்காதது மாதிரி அங்கிருந்து மெல்ல நழுவி வீட்டுக்குள் வந்துவிட்டேன்.
*