அரம்பு போற்றுதும் – 004 : ஐ கை புடிச்சி

ஜனவரி 25, 2026
*
வீட்டருகில் இருக்கும் சிறு பூங்காவுக்கு அவ்வப்போது ஐயை அழைத்துப்போய் விருப்பம் போல விளையாடவிட்டு கூட்டிவருவதை சில மாதங்களாக வாடிக்கையாக வைத்திருக்கிறேன்.
அவ்வகையில் இன்று காலை மதி, சீக்கிரமாக எழுந்து கிளம்பி இரண்டு மணி நேர பயண தூரத்தில் இருக்கும் தனது தோழி ஒருவரை பார்த்துவிட்டு வரப் போயிருந்ததால், ஐ தூங்கி எழும் வரை காத்திருந்து பூங்காவுக்குக் கூட்டிப் போனேன்.
நுழைந்ததும் முதலில் இருந்த இரண்டு ஊஞ்சல்களில் மாறிமாறி உட்கார்ந்து ஆடியவன், தொடர்ந்து வாத்து பொம்மைகள் மீது அமர்ந்து சுற்றுவது, ஏணியில் ஏறி சறுக்குவது… என ஒவ்வொன்றாக முடித்துவிட்டு, கடைசியாக சற்று தள்ளியிருந்த சீசாவில் விளையாடப் போனான்.
அந்நேரம் பார்த்து சொறி பிடித்த நாய் ஒன்று பூங்காவுக்குள் நுழைந்து எங்களை நோக்கி வருவதைப் பார்த்துவிட்டு, வேகமாக ஐ அருகில் ஓடிப்போய் அவனது வலது கையைப் பிடித்து, ”ஐ பாப்பா… அப்பா கைய கெட்டிமா புடிச்சிட்டு வா’’ என்றேன்.
சில நொடிகள் மட்டுமே பிடித்து நடந்தவன், சட்டென்று கையை விட்டுவிட்டான். மறுபடியும் சொன்னேன்.
இம்முறை கை பிடிக்காமல் அவன் பாட்டுக்கு நடப்பதை பார்த்துவிட்டு சற்று உயர்த்தினக் குரலில், ”டேய் பப்பு… அங்கப் பாரு ஒரு நாய் வருது. அப்பா கை புடிச்சிட்டு நடக்கணும், செரியா?’’ என்று சொன்னேன்.
வேகமாக ‘மாட்டேன்’ என்று தலையாட்டிவிட்டு, ”ஐ கை புடிச்சி’’ என்று சொன்னான்.
அவன் சொன்னது சரியாகக் கேட்காமல் அல்லது புரியாமல், ”அதான் பப்பு சொல்றன், அப்பா கை புடிச்சிக்கோ’’ என்றேன்.
அவன் இன்னும் வேகமாகத் தலையாட்டிவிட்டு, தனது ஒரு கையால் இன்னொரு கையின் ஆட்காட்டி விரல் பிடித்திருப்பது காட்டி, ”ஐ கை புடிச்சி’’ என்றான்.
அப்போதுதான் புரிந்தது. அவன் தனது பாதுகாப்புக்காக எனது கையை பிடிக்காமல் தன் கையையே பிடித்துக்கொண்டு வருவது.
அவனது செயலைக் கண்டு ஒரு பக்கம் சிரிப்பு வந்தாலும், இன்னொரு பக்கம் அழகிய குழந்தைகளுக்கு மட்டுமேயான குறும்புமிக்க அச்சாமர்த்தியச் செயல் எண்ணி துளி மிச்சம் வைக்காமல் ரசிக்கவும் வியக்கவும் செய்திட்டேன்.
உடனே அவனது அச்செயலை மெச்சி தட்டிக்கொடுக்கும் நோக்கில் இப்படிச் சொன்னேன். ”ஐ பப்பு… நீ உன்னோட கையையே புடிச்சிட்டு வர்றியா? சூப்பர்டா. ஆனா, அந்த நாய் கடிக்கற மாதிரி வருதுல்ல… அதனால, இப்போ அப்பா கைய புடிச்சிக்கோ. அது போனதும் உன்னோட கைய புடிச்சிக்கோ. செரியா?’’
தன்செயல் அங்கீகரிக்கப்பட்டதை அறிந்தவன், மகிழ்ந்துபோய் தனது கையை விட்டுவிட்டு எனது கையை வேகமாகப் பிடித்துக்கொண்டு நாய் கடந்து செல்லும் வரை வந்துவிட்டு, மறுபடியும் தனது கையை பற்றிக்கொண்டு முன்னைவிட இன்னும் அழகாக; கம்பீரமாக நடந்துபோனான்.
*