அரம்பு போற்றுதும் – 001 : புக்குத் திவ்வா

ஜனவரி 17, 2026
*
பெயருக்கு ஏற்றாற்போல ஐ அவ்வப்போது ஏதாவது வியக்கும்படி அழகழகானக் குறும்புகள் செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பான். அவ்வகையில் இன்று காலை தூங்கி எழுந்த சிறிது நேரத்தில், கடைகளுக்குக் காய்கறி வாங்குவதற்கு கொண்டுபோகும் துணிப்பையை எடுத்து கைக்குள் நுழைத்து தோளில் மாட்டிக்கொண்டு, எங்கோ வெகுதூரம் செல்பவன் போல கிளம்பி வாசலுக்குப் போய் செருப்பு போட்டுக்கொண்டிருந்தான்.
எதுவும் கூறாமல் யாவற்றையும் பார்த்துக்கொண்டு பின்னாலேயே போன மதி, ”ஐ பாப்பா, எங்கே கிளம்பிப் போறீங்க?’’ என்று கேட்டாள்.
நொடியும் தாமதிக்காமல், ”புக்குத் திவ்வா’’ என்றான் ஐ.
இந்த வார்த்தைகளை அவன் உச்சரிப்பது இதுவே முதல் தடவை.
நம்ப முடியாதவளாய் மதி மறுபடியும் கேட்க, அவனும் அதையே சொல்கிறான்.
இரு தினங்களுக்கு முன்பாக அதாவது, தைப்பொங்கல் அன்று ஐயை முதல் தடவையாக ‘சென்னை புத்தகத் திருவிழா’வுக்குக் அழைத்துப் போய் வந்ததன் தாக்கமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டு, வேகமாக உள்ளே வந்து அறைக்குள் எழுதிக்கொண்டிருந்த என்னை கூட்டிப்போய் கேட்கச் சொன்னாள். கேட்டேன்.
அத்தனை தீவிரத்துடன் அதுவும், புறப்பட நேரமாகிவிட்டதைப் போல முகத்தை மிக இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னான். ”புக்குத் திவ்வா.’’
விடாமல் கேட்டேன். ”சரி, அங்கே என்ன இருக்கும்?’’
தயாராக வைத்திருந்த பதிலை வீசுவது போல, ”புக்கு’’ என்றான் உற்சாகக் குரலில்.
உடனே, ”வாவ்… அங்கே, எவ்வளது புக்கு இருக்கும்?’’ என்று கேட்டேன்.
இரு கைகளையும் அகல விரித்துக் காட்டி, ”அவ்………………ளோ’’ என்றான்.
”சரி, நீ அங்கே போய் என்ன வாங்கப் போற?’’
”புக்கு.’’
”எத்தனை புக்கு வாங்கப் போற?”
”ஒண்ணு.”
”யாருக்கு வாங்கப் போற?”
”ஐ பாப்பாக்கு.”
”அப்போ, அப்பா அம்மாவுக்கு இல்லையா?”
வேகமாகத் தலையாட்டி, ”இல்ல” என்றான்.
உடனே முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கேட்டேன். ”ஏன், பப்பு? அப்பா அம்மா பாவம் இல்லையா?’’
எதையோ யோசிப்பதாக நான்கைந்து நொடிகள் பாவனை காட்டிவிட்டு, ‘சரி’ என்பதாகத் தலையாட்டினான்.
சட்டென்று மதி உள் நுழைந்து கேட்டாள். ”சரி, அம்மாவுக்கு எத்தனை புக்கு வாங்குவ?’’
”ஒண்ணு.’’
”அப்போ, அப்பாவுக்கு?’’
”ஒண்ணு.’’
”அப்ப, மொத்தமா எத்தனை புக்கு வாங்கப்போற?”
குரலை சற்று உயர்த்தி, ”ஒண்…….ணு” என்றான்.
‘சரி’ என்று இருவரும் சிரித்துக்கொண்டு, அவனை அள்ளி அணைத்து முத்தமிட்டு வீட்டுக்குள் தூக்கி வந்தோம்.
சரியாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். ஐ வேறொரு பையை எடுத்து மாட்டிக்கொண்டு, ‘புக்குத் திவ்வா’ என்னும் புத்தகத் திருவிழாவுக்கு மறுபடியும் புறப்பட்டுவிட்டான்.
*