ஈழம் அன்ன ஈழம் – 12 : நூலக தினம், நவாலியூர் புத்தக வெளியீடு, நண்பர் வீடு

ஐ’யின் முதல் நூலக தினத்தை இன்று (டிச 07) இனிதே கொண்டாடும் விதமாக யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு காலையிலேயே கிளம்பிப் போனோம்.
என் குறித்து அறிந்த யாவருக்கும் தெரிந்திருக்கும். வாரத்தில் ஒருநாள், அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை, நூலக தினமாக நான் கடந்த பதிமூன்று ஆண்டுகளாக கடைபிடித்து வருவது.
அவ்வினிய பாதையில் மதிக்குப் பிறகு ஐ’யையும் இணைக்கும் வகையில் நூலகத்துக்கு கூட்டிச் சென்று, உள்ளே வலது பக்கமாக இருக்கும் குழந்தைகள் பிரிவுக்குப் போய் அங்கிருந்த மஞ்சள் வண்ண இருக்கையில் அவனை உட்கார வைத்து, தமிழில் இரண்டும், ஆங்கிலத்தில் இரண்டுமாக நான்கு புத்தகங்களை முன்னால் இருந்த சிறு மேசையில் எடுத்து வைத்தோம்.
ஆர்வத்தோடு தமிழ் புத்தகத்தில் ஒன்றை எடுத்தவன், ஒவ்வொரு பக்கமாகப் பிரித்து அதிலிருக்கும் படங்களைப் பார்த்தான். பிறகு அடுத்த புத்தகத்தை எடுத்து அதிலுள்ள படங்களோடு சேர்த்து எழுத்துகளை பெரியவர்கள் படிப்பது போல முணுமுணுத்தான்.
ஏற்கனவே முப்பதுக்கும் அதிகமான சிறுவர்கள் அங்கே இருந்தார்கள். கூடவே, நான்கு நடுத்தர வயதினர், அதில் இருவர் பெண்கள், அவர்களுக்கு வாசிப்பு சார்ந்து சில விளையாட்டுப் போட்டிகளையும், பயிற்சிகளையும் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதிலிருந்த குழந்தைகளில் இருவர், ஐ போனது முதல் அவன் புத்தகங்களை ஆர்வத்தோடு எடுத்துப் படிப்பது வரை நடுநடுவே திரும்பிப் பார்த்து தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.
ஓர் அறை மணி நேரம் அங்கேயே உட்கார்ந்தும், இருக்கையில் இருந்து இறங்கி வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களையும், மேசைகளில் குழந்தைகள் படித்துவிட்டு வைத்திருந்த நூல்களையும் எடுத்துப் பார்த்தும், குழந்தைகளோடு குழந்தையாகப் போய் நின்றும்; கை தட்டியும் மகிழ்ந்த ஐயை, அங்கிருந்து நடக்க வைத்துக் கூட்டிக்கொண்டு நூலகத்தை இன்னொரு தடவை நன்றாக சுற்றிப் பார்த்தோம்.
முன்பே பார்த்த யாழ் அருகில் சென்று அதனை அவனுக்கு அறிமுகம் செய்யும் விதமாக இப்படிச் சொன்னேன். ”மகனே… நம் பழந்தமிழர்கள் வாழ்வில் இந்த யாழ் மிக முக்கியமான ஒன்றா இருந்திருக்கு. அதிலும் குறிப்பா, யாழ் வகைகளில் முதன்மை பெறும் யாழ்களாக நான்கை சொல்வார்கள். பேரியாழ் (இதற்கு பரவையாழ் என்ற பெயரும் உண்டு), மகர யாழ், சகோட யாழ், செங்கோட்டி யாழ். தவிர, நாரத யாழ் (பெரிய யாழ் வகை), சீறியாழ் (சிறிய யாழ் வகை), கீசக யாழ், தும்புரு யாழ், மருத்துவ யாழ், கின்னரி, அம்பணம், உருத்திரம் போன்ற இன்னும் பல யாழ்களும் உண்டு.
சிலப்பதிகாரம் தவிர்த்து, மணிமேகலை, பெருங்கதை, சீவக சிந்தாமணி போன்ற இலக்கியங்களில்… சகோட யாழ், மகர யாழ், செங்கோட்டி யாழ் பற்றிய விவரங்கள் இருப்பதையும், கடைச் சங்கக் காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் சிலவற்றில் சகோட யாழ், சீறியாழ், வில் யாழ் பற்றி கூறப்பட்டிருப்பதையும் பார்க்கலாம் மகனே.
யாழை பொருத்தவரை நரம்புகளின் எண்ணிக்கை மற்றும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் வகைப்படுத்தி இருப்பாங்க. அதாவது, 21 நரம்புகள் கொண்டது பேரி யாழ். இருப்பதிலேயே இதுதான் மிகப் பழைமையானது. அடுத்தது, 17 அல்லது 19 நரம்புகள் கொண்ட மகர யாழ். அதற்கடுத்து, 14 அல்லது 16 நரம்புகள் கொண்ட சகோட யாழ். 7 நரம்புகள் கொண்ட செங்கோட்டி யாழ். 9 நரம்புகள் கொண்ட (சிலர் 7 என்றும் கூறுவர்) சீறி யாழ். 100 நரம்புகள் கொண்ட கீசக யாழ். ஆயிரம் நரம்புகள் கொண்ட ஆதி யாழ். வில் வடிவில் அமைந்த வில் யாழ். இதை ஆரம்பகால யாழா சொல்வாங்க.
இன்றைக்கு யாரும் யாழ் வைத்து இசைத்துப் பார்த்ததில்லை. அதோட, இந்த யாழ்தான் காலப்போக்கில் வீணையா வளர்ச்சி கண்டதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் மகனே.
இதையெல்லாம் பற்றி நீ வளர்ந்து இன்னும் விரிவா தெரிந்துக்க விபுலானந்தர் இயற்றிய ‘யாழ் நூலை’ வாசிக்கலாம். கூடவே, பழந்தமிழ்ப் பனுவல்களான சிலப்பதிகாரம் தொடங்கி, யாழின் உறுப்புகள் பற்றி கூறியிருக்கும் பொருநர் ஆற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்றவற்றை எல்லாம் படிக்கலாம் மகனே.
இந்த யாழ் எந்த அளவுக்கு முக்கியமான ஒன்றா; தவிர்க்க முடியாத ஒன்றா நம்மிடையே இருந்திருக்குன்னு தெரிந்துக்க… யாழைக் கொண்டு யாழ்த்தண்டு, யாழ்ப்பிருடை, யாழ்க்கரணம், யாழ்செய்தல், யாழ்த்திறம், யாழ்தரித்தாள், யாழ்ப்பாணி, யாழ்பதங்காளி, யாழ்முரி, யாழ்முனிவன், யாழ்வல்லோர், யாழ்வாசினை, யாழல், யாழாசிரியன், யாழோர்ன்னு இருக்கும் சொற்களையும்… யாழை முன்னொட்டுப் பின்னொட்டாக் கொண்டு யாழ்வேந்தன், யாழ்வன், யாழன் ஆதி, யாழன், நல்யாழன், யாழ்வின்னு இருக்கும் பல மாந்தர்கள் பெயர்களையும்… நாயன்மார்களில் யாழ்ப்பாண நாயனார் என்று ஒருவர் இருப்பதையும்… யாழுக்கு எழால், கருவி, கலம், கேள்வி, தீந்தொடை (யாழ் நரம்புக்கும் இப்பெயர் உண்டு), பண், வல்லிகைன்னு இன்னும் பல பெயர்கள் அதாவது, நிகர்ச்சொற்கள் இருப்பதையும்… யாழ் நரம்புக்கு தொடை, நரம்பு, நாடி, நாரி, குரல் முதலான பெயர்கள் இருப்பதையும்… ஐந்திணைகளுக்கும் தெய்வம் முதலிய பதினான்கு கருப்பொருட்களுள் ஒன்றாக யாழை வைத்திருந்ததையும்; ஒவ்வொரு நிலத்துக்கும் உரிய யாழ்கள் தனித்தனியாக இருந்ததையும்… யாழ் நூலை தொல்காப்பியம் நரம்பின்மறை (எழுத். 33) என்பதையும்… யாழ் வாசிக்கும் பாணர்களை கருவிமாக்கள் என்றதையும்… மாதங்கி என்ற யாழ்த்தெய்வம் பற்றி சிலப்பதிகாரம் (7, 1, உரை) சொல்வதையும்… யாழ் என்ற சொல்லுக்கு நால்வகை யாழ் தவிர்த்து, மிதுனராசி, அசுவதி, திருவாதிரை, பண், ஆந்தை முதலானப் பொருட்கள் இருப்பதையும்… தமிழ் மொழியின் மூத்த இலக்கியப் பனுவலான சங்க இலக்கியத்தில் மட்டும் 69 இடங்களில் யாழ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதையும் வைத்து ஓரளவுக்கு புரிந்துகொள்ளலாம் மகனே.’’
புரிந்ததோ இல்லையோ, நான் சொன்னதை ஒரு தேர்ந்த கேட்பாளன் போல கேட்டவன், யாழையும் என்னையும் மாறி மாறிப் பார்த்திட்டான்.
அங்கிருந்து வெளியே வந்து நூலகம் முன்பாக இருக்கும் சரஸ்வதி சிலை அருகில் போய் நின்று, மேலும் அவனிடம் சொன்னேன். ”இப்போ நாம பார்த்துட்டு வந்த யாழ் மட்டும் அழிந்து போகல மகனே. அதை வைத்து பஞ்சமம், புறநீர்மை, தக்கேசி, அந்தாளிக்குறிஞ்சி, செவ்வழி, செந்துருத்தி, நட்டபாடை, இந்தளம்ன்னு நூற்றுக்கணக்கான பண்களை இசைத்திருக்காங்க. அதையெல்லாம் தமிழ் மொழிய அழிக்க எப்படி வடமொழிச் சொற்களை திட்டமிட்டு உள்ளே கலந்து தமிழர்கள முட்டாள் ஆக்கினாங்களோ… அதேபோல இந்தப் பண்களின் பெயர்களை எல்லாம் மாற்றி அழித்திருக்காங்க. இப்போ அதைதான் உண்மையானதா; பழைமையானதா எல்லோரையும் நம்பவும் வைத்திருக்காங்க.’’
சாலைக்கு வந்து வலது புறமாகத் திரும்பி, சற்று தூரத்தில் சந்திப்பு அருகே இருந்த தந்தை செல்வா நினைவிடத்தையும், எதிரில் இருந்த மைதானத்தையும் பார்த்துக்கொண்டு, கோட்டை ஒட்டியிருந்த பண்ணைப் பூங்கா கடற்கரைக்கு வந்தோம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்றாக சொல்லப்படும் இந்தப் பண்ணைப் பூங்கா கடற்கரை, அவ்வளவாக பராமரிக்காமல் இருப்பதை பார்த்துவிட்டு, ஐ’யை மிகக் கவனமாக கூட்டிக்கொண்டு நடந்தோம்.
நடைபாதை ஒட்டி இருந்த புங்கை மரம் ஒன்றைக் காட்டி, ”அப்பா மரம்… அப்பா மரம்’’ என்றான் ஐ.
உடனே தூக்கி அதன் ஒரு கிளையில் அவனை உட்கார வைத்ததும், ”வாவ்… வாவ்…’’ என்று சொல்லி கைதட்டி சிரித்தான்.
ஆட்கள் அவ்வளவாக இல்லாமல் ஆனால், ஆங்கும் ஈங்குமாக பல்கலைக்கழக மாணாக்கர்களும், காதலர்களும், ஒன்றிரண்டு முதியவர்களும் உட்கார்ந்தும்; நடந்தும், பேசிக்கொண்டும்; விளையாடிக்கொண்டும் இருப்பதையும், ஓரிடத்தில் குழுவாக கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதையும் பார்த்துக்கொண்டு, மண்டைத்தீவு செல்லும் சாலை சந்திப்பு அருகில் வந்தோம்.
சிறிது நேரம் அங்கிருந்த ஓர் இருக்கையில் அமர்ந்து, கொண்டு போயிருந்த பிஸ்கெட்டையும், பழத்தையும் ஐ’க்கு முதலில் தந்துவிட்டு, அருகில் இருந்த கடையில் போய் பொறித்த பூண்டு ஒன்றும், இறால் வடை நான்கும் வாங்கி வந்து உண்டோம்.
பிறகு எழுந்து சாலையோரமாக மெதுவாக நடந்து நகருக்குள் வந்து, பேருந்து நிலையம் ஒட்டியிருந்த தெருக்களில் ஒரு மணி நேரம் சுற்றித் திரிந்துவிட்டு, பேருந்தேறி வீட்டுக்கு வந்தோம்.
அடுத்த நாள் காலையில் நான் மட்டும் தனியாகப் போய் அருகில் இருந்த கிராமத்தையும், விவசாய நிலங்களையும் வேடிக்கை பார்த்துவிட்டு, ஓரிடத்தில் விவசாயிகளிடம் பேசிவிட்டு வந்தேன்.
ஒரு பக்கம் மழை வருவது போலவும், இன்னொரு பக்கம் லேசாக வெய்யில் அடிப்பதையும் பார்த்துவிட்டு, வேக வேகமாகக் குளித்துக் கிளம்பி யாழ்ப்பாணம் வந்து, அங்கிருந்து காரை நகர் செல்லும் பேருந்தேறி வழியில் உள்ள நவாலியில் இறங்கினோம்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் யான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளுமை. நம்மூர் பாரதிதாசன் போன்று இலங்கையில் புகழ்பெற்ற தமிழ்ப் புலவர். தில்லை அந்தாதி, செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை, அட்டமுகிக் கலம்பகம், தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைச் சிலேடை வெண்பா, தாலவிலாசம்… முதலான பல நூல்களை யாத்தவர்.
இவற்றில் தாலவிலாசம் மிக முக்கியமானப் பனுவல். பனை பற்றி அதிலும் குறிப்பாக, பனையின் வேர் முதல் குருத்து வரையான அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மக்களுக்குக் கிடைக்கும் பயன்கள், அவை கிடைக்கும் காலம், அவற்றிலிருந்து பயன்படு பொருட்கள் உருவாக்கும் விதம், அவற்றால் விளையும் நன்மைகள் என முழுக்க முழுக்க பனையின் மேன்மைகளை தமிழுலகம் அறிய செய்யுள் வடிவில் நானூறுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்தது.
இதுகுறித்து எனது ‘தாவர சங்கமம்’ நூலில் விரிவாக எழுதியிருப்பதால், அதனை அவர் பிறந்த நவாலியூரில் உள்ள ஒரு பனை மரத்தடியில் வைத்து வெளியிட வேண்டும் என்று விரும்பி, நூலின் ஒரு பிரதியை கொண்டு போயிருந்தோம்.
ஊரில் ஒருவரையும் தெரியாது என்றாலும், புலவர் வாழ்ந்த ஊர் என்பதால் மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. அதோடு, ஆங்காங்கே தென்பட்ட பனை மரங்கள் ஒவ்வொன்றும் நேசக் கரம் நீட்டி எங்களை வரவேற்பது போலவும் தோன்றியது.
பேருந்து நிலையத்திலிருந்து கொஞ்ச தூரம் நடந்துபோய் வலது பக்கமாகச் செல்லும் ஒரு சிறிய தெருவுக்குள் நுழைந்து, சற்று தூரத்தில் இடது பக்கமாக மரஞ் செடி கொடிகளுக்கு மத்தியில் இருந்த பனை மரங்களில் முது பனை மரம் ஒன்றின் அடியில் சென்று நூலை வைத்து, கண்மூடி புலவரை மானசீகமாக வணங்கி, அவர் தனது நூலின் தொடக்கமாக எழுதியிருந்த,
‘மன்னுநீர் ஞாலத்து வான்பனையின் மேன்மையெலாம்
பன்னுகலி வெண்பாவாற் பாடவே – முன்னர்வரு
போதனே விக்கினங்கள் போக்குகின்ற பூதகண
நாதனே முன்னே நட’
என்ற பிள்ளையார் காப்புப் பாடலை எனக்கு மட்டும் கேட்கும் குரலில் ஒரு தடவை பாடிவிட்டு, புத்தகத்தை மனத்துக்கு இனிதான முறையில் வெளியிட்டோம்.
அங்கே நாங்கள் வந்திருப்பதை பார்த்த எதிர்வீட்டைச் சேர்ந்த ஓர் அம்மா, ”யார் நீங்க? இங்கே என்ன செய்றீங்க?’’ என்று கேட்டுக்கொண்டு அருகில் வந்தார்.
சொன்னோம்.
பெரிதாக மகிழ்ந்தவர், ”இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீங்க?’’ என்று ஆச்சர்யமாகக் கேட்டுவிட்டு சொன்னார். ”ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எங்கள் ஊர் புலவருக்கு இதைவிட என்ன பெருமை இருக்கப் போகிறது? அவர் மட்டும் உயிரோடு இருந்து பார்த்திருந்தால்… நெகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திருப்பார்.’’
இன்னும் கொஞ்ச நேரம் நவாலியில் இருந்துவிட்டு, அடுத்து வந்த பேருந்தில் ஏறி வழி நெடுகிலும் இருந்த அழகான இயற்கை காட்சிகளை குறிப்பாக, வயல்களையும், நீர் நிலைகளையும், கூட்டம் கூட்டமாக இருக்கும் பனைகளையும், சிறு சிறு கிராமங்களையும் [, அதிலுள்ள வீடுகளையும், மனிதர்களையும், கோயில்களையும்…], வழியில் ஓரிடத்தில் கடலுக்கு நடுவே நீண்ட தூரம் சென்ற சாலையையும், அதில் ஆர்ப்பரித்துக் கொட்டிய அலை நீரையும் பார்த்து ரசித்துக்கொண்டு, ஈழத்துச் சிதம்பரம் என்று சொல்லக்கூடிய காரை நகருக்கு வந்தோம்.
பேருந்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே ஐ உறங்கிவிட்டதால், தோளில் சாய்த்து தூங்க வைத்துக்கொண்டு நின்றபடி அங்கிருந்த ஓர் உணவகத்தில் மதிய உணவு உண்டுவிட்டு, அவன் விழித்ததும் தர ஏதுவாக ஒரு புட்டும் வாங்கிக்கொண்டோம்.
காரை நகரின் பல இடங்களில் இன்னமும் வெள்ள நீர் வடியாமல் இருந்தது. நாங்கள் அங்கே இரண்டு இடங்களைப் பார்க்க எண்ணியிருந்தோம். ஒன்று, புகழ்பெற்ற சுந்தரேசுவரர் கோயில். அதிலும் குறிப்பாக, அங்கிருக்கும் நடராசரை. இரண்டாவது, விளக்கு வீடு என்னும் கலங்கரை விளக்கம். கோயிலில் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் திறக்கவில்லை. கலங்கரை விளக்கம் செல்லும் பாதை பாதுகாப்பற்றது என்றார்கள்.
‘சரி’ என்று ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பி, அடுத்த பேருந்தில் யாழ்ப்பாணம் வந்தோம்.
ஐந்து மணிக்கு எங்களைக் கூட்டிப் போக வருவதாகச் சொல்லி, பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பூபாலசிங்கம் புத்தகக் கடை முன்பாக நிற்கச் சொல்லியிருந்தார் நண்பர்.
இன்னும் ஒரு மணிநேரம் இருந்தது. கடைகளுக்கு மத்தியில் இருந்த தேநீர்க் கடைக்குப் போய் வழக்கம்போல ஒற்றை தேநீர் வாங்கி பகிர்ந்து பருகிவிட்டு, நான்கே முக்கால் வரைக்கும் சுற்றித் திரிந்துவிட்டு, புத்தகக் கடை முன்னால் வந்தோம்.
சரியாக ஐந்து மணிக்கு ஆட்டோவில் வந்து கூட்டிப் போன நண்பர், நேராக பண்ணைப் பூங்க கடற்கரை தாண்டி மண்டைத்தீவு செல்லும் வழியில் இரு புறமும் இருந்த நீர் நிலையையும், அதிலிருந்த அலையாத்திக் காட்டையும், யாருமற்ற அந்த இயற்கை எழில் பொங்கும் இடத்தையும் பற்றி சொல்லிக்கொண்டு போய் ஓரிடத்தில் ஓரமாக நிறுத்தினார். அவ்விடமே அத்தனை ரம்மியமாக இருந்தது. அதுவும் கதிரோன் மறையப்போகும் மாலை நேரத்தில் கண்டது கூடுதல் இனிமையாக மிளிர்ந்தது.
அங்கே அந்த இடத்துக்குக் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத வகையில், சொல்லப்போனால் அந்த இடத்தையே சிதைக்கப்போகும் வகையில், புதிதாகக் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்போகும் அறிவிப்புப் பலகை ஒன்று இருப்பதை பார்த்துவிட்டு வருத்தத்தோடு சிரித்தேன். அதைப் புரிந்துகொண்ட நண்பரும் உடன் சிரித்தார்.
சூரியன் மறையும் அழகானக் காட்சியை கண்டபடி சிறிது நேரம் அங்கேயே நின்றும்; நடந்தும், பேசியும்; பேசாமலும் இருந்துவிட்டுப் புறப்பட்டு நகருக்குள் வந்தோம்.
நண்பரிடம், ”நாம் ஒரு பீர் அடிப்போமா?’’ என்று கேட்டேன்.
”சரி’’ என்றவர், வழியில் இருந்த ஒரு கடையில் பீர் வாங்கிக்கொண்டு, எங்களை பேருந்து நிலையம் அருகே இருந்த சந்தைக்குக் கூட்டிப் போய், யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற பனை உணவுப் பொருட்கள் அத்தனையும் உடன், மாசிக் கருவாடு முதலான இன்னும் சிலவற்றையும் வாங்கித் தந்தார்.
பிறகு தனது விருப்ப இடமான நல்லூர் கோயில் முன்பாகப் போய் நிறுத்தி, அங்கிருந்த கடை ஒன்றில் ஐ’க்கும், மதிக்கும் ஐஸ் கிரீம் வாங்கித் தந்தவர், நடந்தபடி கொஞ்ச நேரம் என்னோடு உரையாடிவிட்டு, பத்து நிமிடத் தொலைவில் இருந்த தம் வீட்டுக்குக் கூட்டிப் போனார்.
எங்களுக்காகக் காத்திருந்த நண்பரது மனைவியும், இரு பிள்ளைகளும் மகிழ்வோடு வரவேற்றார்கள்.
அந்த எளிமையான வீடும், அவர்களது எதிர்ப்பார்ப்பற்ற அன்பும்; பேச்சும், அங்கு நிலவிய சூழலும் மனத்துக்கு மிக நெருக்கமாக உணர வைத்தன (இதுபோல் உணர வைத்த இடங்கள் மிகச் சிலவே என் வாழ்வில் உள்ளது குறிப்பிடத்தக்கது).
சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிவிட்டு, நண்பர் என்னை முன்பகுதியில் இருந்த தனி அறைக்குக் கூட்டிப் போனார்.
சுமார் இரண்டரை மணி நேரம் இலங்கையின் முதல் பீரை ரசித்துப் பருகியபடி, நண்பரோடு அவர் இந்தியாவுக்குப் படிக்க வந்தது தொடங்கி… நாங்கள் முதல் தடவை வடபழனியில் சந்தித்தது, பத்திரிகை துறையில் வேலை பார்த்தது, இருவருமாக சுற்றித் திரிந்த இடங்கள் (அதிலும் குறிப்பாக, அவர் எங்களூருக்கு வந்தது), பார்த்த படங்கள், வாசித்த புத்தகங்கள், சந்தித்த நபர்கள், எதிர்காலக் கனவுகள்… என பழைய; புதிய கதைகள் பல பேசிவிட்டு, அவர் மனைவி சமைத்துக் கொண்டுவந்த சுவையான யாழ்ப்பாண உணவை ருசித்து உண்டுவிட்டு, ஐ பிறந்தநாளுக்குப் பரிசாகத் தந்த பெரும் தொகையை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு, பதினொரு மணிக்கு வீட்டுக்கு வந்தோம்.
எப்போதும் படுத்த ஓரிரு நிமிடங்களிலேயே உறங்கிவிடுபவன், அன்று வெகுநேரம் ஆகியும் உறங்காமல், பார்த்துவிட்டு வந்த நண்பரையும், வெளியிட்ட நூலையும் நினைத்துக் கொண்டிருந்துவிட்டு, அவ்வெண்ணத்தோடவே உறங்கிப்போனேன்.
*