ஈழம் அன்ன ஈழம் – 11 : பல்கலைக்கழகம், காங்கேசன்துறை

இலங்கையைச் சேர்ந்த முகநூல் நண்பர் ஒருவரை அருகில் இருக்கும் தெல்லிப்பழை துர்க்கை கோயிலில் வைத்து இன்று (டிச 4) மாலை நான்கு மணிக்கு சந்திப்பதாக திட்டமிட்டிருந்தேன். ஆனால், காலை பதினொரு மணிக்கு அவர் அழைத்து, ”இன்று பிற்பகல் மூன்று மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – நூலகக் கேட்போர் கூடத்தில் ஓர் ஆவணப்படத் திரையிடலும், நூல் வெளியீட்டு விழாவும் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் வாங்க, அங்கே சந்திக்கலாம்’’ என்றார்.

எனக்கும் இரு தினங்களாக, ‘இலங்கைக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும்… ஓர் இலக்கியக் கூட்டங்களில் கூட பங்கேற்க முடியவில்லையே’ என்று தோன்றியது. அதற்கேற்ப இந்த அழைப்பு வந்ததாக எண்ணி உடனே சம்மதித்து, மதியம் இரண்டு மணி வாக்கில் கிளம்பி பல்கலைக்கழகம் சென்று, அங்கிருந்த நூலகம் முன்பாக அமர்ந்து நண்பருக்காகக் காத்திருந்தேன்.

‘தான் ஒரு மணிநேரப் பயணத் தொலைவில் இருந்து வர வேண்டும்’ என்று முன்பே சொல்லியிருந்தார். நேரம் வேறு ஆகிவிட்டது. ‘சரி, அவர் வந்ததும் உள்ளே வரச் சொல்வோம்’ என்று நினைத்து அங்கிருந்த மாணவர் ஒருவரிடம் நகர்பேசி வாங்கி அவர் எண்ணுக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. ‘சரி, உள்ளே சென்று அமருவோம்’ என்று போய் உட்கார்ந்தேன்.

அரங்கத்தில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. இருப்பவர்களிலும் மிகுதி மாணவர்கள். நண்பர் வந்தால் கண்டுபிடிக்க ஏதுவாக வழி ஒட்டி இருந்த இருக்கையில் அமர்ந்தேன். நிகழ்ச்சி தொடங்கியது.

ஈழத்தின் நாடக எழுத்தாளரும், நாடகப் பயிற்சியாளரும், நாடக நடிகரும், நாடக அரங்கக் கல்லூரியின் நிறுவனருமான, ‘ஈழத்து சிறுவர் நாடகத் தந்தை’ என்று போற்றப்படும் மறைந்த குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடக நூலை முதலில் வெளியிட்டார்கள்.

பிறகு அவர் குறித்து சோமிதரன் இயக்கிய ‘அரங்கம்’ ஆவணப்படம் ஒளிபரப்பினார்கள். நிகழ்வுக்கு முன்பாக, ‘படத்தின் ஒளி ஒலி அமைப்பு சரியாக இருக்கிறதா?’ என்பதைக் கூட கவனிக்காமல், காது கிழியும் சத்தத்தில் படம் ஓடியது. ‘எழுந்து வெளியில் ஓடிவிடலாமா’ என்று தோன்றியது. நானும் யாராவது சொல்லி சரி செய்வார்கள் என்று பார்த்தால், கடைசி வரைக்கும் ஒருவரும் சொல்லவில்லை; அவர்களும் சரி செய்யவில்லை. காது வலித்ததுதான் மிச்சம். 

நிகழ்வில் எழுத்தாளர் சயந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே சரியாக என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து அமர்ந்த நண்பர், ”ஆவணப்படம் மட்டும் பார்த்துவிட்டு வெளியில் சென்று உரையாடலாம்’’ என்றார்.

”சரி’’ என்றுவிட்டு, ஆவணப்படம் முடியும் வரை இருந்துவிட்டு எழுந்து வெளியில் வந்தோம்.

இலங்கையில் கலந்துகொண்ட முதல் இலக்கிய விழா சொல்லும்படி இல்லையென்றாலும், புதுவித அனுபவத்தை ஈந்தது. நிகழ்ச்சி முழுக்க மாணாக்கர்கள், அதிலும் குறிப்பாக மாணவிகள், ஆர்வத்தோடு கலந்துகொண்டு பங்களிப்பாற்றியது பாராட்டும் விதத்தில் இருந்தாலும், ஆவணப்படம் சராசரிக்கும் கீழாகவே இருந்தது.

பல்கலைக்கழக வளாகத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வெளியில் வந்து, சற்று தொலைவில் இருந்த ஒரு பிரபல ஐஸ்கிரீம் கடைக்குக் கூட்டிப் போன நண்பர், ஆளுக்கோர் ஐஸ்கிரீம் சொல்லிவிட்டு, எங்களது இலங்கைப் பயணம் குறித்தும், மதி பற்றியும், ஐ பற்றியும் விசாரித்தார்.

பிறகு இலக்கியம் தொடங்கி, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் வரைக்கும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்தோம்.

நண்பர் சொன்னதில் மூன்று விடயங்கள் மனத்தில் ஆழப் பதிந்தது. முதலாவது, ”இங்குள்ள ஒவ்வோர் ஊரிலும் வெளியில் தெரியாத ஓர் அமைப்பு இருக்கிறது. அது முழுக்க முழுக்க ஊரின் வளர்ச்சிக்கானது. அதற்கு நிச்சயம் ஒவ்வொருவரும் தம் பங்களிப்பை செய்ய வேண்டும். அதாவது, திருட்டைத் தொழிலாகக் கொண்டிருந்தாலும் கூட அதன் மூலமாக ஒருவர் தம் பங்களிப்பை செய்ய வேண்டும். அதேபோல உயர் அரசுப் பதவிகளில் இருப்பவரும் செய்ய வேண்டும்.”

இரண்டாவது, ”மொழிக்கும், பண்பாட்டுக்கும் செய்ய வேண்டிய முக்கியப் பணிகள் எவ்வளவோ இருக்கின்றன. செய்வதற்குதான் போதுமான ஆட்களும், நிதியும் இல்லை. அதோடு, மக்களே வராத கோயிலுக்குதான் இங்கே இன்னமும் அதிகமானவர்கள் பணத்தை கொண்டுபோய் கொட்டுகிறார்கள். அதில் பாதியை அர்த்தமுள்ள அவசியப் பணிகளுக்குக் கொடுத்தால் கூட போதும். இன்னும் எவ்வளவோ செய்ய முடியும்; முன்னேற்றம் காண முடியும்.’’    

மூன்றாவது, ”தமிழ்நாட்டில் இருப்பது போல இங்கே திருமணம் ஆனதும் பெண்கள் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. மாறாக, பெண் வழி சமூகம்தான் இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது. அதனால் ஒரு ஆண் திருமணத்துக்குப் பிறகு பெண்ணின் வீட்டுக்குதான் செல்ல வேண்டும். அதன் பிறகான அவர் வாழ்க்கை முழுக்க அங்கேதான் இருக்க வேண்டும்; வாழ வேண்டும். ஒற்றை வரியில் சொல்வதென்றால் ஆண்களைவிட பெண்களுக்குதான் மதிப்பு அதிகம். சேர்க்கும் சொத்து, வீடு அனைத்தும் பெண்களுக்குதான் சேரும்.’’

சரியாக ஆறு மணிக்கு ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் மூன்றடி உயர வெட்டிய வாழை மரத் தண்டை நிற்க வைத்து அதில் விளக்குகள் பொறுத்தி தீபம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இதுவரை பார்க்காத புதுவிதமாக இருப்பதாக நண்பரிடம் சொன்னேன்.

”இங்கே எல்லோர் வீட்டு வாசலிலும் இப்படி ஏற்றுவார்கள். இது யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்கம். தொன்றுதொட்டு இருந்து வருவது. தவிர, வீடு முழுக்கவும் விளக்கு ஏற்றுவார்கள். அதோடு, வீட்டைச் சுற்றிலும் சிறு கிளுவைக் குச்சிகளில் துணி சுற்றி பந்தம் கொளுத்தி நட்டும் வைப்பார்கள்’’ என்றார்.

”சரிங்க, சகோ’’ என்றுவிட்டு அங்கிருந்து விடைபெற்று கிளம்பி, நேராக நாச்சிமார் கோயில் பேருந்து நிலையம் வந்து ஏறி, வழிநெடுக்க ஒவ்வொரு வீட்டு முன்பாகவும் நண்பர் சொன்னது போல வாழை நிறுத்தி விளக்கு ஏற்றியிருப்பதையும், வீடுகள் மட்டுமல்லாமல் கோயில்களிலும், கடைகளிலும் வரிசையாக தீபம் வைத்திருப்பதையும் பார்த்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன்.

வாசலில் கோலமிட்டு விளக்கேற்றிவிட்டு, அதன் அருகில் நின்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். சென்று அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, உள்ளே போய் குழந்தைகளோடு விளையாடினேன்.

பிறகு அறைக்கு சென்று கட்டிலில் அமர்ந்து நண்பரின் மகளோடு சேர்ந்து காலையில் எழுதிய,

‘ஒளி ஒளி தீபத் திருஒளி –

மன மன இருள் நீக்கும்ஒளி…

ஒளி ஒளி தீபத் திருஒளி –

குண குண அருள் நிறைக்கும்ஒளி…

ஓ, தீப ஒளியே –

வா, எம்முள்ளே…

தா, உம் ஒளியை –

எம் வாழ்வு மிளிரட்டும்…

ஏ, தீப ஒளியே –

தருவோம், எம் அன்பை…

மகிழ், தினந்தோறும் –

இப்பூமி ஒளிரட்டும்…  (ஒளி…)

*

வானில் ஒளிரும் கதிரவன் –

தரும் ஒளி பெருஒளி…

பூமியில் துளிரும் நம்பிக்கை –

தரும் ஒளி திருஒளி…

இரவில் திரியும் மின்மினி –

தரும் ஒளி பொன்னொளி…

உடலில் திளையும் உயிரது –

தரும் ஒளி உள்ளொளி…

அட எங்கும் உள்ளது ஒளி –

இங்கே இருளும் கூட ஓர் ஒளி…

அட நீரிலும் உள்ளது ஒளி –

இங்கே தோல்வியும் கூட ஓர் ஒளி…  (ஒளி…)’

*

என்ற இந்தத் ‘தீபத் திருஒளி’ பாடலை எடுத்து ஒரு தடவை மனத்துக்குள் மென் குரலில் பாடிவிட்டுப் போய், இரவு உணவு உண்டுவிட்டு வந்து சீக்கிரமாகவே படுத்து அடுத்தநாள் எழுந்தேன்.

அவசரமாக முடிக்க வேண்டிய எழுத்துப் பணி ஒன்று இருந்ததால் இன்று (டிச 05) எங்கும் வெளியில் செல்லவில்லை. மாலை வரை இடையிடையில் கொஞ்ச நேரம் மட்டும் ஓய்வெடுத்துவிட்டு, முழுக்க அறைக்குள் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன்.

நடுநடுவே ஐ வந்து, ”அப்பா வாக்கிக்… அப்பா வாக்கிக்…’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான். 

நானும் ஒவ்வொரு தடவையும், ”சரிடா, சாயந்தரமா போலாம்’’ என்று சொன்னேன்.

அவனும் கேட்டுக்கொண்டு போய் மதியோடும், நண்பரின் குழந்தைகளோடும் விளையாடிக்கொண்டிருந்தான்.

மாலை ஐந்து மணி இருக்கும். எழுதுவதை இடை நிறுத்திவிட்டு, மதியையும் ஐ’யையும் கூட்டிக்கொண்டு தெல்லிப்பழை ரயில் நிலையம் தாண்டி உள்ள யாருமற்ற முத்து மாரியம்மன் கோயில் வரைக்கும் (சென்று வர சுமார் ஐந்து கிலோமீட்டர் இருக்கும்) கதைகள் பேசியவாறு நடந்து போய் வந்தோம்.

எழுத்துப்பணி இரவே முடிந்ததால் மறுநாள் (டிச 06) காலை உணவுக்குப் பிறகு, அருகில் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காங்கேசன்துறை கடற்கரைக்குப் போனோம்.

இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் தற்போது இருக்கும் இந்தக் காங்கேசன்துறை, இலங்கையின் வடபகுதியான, யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பெரிய துறைமுகமாகும். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து தினந்தோறும் பயணிகள் கப்பல் வந்து போகும் முக்கிய இடம்.

மிக அழகான; சுத்தமான கடற்கரை. ஆட்கள் அதிகம் இல்லை என்றாலும், ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமலும் ராணுவத்தினர் கண்காணித்தபடி இருந்தனர். சென்று காலணிகளை ஓர் ஓரமாகக் கழட்டிவிட்டு அலையில் கால் படுமாறு நின்றுகொண்டோம்.

துள்ளித் துள்ளி வரும் சிற்றலையையும், அவ்வப்போது வந்து கால் முட்டி வரை நனைத்துப் போகும் பேரலையையும் கை கோத்தபடி நின்று வெகுநேரம் ரசித்துக்கொண்டிருந்தோம்.

எங்கள் நிழல் அலையிலும், மணலிலும் படுவது போல ஒளிப்படம் எடுப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் வந்து, ”அண்ணா, உங்க செல்போனைக் கொடுங்க. நீங்க மூவரும் நிற்பது அவ்வளவு அழகாக இருக்கிறது. அதை ஃபோட்டோ எடுத்துத் தருகிறேன்’’ என்று கூறி வாங்கிப் போய் அழகழகாக ஐந்தாறு ஒளிப்படங்கள் எடுத்து வந்து தந்தார்.

பின் சில நிமிடங்கள் அங்கேயே நின்றும், நடந்தும் இருந்துவிட்டு; விளையாடிவிட்டு, அருகில் சற்று தள்ளி சிதைந்த கடல் கட்டுமானப் பகுதி இருக்கும் இடம் நோக்கி நடந்தோம்.

அதன் அண்மையில் ஓரிடத்தில், அலைகளில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கிய வெவ்வேறு வண்ணங்களிலான விதவிதமான சிறிய கற்கள் குவிந்து கிடப்பதை பார்த்துவிட்டு, ஆசையோடு போய் ஒவ்வொரு வண்ணத்திலும் ஒன்றை எடுத்துக்கொண்டோம்.

பிறகு அந்தக் கட்டுமானத்தில் ஏறி சிறிது நேரம் நின்று அலையடித்து நீர் தெளிப்பதை ரசித்து; அதில் இரண்டு தடவை நனைந்துவிட்டு, அருகில் இருந்த கலங்கரை விளக்கத்தையும், பூங்காவையும் பார்த்துவிட்டு, மறுபடியும் கடற்கரைக்கு வந்தோம்.

தென்னை ஓலை வேய்ந்து, அதன் மீது அடும்புக் கொடி படர்ந்த அழகான குடில் ஒன்று இருந்தது. அதனுள் சென்று உட்கார்ந்து வாழைப்பழம் தந்ததும் உண்டுவிட்டு, ஐ ஓடிப்போய் கடற்கரை மணலில் விளையாடினான். மதிய வெய்யிலுக்கு கடற்காற்று வீசும் அக்குடில் அத்தனை இதமாகவும், ரம்மியமாகவும் இருந்தது.

மதியிடம் குடிலில் படர்ந்திருந்த கொடியைக் காட்டி, ”இதுதான் அடும்பு கொடி. இது அதிகமா படர்ந்திருக்க இடத்துல… இதை நல்லா சிதையிறமாதிரி இழுத்துச் சேர்த்து, அதோட அடியிலதான் கடல் ஆமைங்க பாதுகாப்பா குழி தோண்டி முட்டையிட்டு மூடி வச்சிட்டுப் போவும். அதை ஆண் ஆமைங்க மற்ற உயிர்கள் கிட்ட இருந்து பாதுகாக்கும். இதைப் பத்தி சங்க இலக்கியத்துல (அகம் – 160)… குமுழிஞாழலார் நப்பசலையார்னு வித்தியாசமான பெயர் கொண்ட புலவர் ஒருவர், அப்படியே ஒரு விலங்கியல் ஆய்வாளர் நோக்குல… அத்தனை அழகா ஒரு பாடல் கூட பாடியிருப்பாரு’’ என்றுவிட்டு, நினைவிலிருந்து அப்பாடல் வரிகளையும், அதற்கானப் பொருளையும் மீட்டிச் சொன்னேன்.


” ‘அடும்புகொடி சிதைய வாங்கி, கொடுங்கழிக்

குப்பை வெண்மணற் பக்கம் சேர்த்தி,

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று, புதைத்த
கோட்டுவட் டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்’  

அதாவது, நிறைந்த சூல் கொண்ட பெண் ஆமையானது, அடும்பு கொடி சிதையுமாறு இழுத்து, வளைந்த உப்பங்கழியின் வெண்மையான மணல் மேட்டின் பக்கத்தே அதனைச் சேர்த்து,  யானைக் கொம்பினால் செய்த வட்டுப் போன்ற வடிவம் உடைய புலால் நாறும் முட்டையை ஈன்று, பிற உயிர்கள் எதுவும் அறியாவண்ணம் அம்மணலுள் மறைத்து வைக்கும். அதை பிளந்த வாயினையுடைய ஆண் ஆமை அம்முட்டையிலிருந்து குஞ்சு உயிர்த்தெழுந்து வெளிப்படும் வரை பாதுகாக்கும்.’’

வியப்பு கலந்த நேசத்தோடு அடும்புக் கொடியையும், அதன் இலைகளையும் தொட்டு வருடிப் பார்த்தாள் மதி.

பிறகு அங்கிருந்து மெதுவாக நடந்து சாலையோரம் இருந்த யாழ்தேவி உணவகத்தையும், இலங்கையின் வடமுனையில் இருக்கும் இறுதி ரயில் நிலையமான காங்கேசன்துறை ரயில் நிலையத்தையும் பார்த்துவிட்டு, கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.

மாலை ஆறு மணிக்கு மிக நெருங்கிய ஊடக நண்பர் ஒருவர் வீட்டுக்கு வருவதாக சொல்லியிருந்தார். தன் மனைவி மற்றும் மகனோடு வந்தவர், வெகுநேரம் உரையாடிவிட்டு; பழைய – புதிய கதைகள் பல பேசிவிட்டு, ”நாளை மறுநாள் கண்டிப்பா எங்கள் வீட்டுக்கு வர வேண்டும்’’ என்று அழைத்துவிட்டுப் போனார்.

”சரி” என்று மகிழ்வுடன் இசைந்து வழியனுப்பிவிட்டு வந்து, இரவு உணவு கூட உண்ணாமல் படுத்து அவருடனான கடந்த கால நினைவுகளை அசைபோட்டபடி அப்படியே உறங்கிப்போனேன்.

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=