ஈழம் அன்ன ஈழம் – 10 : யாழ்ப்பாணம் உலா, நல்லூர் கோயில்

பயணங்களில் இரண்டு வகை இருப்பதாக எப்போதும் நினைப்பதுண்டு. ஒன்று, நாம் பயணிக்கும் இடத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களோடு பயணிப்பது. இரண்டாவது, நாமாக அறிந்துகொண்டு பயணிப்பது அல்லது ஒன்றும் அறியாமல் அப்படியே பயணித்துப் போய் அறிவது.

இவை இரண்டில் இடத்துக்கும், சூழலுக்கும் ஏற்ப ஒன்றை தேர்வு செய்வதையே இதுநாள் வரை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதோடு, முடிந்தவரை இரண்டாவதை தேர்ந்தெடுப்பதையே அதிகம் விரும்புபவனாகவும் இருந்து வருகிறேன். அவ்வகையில் அடுத்து வரப்போகும் நாட்களை முழுக்க நாங்கள் மட்டுமே தனித்து பயணித்துப் போய் அறிவது என்று முடுவெடுத்தோம்.

அதன்படி முதல் நாள் (டிச 02), காலை சுமார் ஒன்பது மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி யாழ்ப்பாணம் சென்று பேருந்து நிலையத்தில் இறங்கி, அருகில் இருந்த கடைகளையும், தெருக்களையும் சிறிது நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, அங்கிருந்த பழமையான சந்தைக்குப் போனோம்.

பனை பொருட்கள் தொடங்கி காய்கறிகள் வரை விற்றுக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவருக்குமே பனை மீது அதீத விருப்பம் என்பதால், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு பனை பொருட்களை மட்டுமே தேடித் தேடிப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

பனை மரத்தின் வேர் தொடங்கி நுனி ஓலை வரைக்கும் கொண்டு, ‘பனாட்டு’ முதல் ‘ஒடியல் மாவு’ வரை வெவ்வேறு வகையான உணவுப் பொருட்களையும், பயன்பாட்டுப் பொருட்களையும் செய்திருப்பது கண்டு வியந்துபோனோம். அதோடு, பனைதான் வட இலங்கையின் [அதாவது, தமிழர்கள் வாழும் பகுதியின்] தவிர்க்க முடியாத வாழ்வாதாரம் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

உடனே,

‘இரும் பனை வெண் தோடு மலைந்தோன்…’

‘இரும்பனஞ் செறும்பின் அன்ன பரூஉமயிர்,

சிறுகண், பன்றி வருதிறம் பார்க்கும்…’

‘வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக்

குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு…’

‘கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்

பாளைதந்த பஞ்சிஅம் குறுங்காய்

ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்

என்றெல்லாம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் பனையை பாடிவைத்த சங்கப் புலவர்களையும்… கூந்தற்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை,  உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை, லந்தர்பனை, எண்ணெய்பனை, நாட்டுப்பனை… எனப் பனைக்கு எண்ணிலா பெயர்களிட்ட முப்பாட்டன்களையும் உளத்துள் ஒருதடவை எண்ணிப் பார்த்துவிட்டு, பின் அங்கிருந்து நேராக நடந்துபோய் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இடது பக்கமாகத் திரும்பி, அங்கே வரிசையாக இருந்த கருவாட்டுக் கடைகளையும், அதில் விற்க வைக்கப்பட்டிருந்த விதவிதமான கருவாடுகளையும் பார்த்தோம்.

விரல் அளவுக்கும் சிறிய கருவாடுகள் தொடங்கி, மானிடக் குழவியைவிட பெரிதானக் கருவாடுகள் வரை வைத்திருந்தார்கள். மதியிடம் எப்போதும் கருவாட்டுக் கடையையும், அதன் கவர்ந்திழுக்கும் வாசத்தையும் குறிப்பிட்டு விளையாட்டாக சொல்வதுண்டு. ”சொர்க்கம்… ஆ… சொர்க்கம்…’’

அவளுக்கோ கருவாடும், அதன் வாசமும் சுத்தமாகப் பிடிக்காது (ஆனால், அவ்வப்போது எனக்காக வாங்கிவந்து சமைத்து மட்டும் தருவாள்!). அதனால், ”அப்படிப்பட்ட சொர்க்கமே எனக்கு வேண்டாம்’’ என்று மூக்கை மூடிக்கொண்டு கடந்து போவாள்.

ஆனால், அதிசயமாக யாழ்ப்பாணத்தில் இருந்த இந்தக் கருவாட்டுக் கடைகளைப் பார்த்துவிட்டு, அத்தனை ஆர்வமாகப் போய் ஒரு கடைக்காரரிடம் ஒவ்வொரு கருவாட்டின் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு, ஒளிப்படங்களும் எடுத்துக்கொண்டாள்.

பிறகு அங்கிருந்து நடந்து சற்று தூரத்தில் இருந்த தள்ளுவண்டிக் கடை ஒன்றில் இறால் முதலான மீன்களைக் கொண்டு வடையும், இன்ன பிற உணவுப் பொருட்களையும் செய்வதை பார்த்துவிட்டு ஆர்வத்தோடு போய் அவையெல்லாம் என்னென்ன என்று கேட்டு அறிந்துகொண்டாள்.

அவளது ஆர்வத்தையும் பேச்சையும் வைத்து, ”எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று கேட்டுத் தெரிந்தவர்கள், ஒவ்வொன்றிலும் ஒன்றை எடுத்து சாப்பிடத் தந்தார்கள். மகிழ்வோடு உண்ணவள், அவர்களை வெகுவாகப் பாராட்டினாள். அதிலும் குறிப்பாக, ”முழுப் பூண்டை இப்படி மசாலா மாவுக்குள் முக்கி எண்ணெய்யில் பொறித்து வைப்பதை இதுவரைக்கும் எங்கேயுமே பார்த்ததில்லை; கேட்டதில்லை’’ என்றாள்.

சிறிது நேரம் அவர்களோடு பேசிவிட்டு, அங்கிருந்து நடந்து அருகில் இருக்கும் யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்தை சென்று பார்த்துவிட்டு, வெளியே சாலைக்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரை மிகப் பக்கத்தில் போய் கண்டோம்.

நம்மூரில் பார்த்த திருவள்ளுவர் மாதிரி இல்லாமல் நெற்றி முழுக்க பட்டையிட்டு சைவத் திருவள்ளுவர் ஆக்கியிருந்தார்கள். மனத்துக்குள் சத்தமாக சிரித்துக்கொண்டு மதியிடம் வேடிக்கையாகச் சொன்னேன். ”யாழ்ப்பாணத்துல இருக்க இந்தத் திருவள்ளுவரை பார்த்ததும்… உடனே ஒரு கவிதை சொல்லணும் போல இருக்கு. சொல்லட்டுமா?’’

சட்டென்று பதறிப்போனவள், ”என்னது, கவிதையா? அதுவும், இந்த நடுரோட்டுல வச்சியா?’’ என்று கேட்டாள்.

”ஆமாம்’’ என்றுவிட்டு சிரித்துக்கொண்டே சொன்னேன்.

‘யாழ்ப்பாண வீதியில் அமர்ந்திருந்தார்

ஆதிகுடி திருவள்ளுவர்.

தாடியை விட

பெரிதாக இருந்தது

அவர் நெற்றியிலிட்ட பட்டை.’

கேட்டுவிட்டு அவளும் சிரிக்க, நாங்கள் சிரிப்பதை பார்த்துவிட்டு ஐ’யும் சிரித்தான்.

‘திருவள்ளுவர் காதில் விழுந்திருந்தால் நிச்சயம் அவரும் சிரித்திருப்பார்’ என்று நினைத்துக்கொண்டு, அங்கிருந்து இடது பக்கமாகப் பிரியும் சாலையில் நடந்தபடி வழிநெடுக இருந்த பனை தொடங்கி இலந்தை வரையான தாவரங்களை ஐ’க்கு காட்டி அவற்றின் பெயர்களைச் சொன்னோம்.

திடீரென்று ஓரிடத்தில் நடைபாதையை ஒட்டி ‘மூக்குச்சளிப்பழம்’ என்று எங்களூரில் சொல்லும் கொடியும், அதில் ஆங்காங்கே மஞ்சள் நிறமாகப் பழங்கள் பழுத்திருப்பதையும் கண்டு உற்சாகமாகி, அவற்றில் நன்கு பழுத்திருந்த ஐந்து பழங்களைப் பறித்து இரண்டை மதிக்கும், ஒன்றை ஐ’க்கும் சாப்பிடத் தந்துவிட்டு, மற்ற இரண்டினை உண்டேன். அப்படியே எம்மூர் பழத்திற்கு இருக்கும் அதே சுவை.

சாலையின் மறுபுறத்தில் இருந்த பனை மரத்தடியில் காகம் ஒன்று உட்கார்ந்து உரத்துக் கரைவதை [; அல்லது அழைப்பதை] பார்த்துவிட்டு [ ; கேட்டுவிட்டு], ”காக்கா… காக்கா…’’ என்று காட்டினான் ஐ.

”என்னடா, அந்தக் காக்கா கிட்ட போகணுமா?’’ என்று கேட்டுவிட்டு, தலையாட்டியதும் சாலையைக் கடந்து அம்மரத்தருகில் வந்தோம்.

அதன் பக்கத்திலேயே ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமர் நினைவாலயம்’ இருப்பதை கண்டுவிட்டு, அதன் அருகில் சென்று நின்று சில நொடிகள் கண்மூடி பிரார்த்தித்துவிட்டு, அதுகுறித்து அறிந்த வரலாற்றுத் தகவல்களை சொன்னேன்.

பிறகு அவை சரிவரப் பராமரிக்கப்படாமல் கிடப்பதை குறிப்பிட்டு, ”உலகத்துலயே தமிழர்கள் மட்டும்தான் இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சரிவர பராமரிக்காம இருக்காங்களோன்னு தோணுது’’ என்றேன்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் வெறுமே தலையசைத்தாள் மதி.

அங்கிருந்த நடைபாதை தேநீர்க் கடை ஒன்றில் போய் உட்கார்ந்து, ஒரு தேநீர் வாங்கி இருவரும் பகிர்ந்து குடித்தோம்.

ஐ’க்கு கொண்டுபோயிருந்த வாழைப்பழத்தை உரித்துத் தந்தபடி பின்பக்கமாக நூலக வளாகத்துக்குள் நுழைந்து சுற்றிக்கொண்டு, முன்பக்க வாயில் வழியாக வெளியில் வந்து எதிரில் புயலால் பாதிக்கப்பட்டு இன்னமும் நீர் வடியாமல் பூட்டியிருந்த டாக்டர் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவையும், மத்தியக் கல்லூரி மைதானத்தையும் பார்த்துவிட்டு, அதனையொட்டி இருந்த நீதிமன்றம், கல்லூரி மற்றும் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தையும் போகிற போக்கில் கண்டுவிட்டு, மரங்கள் நிழல் சிந்திய அழகான சாலை வழியாக நடந்து மணிக்கூண்டு அருகில் வந்து நின்று, அதன் உச்சியிலிருந்த கடிகையைக் காட்டி ஐ’யிடம் கேட்டேன். ”ஐ பப்பு… மணி என்ன ஆச்சி, பாத்து சொல்லு?’’

சிறிதும் யோசிக்காமல் கடிகையை நோக்கி, ”பத்து’’ என்றான்.

அவனிடம் எப்போது மணி கேட்டாலும் தவறாமல் இதைதான் சொல்வான். அதிலும் இத்தடவை வெளிநாட்டுக் கடிகையை பார்த்து முதல் தடவை சொன்னதால் நானும் மதியும் கூடுதலாகப் புன்னகைத்துக்கொண்டோம்.

பிறகு அங்கிருந்த காவல் நிலையத்தைக் கடந்து, வணிக வளாகம் தாண்டி மருத்துவமனையை ஒட்டியிருந்த சாலை சந்திப்பில் இடது பக்கமாகத் திரும்பி, சற்று தூரத்தில் தெரிந்த நண்பரின் மனைவி பணிபுரியும் அலுவலகத்துக்குப் போய் இன்ப அதிர்ச்சியாக அவருக்கு ஐ கையால் ஓர் இனிப்பு கொடுத்து ‘ஹாய்’ சொல்லிவிட்டு, பேருந்து நிலையம் வந்து முதல் தடவையாக அரசுப் பேருந்தேறி வீட்டுக்கு வந்தோம்.

இரண்டாவது நாள் (டிச 03), தீபத்திருநாள் என்பதால் மதியம் வரை வீட்டில் இருந்துவிட்டு கிளம்பி, யாழ்ப்பாணம் வந்து அங்கிருந்து மற்றொரு பேருந்து மாறி நல்லூர் கந்தசாமி கோயில் தாண்டி இருக்கும் யாழ்ப்பாண ராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னரான இரண்டாம் சங்கிலியன் சிலையையும், அதையடுத்து இருந்த சிதிலமடைந்த அவன் கோட்டையையும் [ கூடவே, அதன் அருகில் சரிவரப் பராமரிக்கப்படாமல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய நிலையிலிருந்த யாருமற்ற சட்டைநாதர் கோயிலையும்] முதலில் பார்த்துவிட்டு,

அங்கிருந்து வந்த வழியாகவே நடந்து சரியாக ஐந்து மணிக்கு கந்தசாமி கோயிலுக்குள் நுழைந்தோம்.

எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று நாட்கள் தீபம் கொண்டாடுவோம். அதிலும் முதல் இரண்டு நாட்கள் சிறப்பானது. அதிலும் முதல் நாள் என்பது அதிசிறப்பானது. ஆனால், இலங்கையில் முதல் நாள் வீட்டில் தீபம் ஏற்றாமல், ”இன்று கோயில் தீபம். கோயிலில் விளக்கு ஏற்றுவார்கள். நாளைதான் வீட்டு தீபம். அப்போதுதான் வீட்டில் ஏற்றுவோம்’’ என்றார்கள்.

நினைத்தைவிட கோயிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதோடு, ஆறு மணிக்கு கோயில் முன்பாக இருக்கும் மைதானத்தில் சொக்கப்பானை எரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்துகொண்டிருந்தார்கள்.

முதலில் கோயிலுக்குள் சென்று நேராக கருவறையில் இருக்கும் வேலினை வணங்கிவிட்டு, அதன் அருகில் தனிச்சன்னதியாக இருந்த கார்த்திகேயனையும், இன்ன பிற தெய்வங்களையும் வணங்கியபடி ஒரு சுற்று சுற்றி வந்தோம்.

மற்றக் கோயில்கள் மாதிரி இல்லாமல் ஓர் அரண்மணை போல இருப்பதாக மதியிடம் சொன்னேன். அதற்கேற்ப விதவிதமாக வர்ணங்கள் பூசி, ஓவியங்கள் தீட்டி, ஆங்காங்கே துணியில் திரைகள் தொங்கவிட்டு, மின் விளக்குகள் பொருத்தியிருந்தார்கள்.

மேல தளம் முழங்க, தங்க மயில் வாகனத்தில் பச்சை மாலை அணிவித்து வள்ளி தெய்வானையோடு முருகனை தூக்கி வந்தார்கள். மயிலும், முருகன் சிலையும் அத்தனை அழகாக இருப்பதை சுட்டிக்காட்டி மதியிடம் சொன்னேன். ”அப்படியே நம்ம ஐ மாதிரி முருகன் அழகா இருக்காருல்ல…’’

சட்டென்று முகம் மலர்ந்தவள், அதனை ஏற்கும் விதமாக ஒருதடவை கூர்ந்து பார்த்துவிட்டு புன்னகையால் பதிலளித்தாள்.

நம்மூர் பெருங்கோயில்கள் போன்று திட்டிவாசல் வழியாக இல்லாமல் நேராக ராஜகோபுரம் வழியாக முருகனை வெளியில் தூக்கி வந்தவர்கள், சொக்கப்பானை எரித்ததும் கோயில் சுற்றியுள்ள மாட வீதியில் அழைத்துப் போனார்கள்.

சிறிது நேரம் அங்கேயே நின்றுவிட்டு, மறுபடியும் கோயிலுக்குள் சென்று ஐ’யை அங்கிருந்த மணலில் குழந்தைகளோடு விளையாட விட்டுவிட்டு மதி பார்த்துக்கொண்டாள். நான் மட்டும் தனியாகப் போய் மொத்த கோயிலையும் நன்றாக ஒருதடவை பார்த்துவிட்டு வந்தேன்.

அதிலும் கோயில் பிரதானக் கருவறையில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் வைத்திருந்தது, 2004 ஆம் ஆண்டு சுனாமியில் வெளிப்பட்ட சங்க கால முருகன் கோயிலான மாமல்லபுரம் – சாளுவன்குப்பம் கோயிலை நினைவுபடுத்தியது.

‘எட்டு மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கடைசிப் பேருந்து. அதை விட்டால் பேருந்து கிடையாது’ என்று முன்தினம் நண்பர் சொன்னது சட்டென்று நினைவுக்கு வர, உடனே மதியையும், ஐ’யையும் கூட்டிக்கொண்டு பேருந்து நிலையம் வந்து, வெளியில் நின்றிருந்த கடைசிப் பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்தோம்.

வாசலில் நின்றிருந்த நண்பரின் மனைவி, ”எங்கே கடைசிப் பேருந்த விட்டுட்டிங்களோன்னு பயந்துட்டு இருந்தேன். நல்லவேளை வந்துட்டீங்க’’ என்று சொன்னார்.

முதல் வேலையாக வீட்டுக்குள் போய் நகர்பேசி எடுத்து இணையம் திறந்து, திருவண்ணாமலை மலைமீது தீபம் ஏற்றின காட்சியை பார்த்தேன். எப்போதும் போல உள்ளமும் உடலும் ஒருசேர சிலிர்த்தது.

திருவண்ணாமலையில் பிறந்திட்டவனுக்கு தீபம் என்பது வெறும் ஒரு நாளல்ல என்பதை மேலுமொரு தடவை உணர்ந்தவனாக எழுந்து, சுமார் 350 கிலோ மீட்டாருக்கு அப்பால் கடல் தாண்டி ஊரிலிருக்கும் ஐயாவையும், அம்மாவையும் நினைத்துக்கொண்டு வெளியில் வந்து வாசலில் நின்றபடி வானில் ஒளிர்ந்த வெள்ளுவா என்னும் நிறைமதியைப் பார்த்தேன்.

உடனே மனத்துக்குள் இப்படித் தோன்றியது :

‘இதோ, இத்திங்களைத்தான் ஊரிலிருக்கும் ஐயாவும் அம்மாவும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இங்கே நாங்களும் அதையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனும்போது, இந்த தூரம் மிக மிக பக்கத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.’  

பின்னாலேயே உதடுகளும் அதனை ஆமோதிக்கும் விதமாகச் சொன்னது. ”ஆம், ஆம்!’’

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=