ஈழம் அன்ன ஈழம் – 9 : டித்வா புயல், கொக்குவில்

முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை செல்லும் வழியில் ஆரம்பித்த மழை இன்னும் விடவில்லை. அதாவது, நவம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் தொடங்கின மழை 27, 28, 29 என கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து எங்கும் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு பெருமழையாகக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது. இதோ, இன்று (நவ 30) மதியத்திற்குப் பிறகுதான் ஓரளவுக்கு நின்று ஞாயிறு தெரியத் தொடங்கியது.

நாங்கள் இருந்த பகுதி சற்று மேடானது என்பதால் நீர் நிற்காமல் உடனுக்குடன் ஓடிப்போய் கடலில் கலந்து பெரிய பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால், இலங்கையின் மேலதிகப் பகுதிகள் இந்த டித்வா புயலால் பெருத்த பாதிப்புக்கு உள்ளானதாக செய்தி மூலம் அறிய முடிந்தது. அதிலும் குறிப்பாக, மத்தியப் பகுதி. அதாவது, நாங்கள் செல்வதாக இருந்த சிகிரியா மற்றும் அதனையொட்டின இடங்கள்.

பதுளை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் இறந்துபோனதாகவும், இன்னும் பலரை காணாமல் தேடிவருவதாகவும், திருகோணமலையிலிருந்து நாங்கள் வந்த வழியில் இருந்த சாலைகள் பலவும் துண்டிக்கப்பட்டதாகவும், முல்லைத்தீவில் பார்த்துவிட்ட வந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் முதலான இடங்கள் பாதிக்கும் மேல் மூழ்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து பலர் அழைத்தும், குறுந்தகவல் அனுப்பியும் நலம் விசாரித்தது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் வந்த நாட்டில் இத்தனைப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது நினைத்து வருத்தமாகவும் இருந்தது.

வீட்டைவிட்டு எங்கும் போக முடியாததால் நிறைய வாசிக்க முடிந்தது. கொண்டுபோயிருந்த அ.மு.வின் நாடற்றவனுக்குப் பிறகு, எஸ்.ராமகிருஷ்ணனின் வாக்கியங்களின் சாலையும், பிறகு நண்பரின் வீட்டில் இருந்த நூல்களில் நா.முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவனும், கொமடோர் அஜித் போயகொட சொல்ல, சுனிலா கலப்பதி கேட்டு எழுதி, தேவா தமிழில் மொழிபெயர்த்து, வடலி வெளியிட்ட நீண்ட காத்திருப்பும் வாசித்தேன்.

இவை நான்கில் நீண்ட காத்திருப்பு மிக முக்கியமான நூல். இலங்கை கடற்படை அதிகாரியாக இருந்த அஜித் போயகொடவை, 1994-இல் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் கைதியாகப் பிடித்து எட்டு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்து, பிறகு 2002-இல் விடுதலை செய்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எங்கெல்லாம் வைத்திருந்தது, எப்படியெல்லாம் நடத்தியது என்பது தொடங்கி, பல அரிய செய்திகளை முதல் தடவையாகப் பதிவு செய்திருக்கிறது இந்நூல். மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போர் காலத்தை ஒரு சிங்களக் கைதியின் கோணத்தில் விரிவாகவும்; நேர்மையாகவும் விவரிக்கிறது.

இப்படி வாசிப்பு தவிர்த்து குழந்தைகளோடு அவ்வப்போது விளையாடுவதையும், மதியோடும் நண்பரோடும் பேசுவதையும், நாளின் காலை மாலை இரு வேளையும் வீட்டில் உட்கார முடியாமல் அல்லது பிடிக்காமல் மழையில் குடை பிடித்தபடி அருகில் இருக்கும் ரயில் தண்டவாளம் வரையிலோ, சாலை வரைக்குமோ நடந்துபோய் வருவதையும் வாடிக்கையாக வைத்திருந்தேன்.

நடுநடுவில் வீட்டின் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட தாழ்வாரத்திலும், முன்பக்க சிறிய கார் நிறுத்தும் இடத்திலும் நின்றும், உட்கார்ந்தும் மழையையும், அதில் தொடர்ந்து நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த தாவரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். தவிர, மாலை நேரங்களில் நண்பரின் பத்து வயது மகளோடு இணைந்து விளையாட்டாக கதை, கவிதை, பாடல்கள் எழுதியும் வந்தேன்.

‘எப்போதுதான் இந்த மழை விடுமோ?’ என்று உச்சமாக நினைத்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விட்டது. அதனால், அருகில் எங்காவது சென்று வரலாம் என்று மதியையும், ஐ’யையும் கூட்டிக்கொண்டு தெல்லிப்பழை துர்கையம்மன் கோயிலுக்குப் போனோம்.

வீட்டிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சாலையொட்டி இருந்த பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றால், அழகான; விசாலமான இடத்தில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட அண்மைய கால கோயில். நாங்கள் சென்றபோது பூஜை நடந்து கொண்டிருந்ததால் மணிகோபுரத்தில் இருந்த பெரிய மணி ஒலித்துக்கொண்டிருந்தது.

மணியும், அதன் ஒலிப்புச் சத்தமும் ஐ’க்கு பிடித்தமானதால் மிகுந்த உற்சாகமாகி கை தட்டி, ”மணி… மணி’’ என்றிட்டான்.

உள்ளே போய் துர்கையையும், இன்ன பிற பரிவார தெய்வங்களையும் வணங்கிவிட்டு, வெளியே வந்து கோயிலை சுற்றி வந்தோம். நூலகம், பெண்கள் விடுதி, கடைகள், குளம்… என்று அந்த இடமே வித்தியாசமாக இருந்தன.

ஓரிடத்தில் இரண்டு மயில்கள் வளர்ப்பதை பார்த்துவிட்டு, ஐ’யை கூட்டிப் போய் அருகில் காட்டினோம். ஆசையோடு, ”மயிலு… மயிலு…’’ என்றிட்டான்.

பிறகு கதைகள் பேசியவாறு சிறிது நேரம் அங்கேயே இருந்துவிட்டு, மெதுவாக நடந்து வழிநெடுகிலும் இருந்த வீடுகளையும், மரங்களையும், ஆங்காங்கே மழை நீர் கொஞ்சமாக நின்றிருப்பதையும் பார்த்துக்கொண்டு, நடுவில் தூறிய மழைக்கு குடை பிடித்தபடி வீட்டுக்கு வந்தோம்.

குளிர்மைக்கு இதமாக தேநீர் போட்டுத் தந்தார்கள். சுடச்சுட ரசித்து ருசித்து பருகிவிட்டு, வெகுநேரம் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டு, நடுவில் இரவு உணவும் உண்டுவிட்டு, சற்று தாமதமாகவே போய் படுத்து உறங்கி மறுநாள் (டிச 1)  காலையில் சீக்கிரமாகவே எழுந்தோம்.

சிறிதுநேரம் வழக்கம் போல வாசித்துவிட்டு, முதல் வேலையாக துணியெல்லாம் துவைத்து பின்பக்கத் தோட்டத்தில் இருந்த கொடிகளில் காயப் போட்டுக் குளித்துக் கிளம்பினோம்.

முகநூலில் தமிழ்நாட்டிலிருந்து அந்திமழை மின்னிதழ் நிருபர் ஒருவர், தொடர்பு எண் கேட்டு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். கொடுத்ததும் உடனே அழைத்தவர், நலம் விசாரித்துவிட்டு, இலங்கை புயல் அனுபவம் குறித்து என்னை ஒரு பேட்டி எடுத்தார். சில ஒளிப்படங்கள் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.

காலை உணவுக்குப் பிறகு சரியாக பத்தரை மணி வாக்கில் புறப்பட்டு, அங்கிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் யாழ்ப்பாண நகருக்கு முன்பாக இருக்கும் கொக்குவில்லுக்குப் போனோம்.

நான் பெரிதாக மதிக்கும்; எனது ஆசிரியர்களில் ஒருவராக நினைக்கும் மூத்த எழுத்தாளுமை அ.முத்துலிங்கம் பிறந்து வளர்ந்த ஊர் இது. அவரது மிக முக்கியமான சிறு வயதுக் காலங்கள், பள்ளிப் படிப்பு யாவும் அரும்பின இடம்.

இங்கே அவர் இல்லையென்றாலும், அவரது நினைவை இசைக்கும் இடத்துக்கு அத்தனை ஆசையோடு சில மணித் துளிகளாவது இருந்துவிட்டு வருவதற்காகச் சென்றோம்.

மொத்த இலங்கைக்கும் எப்படி என்று தெரியவில்லை. யாழ்ப்பாணப் பகுதியின் பொதுப் போக்குவரத்து என்பது அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதனால், நம்மூர் ஷேர் ஆட்டோக்கள் போன்று தனியார் டிராவல்ஸ் வண்டிகள்தான் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தன. அதாவது, பத்து டிராவல்ஸ்க்கு ஓர் அரசுப் பேருந்து விகிதத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தன.

நாங்கள் முதல் தடவை தனியாகப் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதால் முதலில் வந்த யாழ்ப்பாணம் போகும் டிராவல்ஸ் வண்டியில் ஏறினோம். குழந்தை கையில் வைத்திருப்பதை பார்த்த பயணச் சீட்டு வசூலிப்பவர், ஏறியதும் உள்ளே அமர்ந்திருப்பவர்களிடம் எங்களுக்கு இடம் தரச் சொன்னார். அதன்படியே எழுந்து இடமும் கொடுத்தார்கள். கட்டணம் ஓர் ஆளுக்கு 80 ரூபாய் என்றார், கொடுத்தோம்.

கொக்குவில்லில் இறங்கியதும் முதலில் அ.மு. பள்ளிப் படிப்பு முடித்த ‘கொக்குவில் – இந்துக் கல்லூரி’க்குப் போனோம். பள்ளி மூடியிருந்ததால் அதன் முன்பாக சிறிது நேரம் நின்றுவிட்டு, அருகில் மூடி இருக்கும் கிருபாகர சிவசுப்பிரமணியர் கோயிலை சுற்றிக்கொண்டு, சாலை கடந்ததும் சற்று தூரத்தில் இருந்த மற்றொரு கோயிலான மஞ்சவனப்பதி முருகன் கோயிக்குப் போனோம்.

அழகிய நுழைவு வாயிலும், அதனைத் தொடர்ந்து இரு பக்கமும் மரங்கள் சூழ சிறிது தூரம் நடந்தால் இருக்கும் கோயிலும் மிக ரம்மியமாக இருந்தன. நினைத்தது போலவே அந்தக் கோயிலும் மூடிதான் இருந்தது.

இலங்கையில் மிகச் சில கோயில்கள் மட்டும்தான் சரியான நேரத்துக்குத் திறந்து மூடப்படுகின்றன. சில திறப்பதே இல்லை என்றும், சிலவற்றை எப்போதாவது திறக்கின்றனர் என்றும், பெரும்பாலான கோயில்களுக்கு மக்களே வருவதில்லை என்றும், சாமி சிலையை சுமக்கக் கூட நால்வர் இல்லாத நிலைதான் தொடர்வதாகவும் சொல்லக் கேட்டது வருத்தமாக இருந்தது.

அ.மு. தான் பிறந்த கொக்குவில் பற்றி எழுதும்போது இப்படி ஆரம்பித்திருப்பார் :

‘பல வருடங்களுக்கு முன்னர் ஒரு ஞாயிறு அதிகாலையில் நான் பிறந்தேன். ஒரு முழுநாள் அம்மாவை வலியில் துடிக்கவைத்து, கால்களை முதலில் வெளியே தள்ளி, இப்பூமியில் உதித்தேன். ஆனால் மூச்சு விடமுடியாமல் கிடந்தேன். மருத்துவச்சி என்னைத் தலைகீழாகத் தூக்கிக் குலுக்கி, நெற்றியிலே பழுக்கக் காய்ச்சிய ஊசியால் சூடு வைத்தபோது என்னிடமிருந்து முதல் அழுகை வெளிப்பட்டது. ஆண்பிள்ளை பிறந்தால் எங்கள் ஊரில் உலக்கையைத் தூக்கிக் கூரைக்கு மேலால் எறிவது வழக்கம். ஐயா அப்படியே செய்துவிட்டு என்னை இரண்டு கைகளாலும் தூக்கி அவர் தலைக்கு மேலே பிடித்தார். ஆண்பிள்ளை என்ற பிரகடனம் அது. என்னுடைய முதல் காட்சி புளியமரம். அதற்கும்மேலே ஆகாயம். கீழே கொக்குவில். அதுதான் நான் பிறந்த ஊர்.’

மேலும் அப்பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கும் கொக்குவில்லுக்கு அடையாளமாக இருக்கும் கோயில்களில் ஒன்றின் முன்பாக அதுவும், அவர் சிறுவனாக இருந்தபோது காசை சில்லறையாக மாற்றி பொக்கட்டுக்குள் போட்டு கிலுங் கிலுங் எனச் சத்தம் வர மகிழ்ச்சியோடு சுற்றித்திரிந்த இடத்தில் நின்றிருப்பதே பெரும் மகிழ்வை; சிலிர்ப்பை உண்டாக்கின.

தமிழில் கொக்கு என்பதற்கு கரும்பு என்றொரு பொருள் உண்டு (தவிர, மா மரம், செந்நாய், குதிரை போன்ற பொருள்களும் உண்டு). இதனால் கொக்குவில் என்பதற்கு கரும்பு வில் என்று பொருள் கொள்ளலாம். அதாவது, காமன்; மன்மதன் வைத்திருக்கும் வில். அதேபோல, வில் என்பதற்கு சங்க காலத்தில் குளம் என்றொரு பொருள் உண்டு. இதை வைத்து கொக்குவில் என்பதற்கு கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் கொள்ளலாம்.

[கொக்குவில் போன்று இலங்கையில் பல ஊர்களுக்கு வில் பின்னொட்டாக இருப்பதை பார்க்கலாம். கோண்டாவில், இணுவில், உடுவில், மட்டுவில், மந்துவில், மிருசுவில், பொத்துவில், ஆனைவில்… மேலும், கொக்குவில் பெயர் காரணம் குறித்து அ.மு. தன் அம்மா தான் சிறுவனாக இருந்தபோது சொன்ன சுவாரசியமான கதைகளில் ஒன்றையும் பகிர்ந்திருப்பார். ஆர்வம் உள்ளோர் தேடிப் படிக்கலாம்.]

எனக்கு மட்டுமல்லாமல் மதிக்கும் அ.மு.வை பிடிக்கும் என்பதால், இருவருமே மிகுந்த உற்சாகத்துடன் போய் கோயில் முன்பாக இருந்த சிறிய படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு, அங்கே இருக்கும் மண் பரப்பில் ஐ’யை விளையாட சொல்லிவிட்டு, அவர் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் விரிவாகப் பேசிக்கொண்டிருந்தோம். அதிலும் குறிப்பாக, அவரது படைப்புகளில் எனக்கு மிகப் பிடித்த ‘வியத்தலும் இலமே’ நேர்காணல் தொகுப்பு குறித்து ஒரு பெரிய சொற்பொழிவே ஆற்றியிருப்பேன்.

அவ்வழியாகப் போனவர்களில் சிலர், ‘யார் இவர்கள்? எதற்கு இங்கே வந்து மூடிய கோயில் முன்பாக உட்கார்ந்து இவ்வளவு நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்’ என்பது போல பார்த்துவிட்டுப் போனார்கள்.

நாங்கள் எதையும் பொருட்படுத்தாமல், எங்களுக்குப் பிடித்த ஓர் எழுத்தாளர் பிறந்த மண்ணில் மானசீகமாக அவரை மட்டுமே நினைத்து; அவர் குறித்து மட்டுமே பேசிக்கொண்டிருந்துவிட்டு, இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு கிளம்பி வீட்டுக்கு வந்தோம்.

வாசலில் நின்று யாரிடமோ நகர்பேசியில் பேசிக்கொண்டிருந்த நண்பர் கேட்டார். ”எங்கே போயிருந்தீங்க?’’

சொன்னோம்.

அங்கே பார்க்க ஒன்றும் இல்லாதது போல முகபாவம் காட்டியவர், ”அங்கே என்ன இருக்கு, பார்க்க?’’ என்று கேட்டார்.

அதையும் சொன்னோம்.

விசித்திரமாகப் பார்த்தவர், ”சரி, போய் சாப்பிடுங்க. நேரம் ஆச்சு’’ என்றுவிட்டு, மறுபடியும் நகர்பேசியில் மூழ்கிப்போனார்.

இது எதிர்பார்த்ததுதான் என்பதால், ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துக்கொண்டு போய் நிறைவாக சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் அறையில் படுத்து ஓய்வெடுத்தோம்.

அதற்குள் அந்திமழை நேர்காணல் வெளியாகி இருப்பதாக அப்பத்திரிகையாள நண்பர் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ஒருதடவை சுட்டியைத் திறந்து படித்துப் பார்த்து, நன்றாக வந்திருப்பதாகத் தெரிவித்துவிட்டு, நான் மட்டும் தனியாகக் கிளம்பி நீண்ட தூரம் நடந்து ரயில் தண்டவாளம் அடுத்துள்ள கிராமங்களுக்கு சென்றுவிட்டு வந்தேன்.

வரும்போது தெரு முனையில் இருந்த ஆவாரம் செடி அருகில், இருளில் விட்டுவிட்டு ஒளிர்ந்துகொண்டிருந்த மின்மினிப் பூச்சிகளில் ஒன்றை, ஐ பிறந்த இந்த டிசம்பர் மாதத்தை வரவேற்கும் விதமாக பிடித்து வந்து, அவன் கையில் பரிசாகக் கொடுத்தேன்.

கண்கள் அகல விரியப் பார்த்தவனுக்கு, அது எத்தனை உன்னதப் பரிசு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே தோன்றியது. 

*

பின்னிணைப்பு – 1 : அந்திமழை மின்னிதழில் வெளியானப் பேட்டி : https://www.andhimazhai.com/news/news-article/the-dvitva-cyclone-that-ravaged-sri-lanka-a-first-hand-experience-of-a-tamil-nadu-writer

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=