ஈழம் அன்ன ஈழம் – 7 : நந்திக்கடல், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்

அதிகாலை (நவ 26) சீக்கிரமாக எழுந்து குளித்துக் கிளம்பி, மல்லாகத்தில் இருக்கும் பழம்பதி பிள்ளையாரை போய் வணங்கிவிட்டு முல்லைத்தீவு நோக்கிப் புறப்பட்டோம்.
முதலில் யாழ்ப்பாணம் சென்று, அங்கிருந்து அழகான இயற்கை எழில் சூழ்ந்த சாலை வழியாக கிளிநொச்சி போய், அங்குள்ள பிரபல அம்மாச்சி உணவகத்தில் இட்லியும், இடியாப்பமும், வடையும், குண்டு தோசை என்று சொல்லக்கூடிய பனியாரமும் பகிர்ந்து உண்டுவிட்டு, வழிநெடுகிலும் இருந்த போர் நிகழ்ந்த இடங்களையும், சிறு சிறு ஊர்களையும், விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வன்னிப் பகுதி என்று சொல்லக்கூடிய அடர்ந்த காடுகளையும், இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் புதுநகர் குடியிருப்பை ஒட்டிய வனப் பகுதியையும் பார்த்துக்கொண்டு, ஈழ விடுதலையை நோக்காகக் கொண்டு உருவான விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும், அவர்களது செயல்பாடுகள் குறித்தும் விரிவாகப் பேசிக்கொண்டு, முற்பகல் பதினொன்றரைக்கு முல்லைத்தீவின் நந்திக்கடல் பகுதியை அடைந்தோம்.
அங்கிருந்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் இலங்கையின் புகழ்பெற்ற பழமையான சக்தி தலம், பிரசித்தி பெற்றது என்றார்கள். நாங்கள் பார்க்கும் முதல் கண்ணகி கோயில் என்னும் ஆர்வத்தோடு கடலை ஒட்டி அண்மையில் கட்டினது போல இருந்த கோயிலுக்குள் போனோம்.
நினைத்தது போல பழமையான கோயிலுக்கான எந்தவித அடையாளமும் இல்லாமல், பெரும்பாலான பகுதிகளை அப்போதுதான் கட்டி முடித்திருந்தார்கள். சில இடங்களில் இன்னமும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
உடன் வந்த நண்பர், ”இந்தியப் பிரதமர் மோடி இந்தக் கோயில் கட்டுமானத்துக்கு நூறு கோடி தந்ததாக சொல்கிறார்கள்’’ என்றார்.
”அப்படியா?’’ என்று தலையாட்டிக் கேட்டுக்கொண்டு, கருவறை திரையிட்டு மூடியிருந்ததால் உள் பிரகாரத்தை சுற்றப் போனோம்.
வரும் வழியில் உறங்கிப்போன ஐயை தோளில் தூக்கிக்கொண்டு வந்த மதி, அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்தாள்.
ஆலய வளாகத்தின் ஓரிடத்தில் சிறிதாக ஒரு கோயில் இருந்தது. உள்ளே அழகான கண்ணகி சிலை இருப்பதை பார்த்துவிட்டு நண்பரிடம் கேட்டேன். ”இதுதான் முன்னாடி இருந்த கோயிலா?’’
”ஆமாம்’’ என்றவர், ”இந்தக் கோயிலோட விளக்கு… இங்குள்ள கடல் நீரில் எரியும். இது மிக சிறப்பு வாய்ந்தது’’ என்றார்.
எதுவும் சொல்லாமல் வெறுமே கேட்டுக்கொண்டு அங்கிருந்த கண்ணகியை வணங்கிவிட்டு, மெதுவாக நடந்து ஆலயத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு வந்தோம்.
சற்று முன் கண்ட சிறு கோயிலைத் தவிர மொத்தக் கோயிலுமே மிக செயற்கையாக இருந்தன. ஒரு பெரிய கட்டடத்துக்குள் வந்த உணர்வு மட்டுமே எழ, யாரிடமும் எதுவும் சொல்லாமல் அதோடு, அங்கே எதையும் பார்க்கப் பிடிக்காமல் கருவறை திறந்ததும் உள்ளிருந்த கண்ணகியை ஏதோ பார்க்க வேண்டும் என்பதற்காகப் பார்த்துவிட்டு, தனியாக வெளியே வந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நந்திக்கடல் அருகில் போய் நின்றேன்.
மனத்துக்குள் போர் குறித்த கலவையான காட்சிகள் வரிசைகட்டி எழுந்தன. அங்கே இருந்த சிறு அரச மரத்தையும், கடல் நீரை ஒட்டி பாதுகாப்புக்காக கம்புகள் வரிசையாக நட்டு அதில் முள் கம்பி கட்டப்பட்டிருந்த வேலியையும், அதைத் தாண்டி சிறிது தூரத்துக்கு நீருக்குள் முளைத்து அலையின் அலைவுக்கு ஏற்ப ஆடிக்கொண்டிருந்த கோரைகளையும், கண்ணுக்கெட்டின தொலைவு வரைக்கும் தெரிந்த கடல் நீரையும், மறு கரையில் தெரிந்த நிலப்பரப்பையும் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, நீரில் மெதுவாக கால் வைத்தேன். அத்தனைக் குளிர்ச்சியாக இருந்தது.
இவ்வளவு நேரமாக இல்லாமல் இருந்த மழை சட்டென்று தூறத் தொடங்கியது. வேகமாக ஓடிப்போய் கோயிலுக்குள் நுழைவதற்கு பதிலாக சற்று தள்ளி எதிர்ப்புறம் கடலை ஒட்டி இன்னொரு பக்கமாக தனித்திருந்த மண்டபத்துக்குப் போனேன்.
அது கோயிலுக்கு வருவோர் பொங்கல் வைப்பதற்காக வரிசையாக அடுப்புகள் வைத்து கட்டப்பட்டிருந்த மண்டபம். உள்ளே அடுப்பெரிக்கத் தேவையான விறகுகளும், பாத்திரங்களும் இருப்பதை பார்த்துவிட்டு, அங்கிருந்த முதுமை நெருங்கிய வெண் தாடிக்காரரிடம் கேட்டேன். ”இது பொங்கல் வைக்கும் இடமா, ஐயா? ஒருத்தரக் கூட காணோம்.’’
தனிமையில் இருந்தவருக்கு பேச ஆள் கிடைத்த உற்சாகத்தில் சொன்னார். ”ஆமா, தம்பி. இப்போ மழையினால யாரும் வரல.’’
”இந்தக் கோயில் எவ்வளவு வருசமா இருக்கு, ஐயா?’’
”எனக்குத் தெரிந்து நான்கைந்து தலைமுறையா இருக்கு. அதுக்கு முன்னாடி இருந்தே, ஒரு ஆயிரம் வருசம் இருக்கும் நினைக்கிறேன், இருக்கிறதா சொல்வாங்க.”
”இந்தக் கோயிலோட வரலாறு சொல்லுங்க, ஐயா”
”சொல்கிறேன்” என்று வேகமாக தலையாட்டிவிட்டு சொன்னார். ”இது மக்கள் நடமாட்டம் அவ்வளவா இல்லாம ஆடு மாடு மேய்க்கிற இடமா இருந்தப்போ… ஒருநாள் இங்கே வேப்ப மரத்தடியில ஒரு பெண் சிலை இருந்திருக்கு. கூடவே, ஒரு அழுகை சத்தமும் கேட்டிருக்கு. மாடு மேய்க்க வந்தவங்க பார்த்துட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம பயந்துபோய் ஓடியிருக்காங்க. அன்னைக்கு அவங்கக் கனவுல வந்த கண்ணகி அம்மன், மறுநாள் வந்து தன் முன்னாடி ஒரு அகல் வச்சி… இந்த நந்திக்கடல் நீரால விளக்கு ஏற்றி வணங்க சொல்லியிருக்கா. அதோடு, தான் அவங்களுக்கு எப்போவும் துணையா இருந்து காப்பாற்றுவேன்னும் வாக்கு சொல்லியிருக்கா. அவங்களும் அதுபடியே செய்ய, விளக்கு நல்லா சுடர் விட்டு எறிந்திருக்கு. அதிலிருந்து இங்கே சுற்றி இருக்க ஊர்க்காரங்க எல்லோரும் வந்து வணங்க ஆரம்பித்திருக்காங்க. அது அப்படியே கொஞ்ச கொஞ்சமா பரவி… இப்போ எங்கெங்கிருந்தோ வந்து வணங்கிட்டுப் போறாங்க. இதுதான் தம்பி, எனக்குத் தெரிந்த வரலாறு.’’
உடனே, ”தமிழ்நாட்டில் மதுரை எரித்ததா சொல்ற கண்ணகியும், இந்தக் கண்ணகியும் ஒன்றா, ஐயா?’’ என்று கேட்டேன்.
சற்றும் யோசிக்காமல், ”ஆமாம் தம்பி, மதுரைய எரிச்சிட்டு அவளுக்கு எங்கே போறதுன்னு தெரியாம… நேரா இங்கேதான் வந்ததா சொல்வாங்க’’ என்று சொன்னார்.
மேற்கொண்டு அது பற்றி எதுவும் கேட்காமல் சிறிது நேரம் பொதுவாகப் பேசிவிட்டு, இறுதியாக போர் குறித்துக் கேட்டேன்.
”போர் நடந்தப்போ நாங்க எல்லோரும் முகாமுக்கு போயிட்டோம். சிலர் கண் காணாத இடத்துக்குத் தப்பி ஓடிட்டாங்க. அவங்கள்ல எத்தனை பேர் இப்போ உயிரோட இருக்காங்கன்னு தெரியலை. சிலர் சண்டைக்குப் போயி செத்துப்போயிட்டாங்க. கண்ணு முன்னாடி எத்தனையோ உயிர் போறத பார்த்திருக்கோம், தம்பி. அதையெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது.’’
அவ்வளவு நேரமாக இருந்த உற்சாகம் இப்போது அவர் பேச்சில் இல்லாமல் போனதைக் கண்டு வருத்தமுற்று, அதிலிருந்து அவரை மீட்கும் எண்ணத்தோடு நான் இந்தியாவிலிருந்து வந்தது தொடங்கி, அவருக்கு ஒருபோதும் வேண்டாத சிலவற்றை சொல்லிவிட்டு, லேசாகத் தூறும் மழையில் நனைந்தபடி அம்மண்டபத்தின் பின்பக்கமாகப் போய் நின்று, கடல் நீரையும், ஆங்காங்கே முளைத்திருக்கும் கோரைகளையும், முள்ளியையும் [, அதில் பூத்திருக்கும் பூக்களையும்] கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, கனத்த இதயத்தோடு நடந்து கோயில் முன்பாக வந்தேன்.
மதிய பூசை முடிந்து எல்லோரும் வெளியில் வந்துகொண்டிருந்தார்கள். தூறல் நின்றதால் மதியிடம் இருந்து தூங்கி விழித்திருந்த ஐ’யை வாங்கிக்கொண்டு, கடல் அருகில் கூட்டிப் போய் அக்கடல் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை இருவருக்கும் கூறிவிட்டு, போரின் சாட்சியாக அங்கே நின்றிருந்த முது பனை மரங்களை பார்த்தபடி வந்தோம்.
வந்த வழியாக இல்லாமல் இம்முறை வேறு வழியாக கடலை ஒட்டிப் போகும் சாலையில் முல்லைத்தீவு ஊருக்குள் சென்று கடற்கரையையும், மாவீரர் நாளுக்காக தடல்புடலாக அங்கே செய்யப்படும் ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டு முள்ளிவாய்க்கால் போனோம். ஆட்கள் அவ்வளவாக இல்லாமல் மிகச் சிலர் மட்டும் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.
எங்களைப் பார்த்துவிட்டு அவர்களில் இருவர் தாம் பிடித்த மீன்களில் இரண்டைக் கொண்டு வந்து காட்டி, ”வாங்கிக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்டார்கள்.
மீன்கள் ஒவ்வொன்றும் பெரிதாக; செழிப்பாக இருந்தது.
”வேண்டாம். நாங்கள் தொடர்ந்து பயணம் போகிறோம்’’ என்றோம்.
இறுதி யுத்தத்தின் போது இரு பக்கமும் ராணுவம் சுற்றி வளைத்து நடுவில் இந்த வாய்க்காலில் (ஆறு அளவுக்கு பெரியது) இறங்கியவர்களை இங்கேயே கொன்று குவிக்க, மொத்த நீரும் குருதி நீரானதாகப் படித்தது கண்முன் காட்சியாக விரிய என்னையறியாமல் கண் கலங்கினேன்.
வளைந்து செல்லும் சிறு பாலம் வழியாக அடுத்திருக்கும் நிலப்பரப்புக்குள் போய், ஆளரவமற்ற கடற்கரையையும், போரால் பாதிக்கப்பட்டும்; கைவிடப்பட்டும் சிதைந்துபோயிருந்த சிறு சிறு வீடுகளையும், இன்ன பிற இடுபாடுகளையும், படகுகளையும் பார்த்துவிட்டு, மறுபடியும் அதே வழியாக வந்தோம்.
வெறும் செய்தியாகப் படித்த இடங்களை இத்தனை ஆண்டுகள் கழித்து நேரில் வந்து பார்த்தது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும், இன்னொரு பக்கம் சொல்லொனா துயரையும் ஒருங்கே தந்தன.
சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் அந்த இடங்களையெல்லாம் பார்த்துவிட்டு, அங்கிருந்து திருகோணமலைக்கு புறப்பட்டோம்.
”வழியில் இனி எங்கும் உணவகம் இருக்காது. பெரும்பாலும் காடு, மலைதான். இருக்கும் சிறு கிராமங்களும் சிங்களர்கள் வசிக்கும் பகுதி. அதனால் இங்கேயே மதிய உணவு உண்டுவிடுவோம்’’ என்று ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பின் ஓர் உணவகம் முன்பாக நிறுத்திய வாகன ஓட்டி சொன்னார்.
சரி, என்று இறங்கி முதலில் கழிவறைக்குப் போனோம். சிறுநீர் கழிக்க ஒருவருக்கு நூறு ரூபாய் என்று எழுதியிருந்தார்கள். இந்திய ரூபாய்க்கு சுமார் 35. அதைப் பார்த்ததும் வருவது போல இருந்த சிறுநீரும் வராமல் போய்விட்டது.
இதுதான் என்று இல்லாமல் சாப்பாடும், துரித உணவும், கொத்து பரோட்டாவும் வாங்கி பகிர்ந்துகொண்டோம். நடந்தபடி ஐக்கு முதலில் ஊட்டிவிட்டு, பசியின்றி சிறிதளவு உண்டேன்.
கிளம்பி கொஞ்ச தூரம் வந்ததும்தான் கவனித்தேன். வழி நெடுகிலும் கடுமையான வெள்ளம் பாதித்து இருந்தன. சிறு வயது தொடங்கி எத்தனையோ வெள்ளங்களை பார்த்திருந்தாலும் வெளிநாட்டில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அதோடு, இது வேறு மாதிரி இருப்பதையும் உணர்ந்தேன்.
அழகான சின்னச் சின்ன கிராமங்கள், அவற்றின் நடுநடுவில் புத்தருக்கு கவின் மிகு கோயில்கள். அனைத்துமே சிங்களர்கள் வசிக்கும் ஊர்கள். சிலவற்றில் முஸ்லீம்கள் இருப்பதை ஆங்காங்கே தென்பட்ட மசூதிகளை வைத்து அறிய முடிந்தது. அதனையொட்டிய விவசாய நிலங்கள், ஏரிகள், காடுகள், மலைகள். இடையிடையே சிறு சிறு ஓடைகள்.
எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடு. ஒரு விவசாய நிலம் கூட மிஞ்சாமல் பயிர்கள் மொத்தமும் நீரில் மூழ்கியிருந்தன. நூற்றாண்டு கண்ட ஒரு கூலி விவசாயியின் மகனாக அக்காட்சி எனக்குள் பெரும் பாதிப்பு உண்டாக்கினதை உணர்ந்தேன்.
இன்னொரு பக்கம் உணவகத்தில் இருந்து புறப்பட்டது முதல் விடாமல் மழை பெய்துகொண்டிருந்தது. வாகனத்தை மெதுவாக இயக்கிச் சென்ற ஓட்டுநர், ”மொத்த நாட்டுக்கும் சேர்த்து இங்கே மழை பெய்திருக்கும் போல’’ என்றார்.
இலங்கை வந்து இறங்கினதும் நண்பர், ”வடிவு, சிம் கார்டு வேண்டுமென்றால் சொல்லுங்கள். ஏற்பாடு செய்கிறேன்’’ என்றார். நான்தான், ”வேண்டாம். அதான் வீட்டில் இணையம் இருக்கிறதே. அது போதும்’’ என்றுவிட்டேன். அதனால் மழை நிலவரம் குறித்து அறிய முடியவில்லை. அதோடு, அறிந்து என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணி நண்பரிடமும் கேட்கவில்லை.
ஆங்காங்கே மயில்களும், எருமைகளும், குரங்குகளும், மான்களும், ஆடு மாடுகளும், இன்ன பிற உயிரினங்களும் இருப்பதை பார்க்க முடிந்தது.
திருகோணமலையை ஒட்டிய பெரு வனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக இருந்த சிறிய சிங்கள கிராமத்தில் ஒரு தேநீர்க் கடை திறந்திருப்பதை பார்த்துவிட்டு ஓரமாக நிறுத்தினார்கள். நண்பரும், ஓட்டுநரும் குடை பிடித்துக்கொண்டு போய் எல்லோருக்கும் தேநீர் வாங்கி வந்து கொடுத்துவிட்டு, அவர்களும் பருகினார்கள்.
மழை கொஞ்சம்கூட விடுவதாக இல்லை. அதோடு, நொடிக்கு நொடி கடுமையாவது போலவும் இருந்தது. நன்றாக இருட்டிய பிறகுதான் திருகோணமலையை அடைந்தோம். கூகுள் வரைபடத்தை பின்தொடர்ந்த ஓட்டுநரால் நீண்ட சுற்றலுக்குப் பிறகே தங்கப்போகும் விடுதியைக் கண்டுபிடிக்க முடிந்தது.
போனதும் பைகளை அறைக்குள் வைத்துவிட்டு, கை கால் முகம் கழுவிக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். பிறகு வெளியில் இருந்த மா முதலான மரஞ் செடி கொடிகளையும், அதற்கு அணியாக தொங்கவிடப்பட்டிருந்த மின் விளக்குகளையும் பார்த்தோம்.
நண்பரிடம் இருந்த பெரிய குடையை வாங்கிக்கொண்டு எங்கென்று தெரியாமல் வெளியே போய், ராவணன் ஆண்டதாக; வாழ்ந்ததாக சொல்லப்படும் இடத்தில், கம்பராமாயணத்தில் ‘இராவணன் ஆட்சி செய்த இலங்கை, கடலால் சூழப்பட்டு, அரக்கர் குலத்தினர் காவல் காக்கும் வலிமையான நாடாகவும் அதிலும் குறிப்பாக, இந்தத் திருகோணமலைப் பகுதி பொன்னால் ஆனதாகவும், செல்வமும், கலையும், மகிழ்ச்சியும் ஒருங்கே நிறைந்ததாகவும், எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி மலை உச்சியில் அமைந்த கோட்டையைக் கொண்டதாகவும், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், ரத்தினங்களால் பதிக்கப்பட்ட வீடுகள் கொண்ட ஒரு மாநகரமாகவும் விவரிக்கப்பட்டிருப்பதை’ மனத்தில் காட்சியாகக் கண்டபடி சிறிது நேரம் காலார நடந்துவிட்டு வந்தேன்.
நீண்ட தூரப் பயணம் தந்த களைப்பில் வாங்கி வந்த இரவு உணவை அங்கிருந்த மேசையில் உட்கார்ந்து அவசர அவசரமாக உண்டுவிட்டு, சீக்கிரமாகவே சென்று படுத்துக்கொண்டோம்.
இராவண தேசத்தில் தங்கும் முதல் இரவு. கனவில் நிச்சயம் பத்து தலை கொண்ட ராவணனன் வருகிறாரோ இல்லையோ, நிச்சயம் ஒரு தலையுடைய ராவணனாவது வருவார் என்று எண்ணிக்கொண்டு அடுத்த சில நிமிடங்களிலேயே உறங்கிப்போனேன்.
*