ஈழம் அன்ன ஈழம் – 6 : திலீபன் நினைவிடம், நூலகம், கோட்டை

”நாளை மழை இல்லையென்றால் யாழ்ப்பாணம் சுற்றிப் பார்ப்போம்’’ என்றார் நண்பர்.
அவர் சொன்னது போலவே இன்று (நவ 25) அதிகாலை எழுந்தது முதல் மழை இல்லை. அதனால் விடியும் வரை படித்துவிட்டு, குளித்துக் கிளம்பி காலை உணவு உண்டதும் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்டோம்.
இலங்கை வந்ததும் முதலில் கண்டு வியந்த இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று, இரு சக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிவது. அது குழந்தையாக இருந்தாலும் சரி, பின்னால் உட்கார்ந்து வருபவராக இருந்தாலும் சரி. ஆகையால் ஒரு வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை தலைக்கவசம் வைத்திருக்கிறார்கள். இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, நம்மூர் மாதிரி இது வெறும் சட்டமாக இல்லாமல் ஆங்காங்கே காவலர்கள் (சாலைகளில் மட்டுமல்லாது, சிறு குறு தெருக்களில்கூட) நின்று சோதிப்பதும், மீறுவோர்க்கு உடனடி அபராதமும், தண்டனையும் விதிப்பதும்தான்.
இரண்டு, பதிமூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் நகர்பேசி பயன்படுத்த விதித்திருக்கும் தடை. மீறி எங்காவது குழந்தைகள் பயன்படுத்துவதை பார்த்தால், அவர்களது பெற்றோர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றார்கள். நல்ல வரவேற்கப்பட வேண்டிய சட்டம் என்று மனத்துள் பாராட்டினேன்.
வழிநெடுக இருந்த சுன்னாகம், இணுவில், கொக்குவில் முதலான ஊர்களையும், பழைய மற்றும் புதிய பாணியிலான வீடுகளையும், கடைகளையும், கல்லூரிகளையும், கோயில்களையும், தாவரங்களையும் பார்த்தபடி யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்து, முதலில் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு அருகில் இருக்கும் திலீபன் நினைவாலயத்துக்குப் போனோம்.
15.9.1987 காலை 9.45-க்கு தொடங்கி 26.9.1987 காலை 10.48 வரை ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்ததன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவிடம் அவ்வளவாக பராமரிப்பின்றி சிதிலமடைந்திருந்தாலும், தமிழீழக் கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டு விழாக்கோலம் கொண்டிருந்தன.
சிறிது நேரம் அதன் முன்பாக நின்று எதுவும் பேசாமல் பார்த்திருந்துவிட்டு, அருகில் மாவீரர் நாள் அனுசரிக்க அமைக்கப்பட்டிருந்த பெரிய பந்தலுக்குப் போனோம்.
ஆண்டுதோறும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளுக்கு அடுத்த நாளான நவம்பர் 27 ஆம் தேதி, விடுதலைக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக; அவர்களது பெற்றோர்களை வணங்கிப் போற்றும் வண்ணமாக ‘மாவீரர் நாள்’ இலங்கையின் சிறு கிராமங்கள் தொடங்கி, பெரு நகரங்கள் வரைக்கும் கடைபிடிக்கப்படுவது வழக்கம். அவ்வாறு இந்தாண்டு கடைபிடிக்க அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் என்ன இருக்கப் போகிறதோ என்னும் எதிர்பார்ப்போடு நுழைந்தோம்.
ஈழ விடுதலை குறித்த பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பந்தலின் முகப்பில் குறிஞ்சி நிலத்தின் அடையாளமான, கார்த்திகை மாதத்தில் பூப்பதால் ‘கார்த்திகைப்பூ’ என்று சொல்லப்படும் [, சங்க இலக்கியத்தில் ‘ஒண்செங்காந்தள்‘, ‘சுடர்ப்பூங்காந்தள்‘, ‘அலங்குகுலைக் காந்தள்‘ என்று பாடப்பட்டுள்ள] செங்காந்தள் மலரின் ஒளிப்படம் போட்டு, அதன் கீழே ‘வல்லமை தாருமென்று உங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்’ என்ற வாசகமும், தரையில் தீபத்தூணும், அதையடுத்து பறித்து வந்த செங்காந்தள் மலர்களும் வைத்திருந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும் வரிசையாக போரில் உயிர் நீத்த வீரர்களின் பெயர்களை, தந்தையின் பெயரோடு உயிரிழந்த நாளையும் குறிப்பிட்டு, தட்டியில் பொறித்திருந்தார்கள். ஆங்காங்கே சிலரது ஒளிப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
கூடவே, மாவீரர் நாள் குறித்த வரலாறு, அன்று கடைப்பிடிக்கப்படும் நடைமுறை, மாவீரர் பாடல், துயிலும் இல்லங்களின் உருவாக்கம், நினைவுக்கற்கள் முதலான பல தகவல்களும் இடம் பெற்றிருந்தன.
மிக முக்கியமாக பந்தலின் ஓரிடத்தில் ‘இங்கே பெயர் இல்லாமல் ஆனால், போரில் உயிர் நீத்த உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களது பெயர்கள் பற்றிய விவரம் எழுதச் சொல்லி’ கேட்டிருந்தார்கள். ஒரு வயதான அம்மாவும், என் வயதொத்த இளைஞரும் அங்கிருந்த ஒருவருடன் எதையோ பேசியபடி எழுதிக்கொண்டிருந்தார்கள்.
உள் முகப்பில் எழுதியிருந்த ‘இந்த மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களே! உங்கள் குழந்தைகள் தமது உயிருக்கு மேலாக தாய்நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்திற்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை சரித்திரமாகி விட்டார்கள்’ என்னும் வாசகம் ஒரே நேரத்தில் நெகிழ்வையும், கண்ணீரையும் வரவழைத்தது.
இருபது வயதுடைய பெண் ஒருவர், எங்கோ வெகு தூரத்தில் இருந்து வந்தவராக இருக்க வேண்டும். நாங்கள் உள்ளே நுழைந்தபோது வந்தவர். ஒவ்வொரு தட்டியாகப் பார்த்துவிட்டு, ஓரிடத்தில் நின்று தன்னறியாமல் கண் கலங்கி சத்தமின்றி அழுதுகொண்டிருந்தார். பார்த்ததும் கண்கள் பனித்துவிட்டது.
போரில் இழந்த தன் தந்தையின்; உறவினரின் பெயரைக் கண்டு அழுதிருக்கலாம். அல்லது தம் இன விடுதலைக்காக மாண்டவர்களை; எல்லா போராட்டங்களும் வீணாகி வெறும் கனவாகிப் போன ஈழ விடுதலையை எண்ணி கண்ணீர் உகுத்திருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
கனத்த இதயத்தோடு வெளியில் வந்து, சாலைக்கு மறுபுறம் இருந்த புத்தகக் கடையை பார்க்கப் போனோம். சொல்லிக் கொள்ளும்படி நவீன இலக்கியப் பனுவல்கள் இல்லையென்றாலும் ஓரளவுக்கு இருந்தன.
அருகில் பெரிதாக இருந்த உணவகத்தைக் காட்டி கூட்டிப் போன நண்பர், ”இங்கே ஐஸ் கிரீம் மிகச் சிறப்பாக இருக்கும்’’ என்றார்.
எங்களுக்கோ அந்நேரத்தில் சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆளுக்கொரு காபி சொன்னோம். ஐ’க்கு வீட்டிலிருந்து கொண்டு போயிருந்த வாழைப் பழத்தையும், அங்கே வாங்கின கட்லட்டையும் கொடுத்தோம்.
எங்கள் இருவர் தவிர யாவரும் ஐஸ் கிரீம் தின்பதைப் பார்த்து மெல்லிதாய் முறுவலித்துக்கொண்டோம்.
பிறகு அங்கிருந்து கிளம்பி புகழ்பெற்ற ‘யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்குப்’ போனோம். 1930-களில் ஆரம்பிக்கப்பட்டு, 1981 ஆம் ஆண்டு போரின் போது எண்ணிலா கையெழுத்துப் பிரதிகளோடும், ஓலைச் சுவடிகளோடும், சுமார் 99 ஆயிரம் அரிய நூல்களோடும் தீக்கு இரையாகி அதே இடத்தில் அதேபோன்று மீளப் புனரமைக்கப்பட்ட நூலகம்.
விசாலமான இடத்தில் பெரு மரங்களும் இன்ன பிற தாவரங்களும் சூழ கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு வெண்ணிற கட்டடத்துக்குள், முகப்பில் இருந்த சரஸ்வதியின் சிலையை வணங்கிவிட்டு நுழைந்தோம். சுமார் அரை நூற்றாண்டுக்கு முந்தைய பாணியில் வரவேற்பிடம் தொடங்கி வாசிப்பிடம் வரை ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து வடிவமைத்திருந்தார்கள்.
முதலில் அங்கே காட்சியாக வைக்கப்பட்டிருந்த யாழை [, அதன் பெயரைக் கொண்ட நகரத்தில்; இடத்தில் நின்றுகொண்டு] முதல் தடவை பார்த்ததும், கிழக்கு இலங்கையின் காரை தீவில் பிறந்து தமிழ்மொழி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய விபுலானந்தரும், அவர் யாத்த அரிய யாழ் நூலும் நினைவுக்கு வந்தன.
கண்கள் மூடி மனத்துள் ஒரு நிமிடம் அம்மாமனிதரை போற்றி வணங்கிவிட்டு, அங்கிருந்த சில புராதனப் பொருட்களை மதியிடம் காட்டி அவை குறித்து தெரிந்ததை சொல்லிவிட்டு, இரவல் நூல்கள் வைத்திருக்கும் பிரிவுக்குள் நுழைந்தோம்.
”நூலகப் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் உள்ளே வர அனுமதி இல்லை” என்றார்கள்.
சரி, என்று எதிரில் இருந்த நாளிதழ்ப் பிரிவுக்குப் போய் என்னென்ன நாளிதழ்கள், பருவ இதழ்கள் இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டிலிருந்து எவையெவை வருகின்றன என்று பார்த்துவிட்டு, அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியாகச் சென்றுவிட்டு வரவேற்பறைக்கு வந்தோம்.
பல்கலைக்கழக மாணவிகள் நால்வர் ஒன்றாக வந்து நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிப் போனார்கள்.
சில நொடிகள் கண்கள் மூடி நின்று, ‘எரிந்து போவதற்கு முன்பு அந்நூலகம் எப்படியெல்லாம் இருந்திருக்கும்?’ என மனத்திரையில் காட்சியாக ஓட்டிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த ஊழியரிடம் சென்று, ”நூலகரை பார்த்து எனது நூல்களை அன்பளிப்பாக வழங்க வேண்டும்’’ என்று சொன்னேன்.
நான் ஓர் எழுத்தாளர் அதுவும், இந்தியாவிலிருந்து வந்திருப்பவர் என்பது தெரிந்ததும் பணிவோடு ”வணக்கம்” கூறியவர், ”நூலகர் விடுப்பில் இருக்கிறார். வாங்க, அடுத்த நிலையில் இருப்பவரிடம் அழைத்துப் போகிறேன்’’ என்று சொல்லி வேறு ஒருவரிடம் கூட்டிப் போய் அறிமுகம் செய்தார்.
எனது மொத்த நூல்களில் ஆறு நூல்களை மட்டும் (ஐயா (எ) 95 வயது குழந்தை!, முகங்கள், எங்க கல்யாணம், மகவே வருக, தாவர சங்கமம், ஆயிரம் வேர் கொண்ட மரம்) ஐ கையால் கொடுப்பதற்காக எடுத்துப் போயிருந்தோம்.
மகிழ்வோடு பெற்றுக்கொண்டவர், ஒவ்வொன்றையும் ஆர்வத்தோடு புரட்டிப் பார்த்துவிட்டு, ”மிக்க மகிழ்ச்சி ஐயா, நீங்க நேரில் வந்து உங்கள் நூல்களை அன்பளிப்பாக வழங்கியதற்கு’’ என்றுவிட்டு, அதற்கான ரசிதை மின்னஞ்சலில் அனுப்புவதாக சொல்லி முகவரியைக் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.
நினைவுக்காக ஓர் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு, ”நன்றி” கூறிவிட்டு அங்கிருந்த வள்ளுவர் சிலைக்கு மானசீகமாக ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, வெளியில் வந்து சாலையோரம் நின்று திரும்பி நூலகத்தை பார்த்தேன். உள்ளே இப்போது எனது நூல்களும் இருப்பது நினைத்து பேருவகையாக இருந்தது.
பின்னாலேயே வந்த நண்பர் எங்களை நூலகத்தின் முன்பாக நிற்கச் சொல்லி நான்கைந்து ஒளிப்படங்கள் சொடுக்கிவிட்டு, அருகில் இருக்கும் கோட்டைக்கு அழைத்துப் போனார்.
இலங்கை வடபாகத்தின் தலையாக அமைந்திருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் எஞ்சி நிற்கின்ற வரலாற்றுக் கட்டமைப்புகளுள் முதன்மையாகச் சொல்லப்படும் இந்தக் கோட்டைதான் யாழ்ப்பாணத்தின் மையமாக விளங்குவது. 1990-களில் யுத்தத்தினால் சிதைந்த கோட்டை ஒல்லாந்தர் என்னும் டச்சுக்காரர்களால் அமைக்கப்பட்ட மிக அற்புதமான கட்டமைப்பாகும்.
பண்ணைக் கடற்கரையோரத்தில் கம்பீரமாக அமைந்திருக்கும் கோட்டைக்குள் நுழைந்தோம். முதலில் முஸ்லீம்களின் சிறிய பண்டக சாலையாக இருந்து, பின்னர் போர்த்துக்கேயர்களால் நாற்சதுரக் கோட்டையாக்கப்பட்டு, அதன்பின் ஒல்லாந்தரால் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்ட கோட்டையைச் சுற்றி சுமார் 132 அடி அகலமான அகழி அத்தனை பிரமாண்டமாக இருந்தன.
முழுக்க முழுக்க முருகைக் கற்களால் கட்டப்பட்டு சிதிலமடைந்திருக்கும் கோட்டைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாகப் பார்த்துவிட்டு, இறுதியாக கி.பி. 1706 ஆண்டு உள்ளூரில் காணப்பட்ட அழிவடைந்த கற்களையும், முருகைக் கற்களையும், ஒல்லாந்து தேசத்திலிருந்து கொண்டு வரப்பட்ட செங்கற்களையும் கொண்டு கிரேக்க சிலுவை வடிவில் ஒரே நேரத்தில் அறுநூறு பேர் வரை நின்று வழிபடக்கூடிய வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஒல்லாந்த தேவாலயம் இருந்த இடத்தை பார்க்கப் போனேன். மொத்த ஆலயமும் உடைத்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.
எண்ணிலா வரலாற்று நிகழ்வுகளையும், காயங்களையும், வடுக்களையும் தன்னகத்தே கொண்ட கோட்டையின் வளாகத்திலிருந்த மரங்களில் பனை மரம் ஒன்றின் அடியில் போய் நின்று, தொட்டு வருடியபடி இலங்கையின் வரலாறை குறிப்பாக, யாழ்ப்பாண வரலாற்றை, மனத்துள் அசை போட்டுவிட்டு, வாயில் அருகில் நின்றிருந்த மதியையும் ஐ’யையும் கூட்டிக்கொண்டு வெளியே வந்தேன்.
வெயில் மிகுதியாக இல்லாமல் அதேநேரம், குறைவாகவும் இல்லாமல் மிக மெல்லிதாய் சிந்திக்கொண்டிருந்தது.
அங்கிருந்த புள்வெளியில் சில நிமிடங்கள் நடந்து திரிந்துவிட்டு, கிளம்பி நகருக்குள் இருக்கும் நண்பரின் அண்ணன் வீட்டுக்குப் போய், அவரது தாய் தந்தை முதலான உறவினர்களை பார்த்துப் பேசிவிட்டு, சரியாக மூன்று மணி வாக்கில் வீட்டுக்கு வந்தோம்.
காலையிலேயே மதியத்துக்கும் சேர்த்து சமைத்திருந்தார்கள். அதனால் வந்ததும் முதல் வேலையாக பசி தீர உண்டுவிட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு நான் மட்டும் தனியாக நடந்து அருகிலிருக்கும் தெல்லிப்பழை வரைக்கும் போய்விட்டு வந்தேன்.
இரவு உணவு முடித்து முன்னிரவு நெடுநேரம் உரையாடிவிட்டு உறங்கப்போகும் போது நண்பர் சொன்னார். ”நாளை காலையில் கிளம்பி முல்லைத்தீவு போகலாம். அப்படியே அங்கிருந்து திரிகோணமலை. முடிந்தால் சிகிரியா, அனுராதபுரம். மூன்று நாட்களுக்கு வேண்டிய ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.’’
மகிழ்வோடு ”சரி” என்றுவிட்டு வந்து மதியிடம் சொல்லிவிட்டு படுத்தேன்.
வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராமல், முல்லைத்தீவு பற்றியும், அங்குள்ள முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள் பற்றியும் எண்ணிக் கொண்டிருந்துவிட்டு, அவ்வெண்ணத்தோடவே உறங்கிப்போனேன்.
*