ஈழம் அன்ன ஈழம் – 5 : மழை நடை

மூன்றாம் நாள் (நவ 24) அதிகாலை விழிக்கும்போதே வெளியில் மழைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் முறுவலித்துவிட்டு, வழக்கம்போல எழுந்து வரவேற்பறையில் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
நேற்றை விட சற்று முன்னதாகவே எழுந்த மதி, சிறிதுநேரம் என்னோடு அமர்ந்து படித்துவிட்டுப் போய் இருவருக்கும் தேநீர் போட்டு எடுத்து வந்தாள்.
இலங்கையின் ‘வட்டவல’ தேநீர்த் தூள் புகழ்பெற்றது என்று முன்னமே கேள்விப்பட்டிருந்தேன். அதுவும் மதி சொல்லிதான். சென்ற முதல் நாளே அதன் சுவை மிகப் பிடித்துவிட்டது.
மெல்ல அவள் காதருகில் சென்று, ”செம மழை. இந்த மழைக்கு இந்த டீ இன்னும் சுவையா இருக்கு’’ என்று சொன்னேன்.
எதுவும் கூறாமல் ‘ஆமாம்’ என்று தலையாட்டியவள் ஒரு மிடரு பருகிவிட்டு, ”இப்போ கொஞ்சம் குறைந்திருக்கு. நடு இரவுலலாம் இன்னும் அதிகமான மழை’’ என்றாள்.
பிறகு எதுவும் பேசாமல் ஐ எழும் வரைக்கும் வாசித்துக்கொண்டிருந்தோம்.
ஏழு மணி இருக்கும். எங்காவது குடை பிடித்தபடி நடந்து போய் வரலாம் என புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தேன். சரியாக அந்நேரம் பார்த்து ஐ விழித்து, ”அப்பாம்மா… அப்பாம்மா…” என்று தூக்கக் குரலில் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தான்.
‘அப்பாம்மா’ என்பது அவனுக்கு ஒரே நேரத்தில் எங்கள் இருவரையும் அழைக்கும் சொல். அவனாகவே கற்றுக்கொண்டது.
எங்கோ வெளியில் கிளம்புவதை பார்த்ததும், ”நானு வாக்கிங்… நானு வாக்கிங்…” என்று ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டான்.
மழை சற்று குறைந்திருந்ததால், ”சரி, வா… போவோம்” என்று அவனை தூக்கிக்கொண்டு, பெரிய குடை ஒன்றை பிடித்தபடி அங்கிருந்த தெருக்கள் வழியாக நடந்து, யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை செல்லும் முக்கிய சாலைக்கு வந்தேன்.
வாகனங்கள் அவ்வளவாக இல்லாமல் விடுமுறை தினம் போல இருந்தது. சாலையைக் கடந்து அங்கிருந்த மூடிய இனிப்புக் கடை ஒன்றின் முன்பாகப் போய் நின்று, அவ்வழியாக செல்வோரையும், வாகனங்களையும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்.
என்ன நினைத்தானோ, ”அங்க அங்க” என்று தூரத்தில் தெரிந்த ஒரு பெரிய அரச மரத்தைக் காட்டிச் சொன்னான் ஐ.
’’என்னடா, அங்க போகனுமா?’’ என்று கேட்டதும், ‘ஆமாம்’ என்று சிரித்துத் தலையாட்டினான்.
”சரி, போவோம்” என மெல்ல நடந்து அந்த மரத்தடிக்கு வந்தேன். அங்கே சிறிய விநாயகர் கோயில் ஒன்று இருந்தது.
அருகில் போய் பார்த்தோம். இன்னும் திறக்கவில்லை. அதோடு, கடந்த ஒரு வாரமாக திறந்தது போலவும் தெரியவில்லை. ‘சரி’ என்று மரத்தடியில் இருந்த விநாயகரை வணங்கிவிட்டு, மீண்டும் சாலையைக் கடந்து மல்லாகம் சந்தி நோக்கி நடந்தேன்.
திடீரென்று மழை கடுமையாகத் தொடங்கியதும், திரும்பி அங்கிருந்த மூடிய கடை ஒன்றின் முன்பாக வந்து குடையை சுருக்கி ஓரமாக வைத்துவிட்டு நின்றேன். அங்கே எங்களுக்கு முன்பாக காலை நடை வந்த ஒரு பெரியவர் நின்றிருந்தார். தவிர, ஒரு கருப்பு நாயும் படுத்திருந்தது.
ஐ’தான் முதலில் அவரை பார்த்துச் சிரித்து, ”தாத்தா” என்றான்.
கேட்டு மென்மையாகப் புன்னகைத்தவர் என்னைப் பார்த்து, ”நல்ல மழை’’ என்று சொன்னார்.
”ஆமாங்க ஐயா” என்றேன்.
உடனே அவர், ”கண்டியில் இருந்து வர்றீங்களோ?’’ என்று கேட்டார்.
எதை வைத்து அப்படிக் கேட்டார் தெரியவில்லை. ”இல்லை, ஐயா. இந்தியாவுல இருந்து வர்றோம்’’ என்றேன்.
சட்டென்று முகம் மலர்ந்தவர், ”ஓ, தமிழ்நாடா?’’ என்று கேட்டார்.
”ஆமாங்க ஐயா, சென்னை.”
”நல்லது” என்றுவிட்டு கேட்டார். ”பொடியர் என்ன சொல்றார், யாழ்ப்பாணம் பிடித்திருக்கோ?’’
சின்னதாக சிரித்துவிட்டுச் சொன்னேன். ”அவருக்கு ஒரே மகிழ்ச்சியா இருக்கு. நல்ல நாடு, நல்ல மனிதர்கள். நல்லா வேடிக்கை பார்க்கறான்.’’
”ஓ, நல்லது நல்லது. பொடியர் பெயர் என்ன?’’
”ஐ”
கேட்டும் கேட்காதது போல விழித்தவர், ”விளங்கவில்லை. இன்னொரு தடவை சொல்லுங்கோ” என்றார்.
சொன்னேன்.
ஆர்ப்பரித்துக் கொட்டும் பேரருவியைக் கண்ட குழந்தையைப் போல வியப்புக் குறியை முகம் முழுக்கக் காட்டியவர், எதையோ தனக்குள் சொல்லிக்கொண்டு, ”ஐ என்றால் அழகு, அரசன், வியப்பு’’ என்றுவிட்டு சொன்னார்.
”இப்படி ஒரு பெயரை என் வாழ்நாளில் கேட்டதே இல்லை. ஒரு பெயரென்றால் இப்படிதான் இருக்கணும். அர்த்தமுள்ள அதேநேரம், தனித்துவமான பெயர். நீங்கள் இவருக்கு என்னதான் கோடி கோடியாக சொத்து சேர்த்தாலும், அதையெல்லாம் விட உயர்ந்தது இந்தப் பெயர்தான். தமிழன்னையின் ஆசிர்வாதம் எப்போதும் இவருக்கு இருக்கும்.’’
தன் சுருக்கம் விழுந்து முதுமை படர்ந்த கையால் ஐ தலையில் தொட்டு ஆசிர்வதித்தார். பிறகு என் கரம் பற்றி, ”அர்த்தமுள்ள பெயரை வைத்ததுக்கு என் வாழ்த்து’’ என்றுவிட்டு சொன்னார்.
”என் பெயர் நல்லதம்பி. எங்கள் தலைமுறையில் எல்லாம் அருளானந்தன், தெய்வேந்திரன், பொன்னுத்துரை, அழகையா, கதிர்காமன், குழந்தைவேல், நாகமணி, நவேந்திரன்… இப்படிதான் பெயர்கள் இருக்கும். எங்கோ ஐநூறு பேரில் ஒருவருக்கு வட எழுத்துடன் பெயர் இருக்கும். அவ்வளவுதான். ஆனால், இப்போது எல்லோரும் வட எழுத்து மோகத்தில் திளைக்கிறார்கள். அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, ஷ வேண்டும், ஜ வேண்டும் என்று அலைகிறார்கள். தாய்மொழி மட்டும் தமிழ், அதன் பெருமையெல்லாம் வேண்டும். ஆனால், பிள்ளைகளுக்கு பெயர் வைக்கையில் மட்டும் தாய்மொழி எழுத்து வேண்டாம், வடமொழி எழுத்து வேண்டுமாம். அறிவிலிகள்.’’
எதுவும் கூறாமல் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஐ அவன் பாட்டுக்கு அங்கிருந்த நாயையும், சற்று தள்ளி இன்னொரு கடை முன்னால் ஒதுங்கியிருந்த அப்பாவுடன் பள்ளிக்கு செல்லும் சிறுமியையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
”நீங்கள் வந்து தங்கியிருக்கீங்களே… அந்த வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா?’’
”இருக்கு ஐயா. இரண்டு குழந்தைகள்.”
”அவர்களுக்கு என்ன பெயர் வைத்திருக்காங்க?”
சொன்னேன்.
முகம் சுழித்தவர், ”என் பேரப் பிள்ளைக்கு ஷைலஜான்னு பெயர் வைக்கப்போறதா மகன் வந்து பெருமையாக சொன்னான். சொன்னால் நம்ப மாட்டீங்க, தம்பி. போட்டிருந்த செருப்பக் கழட்டி அடிக்கப்போனன். இப்போ நன்மதி’ன்னு அழகான பெயர் வைத்திருக்கான். நீங்களே சொல்லுங்க தம்பி, ஷைலஜா… இந்த மூணு எழுத்துல ரண்டு எழுத்து சமஸ்கிருத எழுத்து. இப்படி ஒரு பெயரை வைத்தா தமிழ்த்தாய் அவனை மன்னிப்பாளா? அவளோட ஆசிதான் பிள்ளைக்கு இருக்குமா?’’ என்று கேட்டார்.
ஒன்றும் சொல்லாமல் அவர் தொடர்ந்து பேசட்டும் என தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
”இரண்டு, மூன்று வருடம் வரப்போற வீட்டுப் பொருட்கள் பற்றியெல்லாம் அக்கறை படுறவங்க… வாழ்நாள் முழுக்க அடையாளமா இருக்கப்போற பெயர் விசயத்தில் இப்படி இருப்பதை நினைத்தா வருத்தமா இருக்கு, தம்பி. எழுபத்தி ஒரு வயது ஆகுது. எனக்குத் தெரிந்து தமிழர்கள்தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போயிட்டாங்களோன்னு தோன்றுது, தம்பி.’’
அவ்வழியாக யாழ்ப்பாணம் நோக்கி ஆட்டோவில் சென்ற நடுத்தர வயதுடையவர், பெரியவர் அங்கே நிற்பதை பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு குடை பிடித்தபடி வந்து, அவரை வீட்டில் விடுவதாகச் சொல்லி அழைத்ததும் என்னைப் பார்த்து கைகூப்பி, ”சரிங்க தம்பி, நான் போயிட்டு வர்றேன். நீங்க இலங்கையை நன்றாக சுற்றிப் பார்த்துட்டு… நல்லபடியாக போயிட்டு வாங்க. ஐ’க்கு இந்த தாத்தாவோட ஆசி எப்போதும் இருக்கும்’’ என்று சொல்லி மறுபடியும் ஐ தலையில் கை வைத்து வாழ்த்திவிட்டுப் போனார்.
எதையோ பெரிதாக சாதித்துவிட்ட நிறைவு மனத்தில் உண்டானது. ஆட்டோவில் ஏறிச் சென்றவரை பார்த்து கையசைத்து விடைகொடுத்த ஐ’யின் நெற்றியில் அழுந்த ஒரு முத்தமிட்டுவிட்டு, மறுபடியும் குடை பிடித்தபடி அங்கிருந்து மெதுவாக நடந்து வீட்டுக்கு வந்தோம்.
வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த நண்பர், ”இந்த மழையில் எங்கே போயிட்டு வர்றீங்க?’’ என்று கேட்டார். சொன்னேன்.
அவருக்கு நாங்கள் இப்படி நடந்து போவது, சுற்றிலும் இருக்கும் மரம் செடி கொடிகள் தொடங்கி, மனிதர்கள் வாழ்வை கவனித்துப் பார்ப்பது வரை அனைத்தும் புதிதாகத் தோன்றியிருக்க வேண்டும்.
எதுவும் கூறாமல், ”சரி, வாங்க சாப்பிடுவோம். நேரமாச்சு’’ என்று கூட்டிப் போனார்.
சென்று குளித்து புட்டு சாப்பிட்டோம். பிறகு குழந்தைகளோடு நெடுநேரம் விளையாடிவிட்டு, பதினொரு மணி வாக்கில் தேநீர் பருகியபடி அறைக்குள் போய் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன்.
நேரம் போனதே தெரியவில்லை. மதி வந்து மதிய உணவு சாப்பிட அழைத்தாள். சென்று ஐ’க்கு முதலில் ரசம் கலந்து சோறு ஊட்டிவிட்டு, பிறகு பசியின்றி கொஞ்சமாக உண்டுவிட்டு வந்து அவன் உறங்கினதும் அருகில் படுத்து நானும் உறங்கினேன்.
இரண்டரை மணி நேரம் நன்றாக உறங்கிவிட்டு எழுந்தவன், பக்கத்தில் படுத்திருந்த என்னை, ”அப்பா அப்பா’’ என்று தட்டிக் கூப்பிட்டு எழுப்பி வெயியே காட்டி, ”வாக்கிங் வாக்கிங்” என்றான்.
‘இவன் என்னடா இலங்கை வந்ததுல இருந்து ஒரே வாக்கிங் பையனா மாறிட்டான்’ என்று நினைத்து சிரித்துக்கொண்டு நேரம் பார்த்தேன். ஐந்து ஆக இன்னும் எட்டு நிமிடம் இருந்தது. ”சரி, போலாம் வாடா’’ என்றுவிட்டு எழுந்து வெளியே கூட்டி வந்தேன்.
எல்லோரும் நடுவீட்டில் உட்கார்ந்து தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். வெளியில் பார்த்தேன். மழை இல்லை. ஆனால், எப்போது வேண்டுமானாலும் வருவதுபோல வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது.
வரவேற்பறையில் உட்கார்ந்து அங்கிருந்த புத்தகங்களை வரிசையாக பார்த்தபடி ஒரு தேநீர் பருகிவிட்டு, மதியை உடன் கூட்டிக்கொண்டு மூவரும் வெளியில் வந்து வடக்கு நோக்கி நடந்தோம்.
வழியில் அணில் ஒன்று எங்கிருந்தோ கொய்யாக் காய் எடுத்துவந்து சிறிய நுணா மரத்தின் கிளையில் உட்கார்ந்து கடித்துத் தின்பதை ஐ’க்கு காட்டினேன்.
பார்த்துவிட்டு வியப்புக் குரலில், ”அணில் அணில்… காய் காய்…’’ என்றான்.
உடனே எங்களூரில் அரைநெல்லிக்காயை அணில்காய் எனச் சொல்வதை நினைத்து மனத்துள் சிரித்துக்கொண்டேன்.
பிறகு அங்கிருந்த வீடொன்றின் மா மரத்தில் இருந்து தெருவில் விழுந்திருந்த இரண்டு மாங்காய்களை ஐ’யிடம் காட்டிவிட்டு மதி சொன்னாள். ”நம்மூர்ல மட்டுமில்ல. எல்லா ஊர்லேயும் இதுமாதிரி சீசன் மாறி காய்க்கும் போல.’’
‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு சொன்னேன். ”இயற்கையா அதுவா காய்க்கிற வரைக்கும் பிரச்சினை இல்ல. மனிதர்கள் பேராசை பிடிச்சி, வருசத்தோட எல்லா நாளும் ஒரு மரம் காய்க்கனும்னு செய்யும்போதுதான் பிரச்சினை.’’
ஆமோதிப்பது போல தலையசைத்தவளிடம், சென்னையில் உள்ள ஒரு கடையில் வருடம் முழுக்க நுங்கு கிடைப்பதை; விற்பதை குறிப்பிட்டு மேலும் சொன்னேன். ”சில மா மரம் காலம் மாறி காய்க்கறத சின்ன வயசுல இருந்தே பார்த்திருக்கன். ஆனா, பனை மரம் வருசம் முழுக்க காய்க்கறத எங்கேயும் பார்த்ததில்ல; கேள்வியும் பட்டதில்ல.’’
‘ஆறு மணிக்கு ஒரு ரயில் வரும் என்றிருந்தார்’ நண்பர். நேரம் பார்த்தேன். ஆறு ஆக இன்னும் பதினைந்து நிமிடம் இருந்தது. ”சரி, இன்னும் கால் மணி நேரம்தான் இருக்கு. இருந்து ரயில் பார்த்துட்டுப் போவோம்’’ என்று அங்கிருந்த தண்டவாளம் ஒட்டிய ஆளரவமற்ற பாதையில் நடக்கத் தொடங்கினோம்.
சட்டென்று வானம் மேலும் இருட்டிக்கொண்டு மழை பெரிய பெரிய தூறலாக விழ ஆரம்பித்தது. அது வரும் வேகத்தைப் பார்த்தால் கடுமையாகப் பெய்யப்போகிறது என்று தோன்றியது.
கையில் குடைகூட இல்லாமல் வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல், அருகில் இருந்த முன்தினம் பிறந்தநாள் விழா நிகழ்ந்த உறவினர் வீடு நோக்கி ஓடிப் போனோம்.
மழையிடம் இருந்த தப்பித்து நாங்கள் ஓடி வருவதைப் பார்த்து மகிழ்வோடு வரவேற்ற நண்பரின் மாமனார், எங்களை உள்ளே கூட்டிப்போய் அமரச் சொன்னார்.
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தை, தன் அக்காவோடு பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தது. அவர்கள் அருகில் ஐ’யை உட்கார வைத்து சேர்ந்து விளையாடச் சொல்லிவிட்டு, நாங்கள் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தோம்.
தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றில் புகழ்பெற்ற சிவன் கோயில்களை வரிசையாகக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலான கோயில்களுக்கு சென்றிருக்கிறேன். திருவதிகை கோயிலைக் காட்டி, ”இந்தக் கோயிலுக்கெல்லாம் போயிருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். சொன்னேன்.
”எங்களுக்கும் போக வேண்டும் என்று ஆசை. இனிமேல் முடியுமா தெரியவில்லை” என்றார்கள்.
உடனே நாங்கள், ”வாங்க, எப்போதுனாலும் வாங்க’’ என்றோம்.
சிறிது நேரத்தில் தேநீர் கொண்டு வந்து தந்தார்கள். அந்த மழைக்கு, அது தந்த குளிர்மைக்கு, எங்கோ ஓர் அந்நிய நாட்டில், ஒரு முன்பின் பழக்கமில்லாதவர்கள் வீட்டில் உட்கார்ந்துகொண்டு பருகியது அத்தனை இதமாக; சுவையாக இருந்தது.
ஒருமணி நேரம் ஆகியிருக்கும். மழை ஓரளவுக்கு விட்டிருந்தது. சரி, என்று ஒரு குடை மட்டும் வாங்கிக்கொண்டு, மெதுவாக அங்கிருந்து இருளொளிக்குள் நடந்து வீட்டுக்கு வந்தோம்.
குழந்தைகள் படித்து முடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வந்து அவர்களோடு சிறிது நேரம் விளையாடிவிட்டு, இரவு உணவு உண்டுவிட்டுப் போய் படுத்து உறங்கின போதும் மனத்துக்குள் மழை மட்டும் விடாமல் பெய்துகொண்டிருந்தது.
*