ஈழம் அன்ன ஈழம் – 3 : வணக்கம் ஈழம்

கதவு திறந்ததும் ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினர். எல்லோரும் போனதும் கடைசியாக எழுந்து வெளியில் வந்து ஈழ மண்ணில் முதல் தடவையாக பாதம் வைத்தேன். நீண்ட நாள் பேசிப் பழகின ஒருவரை நெடுநாட்கள் கழித்து சந்தித்தால் எப்படி இருக்குமோ, அப்படியோர் உயிர்ப்பு மிக்க உணர்வு உண்டானது.

உடனே மனத்துக்குள் மானசீகமாகச் சொல்லிக்கொண்டேன். ‘வணக்கம் ஈழ மண்ணே! இதோ, பிறந்து இத்தனை ஆண்டுகள் கழித்து உன்னைப் பார்க்க தாய் தேசத்திலிருந்து வந்திருக்கிறேன். உடன் மனைவியையும், மகனையும் கூட்டிக்கொண்டு. நீ நலமா? உம் மக்கள் நலமா? மருந்திட்டு ஒருபோதும் ஆற்ற முடியாத உன் காயங்கள் தரும் வலி இப்போதாவது சற்று தணிந்திருக்கிறதா? எத்தனை எத்தனை வரலாற்று நிகழ்வுகளைக் கண்டிருக்கிறாய். எத்தனை எத்தனை மாமனிதர்களை சுமந்திருக்கிறாய். எத்தனை எத்தனை ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறாய். போற்றலுக்குரிய பெருநூலகத்தை தீக்கு இரையாகத் தந்தவளே… இதோ, இன்று தொடங்கி இருபத்தி இரண்டு நாட்கள் உம்மோடு இருக்கப் போகிறோம். ஏந்திக் காத்தருள்வாய் அன்னையே.’

அப்போது வீசிய ஈரக் காற்று ஒன்று மெதுவாகத் தீண்டி வருடிவிட்டுப் போனது. அதை நான் வணங்கின ஈழ மண் ஆசிர்வதித்ததாய் எண்ணிக்கொண்டேன்.

பெரும் இயற்கை வளத்துக்கு மத்தியில் அமைக்கப்பட்ட மிகச் சிறிய விமான நிலையம். முன்னர் இராணுவத் தளமாக இருந்து மாற்றப்பட்டது. இந்தியாவின் தீவு நகரான அந்தமானின் போர்ட்பிளேருடன் ஒப்பிடினும் சிறியதுதான். சொல்லப்போனால் ஒரு பெரிய திரையரங்கம் அல்லது திருமண மண்டபம் அளவுக்கு ஒற்றை கட்டடம் மட்டுமே இருந்தது.

பயணிகளை அழைத்துப் போக வந்தவர்கள் அதன் ஒரு பக்கமாக முள் வேலியோரம் நின்று பார்த்துக்கொண்டிருப்பது வேடிக்கையாக இருந்தது.

நடந்தால் ஓர் ஐம்பது அடிக்குள் சென்றுவிடும் தூரம்தான் என்றாலும், நடந்து செல்ல அனுமதிக்காமல் சிறிய மின் பேருந்தில் ஏற்றிக் கூட்டிப் போனார்கள். சென்று இறங்கி நேராக உள்ளே நுழைந்து குடிவரவு அதிகாரியிடம் சென்றோம்.

சென்னைக்கு மாறாக இங்கே மதியையும் ஐயையும் உடனே அனுமதித்தவர், எனது பெயரையும், தோற்றத்தையும் பார்த்துவிட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. நான்கைந்து தடவை கணினியில் எதையோ பதித்துவிட்டு அல்லது தேடிவிட்டு, நடுநடுவில் என்னையும் பார்வையால் அளந்தார்.

அவரது உருவையும், சந்தேகக் கண் கொண்டு அதிலும், என் பெயரை பார்த்த விதத்தையும் வைத்து தமிழர் அல்ல; சிங்களவர் என்று எளிதில் தெரிந்துகொண்டேன். அதோடு, அங்கே முக்கியப் பணிகளில் இருப்பவர்களில் மிகுதியானோர் சிங்களவர் என்றும் அறிய முடிந்தது.

பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவராய், ‘என்ன விஷயமாக இலங்கை வந்திருக்கிறீர்கள்? எவ்வளவு நாட்கள் இருக்கப் போகிறீர்கள், எங்கே தங்கப் போகிறீர்கள்?’ போன்ற சம்பிரதாயக் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுவிட்டு, சொன்னதும் முத்திரையிட்டு உள்ளே அனுமதித்தார்.

சென்னை போன்று எளிதாக இல்லாமல் அங்கிருந்த கூட்டத்தோடு நின்று, எங்கள் பெட்டி வந்ததும் அதை நாங்களாகவே காட்டி எடுத்துத் தரச் சொல்லி, அது எங்களதுதான் என்று உறுதிப்படுத்த சீட்டைக் காட்டிப் பெறவே அரை மணி நேரம் ஆகிவிட்டன.

கொண்டு போயிருந்த பெட்டிகளையும், பையையும், எங்களையும் சோதனை செய்தவர்கள், என் தோள் பையை மட்டும் எடுத்துக்கொண்டு தனியாக ஓரிடத்துக்கு வரச் சொன்னார்கள்.

போனதும் அங்கிருந்த பெண் காவலர் வந்து திறக்கச் சொல்லி ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு, உள்ளே இருந்த வாசனை திரவியத்தை கையில் எடுத்துக் காட்டி, ”இது என்ன?” என்று சிங்களத்தில் கேட்டார்.

அதுதான் நான் கேட்கும் முதல் சிங்கள மொழி. தெரியாதபோதும் அவர் என்ன கேட்டிருப்பார் என நானாகவே யூகித்து, ”Perfume” என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னேன்.

மறுபடியும் அதையே கேட்டார். நானும் அதையே சொன்னேன்.

எரிச்சலோடு அங்கிருந்த அதிகாரிகளை ஒருதடவை பார்த்துவிட்டு, நீண்ட வாக்கியம் ஒன்றை உதிர்த்தார்.

ஒன்றும் புரியாதது போல் தலையாட்டிவிட்டு, ”can you speak in tamil or english?” என்று சொன்னேன்.

எனது ஆங்கிலத்தாலா அல்லது தமிழ் முகத்தாலா தெரியவில்லை. சட்டென்று முகம் சுழித்தவர், எதையோ சொல்லியபடி எடுத்துக்கொண்டு போகுமாறு கை காட்டினார்.

முகத்தில் எக்குறியையும் காட்டாமல் வெறுமே ”நன்றி” கூறிவிட்டு, ஓரமாக நின்றிருந்த மதியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து வெளியில் வரவும், மாற்றுத்திறனாளிகள் கூட்டத்தை வரவேற்பதற்காக ஏற்பாடு செய்திருந்த விழாக் குழுவினர் மேளம் கொட்டவும் சரியாக இருந்தது.

மனத்துக்குள் அது எங்களுக்கான வரவேற்பே என்று நினைத்து மகிழ்ந்துகொண்டு, சற்று தள்ளி காத்திருந்த நண்பருடன் காரில் ஏறி அங்கிருந்து பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் மல்லாகத்தில் இருக்கும் அவர் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

நல்ல தரமான சாலைகள். வழிநெடுக விதவிதமான தாவரங்கள். தெல்லிப்பழை முதலான ஊர்கள். ஆங்காங்கே பாழடைந்து போன வீடுகள், கட்டடங்கள்.

நான் கேட்காமலேயே நண்பர் சொன்னார். ”இதெல்லாம் போர் நடந்தபோது பாதித்த வீடுகள். சில வீடுகள் அவர்களாகவே விட்டுவிட்டுப் போய் இப்படி ஆனது.’’

அவற்றில் சிலதை கண்ட மாத்திரத்திலேயே அவை எத்தனைக் கனவுகளோடு கட்டப்பட்டன. அதில் எத்தனை பேர்கள், எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்திருப்பார்கள்? கடைசியில் எல்லாவற்றையும் இழந்துவிட்டு அல்லது விட்டுவிட்டு ஒன்றும் இல்லாமல் எங்கே போயிருப்பார்கள், என்ன ஆகி இருப்பார்கள்? அவர்களில் எத்தனை பேர் உயிரை இழந்திருப்பார்கள்? என்றெல்லாம் தோன்றியது.

அவ்வளவாக வெளியில் ஆள் நடமாட்டமும், சாலையில் வாகனங்களும் இல்லையென்றாலும் வேண்டிய மட்டும் கடைகள் இருந்தன. கூடவே, கோயில்களும், மருத்துவமனைகளும், பள்ளிகளும் (இலங்கையில் அது கல்லூரி), நூலகமும் இருப்பதை பார்க்க முடிந்தது.

பதினைந்து நிமிட பயணத்துக்குப் பிறகு நண்பரின் வீட்டுக்கு வந்தோம். நல்ல விசாலமான பெரிய வீடு. சுற்றிலும் மரம் செடி கொடிகள். எங்களுக்காக புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரவேற்பறைக்கு பக்கத்தில் இருந்த அறையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அது தந்த மகிழ்ச்சியில் போனதும் ஐயை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, நண்பர் இல்லத்தாருடன் இலங்கையின் முதல் தேநீரை சுடச்சுட பருகியவாறு சிறிது நேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீட்டைச் சுற்றிப் பார்த்தோம்.

மற்ற எல்லா அறைகளையும் விட பூசை அறையே பெரிதாக இருப்பதைக் காட்டிக் கேட்டதும் சொன்னார்கள். ”இலங்கைத் தமிழரை பொருத்தவரை வீடு கட்டும்போது பூசை அறையைதான் முதலில் பெரிதாகக் கட்டுவார்கள். பிறகு அதைவிட சிறிதாகத்தான் மற்ற அறைகளை கட்டுவது வழக்கம்.’’

வீட்டைவிட சுற்றிலும் இருந்த மரம் செடி கொடிகளே மனத்துக்கு நெருக்கமாக இருந்தன. அதிலும் குறிப்பாக, வீட்டின் முன்புறம் இருந்த ஆளுயர கள்ளிச் செடியைக் கண்டதும் மிகப் பிடித்துவிட்டது. உடனே உள்ளம் மீட்டெடுத்த,

‘இணைப்பூ

என்றோ கிறுக்கியது

நெடுநெடுவெனப் பூத்து

காதற்கடவுச்சொல்லானது

கள்ளிச்செடி இளமையுடன்

பூக்களுள் பூவாக

சிரித்திருந்த சொல்

அடர்ந்து விரிந்தது

சொல்லாகி சொல்லாக 

முள்ளுக்கும் மரத்துக்கும்

காவலாகி நிற்க

நினைவின் ரீங்கரித்த நொடிகள்

சட்டென மறைந்துபோனது

சொட்டுப் பாலாகி

கோடையிலும் பூத்திருக்கத் தெரிந்தது

எப்படிக் கேட்க

செத்தபின்னும் உயிர்த்திருக்கும் வித்தை மறைத்து

புள்ளியாய் சிரித்தது

அவ்விணைப்பூ’

என்ற எனது முன்பு எப்போதோ எழுதிய கள்ளிச்செடி குறித்தான கவிதையை நினைத்துப் புன்னகைத்தபடி தொட்டு வருடிவிட்டு, சிறு வயது முதல் கண்ட ஆயிரக்கணக்கான கள்ளிகளை மனத்துள் ஓட்டிப் பார்த்துவிட்டு, கண்ணுக்கெட்டின தூரம் வரையில் உள்ள தாவரங்களை ஒரு தேர்ந்த தாவரவாசியாய் மாறி ஆய்வு நோக்கில் கண்டிட்டேன்.

ஒன்றிரண்டு தவிர அனைத்துமே நம்மூரில் இருக்கும் அதே தாவரங்கள்தான். பனை, வேம்பு, மா, தென்னை, பாக்கு, கள்ளி, கொய்யா, கோவை, உண்ணிமில், ஞானா, பூவரசு, நுனா, பலா, செம்பருத்தி, முருங்கை, கருவேப்பிலை, சுண்டை, ஆவாரம், அரசு, ஆலம், எலுமிச்சை, நொச்சி, தொட்டாற்சுருங்கி, அரலி, வாழை, கலா, இலந்தை…

பிறகு வீட்டுக்குள் சென்று அமர்ந்து கொஞ்ச நேரம் குழந்தைகளோடு பேசி விளையாடிவிட்டு, மதிய உணவு தாமதமாகவே உண்டோம். முதல் யாழ்ப்பாணச் சோறு. செவ்வரிசியில் பொங்கியிருந்தார்கள். குழம்பு, ரசம், தயிர் என்று நன்கு ரசித்து ருசித்து [குறிப்பாக, தொட்டுக்கொள்ள வைத்திருந்த மாசிக் கருவாட்டு மசியலை] சாப்பிட்டுவிட்டு, அறைக்கு வந்து ஒரு மணி நேரம் ஓய்வாகப் படுத்திருந்துவிட்டு எழுந்து வேடிக்கை பார்ப்பதற்காக வெளியில் வந்தேன்.

நிலக் காட்சியும், அங்கிருந்த தனித்தனியான வீடுகளும் ஓரளவுக்கு கேரளத்தை நினைவுறுத்தினாலும், ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் கள்ளிச் செடியும், சிவனுக்கு உகந்த நந்தி சிலையும் வைக்கப்பட்டிருப்பது வித்தியாசமாகப் பட்டது.  

ஈழத் தமிழர்கள் பெரும் சைவப் பற்றுடையவர்கள் என்று முன்னமே கேள்வியுற்றதால் நந்தி சிலை வியப்பளிக்கவில்லை. ஆனால், நம்மூரில் எதிர்மறையாகச் சொல்லப்படும் கள்ளி இருந்ததுதான் ஆர்வத்தைக் கிளர்த்தியது. அதனால் எதிரே தெருவோரம் யாருக்காகவோ காத்திருந்த பெரியவரிடம் நானாகவே வலிய சென்று கேட்டேன்.

முதலில் நான் யார், எங்கே இருந்து எவர் வீட்டுக்கு வந்திருக்கிறேன் என்பதைக் கேட்டறிந்துகொண்டு சொன்னார். ”அது ஒன்றும் இல்லை தம்பி. கண்ணேறு படக்கூடாது என்பதற்காக வைத்திருக்காங்க.’’

”வித்தியாசமா இருக்கு ஐயா, அதான் கேட்டேன். எங்க ஊரில் இப்படியெல்லாம் வைக்க மாட்டாங்க.’’

”இங்கே கள்ளியும், நந்தியும் இல்லாத வீட்டை பார்க்க முடியாது தம்பி.’’

”ஆமாங்க ஐயா, பார்த்தேன். எல்லார் வீட்டிலும் இருந்தது.’’

இன்னும் சில வார்த்தைகள் அவரோடு கதைத்துவிட்டு, நன்றி கூறி விடைபெற்றுத் திரும்பி அத்தெரு வழியாகக் கொஞ்ச தூரம் நடந்ததும் ரயில்வே தண்டவாளம் இருப்பது தெரிந்தது.

மகிழ்ச்சியோடு அருகில் போய் இரு பக்கமும் ரயில் வருகிறதா என்று எட்டிப் பார்த்துவிட்டு, அதன் ஓரமாக இருக்கும் வழியாக வலது புறம் திரும்பி காலாற நடந்துவிட்டு மறுபடியும் அதே இடத்துக்கு வந்து நின்றேன். வானில் அந்தி ஞாயிறு தன் இறுதிக் கிரணங்களை வீசிக்கொண்டிருந்தது.

அதுதான் பார்க்கும் முதல் இலங்கையின் விழு ஞாயிறு. பிறந்தது முதல் இத்தனை நாட்களாகக் கண்ட அதே பழைய ஞாயிறுதான் என்றாலும், அப்போது அது எனக்கு வேறுமாதிரி தெரிந்திட்டது.

[இன்னும்]

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=