ஈழம் அன்ன ஈழம் – 2 : வான்வெளியில் நூல் வெளியீடு

முப்பதாயிரம் அடி வான் உயரத்தில் வங்காள விரிகுடா மேல் பறந்துகொண்டிருந்தது விமானம். வெளியில் எங்கு பார்த்தாலும் பஞ்சு மிட்டாய் போன்று கொத்துக் கொத்தான வெண் மேகங்கள். கீழே நீள விரிந்திருக்கும் ஆழியும், அதையொட்டின நிலப்பரப்பும்.
அதிகாலை சீக்கிரம் எழுப்பியதால் சரியாக எதையும் உண்ணாத ஐக்கு, கொண்டுபோயிருந்த வாழைப் பழத்தையும் பிஸ்கஸ்டையும் கொடுத்தோம். பசியோடு இருந்ததால் மறுக்காமல் உண்டுவிட்டு, விமானம் புறப்படுவதற்கு முன்பாக பக்கத்துச் சீட்டில் உட்கார்ந்திருந்த இலங்கைத் தமிழர்கள் இருவர் அவனுக்குக் கொடுத்திருந்த சாக்லேட்டையும் பிரித்துத் தரச் சொல்லிக் கேட்டான். ”கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றதும் கேட்டுக்கொண்டு, அதைக் கீழே வைக்காமல், எங்களிடமும் தராமல் கையிலேயே வைத்திருந்தான்.
விமானம் மேலே ஏறுகையில் கண்ட சென்னையின் பிரமாண்டக் காட்சியையும் அதிலும் குறிப்பாக, வளைந்தோடி வந்த அடையாறு ஆறு கடலில் களக்கும் கவின் மிகு எழிலை முதல் தடவை கண்டிட்ட மதி, அம்மகிழ்ச்சியை எப்படிச் சொல்வதென்று தெரியாமல் தவித்தாள்.
சோதனைகள் எல்லாம் முடிந்ததும் (அவை உண்டாக்கிய தலைவலியால் என்றுகூட சொல்லலாம்) முதல் வேலையாக தேநீர் அருந்த நினைத்திருந்தோம். ஆனால், அதற்கான நேரம் அமையாததால், ”நிச்சயம் விமானத்தில் இருக்கும், குடிக்கலாம்’’ என்றேன். ஆனால், விமானத்திலோ எவ்வித சூடான உணவுப் பொருட்களும் இல்லை என்றுவிட்டார்கள்.
முன் தினமே மதியிடம் ஒன்றுக்கு இரண்டு தடவை சொல்லியிருந்தேன். ”பேசாம நாம வீட்டில் இருந்து கிளம்பும்போது ஃபிளாஸ்க்ல டீ போட்டு எடுத்துப்போம். அப்பதான் நெனச்ச நேரத்துல, நெனச்ச இடத்துல வச்சி குடிக்க முடியும். அதோட, கொள்ளைக் காசும் தர வேண்டி இருக்காது.’’
அவளோ, தேநீர்ப் பிரியனான என் அனுபவப் பேச்சை காதிலேயே வாங்காததால், தேநீரின்றியே சோர்வாகக் கழிந்துகொண்டிருந்தது எங்கள் பாதி நாள்.
விமானத்தில் எங்களோடு பயணம் செய்தவர்களில் எழுபது சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள். யாழ்ப்பாணத்தில் இருக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து செயற்கை கால் வாங்கிக் கொடுத்து கூட்டிப்போகிறார்கள்.
அவர்களில் மேலதிகமானோருக்கு முதல் விமானப் பயணம். அதோடு, அவர்கள் தமிழ்நாட்டை அதிலும், அதன் தலைநகரான சென்னையை பார்த்துவிட்டு திரும்புவது பெரும் மகிழ்வைத் தந்ததாகப் பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது.
ஓர் அரை மணி நேரம் ஆகியிருக்கும். ஐயாவின் நூறாவது பிறந்தநாளுக்கும், ஐயின் முதல் பிறந்த நாளுக்கும் சேர்த்து ஒருசேர உருவாக்கியிருந்த ‘ஆயிரம் வேர் கொண்ட மரம்’ நூலினை பையிலிருந்து வெளியே எடுத்து, பின் சீட்டில் அமர்ந்து வந்த இளைஞர்களிடம் சிரித்து விளையாடிக்கொண்டிருந்த ஐ கையில் கொடுத்து வெளியிட்டோம்.
அதாவது, இப்பெருமைமிகு தனித்துவமான இரட்டை மலரினை; நூலினை முப்பதாயிரம் அடி வான் உயரத்தில் வைத்து ஐயாவின் சார்பாக நான் வெளியிட, நூலின் முதல் பிரதியை தமிழின் முதல் ஓரெழுத்துப் பெயருடைய ஐ பெற்றுக்கொண்டான்.
மனம் முழுக்க அப்போது ஐயாவே நிறைந்திருந்தார். ஏனெனில் அவரது நூறாவது பிறந்த நாளன்று ஊருக்குச் சென்று அவரை கண்டு வாழ்த்துக் கூறிவிட்டு வந்து எழுதிய ‘நூற்றாண்டு மனிதர்’ நீள் கடிதமும், ஐயின் முதல் ஓராண்டு வாழ்வை ‘நன்மை மலர்ந்தது’ என நாட்குறிப்புகளாக எழுதிய மனத்துக்கு இனிய பதிவுகளும் கொண்ட இரட்டை மலர் இது.
நூலை வெளியிட்டதும் இரண்டு சம்பவங்கள் அடுத்தடுத்து காட்சிகளாக மனத்துள் விரிந்து வந்தன.
ஒன்று, ஐயாவைப் பற்றியது.
சரியாக பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, பெரம்பலூர் – தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் இளங்கலை – கணிப்பொறி அறிவியல் படிக்க வீட்டைவிட்டு முதல் தடவையாகப் பிரிந்து போகும்போது, ஐயா என்னை வீட்டு பூசையறைக்குள் கூட்டிப் போய் கற்பூரம் ஏற்றி, கண்கள் மூடி கையெடுத்துக் கும்பிட்டு, என் நெற்றியில் திருநீறு இட்டுவிட்டு, ”எய்யா… மொத தடவயா நம்மூர வுட்டு வெளியூருக்குப் போற. போற எடத்துல ஆயிரம் ஏத்தம் எறக்கம் இருக்கும். எப்பயும் மனசுல நம்ம குடும்ப தேவாதிய நெனச்சிக்க. அவ எப்பியும் ஒன் கூடயே இருந்து காபுந்து பண்வா. நம்மூருல மட்டும்தான் இருப்பான்னு நெனக்காத. இந்த ஒலகத்துல எங்க போனாலும்… நம்மக் கூடயே வருவா; இருப்பா. செரியா?’’ என்று சொன்னது.
இன்னொன்று, ஐயைப் பற்றியது.
சென்றாண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி எனது 36 ஆவது பிறந்தநாள் அன்று, ஐ’க்கு ‘உலகம்’ என்ற சொல்லை முதல் தடவையாகச் சொல்லி, ”ஐ குட்டி, இந்த உலகம்’ன்ற சொல்ல மங்கல சொற்கள்ல ஒண்ணா நம்ம முன்னோர்கள் சொல்வாங்க. அதனாலதான் இதத் தொடக்கமா வச்சு, ‘உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்’னு கம்பர் கம்பராமாயணத்தையும், ‘உலகெலாமுணர்ந்து ஓதற் கரியவன்’ன்னு சேக்கிழார் பெரிய புராணத்தையும் (இதை சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததா சொல்வாங்க) தொடங்கி இருப்பாங்க.
அது மட்டுமில்ல… ‘உலகந் திரியா’ன்னு மணிமேகலையிலும், ‘உலக மூன்றும்’ன்னு வளையாபதியிலயும் உலகம்’ன்ற சொல்ல தனித்தும், ‘நனந்தலை யுலகம்’ன்னு முல்லைப்பாட்டுலயும், ‘மூவா முதலா வுலகம்’ன்னு சீவகசிந்தாமணியிலயும் அடைமொழியுடன் சேர்த்தும் பாடியிருப்பாங்க. ஆமா, மகனே.
இப்படி இன்னும் எத்தனையோ உதாரணங்கள சொல்லிக்கிட்டே போகலாம்.
உலகம்’ன்ற சொல்லுக்கு பூமி, புவனப்பொது, நிலப்பகுதி, ஆகாயம், திக்கு, மக்கட்தொகுதி, நன்மக்கள், சீவராசிகள், உயர்குணம், வழக்கம்’னு பல பொருள்கள் இருக்கு.
அதேபோல… அண்டம், அம்பு, உகம், உலோகம், கடலெல்லை, சகத்து, சகம், சீவாதாரம், செகதலம், செகம், ஞாலம், தலம், தாலம், துனியா, நன்னிலை, நாடு, பரப்பு, பவம், பிரபஞ்சம், பிரமாண்டம், புடவி, புவனம், பூமி, பொழில், பெளதீகம், மார்க்கம், லோகம், வளாகம், வைப்பு, ஆலம், ஏடு’ன்னு எத்தனையோ நிகர்ச்சொற்களும் இருக்கு. ஆமா, மகனே.
இந்தச் சொல் எத்தன சிறப்புடையது, பழமையானதுன்னு காட்ட… ஒரே ஓர் உதாரணமா… ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னான சங்க இலக்கியத்துல மட்டும் 146 இடங்கள்ல (உலகம் – 56; உலகு – 90) பாடியிருக்கறத சொல்லலாம்’’ என்று அறிமுகப்படுத்தியது.
பிறந்தது முதல் நடந்தும், இரு சக்கர வாகனம் தொடங்கி பேருந்து, ரயில் எனப் பலவற்றில் பயணித்த ஐக்கு, முதல் விமானப் பயணம் எப்படி இருக்கப் போகிறதோ என கடந்த ஒரு வாரமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
நடுநடுவில் அவ்வப்போது வானில் விமானம் செல்வதைக் காட்டி, ”ஐ குட்டி… இன்னும் ஒரு வாரத்துல நாம அதோ போகுதே விமானம்… அதுல போகப்போறோம்’’ என்றும் கூறி வந்தோம்.
விமானத்தை அத்தனை அருகில் கண்டபோது முதலில் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டான். அவ்வளவுதான். மற்றபடி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் உள்ளே பார்க்க அவனுக்கு எதுவும் இல்லாததால் கடுப்பானவன், சிறிது நேரம் அழுதுவிட்டு உறங்கிவிட்டான்.
விமானம் இலங்கையை நெருங்க நெருங்க உள்ளத்துள் ஒருவித பரவசமும், உற்சாகமும் சுரக்க ஆரம்பித்தன. கம்பராமாயணத்தின் ‘இலங்கை காண் படலத்தில்’ கம்பர் இலங்கையை வளம் மிக்க போக பூமியாக சித்தரித்திருப்பார். அதுவும், இலங்கை என்னும் கடலால் சூழப்பட்ட வளமான தீவானது, பொன்னும் மணியும் நிறைந்த இந்திரலோகம் போன்ற அழகுடையது என்றிருப்பார்.
‘நம் திரு நகரே ஆதி வேறு உள நகர் கட்கு எல்லாம்
வந்த பேர் உவமை கூறி வழுத்துவான் அமைந்த காலை,
இந்திரன் இருக்கை என்பர்; இலங்கையை எடுத்துக் காட்டார்;
அந்தரம் உணர்தல் தேற்றார், அருங் கவிப் புலவர் அம்மா!’
இவற்றோடு, இன்றைக்கு இருக்கும் நவீன எழுத்தாளர்களின் எழுத்தில் வாசித்தவற்றையும், இலங்கை நண்பர்கள் பேச்சில் கேட்டவற்றையும், அவ்வப்போது கணொளியாக கண்டவற்றையும் மனத்திரையில் ஒரு தடவை ஓட்டிப் பார்த்தேன்.
சரியாக ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இலங்கை நிலப்பரப்பு மங்கலாகத் தெரிய ஆரம்பித்தன. அதிலும் முதலில் கண்ணுக்குப் பட்டது அதன் ஒயிலான கடற்கரைதான். அடுத்த கொஞ்ச நேரத்தில் அதையொட்டி இருந்த பனை மரங்கள் தெரிந்தன.
ஈழம் என்ற சொல்லுக்கு பனை என்று பொருள். எத்தனை பொருத்தமானப் பெயரை தம் மண்ணுக்கு வைத்திருக்கிறார்கள் என எண்ணிச் சிலிர்த்துக்கொண்டேன். [தவிர பொன், கள், கள்ளி முதலான பல பொருள்களும் உண்டு ஈழத்துக்கு.]
தமிழின் மிக மூத்த இலக்கியப் பனுவலான சங்க இலக்கியம் ‘தொன்மாவிலங்கை’ என்கிறது இலங்கையை. சிலப்பதிகாரம் அதனை வழிமொழிந்து ‘தொல் இலங்கை’ என்று குறிப்பிடுகிறது. இவ்வரிசையில், பதினாறு கால் மண்டபத்தையும், பதினாறு நூறாயிரம் பொற்காசுகளையும் பரிசாகப் பெற்று தமிழ் இலக்கியப் பரப்பில் இறவாப் புகழ் எய்திய கடியலூர் உருத்திரங்கண்ணனார், கரிகால் வளவன் என்னும் சோழ மன்னனான திருமாவளவனைப் பாடும் பட்டினப்பாலையில் புகார் நகருக்கு விற்பனை செய்வதற்காக சிறப்பு மிக்க ஈழத்து உணவு கொண்டுவரப்பட்டதாகப் பாடியிருப்பதையும் (ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் – 191), ஈழத்து கயவாகு மன்னன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி நடத்திய விழாவுக்கு வந்திருந்ததையும், பின் அவன் இலங்கையில் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட்டதையும் சிலம்பு குறிப்பிடுவதையும் பார்க்கலாம்.
மேலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் சங்கப் புலவர் பாடிய ஏழு பாடல்கள் சங்க நூல் தொகுப்பில் (நற்றி – 366; குறுந் – 189, 343, 360; அகநா – 88, 231, 307) இடம் பெற்றிருப்பதையும் பார்க்கலாம்.
[தவிர, மன்னாரைச் சேர்ந்த முரஞ்சியூர்முடிநாகராயர் (புறநானூற்றின் முதல் பாடலை பாடியவர். சில பதிப்புகளில் இரண்டாவது பாடலாக இருப்பது), காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் போன்றோரும் ஈழப் பின்னணி கொண்டோராக சங்க இலக்கிய ஆய்வுகள் இயம்புவதையும் காணலாம்.]
அடுத்து, ராவணன் ஆண்டதாக அதாவது, ராவண தேசமாக சொல்லப்படும் பூமி. ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகள், சி.வை. தாமோதரம் பிள்ளை தொடங்கி, நான் பெரிதும் மதிக்கும் இன்றைய மூத்த எழுத்தாளுமை அ.முத்துலிங்கம் வரையான பலர் பிறந்த நிலம். இன்னும் சில நிமிடங்களில் அங்கே என் பாதம் பதியப்போவதை எண்ணி பேருவகையுற்றேன்.
எங்கள் இருவரது மடியிலும் ஒருசேரப் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஐ, தனக்குள் எதையோ கண்டோ; கேட்டோ அல்லது நினைத்தோ புன்னகைத்துக் கொண்டிருந்தான் (ஒருவேளை நான் நினைத்ததையே நினைத்திருப்பானோ!). அதைப் பார்த்து ரசித்த என் தோளைத் தொட்டுக் கூப்பிட்டு மதி சொன்னாள். ”எறங்கப் போறோம்.’’
வெளியே பார்த்துவிட்டு, ”ஆமாம்” என்று தலையசைத்தேன்.
விமானம் மெல்ல நிலம் நோக்கித் தாழ்ந்து இறங்கி ஓடுபாதையில் பெரும் சத்தத்தோடு ஓடிச்சென்று நின்று, பின் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து நிலையத்தருகில் போனது.
அப்போது என் மனம் முழுக்க ஈழம் என்னும் பனை மரங்களே நிறைந்து, வீசும் தமிழ்க்காற்றில் சலசலத்துக்கொண்டிருந்தன.
[இன்னும்]