ஈழம் அன்ன ஈழம் – 1 : புறப்பாடு

ஒரு பயண நூலை எவ்வாறு தொடங்க வேண்டுமோ அதற்கு மாறாக, எங்களது இந்த இலங்கை பயண நூலை இதோ, இவ்வாறு ஆரம்பிக்கிறேன்.
ஐ’க்கும் மதிக்கும் இது முதல் பன்னாட்டுப் பயணம். கூடவே, முதல் விமானப் பயணம். எனக்கோ, இரண்டாவது வெளிநாட்டுப் பயணம்; எட்டாவது விமானப் பயணம். இதையெல்லாம் தாண்டி இந்தியா என்னும் தாய் தேசத்திலிருந்து இலங்கை என்னும் சேய் தேசத்துக்கு மூவராய் மேற்கொள்ளும் முதற்பயணம்.
பயணம் என்றாலே உள்ளத்துள் குதூகளித்துக் தொடங்கிவிடும் எனக்கு, இரண்டு வயது நிறையாத மகனோடும், கடல் தாண்டாத; எனினும் கடல் மீது பெரு பித்துடைய மனைவியோடும் செல்லும் 22 நாட்கள் நீண்ட பயணம் என்பது இரட்டித்த மகிழ்வைத் தந்தன.
சென்றாண்டு ஐ பிறந்த சில தினங்கள் கழித்து அவனைப் பார்க்க இலங்கை – யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த வாசக நண்பர் ஒருவரது அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக முடிவானது. அது தொடங்கி இலங்கை குறித்த பலவற்றை தினந்தினம் தேடிப் படிக்கவும், காணவும் தொடங்கினாள் மதி. நானோ, அது பற்றின ஆர்வம் உள்ளுக்குள் மிகுந்திருந்தாலும் காட்டாது ‘திருவாதிரை’யில் மூழ்கியிருந்தேன்.
சரியாக நவம்பர் 22, 2025 அன்று காலை 10:30 மணிக்கு சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் – பலாலிக்கு 6E-1177 எண்ணுடைய இண்டிகோ விமானம் ஏறுவதற்காக அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து அரிபிரியில்லாமல் கிளம்பி, மழை வந்தால் பாதிக்காதவாறு சாளரம், கதவு யாவற்றையும் ஒன்றுக்கு இரண்டு தடவை நன்றாக மூடிவிட்டு (குறிப்பாக புத்தகங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு முன்தினமே தனியாக எடுத்து உயரமான இடத்தில் வைத்துவிட்டு), ஆறரை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு மூன்று கி.மீ தூரத்தில் இருக்கும் விமான நிலையத்தை சில நிமிடங்களில் அடைந்தோம்.
வழியனுப்ப எனது புத்தகங்களை பேருவகையோடு வடிவமைக்கும் சக்தி சார் வந்திருந்தார். அவரோடு பேசியபடி அவர் எங்களுக்காக கொண்டு வந்திருந்த காலை உணவை அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து உண்டோம்.
பொதுவாக பன்னாட்டு விமானம் ஏறுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பாக வரச் சொல்வது வழக்கம். ஆனால், மூன்று மணி நேரம் முன்னதாகப் போனால் போதும் என்று ஏழரைக்குள் சென்றால் அங்கே ஒருவரையும் காணோம்.
‘சரி, காத்திருப்போம்’ என்று ஐயோடு அங்கும் இங்கும் நடந்து, வரிசையாக வரைந்து வைத்திருக்கும் தமிழகக் கோயில்கள் தொடங்கி, அவ்வழியாக வந்து செல்வோர் வரை வேடிக்கை பார்த்தபடி மாறி மாறி விளையாடிக்கொண்டிருந்தோம்.
எங்களைப் போல முன்னமே வந்திருந்த இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலியாவில் குடியிருக்கும் தமிழ்ப் பெண் ஒருவர், தம் இரு பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நாங்கள் செல்லும் அதே விமானத்தில் ஏறுவதற்காக வந்திருந்தார்.
நான் எழுத்தாளர் என்பதை பேச்சினிடையில் தெரிந்துகொண்டவர், ‘என் புத்தகங்கள் ஏதேனும் கிடைக்குமா?’ என்று கேட்டார். உடனே பையிலிருந்த தாவர சங்கமத்தின் பிரதியை எடுத்து, அவர் பிள்ளைகளின் பெயர்கள் எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தேன். மகிழ்வோடு பெற்றவர், ஐ’க்கு பெரிய சாக்லேட் பரிசாகத் தந்தார்.
எட்டரை மணிக்கு வந்த விமானப் பணியாளர்கள், அடுத்த சில நிமிடங்களில் எங்களுக்கான விமானச் சீட்டை வழங்கினார்கள். பெற்றுக்கொண்டு அடுத்தடுத்த சோதனைகளை முடித்து குடிவரவு அதிகாரியிடம் சென்றோம்.
அதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல்தான் இருந்தது. அங்கே சென்றதும் எங்கள் இருவரையும் எக்கேள்வியும் கேட்காமல் அனுமதித்தவர், ஐ’யின் பெயரை பார்த்துவிட்டு முதலில் ஒருவாரு என்னை நோக்கி முறைத்தார். பிறகு இரண்டு தடவை கணினியில் பதித்துப் பார்த்துவிட்டு, அடுத்திருக்கும் வேறோர் அதிகாரியிடம் செல்லுமாறு பணித்தார்.
அங்கு போனதும் அவரும் அதேபோல முறைத்துவிட்டு, இரண்டு மூன்று தடவை பதித்துப் பார்த்தார். பின் என்னிடம், ”எதுக்கு இப்படியெல்லாம் பெயர் வைக்கிறீங்க?’’ என்று கேட்டார்.
தாழ்வானக் குரலில், ”ஏன், என்னாச்சு சார்?’’ என்று கேட்டேன்.
அவரோ கடுகடுத்த முகத்துடன், ”நீங்க சாதாரணமா என்னாச்சுன்னு கேட்குறீங்க. இப்படி பெயர் வைத்ததால எடுத்துக்கவே மாட்டுது’’ என்றுவிட்டு மறுபடியும் முயன்றார்.
பிறகு எரிச்சலோடு கடவுச்சீட்டை கீழே வைத்துவிட்டு சண்டையிடும் நோக்கில் என்னிடம் சொன்னார். ”பெயர் இரண்டு எழுத்துல வைத்திருக்கீங்க. சர் நேம் வேறு இல்லை. ஏன், இப்படியெல்லாம் பெயர் வைத்து எங்கள் உயிரை வாங்குறீங்க?’’
”அவனுக்கு எந்த அடையாளமும் தரக்கூடாதுனுதான் சார் சர் நேம் வைக்கல.” மிகப் பணிவோடு சொன்னேன்.
”நீங்கள் பாட்டுக்கு பெயர் எப்படி வேணா வைத்துடுவீங்க. ஆனா, இங்கே எடுத்துக்க மாட்டுது. இப்ப என்ன செய்யறது?’’
எதுவும் சொல்லாமல் மெளனித்தேன்.
”இப்படி பெயர் வைத்ததுக்காகவே உங்களை திருப்பி அனுப்பி… போய் பாஸ்போர்ட்ல பெயர் மாற்றிட்டு வாங்கன்னு சொல்வேன், பாத்துக்கோங்க.’’
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவனை, அவர் திருப்பி அனுப்புவதாக சொன்ன வார்த்தைகள் பெரிதாகச் சீண்டியது. உடனே குரலை உயர்த்தி, ”அது எப்படி சார் திருப்பி அனுப்புவீங்க? எங்கக் குழந்தைக்கு எல்லோரையும் போல இல்லாம… அர்த்தமுள்ள புதுப்பெயரை தனித்துவமா வைத்திருக்கோம். இதுக்கு நீங்க எங்களக் கொண்டாடனும்; பாராட்டனும். அதை விட்டுட்டு திருப்பி அனுப்புவோம்னு சொல்றீங்க’’ என்றேன்.
”அதுக்குன்னு இப்படி ரண்டு எழுத்துலேயா பெயர் வைப்பீங்க?”
”தமிழ்ல ஓர் எழுத்து, ஆங்கிலத்துல இரண்டு எழுத்து. இப்படி பெயர் வைக்கக் கூடாதுன்னு விதி எதுவும் இருக்கா சார்?’’
விதிமுறை குறித்துப் பேசினதும் அவர் முகமே மாறியது.
”விதி இல்லைதான். அதுக்குன்னு சர் நேம் கூட வைக்காம…’’
மறுபடியும் அவர் சர் நேமில் வந்து நின்றதும் எரிச்சலாகி சொன்னேன். ”சார், எல்லாமே காரணத்தோடதான் வைத்திருக்கோம். அதையெல்லாம் விளக்கி சொல்லிதான் பாஸ்போர்ட்கூட வாங்கியிருக்கோம்.’’
அவரோ விடுவதாக இல்லை.
”பாஸ்போர்ட் வாங்கிட்டா மட்டும் போதுமா?’’
ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இவரும், இவர் போன்று இங்கே இருப்பவர்களும் இப்படி ஒரு பெயரை இதுநாள் வரை எதிர்கொண்டதில்லை. அதனால் குறைந்தது நான்கு எழுத்து பதித்தால் மட்டுமே ஏற்பது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் கணினியில் எவ்வாறு பதிப்பது என்று தெரியவில்லை. அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்.
”வேற என்ன வேணும் சார்?’’ என்று கேட்டுவிட்டு சொன்னேன். ”வெளிநாட்டுக்குப் போகத் தேவையான பாஸ்போர்ட்டும், விமானச் சீட்டும், விசாவும் இருக்கு. வேறு ஏதாவது கூடுதலா வேணும்னா கேளுங்க, தர்றோம். அதை விட்டுட்டு எங்கக் குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கணும்னு அறிவுரை எதுவும் சொல்லாதீங்க. அதை நாங்க உங்கக் கிட்ட கேட்கவும் இல்லை. எல்லோரையும் போல வைத்த பெயரையே வைக்காம… தமிழ் மொழியிலேயே முதல் ஓரெழுத்துப் பெயரை வைத்திருக்கோம். அதுவும் சும்மா வைக்கணுமேன்னுலாம் வைக்கல. பல அர்த்தங்கள் கொண்டது.’’
தெளிவாக அதேநேரம், உறுதியானக் குரலில் சொன்னேன்.
மேற்கொண்டு எதுவும் பேசாதவர், விசாவில் சர் நேம் இருக்கும் இடத்தில் பெயரையே இன்னொரு தடவை அதுவாகவே பதித்தது போல, ‘AIAI’ என இரண்டு தடவை பதித்து எடுத்துக்கொண்டதும் முத்திரை குத்தி கையெழுத்திட்டுத் தந்து, ”சரி, போங்க” என்றார்.
”நன்றி” கூறி பெற்றுக்கொண்டு, ‘இதுவரைக்கும் இப்படி யாரும் பெயர் வைக்காதது உண்மையா இருக்கலாம் சார். இனி இதுமாதிரி பெயர் வைத்துட்டு பலர் வருவாங்க. அதற்கு நான்கூட காரணமா இருக்கலாம். அதுக்கெல்லாம் ஏற்றது போல கணினியை கொஞ்சம் தயவுசெய்து அப்டேட் செய்ய சொல்லுங்க’ என்று வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாமல் ஆனால், ஒற்றை பார்வையால் சொல்லிவிட்டு அங்கிருந்து வந்தோம்.
இவ்வளவு நேரமாக பெரும் பீதியோடு இருந்த மதி, இப்போதுதான் சற்று ஆசுவாசமாகி இருந்தாள். அவள் முகம் நோக்கி புன்னகைத்துவிட்டு ஐ’யை பார்த்தபடி சொன்னேன், ”இது வெறும் ஆரம்பம்தான் மகளே. இதுபோல இன்னும் பல பிரச்சினைகளை… இவன் இந்தப் பெயருக்காகவே வருங்காலத்துல சந்திக்கப் போறான்.’’
”அதுக்குன்னு இப்படியா?”
”யாரும் செய்யாத ஒண்ண புதுசா நாம செய்திருக்கோம். அதனால இப்படிதான் இருக்கும்.’’
எங்கள் விமான வாயிற்கதவு திறக்க இன்னும் சில நிமிடங்களே இருந்தன. தோளில் நீண்ட நேரமாக மாட்டியிருந்த பையை அங்கிருந்த இருக்கையில் வைத்துவிட்டு, ஓய்வறைக்கு சென்றுவந்து சில ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.
பிறகு ஊரிலிருக்கும் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் அழைத்து வெளிநாடு செல்லும் தகவலைச் சொல்லிவிட்டு, சொடுக்கியிருந்த ஒளிப்படங்களில் மூன்றினைத் தேர்வு செய்து அதனுடன்,
‘ஐயா’வை 94 வயதில் பறக்க வைத்தேன்;
ஐ’யை ஒன்றே முக்கால் வயதில் பறக்க வைக்கிறேன்.
பறத்தல் இனிது; பறந்துகொண்டே இருத்தல் அதனினும் இனிது’
என்று எழுதி சமூக வலைதளங்களில் பதிவிட்டேன்.
சட்டென மனத்திற்குள் ஏழாண்டுகளுக்கு முன்பு ஐயாவையும், அம்மாவையும் முதல் தடவை விமானத்தில் கூட்டிப்போன நாளின் காட்சிகள் விரிந்து மலர்ந்தன. கூடவே, இதே விமான நிலையத்தில் வைத்து விமானச் சீட்டை ஐயாவின் கையில் கொடுத்து, ‘இதான் ஃப்ளைட் டிக்கெட்’ என்றதற்கு, அவர் வெள்ளந்தியாகக் கேட்ட ‘நாம பிளைன்ல போறமா?’ என்ற கேள்வியும், அதைத் தொடர்ந்து ‘ஆமாம்’ எனத் தலையாட்டியதும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியும், பிறகு விமானத்தில் ஏறி உட்கார்ந்ததும் ஐயா சொன்ன, ‘சின்ன வயசுல மாடு மேச்சிட்டு இருக்குறப்ப எறும்புமாரி வானத்துல போற பிளைனப் பாத்திருக்கன். அப்பல்லாம் நெனச்சிக்கூடப் பாத்ததில்ல. இப்ப அந்தப் பிளைனுக்குள்ளார ஒக்காந்திருக்கன்’ என்ற வார்த்தைகளும் ஒலித்து மகிழ்த்தின.
குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே வாயில் திறக்கப்பட்டு, எங்களை பேருந்தில் ஏற்றிப்போய் விமானத்தருகில் விட்டார்கள். அவ்வளவு நேரம் ஒன்றும் பேசாமல் தன் மறந்து வேடிக்கை பார்த்து வந்த ஐ, விமானத்தை அதுவும், அவன் முதல் தடவை பயணிக்கப் போவதை மிக அருகில் கண்டுவிட்டு, ”என்னம்மா… என்னம்மா…?’’ என்று ஆர்வம் பொங்கக் கேட்டான். சொன்னோம்.
பிறகு வரிசையில் நின்று ஏறி, மதியும் ஐயும் சாளரத்தோர இருக்கையிலும், நான் அடுத்ததிலும் உட்கார்ந்துகொண்டோம்.
சிறிய விமானம் என்பதால் இரண்டு பெரிய பேருந்துகள் சேர்ந்த அளவுக்கே இருப்பதை பார்த்துவிட்டு, ”இது என்ன பஸ் மாதிரி இருக்கு?’’ என்று கேட்டாள் மதி.
ஒன்றும் கூறாமல் சின்னதாக சிரித்துவிட்டு, அவள் மடியில் உட்கார்ந்திருந்த ஐயிடம் சொன்னேன். ”ஐ குட்டி… அதோ, அங்க தெரியுது பார் மலை. அதுதான் நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்க பல்லாவரம் மலை. அங்கே இருந்து நாம மேல பறந்து போற விமானத்தப் பாத்து டாட்டா காட்டுவோம்ல… அதுமாதிரி இப்போ நாம இந்த விமானத்துல இருந்து நம்ம வீட்டையும், மலையையும் பாத்து டாட்டா காட்டுவோமா?’’
புரிந்ததோ இல்லையோ, மிகுந்த உற்சாகக் குரலில் ”ம்’’ என்றான்.
சரியாக 10.30-க்கு விமானம் மெல்ல நகரத் தொடங்கி ஓடுபாதையை அடைந்து சில நொடிகள் நின்றுவிட்டு, பிறகு வேகமாக ஓடிப் போய் வான்நோக்கி எழும்பி தன் இறக்கைகளை விரித்துப் பறக்கத் தொடங்கியது.
ஆர்வக் கண்கள் கொண்டு ஐயும் மதியும் விட்டு விலகிப் போகும் மண் வெளியையும், எட்டி நெருங்கி வரும் வான் வெளியையும் காண, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஏனெனில், இது அவர்களுக்கான தலை வான் பயணம். அதோடு, ஐ தன் உலகப் பயணப் பட்டியலில் இட்டிருக்கும் பிள்ளையார் சுழி. ஆகையால் ஒரு திறன் மிக்க ஒளிப்படக் கருவி நொடிக்கு அறுபது பிரேம்கள் பதிப்பது போல் எனது புறவிழியால் அகவிழியில் நொடிக்கு ஆயிரம் பிரேம்களுக்கு மேல் பதிவு செய்திட்டேன். ஆம், ஆம்!
[இன்னும்]