முரம்பு – 26

சோலைக்கண்ணன் இறந்துபோய் சரியாக ஆறு மாதம் ஆகிறது. விடிந்தால் ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை. முத்துசாமிக் கவுண்டரின் நண்பர் மாரிமுத்து கவுண்டர், தன் நிலத்தோரமிருக்கும் எல்லைச்சாமிக்கு கிடாவெட்டி பொங்கல் வைக்கப் போவதாகச் சொன்ன நாள்.
‘மாரிமுத்து வேற வூட்ல எல்லாரயும் கூட்டுனு வான்னு சொல்லிருந்தான். போவலன்னா சங்கடப்படுவான். பொண்ணு வேற ரண்டு நாளா காயலா கீது. ஒண்ணு, போனா நாம மட்டும் போவணும்… வேணும்னா சின்னவன கூட கூப்டுனு போவலாம். இல்ல, போவாம வுட்ட்டு… அப்பறமா பாக்கும்போது சொல்லி சமாளிச்சிக்கலாம். என்ன பண்ணலாம்…?’
யோசித்தபடியே வீட்டின் பின்னால் பூவரச மரத்தடியில் போட்டிருந்த கட்டிலை எடுத்துவந்து வாசலில் போட்டு படுத்துக்கொண்ட கவுண்டர், அடுத்த நாள் காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு கோயிலுக்குப் போய் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்து முருகனை உடன் வரசொல்லி கூட்டிக்கொண்டு, ”ஏன் பூர்ணி, நானும் தம்பியும் மாரிமுத்து கொல்லிக்கா போயி வர்றம். இன்னிக்கி கெடாவெட்டி பொங்குலு வக்கிறான். நம்ம எல்லாரயும் ஒண்ணா வர சொல்லிருந்தான். என்ன பண்றது… பாப்பாக்கு ஒடம்பு சரில்ல. அதான் நானாது போயி தலகாட்டிட்டு வரலாம்னு பாக்கறன். இந்த செவடன் எதனா வந்தான்னா, பொசாய்க்கா வர சொல்லு’’ என்று பூரணியம்மாவிடம் சொல்லிவிட்டு, ரவ பொங்கல் சோறு கிண்ணியில் போட்டுத்தர சொல்லி தாழ்வாரத்தில் உட்கார்ந்து, முன்தினம் மாலை வைத்த முருங்கக்கீரை சாம்பார் ஊற்றிப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டார்.
சோலைக்கண்ணன் மறைவு கிட்டத்தட்ட ஊரிலுள்ள எல்லோரிடத்திலும் ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் குறிப்பாக கவுண்டருக்கு, அவன் குறித்த நினைவுகள் அடிக்கடி வந்து தொந்தரவு செய்துகொண்டிருந்தன.
சிலர், அவன் தூக்குமாட்டி இறந்துபோன புளிய மரத்தடியில் மதிய நேரத்திலும் முன்னிரவிலும் மென் சத்தத்தில் அழுகுரல் ஒன்று கேட்பதாகவும், இன்னும் சிலர் புல்லாங்குழல் ஊதும் சத்தம் ஒலிப்பதாகவும் சொல்கிறார்கள்.
நள்ளிரவில் அவ்வழியாக மணி ஆச்சாரியுடன் போய் சட்டப்பாறை சந்தில் தேனழித்து வந்த சேவிக் கவுண்டரோ, அங்கே யாரோ உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததாக ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார்.
வருடந்தோறும் பொங்கலையொட்டி, பெரும்பாலும் முன்னமே, பெரிய கால்வாயில் தண்ணீர் வந்துவிடும். ஆனால் இந்தாண்டு, சரிவர மழைபெய்து சாத்தனூர் அணை நிரம்பாததால் நான்கு மாதம் வரவேண்டிய தண்ணீரை இரண்டு மாதமாகக் குறைத்திருந்தார்கள். அதுவும் பொங்கல் முடிந்து கிட்டத்தட்ட ஒருமாதம் கழித்தே தண்ணீர் வந்தது.
அதனால் முரம்புக் கொல்லியில் போட்டிருந்த மல்லாட்டை பயிர்களுக்கு போதிய அளவு நீர் பாய்ச்ச முடியாமல் போனதால் சொல்லிக்கொள்ளும்படிக்கு இம்முறை விளைச்சல் இல்லை. சோலைக்கண்ணனின் இறப்பு ஒருபக்கம் என்றால், சரிவர விளைச்சலின்றிப் போனது இன்னொரு பக்கம் கவுண்டருக்கு பெரும் வருத்தத்தைத் தந்தது.
‘ஒருவேள காவாயில முன்னாலயே தண்ணீ வுட்ருந்தா… சோலக்கண்ணன் சுருக்கு மாட்டும்போது யாராது காவாயாண்ட இருந்திருப்பாங்க’ என்றும், ‘அப்டி யார்னா இருந்திருந்தா… கண்டிப்பா பாத்து அவன தடுத்து நிறுத்திருப்பாங்க’ என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். செவடனும் இதையேதான் இரண்டு மூன்று தடவை கவுண்டரிடம் சொல்லி வருத்தப்பட்டான்.
கோயில் பொர்ச மரத்தடியில் உட்கார்ந்து காலில் பொத்திருந்த பீவேல முள்ளை எடுத்துக்கொண்டிருந்த ராமு கவுண்டரை, ”வாடா ராமு, மாரிமுத்து கொல்லிவரிக்கும் போயி வரலாம்’’ என்று முள்ளை எடுத்துவிட்டு கூட்டிக்கொண்டு வந்த கவுண்டர், கோனாமூட்டு தென்னந்தோப்புக்குள் நடந்து, சோலைக்கண்ணன் தூக்குமாட்டி இறந்துபோன புளியமர மேடேறி மதகுப் படிக்கட்டு வழியாக கால்வாய்க்குள் இறங்கி, தெற்குப் பக்கமாக முனியப்பன் கோயிலுக்கு நேராக தோளில் பொனக்கட்டையில் மதிய உணவு போட்டு மாட்டிக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சேவிக் கவுண்டரையும் மாரி தாத்தாவையும் பார்த்துக்கொண்டு ஏறி மறுகரைக்கு வந்தார்.
பின்னால் வந்த ராமு கவுண்டர், ”ஏன் முத்துசாமி, நம்ம பொன்னுசாமி ஆச்சாரி பொண்ணு கீறாளே… அவ பேரு கூட என்னுமோதான, ஆங்… சிந்தாமணி. அவ இர்ளமூட்டு கண்ணன ஈத்துனு போயிட்டாளாமே, தெரிமா ஒனுக்கு…?’’ என்று கேட்டார்.
மெல்ல திரும்பிப் பார்த்து, ‘தெரியும்’ என தலையாட்டிவிட்டு, வழியோரமிருந்த உண்ணிமில் புதர்மேல் படர்ந்திருந்த மூக்குசளிப் பழ கொடியிலிருந்து இரண்டு பழங்கள் பறித்து, அவற்றை பின்னால் வந்த முருகனிடம் தந்துவிட்டு நடந்தார் கவுண்டர்.
”அந்த கழ்திக்கி பொறந்தவுளுக்கு எம்மாம் அரிப்பெடுத்திருந்தா… ஜாதிவுட்டு ஜாதிமாறி போயி ஆம்டியான் புடிச்சிருப்பா…’’
ராமு கவுண்டர் சற்று குரலை உயர்த்தி சொன்னார்.
கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் நடந்த கவுண்டரைப் பார்த்து, ”ஏன்டா முத்துசாமி, நானு பாட்டுனு சொல்லினு வரன்… நீ பாட்டுனு ஏன் எதுவும் பேசாம போறவன்…?’’ என்று கேட்டார் ராமு கவுண்டர்.
சட்டென நின்று தலையைச் சாய்த்தபடி அவரைப் பார்த்து, ”அவுங்க ரண்டுபேரும் சுத்தினுருந்தது… இந்த வூருக்கே தெரியும். அப்பயே பொண்ணக் கூப்ட்டு என்னான்னு ஒருவாத்த கேளுடான்னு பொன்னுசாமிகிட்ட சொன்னன். அந்த பெட்டா மவன் கேக்கள. இப்ப அவன்கூட ஓடிட்டா… எங்க மானத்த வாங்கிட்டா… கவுருவுத்த அழ்ச்சிட்டான்னா… என்னா பண்ணமுடியும் சொல்லு…?’’ என்றார்
”அப்பந்த இர்ள பையன்கூட அவ ஓடிப்போனத செரின்றயா…?’’
ராமு கவுண்டர் கேட்டதும், உரக்க சிரித்துவிட்டு முத்துசாமி கவுண்டர் சொன்னார்.
”அதலென்ன தப்புன்றன்…? ஒண்ணு… ஆரம்பத்துலயே கண்டு, கண்டிச்சி திட்டம் பண்ணி வுட்ருக்கணும்… பண்ணல. செரி, அதுக்கப்பறமாது கூப்ட்டு என்னான்னு கேட்டிருக்கணும்… அதயும் செய்யில. அந்தப் பொண்ணா வந்து அப்பன் ஆத்தாள மதிச்சி… ரண்டுமூணு வாட்டி வெக்கத்தவுட்டு அந்த பையனதான் எனுக்கு புடிச்சிக்கீதுன்னு சொல்லிக்கீறா… அப்பயும் எதுவும் சொல்லலனா, அவ என்னா பண்ணுவா சொல்லு…? அததான் இப்ப பண்ணிகீறா…’’
”அதுக்குன்னு அவ ஒரு இரளப் பையன ஈத்துனு போவா… பாத்துனு சொம்மாருக்க சொல்றீயா…?’’
”அவன் இரளனோ பறயனோ… நல்ல பையன், நல்ல ஒழப்பாளி. அவ கய்ல அருவாளயோ களகட்டயோ தந்து… வேலக்கி போன்னு அனுப்பிட்டு ஒக்காந்து தின்னாதவன். இதவுட பெருசா இந்த சாதி மயிரு மட்டயலாம் பாத்து என்னாவப்போது சொல்லு…?”
கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் முகத்தை கலாய் பூசியதுபோல் வைத்துக்கொண்டு நடந்தார் ராமு கவுண்டர்.
சத்தி பாறை தாண்டி ஏரிக்குள் கருவேல மரங்களுக்கிடையில் நீள் விரிசல்போல வளைந்து வளைந்து போன ஒத்தையடிப் பாதை வழியாக செல்விக்கு உடம்பு சரியில்லாதது தொடங்கி, மாரிமுத்து கவுண்டர் தன் மகளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் குடும்பத்தோடு வந்து பொங்கல் வைப்பதாக சாமிக்கு பெராத்தன செய்துகொண்டு கிடா வெட்டுவது வரை பேசிக்கொண்டு நடந்து எல்லைச்சாமி இருக்கும் பாறையருகில் வந்தார்கள்.
சரியாக அதேநேரம் மாணிக்கமும் ஏழுமலையும் கட்டுத்தெரு அட்டணை மேல் மடித்து வைத்திருந்த சின்ன சாக்குப் பைகளில் ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டு, குப்புசாமியை கூட்டிக்கொண்டு ஊரின் தெற்குப் பக்கம் நடந்து, குட்டைக்கிணறு தாண்டி வேடியப்பன் கோயில் கடந்து, சோமாசம் பாறைமேல் ஏறி படிசுனையில் தண்ணீர் குடித்துவிட்டு, மெல்ல இறங்கி கிரீன் குட்டை அருகிலிருந்த கந்தக்கோனார் கொல்லியோர பெரிய வேப்ப மரத்துக்குப் போய், முதலில் கீழே உதிர்ந்து கிடந்த வேப்பம் பழங்களையும் கொட்டைகளையும் பொறுக்கி கும்பல் கும்பலாக வைத்துவிட்டு கடைசியில், கொண்டுவந்த சாக்குப்பையில் அதை அள்ளிப்போட்டார்கள்.
பின், மேற்குப் பக்கமாக தாழ்ந்திருந்த மரக் கிளையை எகிரிப் பிடித்து இன்னும் தாழ்த்தி, ஒருவர் பின் ஒருவராக மூவரும் மேலே ஏறிப் போய் ஆளுக்கொரு கிளைக்குச் சென்று, காய்களும் பழங்களும் இருக்கும் கொத்துகளாகப் பார்த்து உடைத்துக் கீழே போட்டார்கள்.
முடிந்த மட்டும் உடைத்துப் போட்டுவிட்டு கீழே இறங்கி வந்தவர்கள், அவரவர்கள் உடைத்துப் போட்ட கொத்துக்களைப் பொறுக்கி தனித்தனி கும்பளாகப் போட்டு, அதன் பக்கத்தில் உட்கார்ந்து ஒவ்வொரு கொத்தாக எடுத்து, தழையோடு சேர்த்து காய்களையும் பழங்களையும் உருவிப் போட்டார்கள்.
”ஏ மாணிக்கம், மோட்டுத் தெரு கண்ணண்ணன் கீறாருல்ல… அவுருகூட ஒங்க எதுரூட்டு அக்கா ஓடிப்போச்சாமே, தெரிமாடா ஒனுக்கு…?’’, குப்புசாமி கேட்டான்.
”ஆமான்டா, ராத்திரிதான் ஓடிச்சின்னு பேசிக்கினாங்க’’, மாணிக்கம் சொன்னான்.
”ஊருலருந்து பத்துபாஞ்சி பேரு கொடுவா கம்போட, அவுங்கள தேடினு போயிகீறாங்களே… கெடச்சா என்னடா பண்ணுவாங்க…?’’
”என்ன பண்வாங்க… அந்தண்ணன நல்லா அடிச்சிப்போட்ட்டு. அந்தக்காவ மட்டும் வூட்டுக்கு கூட்டுனு வருவாங்க. எனுக்கு தெரிஞ்சி, இம்மாந்நேரம் எங்கனா கோயில்ல போயி ரண்டுபேரும் கல்லியாணம் பண்ணிருப்பாங்க’’
குப்புசாமி, மாணிக்கத்திடம் கேட்டதற்கு ஏழுமலை பதில் சொன்னான்.
உருவிப் போட்ட காய்களையும் தழைகளையும், எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிக் கீழே போட்டு, காற்றில் தூற்றி தனித்தனியாகப் பிரித்தார்கள்.
”இன்னும் எண்ணி பதனஞ்சிநாளுதான்டா கீது, ஆத்து திர்ணாக்கு. ரண்டுபேரும் கூடினு இதுவரிக்கும் எம்மாம் வேப்பங்கொட்ட பொறுக்கி கீறீங்க…?’’
கேட்ட குப்புசாமியை, தூற்றிய காய்களையும் பழங்களையும் வாரி சாக்குப் பையில் போட்டுக்கொண்டிருந்த மாணிக்கம் பார்த்து சிரித்துவிட்டு, ”எப்பிடியும் பெரிசாக்குல ரண்டு மூணு மூட்டயாது வரும்டா’’ என்றான்.
”என்னாது மூணுமூட்டயா…?’’ என்று வாயைப் பிளந்த குப்புசாமி, ”என்னுது ஒரு மூட்ட வந்தாலே ஆச்சிரியந்தான்’’ என்றான்.
மொத்தத்தையும் சாக்குப்பையில் போட்டுவிட்டு, எளிதில் அவிழ்ந்து வராமல் மடித்து முடிபோட்டு கட்டியிருந்த லுங்கிக்குள் சுருட்டி வைத்திருந்த சணல் கயிற்றை எடுத்து, இறுக்கிக் கட்டி தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தான் மாணிக்கம்.
மாரிமுத்து கவுண்டர், தன் குடும்பத்தினரோடு உட்கார்ந்து மகிழ்ச்சியாக பொங்கலிட்டுக் கொண்டிருந்தார். கவுண்டர் வருவதை முதலில் பார்த்த அவர் மகள் கஸ்தூரி, ”ஐய்யாய்யா… முத்துசாமியய்யா வர்றாரு’’ என்று சொம்பில் மஞ்சள் கரைத்துக்கொண்டிருந்த மாரிமுத்து கவுண்டரிடம் சொல்ல, எழுந்து புன்னகைத்து, ”வா முத்துசாமி… எங்க பொண்டாட்டி புள்ளிங்கள கூட்டுனு வராம, சின்னவனயும் ஒன் மச்சானயும் மட்டும் கூப்டுனு வந்துகீறவன்…?’’ என்று கேட்டார்.
”எல்லாரும் வரலாம்னுதான் இருந்தம். பொண்ணு செல்வி ரண்டு நாளா காயலா கீறா. காலிலதான் செத்த மாதிரியானா. செரி எதுக்கு இந்நேரத்துல இம்மாம் தொலவுட்டு கூட்டுகினுன்னு வுட்டுட்டு… நாங்க மட்டும் வந்தம்’’ என்றார் கவுண்டர்.
”செரி, வந்து நெவுலுக்கா ஒக்காருங்க… இன்னும் செத்தநேரத்துல சாமி கும்டுட்டு, கெடா வெட்டிரலாம்’’ என்றுவிட்டு கஸ்தூரியை போய் தொட்டியிலிருந்து தண்ணீர் மொண்டு வர சொல்லி ஊற்றி சாமியைக் கழுவி பொட்டிட்டு, கெதம்பொடி தூவி, உடைத்துவந்த வேப்பிலையை எடுத்து முன்னால் வைத்த மாரிமுத்து கவுண்டர், அதன்மேல் ஓடையிலிருந்து பறித்துவந்த ஐந்து ஓணான் இலைகளில்… இறக்கிய பொங்கல் சோற்றை அள்ளிப் போட்டு வரிசையாக வைத்து, அன்னக்கூடையில் காகிதத்தில் மடித்து வைத்திருந்த வெற்றிலை பாக்கு, சுருட்டு, கஞ்சா, சாராயப் பொட்டலம் எல்லாவற்றையும் எடுத்துவைத்து, வத்தி, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து சாமி கும்பிட்டுவிட்டு, சொம்பில் கரைத்துவைத்திருந்த மஞ்சள் நீரை கொண்டுபோய் நேர்ந்துவிட்ட கிடாமேல் தெளித்து உத்தரவு கேட்டுவிட்டு வெட்டினார்.
வெயில் அதிகமும் இல்லாமல் அதேசமயம் மிகக் குறைவாகவும் இல்லாமல் மிதமாகவே இருந்தது. காற்றும் அதற்கேற்ப சற்றும் அனல் தெரியாத அளவுக்கு சில்லென்று வீசிக்கொண்டிருந்தது.
மாரிமுத்து கவுண்டர் குடும்பத்தோடு சேர்த்து அவர் தம்பி குடும்பமும் அண்ணன் குடும்பமும் வந்திருந்தது. எப்படியும் குறைந்தது இருபதுபேருக்கு மேல் இருப்பார்கள். வெட்டிய கிடாவின் உடலையும் தலையையும் எடுத்துப்போய் பாறையின் மறுபுறம் இருந்த நாவல் மரத்தின் கீழ்க் கிளையில் கயிறு கட்டித் தொங்கவிட்டு தோல் உரித்து, துண்டுதுண்டாக வெட்டி, அதில் கொஞ்சத்தை எடுத்துவந்து, கழுவி அடுப்புமூட்டி வந்திருந்த எல்லோருக்கும் சோறாக்கி குழம்புவைத்து, புட்டுக்கூடையில் கட்டிவைத்திருந்த தைத்த கல்யாணமுருங்கை இலையை அவிழ்த்து மரத்தடி நிழலில் வரிசையாக உட்காரவைத்து போட்டு, சாரதாம்மாவும் கஸ்தூரியும் துரைசாமியும் பரிமாறினார்கள்.
நன்கு வயிறார சாப்பிட்டுவிட்டு செத்தநேரம் இருந்து மாரிமுத்து கவுண்டருடன் பேசிவிட்டு, ”செரி மாரிமுத்து, நாங்க கெளம்பறம்… நாளமறுநாளு எப்ப தோதுபடுதோ, அப்ப வா’’ என்று சொல்லிவிட்டு, தன் மச்சானையும் முருகனையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார் கவுண்டர்.
ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த மாரிமுத்து கவுண்டர், ‘செரி’ என உணர்ச்சியற்று தலையாட்டுவதைப் பார்த்துவிட்டு நின்று, ”ஏ, மாரிமுத்து… என்னடா ஒருமாரி கீறவன்…?’’ என்று கேட்டார் கவுண்டர்.
செத்தநேரம் மவுனமாக இருந்தவர், ”அதலாம் ஒண்ணுல்ல முத்துசாமி… அந்த சோலக்கண்ணன நெனச்சி கஷ்டமாப்போச்சி, அதான்’’ என்றார்.
கேட்ட கவுண்டர் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றார்.
”அன்னிக்கி அவனப் பத்தி ஓன்கிட்ட கேட்டுட்டு வர்றப்பதான்… காவாயாண்ட ஒக்காந்து புல்லாங்கோலு ஊதினுருந்தான், பாத்தன். கிட்டப் போயி பேசலாம்னு பட்டுச்சி. செரி, எதுக்கு அவனப் போயி தொந்துருவு பண்ணிட்டுனு வுட்டுட்டு வந்துட்டன். ஆனா ஒண்ணு முத்துசாமி… அன்னிக்கி நெனிச்சன், ஆடி மாசம் கெடாவெட்டும்போது ஒரு டீப்பினி நறயா கறிசோறு போட்டு எடுத்துனு போயி என் கையால அவுனுக்கு தந்துட்டு வரணும்னு. அதுக்குள்ள இப்பிடிலாம் ஆயிபோச்சி.’’
கண்கலங்கியபடி மாரிமுத்து கவுண்டர் சொன்னதைப் பார்த்துவிட்டு அவர் பக்கத்தில் போய் தோளில் தட்டி, ”செரி வுடு, எல்லாம் முடிஞ்சிபோச்சு. இனி பேசி என்னாவப் போது’’ என்றார் கவுண்டர்.
‘ம்’ என தலையாட்டிவிட்டு செத்தநேரம் அமைதியாக இருந்த மாரிமுத்து கவுண்டர், ”செரி, ஆடி பதனெட்டுக்கு… ஆத்து திர்ணாக்கு போறியா…?’’ என்று கேட்டார்.
அதைக் கேட்டு பாறையோரம் நின்றிருந்த ராமு கவுண்டரைப் பார்த்துவிட்டு மெல்லிய சத்தத்தில் சிரித்த கவுண்டர், ”நானென்னடா ஒன்னமாரி அறியாப் பையனா… ஆத்து திர்ணாக்குலாம் போயிகினு. வூட்ல புள்ளிங்கதான் போவாங்க, நானு எங்க போவப்போறன்’’ என்றார்.
பதிலுக்கு தானும் சிரித்த மாரிமுத்து கவுண்டர், ”சொம்மாதான்டா கேட்டன். செரி, இந்த வருசம் வூட்ல வேப்பங்கொட்ட பொறுக்கி வச்சிகீறீங்களா…?’’ என்று கேட்டார்.
‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டரிடம் சாரதாம்மா பெரிய டீப்பன் நிறைய கறிசோறும் ஒருபையில் தேங்கா முடியும் ரவ மாவிளக்கு மாவும் எடுத்து வந்து தந்து, ”கொண்டுனு போயி அக்காகிட்ட தாங்க’’ என்றார்.
‘சரி’ என தலையாட்டி வாங்கிக்கொண்டு மாரிமுத்து கவுண்டரை பார்த்து லேசாக பல்தெரிய புன்னகைத்த கவுண்டர், ”ஆமான்டா, பெரிவனும் நள்ளுவனும்தான் பத்துபாஞ்சி நாளா பசங்க கூட கூடினு போயி… நாலஞ்சி மூட்ட பொறுக்கினு வந்து காயவச்சி கட்டி வச்சிக்கீறாங்க. இந்தவாட்டி வேப்பங்கொட்ட விக்கற காச வச்சி, ஆத்து திர்ணால என்னுமோ வாங்கப்போறம்னு சொல்லினு கீறாங்க’’ என்றார்.
கேட்டுவிட்டு சில நொடிகள் யோசித்த மாரிமுத்து கவுண்டர், ”என் மவன் தொரசாமி கீறான்ல… அவன், வேப்பங்கொட்ட வேவாரம் பண்ணினுகீறான். நாளமறுநாளு எப்பனா அவன வூட்டுக்கா வரசொல்றன், புள்ளிங்ககிட்ட சொல்லி தந்துவுட சொல்லு’’ என்றார், திரும்பி எல்லைச்சாமி பக்கத்தில் நின்றுகொண்டு கஸ்தூரியிடம் பேசிக்கொண்டிருந்த துரைசாமியைப் பார்த்துவிட்டு.
”’செரி மாரிமுத்து… நாங்க அப்ப கெளம்பரம்’’ என்று தலையாட்டி சொல்லிவிட்டு, திரும்பி ஏழெட்டடி எடுத்துவைத்து நடந்திருப்பார்.
”ஏ, முத்துசாமி… செத்த நில்லுடா.’’
மாரிமுத்து கவுண்டரின் குரல் கேட்டு நின்றார் கவுண்டர்.
எட்டி வேகமாக பக்கத்தில் வந்த மாரிமுத்து கவுண்டர், ”ஓங்கிட்ட ஒரு விசியம் சொல்லனுன்னு இருந்தன். பொங்குலு வக்கரத்துல மறந்துட்டன் பாரு’’ என்று சொல்லிவிட்டு திரும்பி சாரதம்மாவைப் பார்த்துவிட்டு, ”மலமஞ்சனூர் தாண்டி கீதுல்ல புதூரு. அங்க என் பொண்டாட்டிக்காரியோட சொந்தத்துல ஒரு பையன் கீறான். ஆளு நம்மாளுதான். பாக்க நல்லா வாட்டசாட்டமா, அழ்வா இருப்பான். வூடு வாசலு நெலபலம்னு வசதியான எடம். வூட்டுக்கு ஒரே பையன். அவுனுக்கு நம்ம செல்விய கட்டித் தந்தா என்னான்னு பட்டுச்சி. அதான் ஓன்கிட்ட ஒருவாத்த போட்டு வப்பமேன்னு…’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு சட்டென என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம், ‘இப்பதான் பொண்ணுக்கு பதனெட்டு முடிஞ்சி பத்தம்போது வயிசு நடந்துனு கீது. அதுக்குள்ள எதுக்கு கல்யாணம் பண்ணிகினு, இன்னும் ரண்டுமூணு வருசம் போவுட்டுமே’ என்று நினைத்தார்.
அதற்குள் மாரிமுத்து கவுண்டர், ”என்னடா ஓசன பண்றவன்…? நல்ல பையன், தங்கமான எடம். வுட்டுட்டம்னா மேலிக்கி கெடக்குமான்னு தெரியாது. அதான் இப்பியே சொன்னன்’’ என்றார்.
கேட்டுவிட்டு மெல்ல தலையாட்டிக்கொண்டு தனக்குள் யோசித்த கவுண்டர், ”செரி, ஆடி முடிஞ்சி… ஆவணில நல்லநாளா பாத்து வர சொல்லு. வந்து பாக்கட்டும், புடிச்சிருந்தா மேல பாப்பம்’’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து உணர்வற்ற ஜடம்போல் நடந்து வந்தார்.
எதுவும் பேசாமல் வந்த கவுண்டரிடம் கருவேல மரங்கள் காடுபோல் அடர்ந்திருக்கும் ஏரிக்குள் நுழையும்போது, ராமு கவுண்டர் கேட்டார்.
”ஏன்டா முத்துசாமி, ஒரு மாரியா கீறவன்…?’’
மெல்ல நின்று ராமு கவுண்டரைப் பார்த்து தேய்ந்த குரலில், ”மாரிமுத்து சொன்னதப் பத்தி ஓசன பண்றன்’’ என்றார்.
”இதல ஓசன பண்ண என்னடா கீது…? பொட்டப் புள்ளிக்கி காலாகாலத்துல பண்ணவேண்டித பண்ணிதான ஆவுணும்.’’
”பண்ணணுந்தான், இருந்தாலும்…’’ என்று எதையோ சொல்லவந்து நிறுத்தியவர் கொஞ்சநேரம் கழித்து, ”பையன் வேற வூட்டுக்கு ஒரே பையனாம். வூடு வாச நெலம்பொலம்னு நல்லா வசதியா கீறானாம்…’’
”நம்ம புள்ள போயி வாழப்போற எடம், அப்பிடி இருந்தாதான நல்லாருக்கும்.’’
கவுண்டர் முடிக்கும் முன்பே ராமு கவுண்டர் குறிக்கிட்டு சொன்னார்.
”அதல்லாம் செரிதான். ஆனா…’’
”ஆனா என்ன ஆனா… எனுக்கென்னுமோ இந்தப் பையன்தான் நம்ம செல்விக்கு அமயிவான்னு படுது.’’
ராமு கவுண்டர் உறுதியாகச் சொன்னதைக் கேட்டுவிட்டு, மறுப்பு எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து மண்ணைப் பார்த்துக்கொண்டு நடந்தார் கவுண்டர்.
”தோ, பாரு முத்துசாமி… இப்ப எதுக்கிப்பிடி ஆனா ஊனான்னு ஈக்கறன்னு தெர்ல.’’
ராமு கவுண்டர் சற்று குரலை உயர்த்திக் கேட்டதும் பெரிய கருவேல மரத்தருகில் நின்ற கவுண்டர், சற்று தள்ளி ஏரியின் நடுவில் சிறு குட்டைபோல் நின்றிருக்கும் நீரில் யாரோ வயதான பெரியவர் ஒருவர் தோட்டக்காட்டுக்கு போய் வந்து உட்கார்ந்து கால் கழுவுவதைப் பார்த்துவிட்டு, திரும்பி மெதுவான குரலில் சொன்னார்.
”பொண்ணுக்கு நல்ல எடத்துல சம்மந்தம் வந்தது சந்தோசம்தான். என் கவலலாம்… எம்மாம் நகநட்டு சீர்செனத்தி செய்யச்சொல்லி கேப்பாங்குளோன்னுதான்.’’
கவுண்டர் இயலாமையின் குரலில் சொன்னதைக் கேட்டுவிட்டு, சொல்லற்று நின்றார் ராமு கவுண்டர்.
”ஒரே பையன், நெலபொலம் வூடுவாசல்னு கீறவுனுக்கு… நாம கீற நெலமில என்னாத்தப் போட்டு கட்டித்தர முடியுஞ் சொல்லு…?’’
தன் மச்சானைப் பார்த்து கம்மிய குரலில் கேட்டுவிட்டு நடந்தார் கவுண்டர்.
ஏரி கோடிபோகும் இடத்திலிருந்த சிறு கல்லின்மீது கருநிற ஓணான் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு பின்னால் வந்த முருகன், கீழே குனிந்து கல்லெடுத்து ஓங்கி வேகமாக அடிப்பதுபோல் பொய்காட்டியதும் அது பயந்துபோய் ஓடி கல்லுக்கடியில் நுழைந்துகொண்டது.
சத்தி பாறை தாண்டி மணி ஆச்சாரி கொல்லி ஓரமாக நடந்து கால்வாய்க்குள் இறங்கி வடக்காலப் பக்கமாக சற்று தூரத்தில் நான்கைந்து பருவாரங்கள் தள்ளித் தள்ளி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு மலம் கழித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு மதகுப் படியில் ஏறி புளிய மரத்தடியில் வந்து நின்ற கவுண்டர், ”எந்த தாயி தவுப்பனும் தாம்பெத்த பொண்ணுக்கு… நல்ல சம்மந்தம் வரனும்னுதான் நெனிப்பாங்க. ஆனா, அது நம்முளுக்கு ஏத்த சம்மந்தமாவும் இருக்கணும்ல… அதான் இம்மாம் ஓசன பண்றன்’’ என்று சொல்லிவிட்டு சோலைக்கண்ணன் தூக்குப்போட்டு தொங்கிய கிளையையும், அவன் உடலை அவிழ்த்து படுக்கப்போட்டிருந்த இடத்தையும் ஒருதடவை பார்த்துவிட்டு, இறங்கி வேகமாக நடந்தார்.
இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் வெறுமே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த முருகன், தென்னந்தோப்புக்குள் நுழைந்ததும் தன் தந்தையிடம் கேட்டான்.
”ஏன்யா… நகநட்டுலாம் தந்தாதான் நம்ம அக்காவ கலியாணம் பண்ணிப்பாங்களாய்யா…?’’
சட்டென நின்று பின்னால் வந்த முருகனைப் பார்த்து, ‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டர், அவன் பின்னால் வந்த ராமு கவுண்டரைப் பார்த்து பொய்யாக உதடுமடித்துச் சிரித்துவிட்டு திரும்பி நடந்தார்.
உடனே வேகமாக நடந்து பக்கத்தில் வந்து கவுண்டரின் கையை பிடித்த முருகன், ”அப்ப நகநட்டுலாம் இல்லாம… அக்காவ மட்டும் யாரும் கலியாணம் பண்ணிக்க மாட்டாங்களாய்யா…?’’ என்று கேட்டான் அழுத்தமான குரலில்.
முருகனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வெறுமனே புன்னகைத்துவிட்டு, வழியோரம் விழுந்து கிடந்த கொப்பரைத் தேங்காவைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்தார் கவுண்டர்.
பொர்ச மர மேடேறி, புதிதாகக் கட்டியிருந்த மாரியம்மன் கோயிலருகில் வந்து நின்று, பின்னால் வந்த ராமு கவுண்டரைப் பார்த்து, ”செரி ராமு, நானு வர்றன்’’ என்று சொல்லிவிட்டு, கிடுகிடுவென நடந்து வீட்டுக்கு வந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்து செல்விக்கு சுடுதண்ணி ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் மாரிமுத்து கவுண்டர் மனைவி சாரதாம்மா டீப்பனியில் போட்டுத் தந்த கறிசோறையும் தேங்காய் முடியையும், மாவிளக்கு மாவையும் தந்துவிட்டு வெளியில் வந்த கவுண்டர், வீட்டின் பின்னால் பூவரச மரத்தடியில் போட்டிருந்த கட்டிலில் போய் உட்கார்ந்து, பக்கத்திலிருந்த வாதநாராயண மரத்தின் கிளையில் அங்குமிங்கும் தாவி விளையாடிக்கொண்டிருந்த நான்கு நொல்லக் குருவிகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
பின்னாலேயே மூஞ்செலி போல் சத்தம் போடாமல் மெதுவாக வந்து கவுண்டரின் பக்கத்தில் உட்கார்ந்த முருகன், ”ஐய்யா…’’ என்றான், மெல்ல.
அதைவிட மெல்லமாகத் திரும்பிப் பார்த்து, ‘என்ன?’ என்பதுபோல் தலையாட்டினார் கவுண்டர்.
சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு கவுண்டரின் முகத்தை பார்த்து, ”நானு பெரிவனாயி கலியாணம் பண்ணும்போது… நகநட்டுலாம் வாங்காமதான் பண்ணுவன்ய்யா’’ என்றான் முருகன்.
சற்றும் இதை எதிர்பாராத கவுண்டர் கேட்டுவிட்டு சந்தோசத்தில் கண்கலங்கி புன்னகைத்து, ”எனுக்கு தெரியும்யா’’ என்று சொல்லிக்கொண்டு எழவும், பூரணியம்மா வாதநாராயணக் கீரை உருவிப் போட்டு சுட்ட கேழ்வரகு அடையைப் பெரிய தட்டில் வைத்து எடுத்துவந்து பின்னால் நிற்கவும் சரியாக இருந்தது.
[இன்னும்]
*