முரம்பு – 24

கட்டுத்தெரு பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்து செவடனுடன் பேசிக்கொண்டு, தீட்டுக்கல்லில் தன் பெரிய கொடுவாளைப் பார்த்துப் பார்த்து பதவிசாக தீட்டிக்கொண்டிருந்தார் முத்துசாமிக் கவுண்டர்.

வீட்டில் என்னதான் நான்கு கொடுவாளும் இரண்டு ஆக்கருவாளும் மூன்று அருவாளும் இரு கத்தியும் ஒரு சூரிய கத்தியும் இருந்தாலும் கவுண்டருக்கு அதில் மிகப் பிடித்தது பெரிய கொடுவாள்தான். அதுவும் எட்டாண்டுகளுக்கு முன்னால் இறந்துபோன அவர் கூட்டாளி மேட்டூர் ஆச்சாரி அவருக்காக ஆசை ஆசையாய் செய்துதந்தது.

ஒருபக்கம் தங்கத்தால் செய்த கொடுவாளை வைத்து, இன்னொரு பக்கம் கவுண்டரின் பெரிய கொடுவாளை வைத்து, ‘இரண்டில் எது வேண்டும்?’ என்று கேட்டால் நொடிகூட யோசிக்க மாட்டார். சட்டென தன் கொடுவாள்தான் வேண்டும் என்பார். அந்தளவுக்கு அவரது விருப்பக் கொடுவாள் அது. ஒருவரையும் ஒருபோதும் எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்.

ஒருதடவை, கவுண்டருக்குத் தெரியாமல் எறவானத்தில் செருகியிருந்த அவர் கொடுவாளை எடுத்துப்போய் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து கோட்டிப்புல் சீவிவிட்டான் மாணிக்கம். கொல்லியிலிருந்து மாட்டுக்கு புல் பிடுங்கி கட்டித் தூக்கிக்கொண்டு வந்த கவுண்டர், அதைப் பார்த்துவிட்டு வேகமாகப் போய் ஒரு வார்த்தையும் அவனிடம் சொல்லாமல் வெடுக்கென பிடுங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு யாரிடமும் பேசாமல் அவர்பாட்டுக்கு கிளம்பி செட்டியார் கிணத்துக்கு குளிக்கச் சென்றுவிட்டார்.

அவர் வரும் வரைக்கும் தாழ்வாரத் திண்ணையிலேயே உட்கார்ந்துகொண்டு காத்திருந்த மாணிக்கம், வந்ததும் எழுந்து பயத்தோடு போய் அவரிடம் பேசினான். பதிலுக்கு ஒருவார்த்தை கூட பேசாமல் பூரணியம்மாவிடம் எதையோ சொல்லிவிட்டு போய்விட்டார்.

ஒரு மாதம் வரைக்கும் பொறுத்துப் பார்த்தவன், தன் தந்தை தன்னிடம் பேசாததைத் தாங்கமுடியாமல் கட்டுத்தெருவில் மாட்டுக்கு தண்ணீர் காட்டிக்கொண்டிருந்தவரிடம் போய் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டதும்தான் பேசினார்.

‘இந்தக் கொடுவாள எடுக்குறப்பலாம் என் கூட்டாளிய எடுக்கறமரே இருக்கும். இதல வெட்டற ஒரு குச்சிகூட வேண்டாத்தா இருக்கக் கூடாது. ஆசக்காக, அவங்காரத்துக்காக வெட்டறதா இருக்கக் கூடாதுன்னு நெனப்பன். ஒருவேள மனுசாள வெட்டற நெலம வந்தாக்கா… கோடி ரூவா தந்தாலும் மாட்டன்னு சொல்வன். அப்டியாப்பட்ட கொடுவாள நாம்பெத்த புள்ளிங்க எடுத்தாலும் தாங்க மாட்டன்’ என்பார் கவுண்டர்.  

அன்னக்கூடை நிறைய ஏனம் எடுத்துப்போய் சாக்கடையில் கழுவிக்கொண்டு வந்த பூரணியம்மா, ”ஏந்தே, கையோட அந்த சின்னக் கொடுவாளயும் எடுத்தாந்து தீட்டறியா தே…?’’ என்று கேட்டார்.

தீட்டுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பூரணியம்மாவை பார்த்து, ”ஏன் பூர்ணி…?’’ என்று கேட்டார் கவுண்டர்.

”நானும் வள்ளி அண்ணியும் பொம்பளிங்களோட கூடினு ஏரிக்கா சுள்ளி வெறவு பொறுக்கியாற போலாம்னு கீறம் தே. கூட எடுத்துனு போனாக்கா முள்ளு வெறவு எதனா இருந்தா கய்ச்சி எடுத்தார தோதாருக்கும், அதான்…’’ என்றார்.

எதுவும் சொல்லாமல் சில நொடிகள் கீழே குனிந்து யோசித்த கவுண்டர், ”நீ ஏன் பூர்ணி, வெறவுக்குலாம் போயிகினு…? அதான் நானு போயி வெட்டியாறனே. அதுமில்லாம பெரிவனும் நள்ளுவனும் பள்ளிக்கோடம் வுட்டு நின்னதுலருந்து… பருவாரம் கூட கூடினு போயி வெட்டியாறாங்களே. நீ எதுக்கு வேண்டாத வெயில்ல போயி லோலுபட்டுனு…’’ என்றார்.

கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு மென்மையாகச் சிரித்த பூரணியம்மா, ”அட நீ வேற ஏந்தே… வூட்ல வெறவு இல்லன்னா நானு போறன்னு சொன்னன்…? சொம்மா பொம்பளிங்க கூட பெறாக்கா பேசினு போயி அஞ்சாறு வெறவு பொறுக்கியாறலாம்னு சொன்னன்’’ என்றார்.

அதற்குள் பக்கத்திலிருந்த காலியிடத்தில் வீடுகட்டி புதிதாகக் குடிவந்திருந்த ஆட்டுக்காரம்மா, கையில் கொடுவாளும் துண்டும் கயிறும் எடுத்துக்கொண்டு வந்து வாசலில் நின்று, ”எக்கா… ஓ, பூர்ணி எக்கா…’’ என்று பூரணியம்மாவைக் கூப்பிட்டார்.

கேட்ட கவுண்டர், ”செரி பூர்ணி, வூட்டுவுள்ள போயி ஏனம்லாம் எடுத்து வைய்யி… செத்த நேரத்துல கொடுவா தீட்டி எடுத்தாறன்’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து வேகமாகப் போய் கட்டுத்தெரு எறவானத்தில் செருகியிருந்த சின்னக் கொடுவாளை எடுத்துவந்து சற்று மண்ணள்ளிப் போட்டுத் தீட்டி எடுத்துப்போய் வாசலில் நின்றுகொண்டு ஆட்டுக்காரம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் தந்துவிட்டு வந்தார்.

சேவிக் கவுண்டரும் மாரி தாத்தாவும் ஊரிலிருந்த தம் வீட்டையும் ஆட்டுப் பட்டியையும் விற்றுவிட்டு வந்து இரண்டு மாதத்திற்கு முன்னால்தான் கவுண்டர் வீட்டுக்குப் பின்னாலிருந்த மேட்டுப் பகுதியில் அருகருகில் வீடு கட்டிக்கொண்டு பக்கத்தில் ஆட்டுப் பட்டியமைத்து குடி வந்திருந்தார்கள்.

ராமு கவுண்டர் வீட்டு வாசலில் காட்டுவா மரத்தோரம் போட்டிருந்த குத்துரலில் காய வைத்த துரிஞ்சி தழையும் செம்பருத்திப் பூவும் போட்டு தலையில் தேய்த்துக் கசக்க சீகக்காய் பொடி இடித்துக்கொண்டிருந்த செல்வியிடமும் பூவரசியிடமும், ”எங்கயும் போவாம ரண்டுபேரும் வூட்லயே இருங்க… பெரிய ஆச்சாரி வந்து கேட்டாருனா, திண்ணமேல கீற குந்தாணிய எடுத்துனு போவ சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டு, பூரணியம்மாவும் இசைவள்ளியம்மாவும் ஆட்டுக்காரம்மா உள்ளிட்ட நால்வருடன் கூடிக்கொண்டு சுள்ளி விறகு பொறுக்கப் போவதைப் பார்த்துவிட்டு, கோயில் பொர்ச மரத்தடியில் ஊர் போடுமுட்டைகளோடு கப்பை விளையாடிக்கொண்டிருந்த முருகனும் ரவியும், தங்கள் கப்பைக் கல்லை எடுத்துப் போய் பக்கத்திலிருந்த எருக்கன் புதருக்குள் போட்டுவிட்டு ஓட்டமாக ஓடிப்போய் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள்.

வெயில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொண்டிருந்தது. யாரோ வெளியூர் ஆட்கள் இருவர், அவர்கள் கணவன் மனைவியாக இருக்க வேண்டும், பின்னிய கல்யாணமுருங்கை இலைக் கட்டை வாழைநார் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு எதிரில் வந்துகொண்டிருந்தார்கள்.

சட்டென்று பின்னால் திரும்பிப் பார்த்துவிட்ட ஆட்டுக்காரம்மா, ”ஓ பூர்ணிக்கா, செத்த திரும்பி பாரு… ஒன் மவுனும் வள்ளியக்கா மவுனும் பின்னாலயே வர்றத்த…’’ என்றார்.

ஒரே நேரத்தில் இருவரும் நின்று திரும்பி பார்த்தார்கள். ஒன்றும் தெரியாத நாய்க்குட்டி போல முகத்தை வெள்ளந்தியாக வைத்துக்கொண்டு, பின்னால் நடந்து வந்த முருகனும் ரவியும் நின்றிருந்தார்கள். 

மரிசியிலிருந்து கீழே இறங்கிய இசைவள்ளி, ”ரண்டுபேரும் எங்கடா வர்றீங்க…?’’ என்று அதட்டலாகக் கேட்டார்.

எதுவும் சொல்லாமல் இருவரும் மெளனமாக நின்றார்கள். 

”எங்க சாமி பின்னால வர்ற…? போயி கோயிலாண்டயே நெவுல்ல ஒக்காந்து புள்ளிங்களோட வெளாடினிரு, போ.’’

மெல்ல கிட்ட வந்து பூரணியம்மா சொன்னதும், எதுவும் பேசாமல் தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டான் முருகன்.

”செரி வந்தாப் போறானுங்க… வா பூர்ணி’’ என்றார் இசைவள்ளி.

தயக்கத்தோடு, ”செரி வந்து தொலிங்க’’ என்று கூட்டிக்கொண்டு கோனாமூட்டு தென்னந்தோப்புக்குள் நுழைந்து மெல்ல நடந்து, புளியமர மேடேறி மதகுப் படிக்கட்டு வழியாக கால்வாய்க்குள் இறங்கி, நீரின்றி காய்ந்துபோய் புல்பூண்டு முளைத்திருந்த கால்வாயையும் அதன் நடுவில் ஆங்காங்கே முளைத்து விரிந்து படர்ந்து பந்துபோல் காய்விட்டிருக்கும் கும்டிக்கா கொடியையும் பார்த்துக்கொண்டு மறுகரை ஏறி, மணி ஆச்சாரி கொல்லியோரமாக பேசிக்கொண்டு, சத்தி பாறை தாண்டி ஏரிக்கு வந்தார்கள்.

சிறு காடுபோல் கருவேல மரங்கள் அடர்ந்திருந்த ஏரியின் நடுவில் ஓரிடத்தில் மட்டும் குட்டையில் சிறிதளவு நீர் இருந்தது. அதன் பக்கத்தில் ஆளுமூட்டு உயரத்திற்கு ஓணாந்தண்டு பயிர்போல் வளர்ந்திருந்தது.

முதலில் ஏரிக்கரை ஓரமாக வடக்கால பக்கமிருந்த கல்லாக்குட்டையில் வெட்டி கழித்துப் போட்டு காய்ந்திருந்த துரிஞ்ச மரத்தடியில் போய் நின்று, எடுத்துவந்த துண்டையும் கயிறையும் ஓரிடத்தில் வைத்துவிட்டு, ஒவ்வொரு மிலாராக எடுத்து கொடுவாளால் கழித்தும் கையால் உடைத்தும் அரி அரியாக வைத்தார்கள்.

அவர்களோடு சேர்ந்து கொஞ்ச நேரம் சுள்ளி விறகு பொறுக்கிக்கொண்டிருந்த முருகனும் ரவியும் சத்தமின்றி மெல்ல கழண்டு வந்து சற்று தள்ளி கோடிக்கல் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு சூரப் புதரில் போய் சூரப்பழம் பறித்துத் தின்ன ஆரம்பித்தார்கள்.

ஊர் பருவாரங்களுக்கு மட்டும் எப்படித்தான் என்று தெரியாது, வருடம் முழுக்க இப்படி ஏதாவது ஒன்று தின்பதற்குக் கிடைத்துவிடும். அதுவும் இயற்கையிடமிருந்து. அதிலும் குறிப்பாக, காரையும் சூரையும். அதோடு புளியம் பிஞ்சி, புளியங் காய், புளியம் பழம், எலந்தப் பழம், பூலா பழம், சொத்துக்கிளா பழம், உண்ணிமில் பழம், ஞானா பழம், அணில்காய், காட்டு வள்ளிக்கிழங்கு, கொளஞ்சிக் காய், நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, மணத்த தக்காளி, மாங்காய், தேங்காய், கொய்யா, பப்பாளி, சுக்கங்காய், கோவப் பழம், ஆலம் பழம், பேத்திப் பழம், அத்திப் பழம், நாவல் பழம், ஊளமூக்கு பழம், ஈச்சம் பழம், கொடுக்காய்ப்புளி… இதில் குறைந்தது ஒன்றாவது நிச்சயம் எப்போதும் கிடைத்துவிடும்.

இன்னும் ஒருபடி மேலே போனால்… மீன், காடை, கவுதாரி, நண்டு, குருவி, எலி, நாரை, தண்ணிக்கோழி, முயல், ஈசல், உடும்பு, தேன்… என்று ஒரு நீள் பட்டியல் போடலாம்.

பக்கத்திலிருந்த சிறு கல்லின் மேல் ஏறி நின்றுகொண்டு, முள் குத்தாமல் நேக்காகப் பார்த்து பறித்து தின்றுகொண்டு, நடுநடுவில் டவுசர் பாக்கெட்டில் போட்டு நிரப்பிக் கொண்டிருந்த முருகன், ”டேய் ரவி, இப்டியே மலமேல ஏறி போனாக்கா… இன்னும் நறயா நறயா சூரப்பழம் இருக்கும்டா… அப்றம் சொத்துக்கெளா பழம்கூட இருக்கும்டா’’ என்றான்.

”அய்யய்யோ வேணான்டா சாமி… எங்கம்மா பாத்தா அவ்ளோதான், அடிச்சி தோல உரிச்சிருவாங்க.’’

”அவுங்க பாக்கறதுக்குள்ள நாம அசாம போயி பறிச்சினு வந்துரலாம்டா.’’

”வேணாஞ் சாமி, என்ன ஆள வுடு… நீ வேணா போ, நானு வரல.’’

”போடா ரவி குவி… செரியான பைந்தாங்குளிடா நீ’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி மலைமேல் வேகமாக ஏற ஆரம்பித்தான் முருகன்.

கால்வாசி மலைகூட ஏறியிருக்க மாட்டான். அதற்குள் ஓட்டமாக ஓடிவந்து புதரோரமிருந்த காய்ந்த காரை விறகை இழுத்துக் கழித்துக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் ரவி, ”அத்தத்த… முருகன் நானு எம்மாஞ் சொல்லியும் கேக்காம, மலமேல ஏறினு கீறான் அத்த’’ என்று மாட்டிவிட்டான்.

கையில் பிடித்திருந்த காரை விறகைக் கீழே போட்டுவிட்டு உடனே திரும்பிப் பார்த்த பூரணியம்மா, ஒரு கல்லிலிருந்து இன்னொரு கல்லுக்கு எகிரிக் குதிக்கப் போன முருகனைக் கத்திக் கூப்பிட்டு, ”ஒய்ங்கு மதேரியா எறங்கி வந்துடு… இல்லன்னு வையி, வந்து அந்த மலமேலருந்து கீள தள்ளிவுட்ருவன்… பாத்துக்க’’ என்றார்.

ரவியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டு, அவன் மேல் கடும் கோபத்தோடு மலையிலிருந்து இறங்கி வர மனமின்றி வந்தான் முருகன்.

”கைய கால வச்சினு ஓரெடத்துல சொம்மாருக்க மாட்டனுதான ஒண்ண அப்பயே வராதன்னு சொன்னன். ஒனுக்கு எம்மாம் அதப்புருந்தா போயி மலமேல ஏறுவ. ஒய்ங்கு மதேரியா இருக்கமரேனா இரு… இல்லனா நீ பாட்டுனு எங்கனா போ, என்னனா ஆவு. ஆனா ஒண்ணு… என் பேச்சக் கேட்டுனு ஒக்காரலன்னு வையி… இனி எப்பயும் ஒண்ண எங்கயும் கூட்டுனு போவ மாட்டன், பாத்துக்க.’’

பூரணியம்மாவின் கோப வார்த்தைகளைக் கேட்டுவிட்டு பக்கத்தில் ஒன்றும் தெரியாதவன் போல் நின்றிருந்த ரவியைக் கண்களால் எரிப்பதுபோல் பார்த்தான் முருகன்.

அதைப் பார்த்த பூரணியம்மா, ”அவன எதுக்கு இப்ப பாத்து மொறிக்கிற நீ…? ஒன் அந்திசிக்கி பள்ளிக்கோடம் ஒரு கேடு. ஓன்கூடதான அவுனும் படிக்கறான். அவுனுக்கு கீற பயத்துல கொஞ்சமாது கீதா ஒனுக்கு…? நீ பாட்டுனு சுதிமதி கெட்டவன்மரே தனியா போயி மலமேல ஏர்றயே… அங்க ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆனா, யாரு ஒங்கய்யாக்கு பதிலு சொல்றத்து…?’’ என்று அடிக்காத குறையாகச் சொல்லிவிட்டு போய், அரி அரியாக வைத்திருந்த சுள்ளி விறகுகளை எடுத்துவந்து ஓரிடத்தில் கும்பலாக வைத்துவிட்டு, பக்கத்து கல்லாக்குட்டைக்குச் சென்று விறகு பொறுக்க ஆரம்பித்தார்.

ரவியிடம் பேசாமல் கோபித்துக்கொண்டு போய் பக்கத்திலிருந்த வேப்ப மரத்தடி நிழலில் உட்கார்ந்து தனியாக வீடு கட்டி விளையாட ஆரம்பித்தான் முருகன்.

செவடனோடு பேசிக்கொண்டு துரிஞ்ச மர வழியாக முரம்புக் கொல்லிக்கு வந்த கவுண்டர், தெக்காலப் பக்க வேலியோரம் மல்லாட்டை பயிர்களுக்கு இடையூறாக நீட்டிக்கொண்டிருந்த முட்களையும் சிறுசிறு மரக் கிளைகளையும் பூண்டுகளையும் வெட்டி சீர் செய்து கொண்டிருந்தார்.

கூடவே வெட்டிப்போடுவதை எடுத்து மரிசிமேல் வைத்துக்கொண்டு வந்த செவடன், ‘கேட்கலாமா வேண்டாமா’ எனும் தயக்கத்தோடு கேட்டான்.

”நேத்து பெசாயலிருந்து என் வூட்டுக்காரிக்கு நிக்காம வவுத்தால போயினு கீது, கவுண்ர. அதுக்கு என்ன பண்லாம்…?’’

வெட்டிய உண்ணிமில் மிலாரை இழுத்து மரிசிமேல் போட்டுவிட்டு திரும்பி, ”ஏன்டா செவடா, இது ஒனுக்கே நல்லாகீதா…? காலிலருந்து ஏன்கூடதான கீறவன். பொண்டாட்டிக்கி வவுத்தால போவுதுன்னு வந்ததும் கேட்டுருக்கணுமா இல்லியா…? இம்மாந்நேரம் கய்ச்சி, அதும் எதோ கேக்கணுமேனு கடனுக்குக் கேக்கறவன். அப்டிதான…?’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு பக்கத்தில் வந்தார்.

”பொம்பளிங்க வூட்ல நல்லாருந்தாதான், ஆம்பிளிங்க வெளிய நல்லாருக்க முடியும்.’’

கவுண்டர் சொன்னது கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் தலையைக் கீழே தொங்கப் போட்டு நின்றான் செவடன்.

”என்னிக்கும் பொட்டச்சிதானன்னு கொறச்சி பாக்காத. அவுங்க நெனச்சா ஒருத்தர ஆக்கவும் முடியும், அய்க்கவும் முடியும். அதுமட்டுல்ல… ஆம்டியானுங்க என்னதான் என்னிக்கும் பொண்டாட்டிக்காரிய வுட ஒஸ்திமயிருன்னு வெளிய சொல்லிக்கினு சுத்தனாலும்… அவுங்க வூட்ல சரியால்லனா ஆம்பள பொழ்ப்பு சந்திதான் சிரிக்கும், பாத்துக்க.’’

கிழக்கே முடியனூரான் கொல்லி முடக்கோரம் யாரோ விறகுச் சுமை தூக்கிக்கொண்டு வேகமாக நடந்து போவதைப் பார்த்துவிட்டு கவுண்டர் சொன்னார்.

”பள்ளத்தூட்டு பொன்னுசாமி ஆச்சாரி கீறான்ல… அவன்கிட்ட போயி நானு சொன்னன்னு சொல்ட்டு, கெணத்தாண்ட கீற கொய்யா மரத்துல நாலு கொய்யா பிஞ்சா பாத்து பறிச்சினு போயி ஒன் பொண்டாட்டிக்காரிட்ட தந்து நல்லா மொன்னு தின்னச் சொல்லு. கொய்யா தய தந்தாலும் கேக்கும். மொத, பிஞ்ச தந்து பாப்பம். பொசாய வரிக்கும் கூடருந்து நிக்கிதான்னு பாரு. நிக்கலன்னா கையோட கூட்டுனு வா, வேற என்ன பண்ணலான்னு சொல்றன்.’’

செவடனை அனுப்பிவிட்டு, வெட்டிப்போட்ட மிலாரையும் கிளைகளையும் காய்ந்தால் நெல் அவிக்கப் பயன்படும் என எடுத்துப் போய் மேற்கால துண்டு ஓரமாகப் போட்ட கவுண்டர், ஊரில் புதிதாகக் கட்டியுள்ள அல்லாகோயிலில் மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும்வரை கொல்லியில் இருந்துவிட்டு, வேலியோர சவுண்டல் மரத்தில் படர்ந்திருந்த கோவக்கொடியில் பழுத்து தொங்கிக்கொண்டிருந்த இரு கோவப் பழங்களை முருகனுக்கும் செல்விக்கும் தர எட்டிப் பறித்துக்கொண்டு, மெல்ல நடந்து வீட்டுக்கு வந்து தாழ்வாரத் திண்ணையில் உட்கார்ந்து செல்வியிடம் ஒரு பழத்தைத் தந்துவிட்டு கூழ் கரைத்துக் கொண்டுவர சொல்லி அணில்காய் ஊருகாய் கடித்துக்கொண்டு குடித்தார்.

அடுத்த செத்த நேரத்தில் சுள்ளி விறகு கட்டித் தூக்கிக்கொண்டு வந்த பூரணியம்மா… கட்டுத்தெரு பின்னால் போட்டுவிட்டு சாக்கடையில் போய் கை கால், முகம் கழுவிக்கொண்டு புடவைத் தலப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, வீட்டுக்குள் வந்து கவுண்டரை பார்த்து கண்ணடித்து லேசாக பற்கள் தெரிய புன்னகைத்து, ”கூழ்கீழ் எதனா குடிச்சியா தே…?’’ என்று கேட்டார்.

பதிலுக்கு இதமாகப் புன்னகைத்துவிட்டு, ”இப்பதான் பூர்ணி குடிச்சன், நீ போயி குடி’’ என்றார் பக்கத்திலிருந்த காலி சொம்பைக் காட்டி.

சென்று அடுப்பு பக்கத்திலிருந்த பித்தளை தவலையில் ரோட்டா சொம்பு நிறைய தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு வந்து பக்கத்தில் உட்கார்ந்த பூரணியம்மா, ”ஏந்தே, ஒங்க கூட்டாளி மாரிமுத்தண்ணன் கீறாருள்ள… அவுரு வந்துனு கீறாரு தே’’ என்றார்.

சட்டென சூரியகாந்தி பூ போல் முகம் மலர்ந்த கவுண்டர், ”மாரிமுத்தா… வரட்டும் வரட்டும்” என்று சொல்லிக்கொண்டு எழுந்து வெளியில் வந்தார்.

பெரிய மஞ்சள் பை நிறைய எதையோ காசிரிக்கா நார் போட்டு கட்டி தோள்மேல் வைத்து எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து வந்து வாசலில் நின்றிருந்த கவுண்டரைப் பார்த்து சிரித்த மாரிமுத்து கவுண்டர், ”என்ன முத்துசாமி, நானு வர்றன்னு ஒனுக்கு முன்னாலயே தெரிஞ்சிபோச்சி போல… வாசல்லயே வந்து நின்னுனு கீறவன்’’ என்று கேட்டார்.

சத்தமாக சிரித்துக்கொண்டு, ”ஆமா மாரிமுத்து’’ என்றார் கவுண்டர்.

வந்தவர் வாசப்படி அருகில் போய் நின்று, ”எம்மா பூர்ணி, குடிக்க செத்த தண்ணீ மொண்டா தாயி’’ என்றார், தோளிலிருந்த பையைக் கீழே இறக்கி வைத்து.

உட்கார்ந்திருந்த பூரணியம்மா, உடனே எழுந்துபோய் மோர் சொம்பில் தண்ணீர் மொண்டு வந்து தர… வாங்கிக்கொண்டு கீழே வைத்திருந்த பையைக் காட்டி, ”இதல ரவ பச்சப்பயிறு கொண்டாந்துகீறன்… கொண்டுனு போயி உள்ள வையி, தாயி’’ என்று சொல்லிவிட்டு அண்ணாந்து ஒரு மிடரு ஊற்றி வாய் கொப்புளித்து திரும்பி ஓரமாகத் துப்பிவிட்டு, மொடமொடவென முக்கால் சொம்பு நீரை குடித்துவிட்டு மீதி தண்ணீரை வாசலோரம் நட்டுவைத்திருந்த சிறு வேப்பங்கன்றில் ஊற்றிவிட்டு காலி சொம்பை தந்தனுப்பினார்.

பூரணியம்மாவோடு விறகு பொறுக்கப் போயிருந்த முருகன், கோயிலருகில் மறைத்து வைத்திருந்த தன் கப்பைக் கல்லை எடுத்துவந்து ராமு கவுண்டர் வீட்டின் பின்னால் கனகாம்பரம் செடிக்குள் வைத்துவிட்டு, யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு வந்து, மெல்ல வீட்டுக்குள் நுழைந்தான்.

”வா போயி கட்டுத்தெருக்கா ஒக்காருவம்’’ என்று கவுண்டர் சொல்ல, இருவரும் பேசிக்கொண்டு கட்டுத்தெருவுக்குள் போய் கட்டிலில் உட்கார்ந்தார்கள்.

பேச்சு சட்டென கவுண்டரின் முரம்புக் கொல்லியை முகாந்திரமாகக் கொண்டு வேக வேகமாக உருவாகியுள்ள ஊர் குறித்து வந்தது.

”இப்பதான் நீ இந்தக் கொல்லிக்காட்டுக்கு குடுத்தனம் வந்தமரே கீது… அதுக்குள்ள அஞ்சி வருசம் ஆய்டிச்சில்ல…?’’

வியப்போடு மாரிமுத்து கவுண்டர் சொல்ல, ‘ஆமாம்’ என தலையாட்டினார் கவுண்டர்.

”என்னடா இவன் பாட்டுனு திடுதிப்புனு அறியாப்புள்ளிங்கள கூட்டுனு… எடுத்தங்கவுத்தம்னு கொல்லிக்கி குடுத்தனம் வந்துட்டானேன்னு, நானும் மொதல்ல பயிந்தன். ஆனா நாளாவ ஆவ… ஒண்ணு பின்னால ஒண்ணா ஈச மாரி வூடுங்குளும் ஆளுங்குளும் வந்தத பாத்ததும்தான், மனசுக்கு நிம்மிதியா போச்சி.’’

மாரிமுத்து கவுண்டர் இதைச் சொல்லி முடிக்கவும், கட்டுத்தெரு கடந்து சோலைக்கண்ணன் தெருவில் வேகமாக நடந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டு போகவும் சரியாக இருந்தது.

சோலைக்கண்ணன் கட்டுத்தெரு முன்னால் வந்து நின்று, தெற்குப் பக்கம் பார்த்துக்கொண்டு வாயில் வந்ததெல்லாம் சொல்லி வண்ட வண்டயாகத் திட்டிவிட்டுப் போன சம்பவம் சட்டென்று மாரிமுத்து கவுண்டருக்கு நினைவுக்கு வந்தது.

‘அவனப் பத்தி அன்னிக்கிதான் கேக்காம வுட்டுட்டம். இன்னிக்காது முத்துசாமிகிட்ட கேட்டுட்டா என்ன…?’

மாரிமுத்து கவுண்டர் தனக்குள் நினைக்கும்போதே, கவுண்டர் அவன் குறித்து, அதிலும் குறிப்பாக விறகு வெட்ட அரசங்கல்லுக்குப் போயிருந்தபோது பாறைமேலிருந்து குதித்த சம்பவத்தைச் சொன்னார்.

கேட்டதும் அதிர்ந்தவர், ”ச்சே, பாவம்ல…?’’ என்றார்.

‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டர், மெல்ல எழுந்து போய் அட்டணை மேல் வெட்டி தோல் சீவி நன்கு இழைத்து வைத்திருந்த பொர்ச மர மண்வெட்டிப் பிடியை எடுத்து வந்து மாரிமுத்து கவுண்டரிடம் தந்தார்.

சோலைக்கண்ணனை நினைத்து வாங்கிக் கொண்டவரிடம், ”தண்ணிவுள்ள குதிச்சான்னா… நூறு என்றவரிக்கும் உள்ளயே தம்கட்டினு கல்லுமரே இருப்பான். எது ஒண்ணுனாலும் ஓடியாந்து ‘எண்ணா எண்ணா’ன்னு சிரிச்சினே கேப்பான். யாரு எவுருனுலாம் பாக்காம ஓடி ஓடி எல்லாத்துக்கும் ஒத்தாச பண்ணுவான். ஒருத்தரு வம்புதும்புக்கும் போவாதவன். ஒரு சூதுவாதும் தெரியாதவன். பாவம்… அவன் குடும்பத்த போயி இப்டி பண்ணி, அவன இப்டி ஆக்கிவுட்டாங்க… படுபாவிங்க’’ என்றார் வருத்ததோடு கவுண்டர்.

”யாரு அப்டி பண்ணாங்கன்னு ஒனுக்கு தெரிமா…?’’

தன் நண்பர் கேட்ட கேள்விக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் எழுந்து போய் நெடுங்காலில் சாய்ந்துகொண்டு நின்றார் கவுண்டர்.

செத்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தவர் எழுந்து, ”செரி முத்துசாமி, நானு போயி வர்றன். நாளமறுநாளு எப்பனா தோதுபட்டா கொல்லிக்கா வா, மரத்துல கள்ளெறக்குறாங்க…’’ என்றுவிட்டு கட்டில் மேல் வைத்திருந்த மண்வெட்டிப் பிடியை எடுத்துக்கொண்டு, ”வர்ற ஆடி மாசம் மொத ஞாத்திக்கெழ்ம எல்லசாமிக்கு கெடாவெட்டி பொங்குலு வக்கலாம்னு கீறன். அன்னிக்கி வூட்ல எல்லாத்தயும் கூட்டுனு காலிலயே வந்துடு’’ என்று சொல்லிவிட்டு மனம் முழுக்க சோலைக்கண்ணனை நினைத்துக்கொண்டு புறப்பட்டுப் போனார்.

வீட்டின் பின்னால் பூவரச மரத்தடியில் போட்டிருந்த கட்டிலைத் தூக்கிவந்து வாசலில் போட்டு உட்கார்ந்த கவுண்டர்… நன்கு இருட்டும் வரை உட்கார்ந்திருந்துவிட்டு, பூரணியம்மா வந்து இரவு உணவு சாப்பிட அழைத்ததும், ‘வேண்டாம்’ என சொல்லிவிட்டு, வெறும் வயிற்றில் அப்படியே துண்டை விரித்துப் போட்டு படுத்துக்கொண்டார்.

ஒருகட்டம் வரைக்கும் காத்திருந்துவிட்டு, மனசு கேட்காமல் எழுந்து சின்ன தட்டில் சோறு போட்டு முருங்கைக் கீரை சாம்பார் ஊற்றி எடுத்துக்கொண்டு வெளியில் வந்து கட்டிலில் படுத்துக்கொண்டு, தூங்காமல் நிலவின்றி இருண்டு போய் கிடக்கும் வெற்று வானைப் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டரை, ”ஏந்தே’’ என்று கூப்பிட்டார் பூரணியம்மா.

தன் மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார் கவுண்டர்.

”வெறும் வவுத்தோட படுக்காம, ரவ சோறு தின்னுட்டு படு தே.’’

”இல்ல, வேணாம் பூர்ணி.’’

”எதுவாருந்தாலும் காலில பேசிக்கலாம் தே… இந்தா, இந்த ரவ சோத்தயாது தின்னு.’’

சொல்லிக்கொண்டே வந்து கட்டிலில் பக்கத்தில் உட்கார்ந்த பூரணியம்மா, சோறு பிசைந்து ஒரு பிடி அள்ளி கவுண்டருக்கு ஊட்டிவிட்டார்.

பசியின்றி உண்டுவிட்டு படுத்த கவுண்டர், தூக்கமின்றி கீழ்வானம் வெளுத்து விடிந்து குவளை விரிந்து ஆம்பல் குவியும் வரை படுத்திருந்துவிட்டு, பறவைகளின் கீச்சொலியை கூட காதில் வாங்காமல் எழுந்து கட்டிலைத் தூக்கிப்போய் வீட்டின் பின்பக்க பூவரச மரத்தடியில் போட்டுவிட்டு வந்து, கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாட்டை அவிழ்த்து துரிஞ்ச மரத்தடியில் கொண்டு கட்டிவிட்டு, மெல்ல அதன் கன்னத்திலும் கழுத்திலும் தடவிக் கொடுத்தார்.

பொழுது விடிந்து செத்தநேரம் கூட ஆயிருக்காது. அதற்குள் யாரோ கொடுவாள் எடுத்துக்கொண்டு தன்னை வெட்ட துரத்தி வருவதுபோல் எறப்புவாங்க அம்மாசி பாட்டி மகன் பெரியசாமி, ”மாமா… மாமா…’’ என அலரி கத்திக்கொண்டு ஓடிவந்தான்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=