முரம்பு – 23

பொர்ச மரத்தருகில் இருந்த சிறு ஆலமரத்தடியில், வாங்கி வந்த புது விநாயகர் சிலையை வைத்து நன்கு கழுவி துண்டுகட்டி பொட்டிட்டு கெதம்பொடி தூவி மாலைபோட்டு, அடுப்பு மூட்டி பொங்கலிட்ட சோற்றை இறக்கிவைத்து, வத்தி கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து படைத்து, எல்லோரும் வரிசையாக நின்று சாமி கும்பிட்டார்கள்.

”எய்யா புள்ளயாரப்பா, மொதமொத இங்க ஊருவொண்ணு உருவாயி… ஒணுக்குதான் செலவச்சி கும்பட்றோம். எப்பியும் கூடயே தொணயாருந்து நீதான்யா எங்கள காபுந்து பண்ணணும்.’’

”என்னயும் என் பொண்டாட்டி புள்ளிங்களயும் நீதான் சாமி கண்ணும் கருத்துமாருந்து காலத்துக்கும் பாத்துக்குணும்.’’

”ஏதோ நம்பிக்கயில புள்ள குட்டிங்கள கூட்டுனு இந்த கொல்லிக் காட்டுக்கு குடுத்தனம் வந்துட்டம். ஒனுக்கு வாரம் தவுறாம பொங்குலு வச்சி படக்கிறோம். நீதான்ம்பா எங்க எல்லாத்துக்கும் தாயா புள்ளயாருந்து காக்கணும்.’’

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்லி வேண்டிக்கொண்டிருந்தார்கள். முத்துசாமிக் கவுண்டரும் பூரணியம்மாவும் மட்டும் எந்த வேண்டுதலும் இல்லாமல் வெறுமே நின்றுகொண்டு, பிள்ளையார் சிலையைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

சட்டென பக்கத்திலிருந்த பொர்ச மரத்தின் மேல்கிளையில் ஒரு கிளி வந்து உட்கார்ந்து, தன் அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பி கத்த ஆரம்பித்தது. தீக்குரல் என சிலர் பதட்டத்தோடும், சிலர் நல்ல சகுனமென்றும் அண்ணாந்து பார்த்தவர்கள், அது செத்தநேரம் கத்திவிட்டு மேற்குப் பக்கமாகப் பறந்து போனதும் கவுண்டரிடம் வந்து விபூதி இட்டுக்கொண்டு, இரண்டு மூன்று பேர்களாக பேசிக்கொண்டு நடந்து அவரவர் வீட்டுக்குப் போனார்கள்.

எல்லோரும் போனபின் பக்கத்தில் வந்த பொன்னுசாமி ஆச்சாரி, ”ஏன் முத்துசாமி, இன்னிக்கி சித்தரா பெளர்ணமி… இதலிருந்து அடுத்த மாசி பொறக்க சரியா ஒம்போது மாசம் கீது இன்னும். நாம ஏன் வர்ற மாசி பெளர்ணமிக்கி… இங்கயே தனியா மன்மதங்கால் நடக்கூடாது…?’’ என்று கேட்டார்.

‘இவன் தெரிஞ்சிதான் கேக்கறானா… இல்ல, வெளாட்டுக்கு கேக்கறானா…?’ என தனக்குள் நினைத்து சிரித்துக்கொண்டு, கையில் வைத்திருந்த திருநீறு தட்டை கொண்டுபோய் பிள்ளையார் சிலை பக்கத்திலிருந்த திட்டுமேல் வைத்துவிட்டு வந்து, அருகில் நின்றிருந்த தன் மச்சானைப் பார்த்துவிட்டு, ”இப்பதான் ஊரு ஒண்ணு நல்லபிடியா மொல்ல உருவாயின்னு வருது. அதுக்குள்ள எதுக்குடா மன்மதங்கால்லாம் நட்டுகினு…?’’ என்று கேட்டார் கவுண்டர்.

உடனே ஆச்சாரி, ”அப்ப, வர்ற தை பூசத்துக்கு காப்பு கட்டி… தேராவது ஈக்கலாம்’’ என்றார்.

”மன்மதங்காலே அதுக்குள்ள எதுக்குன்னு கேக்கறன்… நீ என்னடான்னா தைப்பூசத் தேருக்கு போயிட்டவன்.’’

கவுண்டர் காட்டமாக சொன்னதைக் கேட்டுவிட்டு சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்ற ஆச்சாரி, ”அதில்ல முத்துசாமி… மாசி வர இன்னும் செரியா ஒம்போது மாசம் கீது. மாசில மன்மதங்கால் நட்டம்னா… பங்குனி மாசம் கலியாணம் பண்ணி… அதுக்கடுத்த சித்தரயில மன்மதன் கொளுத்தரதுக்குள்ள… இன்னும் கொறஞ்சது பத்துபாஞ்சி வூடாவுது இங்க வந்துரும். அதான்’’ என்றார் கனிவாக.

கேட்டுவிட்டு சிரித்த கவுண்டர், ”எல்லாம் செரிதான் பொன்னுசாமி, அதுக்காக…’’ என்று நிறுத்தியவர் திரும்பி மேற்கே பார்த்துவிட்டு, ”மன்மதங்கால் நட்டு கொளுத்தரதுனா… என்னுமோ பொரிகடல அள்ளி தின்றதுன்னு நெனச்சிட்டியா நீ…? அததுக்கு ஒரு நேரங்காலம் வர வேணாமா…?’’ என்றார்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் அமைதியாக நின்றவர் மெல்ல குரல் தாழ்த்தி, ”சுலுவு இல்லன்னு எனுக்கும் நல்லா தெரியும் முத்துசாமி’’ என்றுவிட்டு, தன் டவுசர் பாக்கெட்டிலிருந்த நான்காக மடித்துவைத்திருந்த ஐம்பது ரூபாய் நோட்டை வெளியில் எடுத்து கவுண்டரிடம் நீட்டி, ”இத புடி’’ என்றார்.

‘வாங்க மாட்டேன்’ என்பதுபோல் தலையாட்டிவிட்டு, ”எதுக்கிது…?’’ என்று கேட்டார் கவுண்டர்.

”நீ மொத கைல புடி… எதுக்குன்னு அப்பறம் சொல்றன்.’’ 

மிகுந்த தயக்கத்தோடு கவுண்டர் வாங்கிக்கொண்டதும், ”பள்ளத்து தெருவு முனுசாமி கீறான்ல… பொக்க வாயி கெய்வி மவன், நொல்லக் கண்ணன். அவுனும் அவன் தம்பிக்காரனும் நேத்து வூட்டுக்கு வந்து பாத்துட்டு போனானுங்க. ஊருல கீற வூட்ட பாயிமாருங்க யாருகிட்டனா வித்துட்டு… இங்க மொரம்புல வந்து நம்ம கூட வூடு கட்டினு குடுத்தனம் வரப் போறாங்களாம். அதுக்கு எடம் எங்கனா வேணும்னு கேட்டானுங்க. நானும் நாளமறுநாளு வாங்கடா சொல்றன்னு சொல்லிகீறன்” என்றுவிட்டு, திரும்பி பின்னால் வேகமாகப் போய் உண்ணிமில் புதரோரமிருந்த சிறு துரிஞ்ச மரத்தருகில் நின்று குனிந்து சளி சிந்திவிட்டு, கையை மரத்தில் துடைத்துவிட்டு தன் தோளில் போட்டிருந்த துண்டால் மூக்கை துடைத்துக்கொண்டு வந்து, விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

”அவனுங்க மட்டுல்ல முத்துசாமி… இப்டி ஊரு குடியானத்தெருல கீற பேர்பாதி பேரு, நிம்மிதியா இங்க வந்துறலாம்னு பேசினு கீறாங்க. அதல பாதி பேத்துக்கு மேல வந்துற முடுவே பண்டாங்க. அதலாம் மனசுல வச்சினுதான் மன்மதங்கால் நடலாம்னு இப்பியே சொல்றன். ஏன்னா, நாம கீற எடத்துல கோயிலு கொளம்ன்னு ஒண்ணு இருந்தாதான்… அதல அப்பப்ப நல்லது கெட்டது நாலு நடந்தாதான்… எல்லாத்துக்கும் ஒரு புடிப்பு வரும். எதப் பத்தியும் ஒசன பண்ணாம தெம்போட காலத்த தள்ளமுடியும். அதாலதான் சொன்னன்.’’

சொல்லிக்கொண்டு கவுண்டரின் பக்கத்தில் வந்து நின்று மெல்ல அவர் கையைப் பிடித்து, ”எனுக்கு தெரிஞ்சி நாம மன்மதங்கால் நட்டு மேலக்கி இதேநாத்து கொளுத்தரதுக்குள்ள… நாமளே நெனச்சிப் பாக்காத அளவுக்கு ஊரு உருவாவப் போவுது பாரு’’ என்றார் ஆச்சாரி.

எதுவும் பேசாமல் தனக்குள் ‘ம்’ கொட்டி மேலும் கீழும் தலையாட்டினார் கவுண்டர்.

திரும்பி ஆலமரத்தடியில் வைத்திருந்த பிள்ளையார் சிலையையும், அதன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து சிறு வாழை இலையில் வைத்திருந்த பொங்கல் சோற்றை ‘தொடலாமா, வேணாமா?’ என பார்த்துக்கொண்டிருந்த கீச்சாங்குருவி என்னும் கரிக்குருவியையும் பார்த்துவிட்டு, தன் முன்பற்கள் மொத்தமும் தெரிய சத்தமின்றி சிரித்த ஆச்சாரி, ”இந்த அம்பது ரூவா ஏன் தந்தன்னா… இந்த காச வச்சினு மேலக்கி மன்மதங்கால் நட ஆவ வேண்டித இப்பருந்தே பாரு… நானும் என் தம்பிங்குளும் சேந்து இந்த வாட்டி மன்மதங்கால் நடறதுலருந்து… கொளுத்திட்டு எய்ப்பற வரிக்கும் ஆவர எல்லா செலவயும் ஏத்துக்குறம்னு சொல்லதான்’’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டு, கவுண்டரின் பதிலுக்குக் காத்திராமல் அவர் பாட்டுக்கு நடந்து வேகமாக வீட்டுக்குப் போனார்.

இருந்தும் இல்லாததுபோல் இவ்வளவு நேரம் பக்கத்தில் அமைதியாக நின்றுகொண்டு அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த ராமு கவுண்டர், ”ஆமா முத்துசாமி… அவன் சொல்ட்டு போறதும் செரிதான்’’ என்றார்.

கோடை வெயில் சென்றாண்டை விட இவ்வாண்டு கூடுதலாகவே கொளுத்த ஆரம்பித்திருந்தது. அதிலும் இன்று ஒருபடி மேலே போய் தோலெல்லாம் சாரி சாரியாகப் பிய்த்துக்கொண்டு வருவதுபோல் எரித்துக்கொண்டிருந்தது. ஒதுங்கி இருவரும் வெயிலுக்கு இதமாக பொர்ச மரத்து நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

தன் மகனோடு கால்வாய்க்குப் போய், இடுப்புமூட்டு தண்ணியில் இறங்கி நின்று மாட்டை குளிப்பாட்டிவிட்டு, தாங்களும் குளித்துவிட்டு அவ்வழியாக நடந்து வந்த தவுலத்கான் சாயுபு… கவுண்டரும் ராமு கவுண்டரும் அங்கே நின்றிருப்பதையும், பக்கத்திலிருந்த சிறு ஆல மரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்று புதிதாக வைத்து பொட்டிட்டு பொங்கல் வைத்திருப்பதையும் பார்த்துவிட்டு, ”என்ன கவுண்ர, அன்னிக்கி யாரும் இல்லாத கொல்லிக்காட்டுக்கு குடுத்தனம் வந்தீங்க… பின்னாலயே ஒரு ஊரு வந்துருச்சி. இன்னிக்கி என்னடான்னா இங்கயே ஒரு சாமி செல வச்சி கும்ட்டுகீறிங்க. இனிமேலு என்ன… தொட்டதுலாம் பொன்னாதான் ஆவப்போது பாருங்க’’ என்றார்.

திரும்பி ராமு மாமாவைப் பார்த்து புன்னகைத்தார் கவுண்டர்.

கையில் பிடித்திருந்த காளை மாட்டை தன் மகனிடம் தந்து கொட்டாய்க்கு போகச் சொல்லிவிட்டு, ”நானும் கொல்லில கீற கொட்டாயயே வூடா மாத்திகினு… குடுத்தனம் வந்துரலாம்னு கீறன், கவுண்ர’’ என்றார் சாயுபு.

தனக்குள் மகிழ்ந்தவராய் மெல்ல தலையாட்டிவிட்டு, அடுத்தென்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆவலோடு சாயுபு முகத்தைப் பார்த்தார் கவுண்டர்.

”எங்க பாயிமாருங்கல்லயே பத்து பேத்துக்கு மேல இப்பயே இங்க வூடு கட்டினு குடுத்தனம் வந்துட்டாங்க… ஊருல கீற ஃபரித்கான் சாயிபு, முபாரக், அயூப்கான், மூஸா, இஸ்மாயில்’னு யாரப் பாத்தாலும் இதப்பத்திதான் பேசினுகீறாங்க. எப்டியும் மேலிக்குள்ள கொறஞ்சது இருவுது முப்பது பேராது வந்துருவாங்கன்னு படுது.’’

எந்தவித சலனமும் முகத்தில் காட்டாமல் சாயுபுவைப் பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர். ராமு கவுண்டரோ, அப்படியே நேர்மாறாக எகிரிக் குதிக்காத குறைதான்.

”என்ன நெனச்சினு கொல்லில கொட்டா கட்டனீங்களோ… பின்னால அதயே வூடா மாத்தினு குடுத்தனம் வந்தீங்களே தெர்ல, கவுண்ர. ஆனா ஊரே ஒங்க பின்னால வந்துருச்சி பாருங்க. நெனிக்க நெனிக்க ஆச்சிரிமாதான் கீது’’ என்றுவிட்டு, கிழக்குப் பக்கம் மாட்டை பிடித்துக்கொண்டு போன அவர் மகன் முரம்புக் கொல்லி பள்ளத்தில் இறங்குவதைப் பார்த்துவிட்டு, ”செரி கவுண்ர, நானு போயி வர்றன்… நாளமறுநாளு கொல்லில கம்புனா, இல்ல சாமனா  வெதிக்கலாம்னு கீறன். வெத கம்பு எதனா கூடலா வச்சிருந்தா சொல்லுங்க… வந்து வாங்கிக்கறன்’’ என்று சொல்லிவிட்டு, வந்ததை விட வேகமாக நடந்து போனார்.

நாட்கள் வேக வேகமாக ஓட ஆரம்பித்தன. பொன்னுசாமி ஆச்சாரி என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை. காலியாங்குட்டி பாம்பு போல ஒன்றன் பின் ஒன்றாக வீடுகள் வர ஆரம்பித்தன. அதுவும் அவர் சொன்ன ஓராண்டில், சித்திரை மாத பவுர்ணமி அன்று நடந்த முதல் மன்மதன் தகன விழாவுக்கு கவுண்டர் கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு கூட்டம் கூடியது.

ஒருபக்கம் கவுண்டரால் நம்பவே முடியவில்லை. இன்னொரு பக்கம், கண்முன்னால் ஊர் இவ்வளவு குறுகிய நாட்களுக்குள் இந்தளவுக்கு வளர்ந்து நிற்பதை பார்த்து நம்பாமலும் இருக்க முடியவில்லை.

ஆலமரத்தடி பிள்ளையார் சிலைக்கு நேராக பத்து தப்புடி தூரத்தில் மன்மதங்கால் நட்டு கொளுத்திய இடத்தில் இருந்த சாம்பலையும் பொடிப்பொடியான கரியையும் தண்ணீர் தெளித்து திட்டுபோல் அமைத்து, அதன்மேல் நான்கு மூளையிலும் சிறு சிறு கோபுரம் போன்று உருண்டை பிடித்துவைத்து, நடுமத்தியில் ஒரு கோபுரம் பிடித்துப் பொட்டிட்டு, மலரோடு சேர்த்து பொரி கடலையும் தூவி, கொழுக்கட்டை தட்டைப்பயிர் முந்திரி வாழைப்பழம் வெற்றிலைப்பாக்கு யாவும் வைத்து வத்தி கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து படைத்து, பாட்டுப் பாடி மேளம் அடித்து ஆட்டம் ஆடி, இறந்துபோன மன்மதனைத் திரும்பவும் எழுப்பிவிட்டு ராமு கவுண்டரோடு பேசிக்கொண்டு மேற்குப் பக்கமாக கால்வாய்க்குப் போகும் கொடிவழியில் நடந்துபோனார் கவுண்டர்.

கோனாமூட்டு தென்னந்தோப்பு பக்கத்திலிருந்த அவிஞ்சி மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, தன்னை மறந்தவனாய் தான் பாட்டுக்கு புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்த சோலைக்கண்ணன்… சட்டென என்ன நினைத்தானோ தெரியவில்லை, பெரிய மலைப்பாம்பு துரத்துவது போல் எழுந்து வேகமாக தென்னந்தோப்புக்குள் ஓடினான்.

‘எதுக்கிந்த சோலக்கண்ணன் இம்மாம் வேகமா ஓடறான்…?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டு, எதுவும் பேசாமல் தென்னந்தோப்புக்குள் நுழைந்த கவுண்டர்… சில தினங்களுக்கு முன் அரசங்கல்லுக்கு விறகு வெட்டப்போயிருந்தபோது, மலை உச்சியில் உட்கார்ந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்த சோலைக்கண்ணன், தன்னைப் பார்த்துவிட்டு இறங்கி பக்கத்தில் வந்ததை மனத்திரையில் ஓட்டிப்பார்த்தார்.

அதுவும் புல்லாங்குழல் ஊதுவதை நிறுத்திவிட்டு, மெதுவாக இறங்கி பூனைபோல் பக்கத்தில் வந்து நின்று எதுவும் பேசாமல், தான் விறகுவெட்டுவதைப் பார்த்துக்கொண்டிருந்த சோலைக்கண்ணனை சற்றும் எதிர்பாராமல் திரும்பும்போது பார்த்துவிட்டு, ”என்ன சோலக்கண்ணா…?’’ என்று கேட்டார் கவுண்டர்.

பதில் சொல்லாமல் அவன்பாட்டுக்கு நின்றுகொண்டு தனக்குள் எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான்.

இரண்டு மூன்று தடவை கூப்பிட்டுப் பார்த்த கவுண்டர், என்ன செய்வதெனத் தெரியாமல் குனிந்து மறுபடியும் விறகு வெட்ட ஆரம்பித்தார்.

செத்தநேரம் அங்கேயே நின்றிருந்தவன், சட்டெனத் திரும்பி வேகமாக நடந்துபோய் பக்கத்திலிருந்த தட்டுப்பாறை மேல் ஏறி நின்று தெற்குப் பார்த்து, ”ஏன்டா சங்ககெட்ட தெவ்டியா பசங்களா… என் அப்பன கொன்னுட்டு, அறியாப்புள்ளனு கூட பாக்காம என் கண்ணுமுன்னாலயே என் அம்மாள கூடினு ஓத்ததும் இல்லாம… அவ கய்த்த நெரிச்சி கொன்னும் போட்டீங்கல்ல… ஈனம் மானம் எதனா இருந்தா என்கிட்ட வாங்கடா பொட்டப் பசங்களா… ஒண்ணு வுடாம எல்லாத்தயும் கணக்குமேல கணக்கா போட்டு வச்சிக்கீறன்டா நானு… ஒருநாளுல்ல ஒருநாளு எனுக்கும் வரும்டா… அன்னிக்கி ஒங்குளலாம் வெட்டி பொலிபோடாம வுடமாட்டன் பாருங்க.’’

கையில் வைத்திருந்த கொடுவாளைக் கீழே வைத்துவிட்டு, சத்தம் போடாமல் சோலைக்கண்ணன் நின்றிருந்த பாறையில் போய் ஏறினார் கவுண்டர்.

”நானுன்னா எல்லாத்துக்கும் எளப்பமா போச்சில்ல… அதான் ஈத்துப் போட்டு தொம்முதொம்முனு அடிச்சீங்க, மக்குமக்குனு குத்தனீங்க, கூதி இல்லாத்துனால வக்கனயா வெண்டுல சூத்தடிச்சீங்கல்ல… பாக்கறான்டா, அவன் பாக்கறான்… எல்லாத்தயும் அவன் பாத்துனுகீறான்… ஏங்கிட்ட தப்சாலும் நீங்க அவங்கிட்ட தப்பிக்க முடியாதுடா.’’

பின்னால் போய் எட்டித் தொடும் தூரத்தில் நின்று, ”சோலக்கண்ணா” என்று கூப்பிட்டார் கவுண்டர்.

பொட்டும் கேட்காததுபோல் அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தான்.

”அம்டன்தான, யாரு வந்து கேக்கப்போறான்னு நெனச்சீட்டிங்கல்ல… இதே ஒருத்தனுக்குதான் ஒங்கம்மாக்காரி ஒங்கள ஓத்து பெத்திருந்தான்னா, போயி துலுக்கன்கிட்ட ஒங்க பூல காட்டிப்பாருங்க… அப்ப தெரியும் ஒங்க பவிசி என்னான்னு.’’

சற்றும் யோசிக்காமல் துணிவோடு எட்டி சோலைக்கண்ணனின் தோளைத் தொட்டார் கவுண்டர். அவ்வளவுதான். புலியிடம் சிக்கிய மான் போல் நடுங்கிக்கொண்டு, ”நானு இல்ல… நானு இல்ல…’’ என்று சொல்லிக்கொண்டு நின்றிருந்த பாறையிலிருந்து தொம்மென்று கீழே குதித்துவிட்டான்.

நல்லநேரம், உயரம் குறைவான பாறை என்பதால் ஒன்றும் ஆகவில்லை. அதோடு, பக்கத்திலிருந்த பெரிய கல்லின் மேல் குதிக்காமல் பாறையை ஒட்டியிருந்த மஞ்சம்புல் மேல் குதித்தான். இல்லையென்றால் பெரும் ஆபத்தில்தான் போய் முடிந்திருக்கும்.

”டே டே… சோலக்கண்ணா’’ என்று உயிர்வரை பதறிப்போன கவுண்டர், பாறையிலிருந்து வேகமாக இறங்கிப் போய் பார்ப்பதற்குள் கீழே குதித்தவன் எழுந்து கால் முட்டியில் லேசாக அடிபட்டி ரத்தம் வருவதைக் கூட பொருட்படுத்தாமல், தனக்குள் எதையோ சொல்லி முணுமுணுத்துக்கொண்டு, மலையிலிருந்து கிடுகிடுவென கீழே இறங்கி திரும்பிக்கூட பார்க்காமல் கரம்புக் கொல்லியில் நடப்பது போல் ஓடிப்போனான்.

‘ஏன்தான் சோலக்கண்ணன் கிட்ட போனமோ?’ என வருத்தத்தோடு நினைத்துக்கொண்டு, வெட்டிக் கட்டிய விறகோடு சேர்த்து பெரும் வலியையும் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் கவுண்டர்.

‘தொம்மென’ ஒரு காய்ந்த தென்னம் மட்டை மரத்திலிருந்து விழும் சத்தம் கேட்டு சட்டென நினைவு வந்தவராய் திரும்பிப் பக்கத்தில் நடந்து வந்த தன் மச்சானைப் பார்த்துவிட்டு கேட்டார் கவுண்டர்.

”ஏன் ராமு, இங்க வூரு ஒண்ணு உருவாயி நிக்கும்னு… நீ நெனச்சிப் பாத்தியா…?’’

மலைத்தேன் கட்டியிருந்த மட்டை ஒன்று கீழே விழுந்துகிடப்பதையும், அதன் பக்கத்தில் வெற்றுத் தேன்கூடு சிதைந்துபோய் ஏழெட்டு துண்டுகளாகப் பிய்ந்து கிடப்பதையும், அதில் பத்திருபது தேனீக்கள் மடிந்து கிடப்பதையும் பார்த்துக்கொண்டு வந்த ராமு கவுண்டர், ‘ஆமாம்’ என தலையாட்டினார், கவுண்டரைப் பார்த்து.

வியந்த கவுண்டர் உடனே, ”எப்ப…?’’ என்று  கேட்டார்.

நிழலும் ஒளியும் முகத்தில் சிந்த மென்மையாக முறுவலித்த ராமு கவுண்டர், ”நீ ஊருலகீற வூட்ட வித்துட்டு… கொல்லிக்கி குடுத்தனம் போறன்னு சொன்னல்ல, அப்பியே’’ என்றார்.

நொடியும் தாமதிக்காத கவுண்டர், ”அதான் என் பின்னாலயே நீயும் புள்ள குட்டிங்கள கூட்டுனு கொல்லிக்கி வந்தியா…?’’ என்று கேட்டார்.

‘ஆமாம்’ என முதலில் தலையாட்டிவிட்டு, கூடவே ‘இல்லை’ என்பதுபோல் தலையாட்டி புன்னகைத்த ராமு கவுண்டர், வழியோரமிருந்த முது தென்னை மரத்தின் கீழே விழுந்துகிடந்த நெத்தை எடுத்து காதருகில் வைத்து ஆட்டிப்பார்த்தார். லேசாக சத்தம் கேட்டது. உள்ளே நீர் இருப்பதை உறுதிசெய்தவர், அதை திரும்பி வரும்போது எடுத்துக்கொள்ள ஏதுவாக, பக்கத்திலிருந்த காய்ந்த மட்டையின் கீழே மறைத்து வைத்துவிட்டு முன்னால் நடந்தார்.

”என்னால இப்ப வரிக்கும் நம்பவே முடில, ராமு.’’

கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு நின்ற ராமு மாமா, ”இதுக்கே இப்டினா… இன்னும் கொற காலத்துல ஊர வுட பெருசா இங்க ஊருவொண்ணு உருவாயி நிக்கப்போதே, அப்பென்ன சொல்லப்போற…?’’ என்று கேட்டார்.

எதுவும் சொல்லாமல் நடந்து, புளியமர மேடேறி மதகு பக்கத்தில் வந்து நின்று, பசும் நீள் நீர்புடவைபோல் அசைந்தோடும் கால்வாய் நீரையும்… அதில் வரிசையாக மிதந்து வந்த பருவாரம் நுங்கு வெட்டித் தின்றுவிட்டு போட்டனுப்பிய பனங்காய்களையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்குப் பின்னாலிருந்த பூவரச மரத்தடியில் கட்டில் போட்டு உட்கார்ந்துகொண்டு, பக்கத்திலிருந்த வாதநாராயண மரத்தின் கீழ்க் கிளையில் அமர்ந்து வெகுநேரமாக ‘கீ… கீ…’ என கத்திக்கொண்டிருந்த ஒற்றைக் கிளியையே பார்த்துக்கொண்டிருந்த கவுண்டருக்கு, படி சொம்பில் கூழும் கடித்துக்கொள்ள ஒரு சின்ன வெங்காயமும் கொண்டுவந்து தந்தார் பூரணியம்மா.

காலையில் வெறும் வயிற்றில் சிறுது நீராகாரம் குடித்துவிட்டுப் போய் சுட்டெரிக்கும் வெயிலில் விறகு வெட்டி தூக்கிக்கொண்டு வந்து போட்டுவிட்டு பெரும் பசியில் உட்கார்ந்திருந்த கவுண்டர், வாங்கி மொடமொடவென வெங்காயத்தைக் கடித்துக்கொண்டு குடித்துவிட்டு காலி சொம்பைத் தந்தபோது கேட்டார் பூரணியம்மா.

”ஏந்தே, இந்தக் கொல்லிக் காட்டுல… இம்மாம்பெருசா வூரு ஒண்ணு உற்புத்தி ஆவும்னு, என்னிக்காது நெனச்சி பாத்தீயா தே…?’’

உடனே, ‘இல்லை’ என தலையாட்டினார் கவுண்டர்.

”ஆனா நானு நெனச்சன் தே’’ என்றுவிட்டு, சிறிது இடைநிறுத்தி, ”அதும் நாம ஊரவுட்டு வந்ததும், பின்னாலயே ஒன் மச்சாரும் பொண்டாட்டி புள்ளிங்கள கூட்டுனு வந்தாருல்ல… அப்பயே நெனச்சன் தே’’ என்றார்.

கவுண்டர் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பூரணியம்மாவைப் பார்த்தார்.

”ஆமாந் தே’’ என்று எதையோ சொல்ல வந்தவர், சட்டென நிறுத்திவிட்டு, பதட்டத்தோடு கவுண்டரின் முகத்தைப் பார்த்தார்.

சட்டென அதைப் புரிந்துகொண்ட கவுண்டர், ”என்ன பூர்ணி…?’’ என்று கேட்டார் உடனே.

”எதுமில்ல தே.’’

”இல்ல, எதோ சொல்ல வந்த… என்னானு சொல்லு பூர்ணி.’’

”இங்க ஒரு ஊரு உருவாவுனும்… அதும் அது நம்ம மொரம்புக் கொல்லிய சுத்தி உருவாவுனும்னு… நம்ம மவன் ஆசப்பட்டுகீறான் தே.’’

பூரணியம்மா கண் கலங்கியபடி சொல்லிவிட்டுத் திரும்பி கட்டுத்தெரு பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் கட்டியிருந்த கருப்பு மாட்டை வலியோடு பார்த்தார்.

”அதும், என் வவுத்துள்ளார இருக்கும்போதே ஆசப்பட்டு கீறான் தே.’’

தன் வயிற்றில் கை வைத்து சொல்லிக்கொண்டே திரும்பி, கவுண்டரின் முகத்தைப் பார்த்து சொன்னார். ”நம்ம புள்ள ஆசப்பட்ட வூரு தே, இது.’’

எதுவும் சொல்லாமல் மெல்ல, ”ம்” கொட்டி தலையாட்டினார் கவுண்டர்.

”ஆனா ஒண்ணு தே… இதலாம் கண்ணால பாக்க அவன் இல்லாம போயிட்டானே தே’’ என்று சொல்லிக்கொண்டு, சட்டென உடைந்துபோய் மென் சத்தத்தில் அழ ஆரம்பித்தார்.

எழுந்து பக்கத்தில் வந்த கவுண்டர், ”ஏன் பூர்ணி… ஏன் இப்டி கொய்ந்த புள்ளமாரி அய்துனு கீற…? நீதான சொன்ன… ‘நம்ம புள்ள சாவல தே… அவன் உசுரு நம்ம கொல்லிலதான் கீது’ன்னு… இப்ப நீயே பாக்க அவன் இல்ல, அது இதுன்னு சொல்லினு அய்தா நல்லாவா கீது, சொல்லு…?’’ என்றுவிட்டு, தன் தோள்மேல் போட்டிருந்த துண்டை எடுத்து பூரணியம்மாவின் கண்களைத் துடைத்துவிட்டு, அவர் தோளைப் பிடித்து கட்டிலில் உட்கார வைத்து தானும் அருகில் உட்கார்ந்தார்.

செத்தநேரத்தில் அழுகையை நிறுத்திவிட்டு கவுண்டரைப் பார்த்த பூரணியம்மா, ”ஏந்தே, நானு ஒண்ணு சொல்லுவன்… கேட்டு கலங்கிட மாட்டியே…?’’ என்றார்.

‘மாட்டேன்’ என தலையாட்டியவர் எதையோ நினைத்துக்கொண்டு, ”சொல்லு பூர்ணி’’ என்றார்.

‘சொல்லலாமா வேணாமா’ என்று சில நொடிகள் தயங்கிய பூரணியம்மா, ஒருவாறு துணிவுகொண்டு சொன்னார்.

”என்னானு தெர்ல தே… ரண்டுமூணு நாளாவே நம்ம மொரம்புக் கொல்லி, நம்மள வுட்டு போறமரே படுது தே…’’

கேட்டதும் பகீரென்றது கவுண்டருக்கு. எங்கே அதை வெளியில் காட்டிக்கொண்டால் பூரணியம்மா துடித்துவிடுவாரோ என நினைத்து, வராத புன்னகையை மெல்ல வரவழைத்து, ‘ஹாஹா’ என சத்தமாகப் பொய் சிரிப்பு சிரித்துவிட்டு, ”அட, என்ன பூர்ணி நீ… சின்னக் கொழ்ந்தியாட்டம் இல்லாத்தலாம் நெனச்சினு கீற…?’’ என்றுவிட்டு எழுந்து, ”இப்ப சொல்றன் கேட்டுக்க… மொரம்பு கொல்லி என்னிக்காருந்தாலும் நம்ம கொல்லிதான், பூர்ணி… அதும் நம்ம புள்ளய வேற அதல பொதச்சிகீறம்… எப்டி பூர்ணி அதுபோயி நம்ம கைய வுட்டு போவும்…?’’ என்று சொல்லிக்கொண்டு, பூரணியம்மாவின் கையை ஆறுதலாகப் பிடித்து கூட்டிக்கொண்டு போய் சாக்கடையில் கை கால், முகம் கழுவிக்கொண்டு, ‘ஏன் பூர்ணிக்கு எப்பியும் இல்லாம இப்ப… நம்ம மொரம்புக் கொல்லி நம்மள வுட்டு போறமரே பட்டுகீது…?’ என தன்னைத் தானே கலங்கிபோய் கேட்டுக்கொண்டு, நடைப்பிணம்போல் நடந்து வீட்டுக்குள் போனார்.

”டேய் முத்துசாமி…’’

இரண்டு தடவை அழைத்தும் திரும்பாமல் கல்லைப்போல் நின்றிருந்த கவுண்டரை, குரலை உயர்த்தி தன் மச்சான் கூப்பிட்டதும் கேட்டு நினைவு வந்தவராய் திரும்பிப் பார்த்தார்.

நடு காவாங்கரையில் புளியமர நிழலில் நின்றுகொண்டு கவுண்டரை ஒருவித பதட்டத்தோடு பார்த்துக்கொண்டிருந்த ராமு கவுண்டர், ”ஏய், என்னாச்சிடா ஒனுக்கு…?’’ என்று கேட்டார் நடுங்கும் குரலில்.

மெல்ல தலையாட்டி, ”எதுமில்ல’’ என்றார், உள்ளுக்குள் எவ்வளவோ வைத்துக்கொண்டு கவுண்டர்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=