முரம்பு – 22

துப்பிட்டி போர்த்திக்கொண்டு இரவு முழுக்க களத்தில் மல்லாட்டைக்குக் காவலாகப் படுத்திருந்த முத்துசாமிக் கவுண்டர், செப்புள் பிரிவதற்கு முன்னாலேயே எழுந்து தோட்டக்காட்டுக்கு போய்விட்டு கிளைக் கால்வாயில் கால் கழுவிக்கொண்டு வந்து தயாராக உட்கார்ந்திருந்தார்.
அஜ்ஜான் கூவிய செத்த நேரத்திலேயே எழுந்து வந்த செவடன், மாணிக்கத்தையும் ஏழுமலையையும் எழுப்பி கூட்டிக்கொண்டு கொல்லிக்கு வந்து அவர்களோடு சேர்ந்து தானும் மல்லாட்டை பிடுங்க ஆரம்பித்தான்.
பின்னாலேயே வந்து ராமு கவுண்டரும் அஜ்ஜில்லா பாயும் அவர்களோடு சேர்ந்துகொள்ள… நேற்றை விட இன்று சீக்கிரமாகவே இழுத்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், காலை உணவை உண்டுவிட்டு மதியத்திற்குத் தேவையான கஞ்சிசோற்றையும் கூழையும் எடுத்துக்கொண்டு குடும்பத்தோடு வந்து நிழல்தேடி மரத்தடியில் மல்லாட்டக் கொடியை அள்ளிப்போய் போட்டு உட்கார்ந்துகொண்டு ஆய ஆரம்பித்தார்கள்.
”ஏந்தே, நாளமறுநாளு ஓட்டி எள்ளு போட்ட்டா என்ன…?’’ என்றார் பூரணியம்மா.
”ஆமா பூர்ணி, எள்ளுதான் போடலாம்னு கீறன். நம்மக்கிட்டதான் எள்ளு இல்லியே, அதான் என் மச்சாங்காரன்கிட்ட கேட்டுகீறன்… எடுத்துனூருல போயி யாருகிட்டயோ நாளிக்கினா… இல்ல, நாள மக்கியாநாத்துனா வாங்கியாந்து தரன்னு சொல்லிகீறான், பாப்பம்’’ என்றார் கவுண்டர்.
”நாளிக்கி காலில என் தம்பிகாரன் வந்தாலும் வருவான் தே… அவன வேணா போயி எடுத்துனு வர சொல்வமா தே…?’’
”வேணாம் பூர்ணி, அவுங்கங்க என்ன நெலமில கீறாங்களோ தெர்ல… வுடு நாமளே பாத்துக்கலாம்.’’
பக்கத்தில் உட்கார்ந்து மல்லாட்டை ஆய்வதுபோல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த முருகன், ”ஐய்யாய்யா, நம்ம கொல்லில எள்ளு வேணாய்யா… அதுக்கு பதலா நெல்லு போடலாம்ய்யா’’ என்றான்.
கேட்டுவிட்டு பூரணியம்மாவை பார்த்து, ”கேட்டியா பூர்ணி… சின்னவுனுக்கு நெல்லு போடனுமாம் நெல்லு’’ என்றுவிட்டு சத்தமாக சிரித்த கவுண்டர் முருகனிடம், ”அட மடயா, நஞ்ச கொல்லிலதான் நெல்லுலாம் போடுவாங்க… நம்முளுதுதான் புஞ்ச கொல்லியாச்சே, இதல எப்டி போடமுடியும்…?’’ என்றார்.
சட்டென எழுந்து பக்கத்தில் வந்த முருகன், ”நஞ்ச கொல்லின்னா என்னாய்யா…?’’ என்று கேட்டான்.
புட்டியில் ஆய்ந்த மல்லாட்டையை எடுத்து அன்னக்கூடையில் கொட்டிவிட்டு, ”நஞ்ச கொல்லினா வருசம்பூரா தண்ணி பாயிர கொல்லி… என்னிக்கும் வடியாத கெணறு கீற கொல்லி’’ என்றார் கவுண்டர்.
அருகில் உட்கார்ந்து கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”அப்ப நம்ம கொல்லிலயும் ஆயமா கெணறு நோண்டி… நஞ்ச கொல்லியாக்கினு நெல்லு போடலாமாய்யா…?’’ என்று கேட்டான் முருகன்.
கை கொட்டி சிரித்துவிட்டு, வடக்காலப் பக்க மரிசியோர துரிஞ்ச மரத்து நிழலில் உட்கார்ந்து பேராமுட்டா கிழவியுடன் வம்பளந்துகொண்டு மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்த செவடனை பார்த்த கவுண்டர், ”அதுக்கந்த ஆண்டவன் வழி வுட்டான்னா… என்னிக்கில்ல என்னிக்காது ஒருநாளு நடக்கும்யா’’ என்றார்.
ஆய்ந்து தரையில் போட்டிருந்த மல்லாட்டையைக் கையால் அள்ளி செவடன் முன்னாலிருந்த அன்னக்கூடையில் போட்டுவிட்டு, எழுந்து சனிமூலை காணிக்கல் தாண்டியிருந்த உண்ணிமில் புதர் பக்கத்தில் போய் மறைவாக உட்கார்ந்து சிறுநீர் கழித்துவிட்டு, வரும் வழியில் இருந்த சுக்கங்கொடியிலிருந்து இரண்டு சுக்கம்பழத்தைப் பறித்துவந்து செவடனிடம் தந்த பேராமுட்டா கிழவி, ”இந்தாடா செவடா… இத வச்சினுருந்து அப்பறமா கவுண்ரு மவன் சின்னவங்கிட்ட கொண்டுனு போயி கொடு’’ என்றார்.
‘சரி’ என தலையாட்டி வாங்கிக்கொண்ட செவடன், ஆய்ந்து மல்லாட்டை நிரம்பிய அன்னக்கூடையைத் தன் தலைமேல் வைத்து தூக்கிக்கொண்டு வந்து களத்தில் கொட்டிவிட்டு, அதன் மேல் அடையாளத்துக்கு பக்கத்தில் கிடந்த நேற்று செருகி எடுத்துப்போட்ட வேப்பங்கொத்தை எடுத்து செருகிவிட்டு, சற்றுதள்ளி மரத்தடியில் உட்கார்ந்து ரவியுடன் விளையாடிக்கொண்டிருந்த முருகனிடம் போய் ஆளுக்கொரு சுக்கம்பழத்தைத் தந்துவிட்டு வந்தான்.
அஜ்ஜில்லா பாய் மகன் ஜீயா சின்ன டீப்பனியில் பலவ சோறு எடுத்து வந்து கவுண்டரிடம் தந்து, ”அம்மா தர சொன்னாங்க’’ என்றான்.
மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டு போய் மரத்தடியில் வைத்துவிட்டு, பானையில் கரைத்து வைத்திருந்த கம்மங்கூழில் ஒரு சொம்பு ஊற்றி எடுத்துவந்து அவனிடம் தந்த கவுண்டர், ”இந்தாய்யா, இத கொண்டுனு போயி ஒன் அப்பங்காரங்கிட்ட கொடு’’ என்றார்.
கதிரவன் உச்சிவானை எட்டி நெருப்பாய் வெயில் கொட்டிக்கொண்டிருந்தது. தவுலத்கான் சாயுபு கொல்லி வேலியோரமாக ஆட்டை ஓட்டிக்கொண்டு போன சேவிக் கவுண்டரும், மாரி தாத்தாவும் ஆடுகளைக் கொண்டுபோய் மேட்டோரக் கரம்பில் விட்டுவிட்டு வந்து ஆளுக்கு நாலு மல்லாட்டக் கொடி எடுத்து ஒவ்வொரு மல்லாட்டையாகப் பிய்த்து உரித்துத் தின்றுகொண்டு, செத்தநேரம் கவுண்டரிடம் பேசிவிட்டு போனார்கள்.
”எய்யா முருகா, செத்த இங்க வாய்யா.’’
தான் ஆய்ந்த மல்லாட்டக் கொடியில் வந்த மூணாங்கொட்டை மல்லாட்டையைத் தனியாக எடுத்து மடியில் வைத்திருந்து, முருகன் வந்ததும் அவனிடம் தந்தார் பூரணியம்மா.
ஓலப்பல் தெரிய சிரித்துக்கொண்டு, ”ஐ… மூணுக்கொட்ட மல்லாட்ட… ஜாலி ஜாலி’’ என்று வாங்கியவன், அதை எடுத்துப் போய் எல்லோரிடமும் காட்டிவிட்டு கடைசியாக பேராமுட்டா கிழவியிடம் சென்று காட்டி, ”பாத்தியா பாட்டி… நானு மூணுக்கொட்ட மல்லாட்ட வச்சிகீறன்’’ என்றான்.
கேட்டுவிட்டு தன் கறைபடிந்த பல்லைக் காட்டி சிரித்த கிழவி, தன் புடவைத் தலப்பில் முடிந்து வைத்திருந்த நான்கு மூணாங்கொட்டை மல்லாட்டைகளை எடுத்து அவனிடம் தந்தார்.
கண்கள் அகல விரிய ஆச்சரியத்தோடு கைநீட்டி வாங்கியவன், ”ஐ… ஐ… நறயா நறயா மூணுக்கொட்ட மல்லாட்ட… ஜாலி ஜாலி…’’ என்று கத்திக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடிவந்து, கவுண்டரிடமும் பூரணியம்மாவிடமும் காட்டி மகிழ்ந்தான்.
ஊர் அல்லாகோயிலில் மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் சத்தம் கேட்டது. மேற்கே வெப்பால மர வழியாக சாமைக் கொல்லிக்குள் இறங்கி மெல்ல நடந்து கவுண்டரிடம் வந்த பொன்னுசாமி ஆச்சாரி, ”ஏன் முத்துசாமி, நாளிக்கி காலில வண்டிகட்டினு திர்ணாமல போயி புள்ளயாரு செல வாங்கியாறலாம்னு கீறம்… நீயும் கூட வந்தனா தோதாருக்கும். அதான் ஒரு வார்த்த சொல்ட்டு போலாம்னு வந்தன்’’ என்றார்.
பக்கத்திலிருந்த பூரணியம்மாவைப் பார்த்துவிட்டு, ”இல்ல பொன்னுசாமி, இன்னிக்கிதான் மல்லாட்ட ஈத்து முடிக்கறம். அதும் முடிமான்னு தெர்ல… ரண்டு மூணு நாளிக்கி காயப்போட்டு… அப்றம்தான் மூட்டப் புடிச்சி வெதக்கி ரண்டுமூட்ட எடுத்துக்குனு… மீதிய ஏத்தினு போயி மண்டில வித்துட்டு வரணும். கொடிலாம் வேற அப்டியே கீது… களச்சிப் போட்டு கிண்டி ஒணத்தனும்’’ என்று சொல்லிக்கொண்டு எழுந்து நின்றவர், ”பால்மாறாம போயி வாங்கியாறீங்களா…?’’ என்று கேட்டார்.
கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு சங்கடத்தோடு நின்ற பொன்னுசாமி ஆச்சாரி, ”நானும் சின்னத் தம்பியுந்தான் போலாம்னு கீறம். எங்க ரண்டுபேத்துக்குமே சாமி செல பத்தி ஒண்ணுந் தெரியாது. அதான் நீ கூட வந்தன்னா பாத்து செரியா வாங்குவன்னு பாத்தன்’’ என்றார்.
”ஆமாந் தே, அவுரு சொல்றதும் செரிதான். நாளிக்கி காலில கெளம்பனாகூட ரைக்குள்ள திரும்பிரலாம். நீ போயி வா தே, நானும் புள்ளிங்குளும் பாத்துக்கறம்… வேணும்னா செவடன கூட கூப்டுக்குறம்’’ என்றார் பூரணியம்மா.
திரும்பி செவடனைப் பார்த்துவிட்டு சில நொடிகள் யோசித்தவர், ”செரி பொன்னுசாமி, காலில செப்புளு பிரியரத்துக்குள்ள ஏன்ச்சி கெளம்பிருவம்’’ என்று சொல்லிவிட்டு, அதிக மல்லாட்டையாக இருக்கும் ஐந்தாறு கொடியெடுத்து அவரிடம் தந்து அனுப்பிவிட்டு, உட்கார்ந்து ஆய ஆரம்பித்தார்.
மாணிக்கமும் ஏழுமலையும் போய் கட்டுத்தெருவிலிருந்த கருப்பு மாட்டையும் கன்னுக்குட்டியையும் பிடித்துவந்து பள்ளத்து துண்டில் முளைக்குச்சி அடித்து கட்டிவிட்டு வந்து உட்காரவும், மனைகார் ஊர் தலைவரோடு வந்து துரிஞ்ச மரத்து நிழலில் சைக்கிளை நிறுத்திவிட்டு மெல்ல தயங்கித் தயங்கி நடந்து பக்கத்தில் வரவும் சரியாக இருந்தது.
தலைவர் வராமல் மனைகார் மட்டும் தனியாக வருவதைப் பார்த்துவிட்டு கையில் நான்கு மல்லாட்டை கொடியை எடுத்துக்கொண்டு எழுந்த கவுண்டர், ”வாங்க சாமி… மல்லாட்ட தின்னுங்க’’ என்றார்.
”வர்றன் கவுண்ர’’ என்று தாழ்ந்த குரலில் சொல்லிக்கொண்டு அருகில் வந்து நின்று, கையிலிருந்த மஞ்சப் பையிலிருந்து அட்டையோடு சேர்த்து ஒரு காகிதத்தை வெளியில் எடுத்து கவுண்டரிடம் நீட்டிய மனைகார், ”இதல ஒரு கையெழ்த்து வாங்கினு போலாம்னு வந்தன், கவுண்ர’’ என்றார்.
எதுவும் சொல்லாமல் ‘எதற்கு?’ என்பதுபோல் பார்த்தார் கவுண்டர்.
மெதுவாகத் திரும்பி பாதையோர துரிஞ்ச மரத்தடியில் நின்றிருந்த ஊர் தலைவரைப் பார்த்துவிட்டு, ”என்னடா திடுதிப்புனு வந்து ஆளு கையெழ்த்து கேக்கறானேன்னுதான பாக்ற, கவுண்ரு…?’’ என்று கேட்டுவிட்டு மெல்ல உதடசைத்துப் புன்னகைத்துவிட்டு சொன்னார்.
”அது ஒண்ணுல்ல கவுண்ர… இந்த மொரம்புக் கொல்லிக்கி பட்டா கேட்டு மனு எழ்தியாந்துகீறன். இதல ஒரு கையெழ்த்து போட்டன்னா, மேலக்குள்ள அதிகாரிங்ககிட்ட பேசி எப்டியாது பட்டா வாங்கி தந்துருவன்.’’
அதிர்ச்சியில் உறைந்துபோய் சில நொடிகள் மவுனமாக நின்ற கவுண்டர்… கையிலிருந்த மல்லாட்டை கொடியை கீழே வைத்துவிட்டு, தோள்மேல் போட்டிருந்த துண்டை எடுத்து கையிலிருந்த மண்ணை நன்றாகத் துடைத்துக்கொண்டு வாங்கி கையெழுத்து போட்டுத் தந்துவிட்டு, குனிந்து மல்லாட்டைக் கொடியை எடுத்து நடு கொடியில் முறுக்கிப் பிய்த்து இலை பக்கத்தை தரையில் போட்டுவிட்டு, மல்லாட்டை இருக்கும் அடி பக்கத்தை மனைகாரிடம் தந்துவிட்டு கையெடுத்து கும்பிட்டார்.
எதுவும் பேசாமல் பல் தெரியாமல் சிரித்துவிட்டு வாங்கிக்கொண்டு, அங்கிருந்து மெல்ல திரும்பி நடந்து நடுத்துண்டு வழியாக களத்தில் கொட்டிவைத்திருந்த மல்லாட்டையையும், அதன் பக்கத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலையும், அதன் கீழே சாய்த்துவைத்திருந்த சில்லாக்கோலையும் பார்த்துக்கொண்டு தலைவர் நின்றிருக்கும் இடத்துக்கு வந்தார் மனைகார்.
ஏழெட்டு பருவாரங்கள், ஊரிலிருந்து கூடிக்கொண்டு வந்து பெரிய கால்வாயில் காலையிலிருந்து குதித்து ஓரி விளையாடிவிட்டு கண்கள் சிவக்க திரும்பி, முடியனூரான் கொல்லி மேல் நடந்து போனார்கள்.
மரத்தடியில் பந்தல் போட்டு விளையாடிக்கொண்டிருந்த முருகன், பக்கத்திலிருந்த மரிசியோரம் சிறுநீர் கழிக்கப் போனபோது எலி ஒன்று கீழே கிடந்த மல்லாட்டையை எடுத்துக்கொண்டு போய் வேகமாக ஒரு வளைக்குள் நுழைந்ததைப் பார்த்துவிட்டு ஓட்டமாக ஓடிவந்து மூச்சு வாங்க, ”ஐய்யாய்யா, அங்க மரிசியாண்ட… ஒரு எலி மல்லாட்ட எடுத்துனு போயி வேகமா வளக்குள்ளார சொய்ன்னு நோஞ்சிக்கிச்சியா… நானு பாத்தன்… கண்ணுலாம் அதுக்கு முட்ட முட்டயா இருன்ச்சி’’ என்றான்.
அருகில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கமும் ஏழுமலையும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு முருகனை அருகில் அழைத்து, ”எங்கடா பாத்த…?’’ என்று கேட்டதும், ”அங்க மரிசியாண்ட பாத்தன், வேணும்னா வா காட்டறன்’’ என்று சொல்லி அவர்களைக் கூடவே கூட்டிக்கொண்டு போய் காட்டினான்.
மரிசியோரம் இருந்த வளையைப் பார்த்துவிட்டு, அதனருகில் வேறு எங்காவது வளைகள் இருக்கிறதா என சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள். சற்றுதள்ளி துண்டு நடுவில் இன்னொரு வளை இருந்தது.
வேகமாக நடந்துபோய் பக்கத்து துண்டில் தம் அம்மா அருகில் உட்கார்ந்து மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்த குப்புசாமியைக் கூட்டிக்கொண்டு, ராமு கவுண்டரிடம் வத்திப்பெட்டி வாங்கிக்கொண்டு வந்த மாணிக்கம்… தெற்கே வேலியோரம் இருந்த துரிஞ்ச மரத்தில் ஏறி மூன்று சிமிர்கள் உடைத்து வந்தான்.
ஆளுக்கொன்றை அதில் தந்துவிட்டு, ஒன்றை தான் எடுத்துக்கொண்டு ஏழுமலையையும் குப்புசாமியையும் துண்டு நடுவிலிருந்த வளையில் எலி வெளியில் வந்தால் அடிக்கத் தயாராக நிற்கச் சொல்லிவிட்டு வந்த மாணிக்கம், மரிசியோரம் இருந்த வளைக்குள் கையில் வைத்திருந்த சிமிரை ஆழமாக விட்டுவிட்டு இழுத்து சத்தம் எழுப்பினான்.
அடுத்த செத்தநேரத்தில், ஓர் எலி பயந்துபோய் வெளியில் ஓடிவந்தது. டப்பென ஒரே அடி சரியாகக் குறிபார்த்து அடித்துவிட்டான் குப்புசாமி. கத்திக்கொண்டு சுருண்டு கீழே விழுந்தது.
பக்கத்தில் நின்றுகொண்டு, ”ஐ… எலி எலி…’’ என சத்தம்போட்டு கத்திய முருகனை, ”ஏய் முருகா… வந்தன்னா ஒரே மெரியா மெரிச்சிடுவன், பாத்துக்க… ஒய்ங்கு மதேரியா கூசப் போடாம தூரமா போயி நில்லு’’ என அதட்டிய மாணிக்கம், திரும்பவும் அதேபோல் வளைக்குள் சிமிரை விட்டுவிட்டு இழுத்து சத்தம் எழுப்பினான்.
மறுநிமிடமே இன்னோர் எலி ஓடி வந்தது. குப்புசாமி அடித்த முதல் அடியில் தப்பித்த எலியைப் பின்னாலேயே துரத்திப்போய் அடித்து அதன் வாலை பிடித்து தூக்கிவந்தான் ஏழுமலை.
ஆய்ந்த மல்லாட்டையை எடுத்து வந்து களத்தில் கொட்டிய செவடன், மாணிக்கமும் ஏழுமலையும் எலி அடிப்பதைப் பார்த்துவிட்டு பக்கத்தில் வந்தான்.
”ஏ, அவ்ளோதான் வாங்கடா… மொத்தமா ரண்டு எலிதான் உள்ளார இருந்துச்சி போல.’’
மாணிக்கம் சொன்னதைக் கேட்டுவிட்டு, ”ஏய் இல்லடா, இம்மாந்தூரம் கீற வளயப் பாத்தா இன்னும் நறயா இருக்கும்டா’’ என்றான் குப்புசாமி.
கையில் வைத்திருந்த காலி அன்னக்கூடையைக் கீழே வைத்துவிட்டு பக்கத்தில் வந்த செவடன், ”ஒன் மாமாரு மவன் சொல்றதான் செரி… எப்டியும் இம்மாம்பெரிய வளிக்குள்ளாற கொறஞ்சது நாலஞ்சி எலியாது இருக்கும். அதுமில்லாம, அஞ்சாறு படி மல்லாட்டயாது உள்ளார கொண்டுனு போயி வச்சிருக்கும்’’ என்றான்.
‘அஞ்சாறு படி மல்லாட்டயா…?’ என வியப்போடு பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஏழுமலையிடம், ”நீ போயி களத்தாண்ட கீற மம்டிய எடுத்தா’’ என்று சொல்லிவிட்டு, பக்கத்து துண்டு மரிசிமேல் இருந்த செத்தசெனாரு பார்த்து அள்ளிவந்து வளையருகில் போட்டுவிட்டு, ”மாணிக்கம், நீ போயி அந்த வளய மண்ணுபோட்டு நல்லா மூடிட்டு அங்கயே சிமிரு வச்சினு நில்லு… நீங்க ரண்டுபேரும் பக்கத்துல எங்கனா பொக வருதான்னு சுத்தியும் பாருங்க’’ என்றுவிட்டு, வளைக்குள் எடுத்துவந்த செத்தசெனாரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து செருகி, தீப்பெட்டி வாங்கி பற்ற வைத்தான்.
சற்று நேரத்திலேயே மாணிக்கம் மூடிய வளைக்குள்ளிருந்து லேசாக புகை வந்தது. பார்த்த செவடன், ”இன்னும் நல்லா மண்ணப் போட்டு மூடி வுடு’’ என்று சொல்லிவிட்டு, இன்னும் கொஞ்சம் செத்தசெனாரு எடுத்து வளைக்குள் நொந்தி குச்சியால் அழுத்திவிட்டான்.
கை நிறைய மண்ணள்ளிப் போட்டு புகை வராத அளவுக்கு காலால் அழுத்தி மிதித்து மூடிய மாணிக்கம், சிமிரைக் கையில் வைத்துக்கொண்டு தயாராக நின்றுகொண்டிருந்தான்.
சட்டென தெக்காலப் பக்கமாக ஓரிடத்தில் புகை பீரிட்டு வந்தது. பார்த்த குப்புசாமி, ”அங்க பொக வருது… அங்க பொக வருது…’’ என்று சொல்லிக்கொண்டு வேகமாக பக்கத்தில் போய் பார்த்துவிட்டு, ”இங்க ஒரு வள கீது’’ என்றான்.
அதையும் மூடச் சொன்ன செவடன்… வேறு எங்காவது புகை வருகிறதா என சோதித்துவிட்டு, பக்கத்திலிருந்த மண்வெட்டியை எடுத்து மண்ணள்ளிப் போட்டு நெருப்பை அணைத்துவிட்டு, அங்கிருந்து வளையைத் தோண்ட ஆரம்பித்தான்.
விடாமல் அரை மணி நேரம் தோண்டியிருப்பான். அடுக்கடுக்காக, அதுவும் அவ்வளது நேர்த்தியாக மல்லாட்டையை கொண்டுபோய் வளைக்குள் அடுக்கி வைத்திருந்தது எலி. அவற்றில் ஒன்றிரண்டு மட்டும் முளப்பு விட்டிருந்தது. ஓரிடத்தில் நான்கைந்து மல்லாட்டைகளை ஒருசேர கொரித்துப்போட்டிருந்தது.
பக்கத்தில் நின்றுகொண்டு தலையை முன்நீட்டி வியப்பு மேலோங்க பார்த்த முருகன் ஓடிப்போய் கவுண்டரிடம், ”ஐய்யாய்யா, அங்க எலி வளிக்குள்ளார நறயா நறயா மல்லாட்ட கீதுய்யா… ஒண்ணு எலி… ரண்டு எலி… ஆங், ரண்டு எலி அடிச்சிட்டாங்கய்யா…’’ என்றான்.
கேட்டுவிட்டு புன்னகைத்த கவுண்டர், ”செரி செரி, போயி தூரமா நின்னுனு பாரு’’ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு, பத்தாண்டுகளுக்கு முன்னால் சோமாசம் பாறை பக்கத்திலிருந்த மணங்கொல்லியில் எலி வளை தோண்டும்போது, வளைக்குள்ளிருந்து எலிக்குப் பதிலாக மண்ணுளிப் பாம்பு ஒன்று வந்ததை நினைத்துப் பார்த்து சத்தமின்றி தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருந்தார்.
எதேட்சையாகப் பார்த்த பூரணியம்மா, ”ஏன் தே, என்னாச்சு… நீ பாட்டுனு தனியா சிரிச்சினு கீற…?’’ என்று கேட்டார்.
அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டிருந்தவர் மெல்ல சிரிப்பை அடக்கிக்கொண்டு, ”இல்ல பூர்ணி, ஒருவாட்டி சோமாசம் பாறக்கிட்ட கீற மணங்கொல்லில… இதுமரே பொக போட்டு எலிவள நோண்டினிருந்தம். சட்டுனு வளக்குள்ளருந்து பெரிய மண்ணுவள்ளிப் பாம்பு ஒண்ணு வந்துருச்சு. அத நெனச்சி சிரிச்சன்’’ என்றார்.
”அய்யய்யோ, பாம்பா…?’’ என்று கேட்டுவிட்டு பதறிப்போன பூரணியம்மா, ”அப்றென்ன தே ஆச்சி…?’’ என்று கேட்டார்.
சிரித்துக்கொண்டு, ”அதுவொரு பெரிய கூத்து பூர்ணி’’ என்று ஆரம்பித்தவர், எழுந்துபோய் மரத்தடியில் சின்ன தவலை மீது தட்டுபோட்டு மூடி கவிழ்த்து வைத்திருந்த ரோட்டா சொம்பில் தண்ணீர் மொண்டு குடித்துவிட்டு வந்து உட்கார்ந்து, ”எலி வரும்னு சிமுரு வச்சினு வளய சுத்தி நின்னுனுருந்தவங்க… பாம்பு வந்தத பாத்துட்டு, ஆயா ஓயான்னு கத்தினு பீரிபீரியா ஆளுக்கொரு பக்கம் ஓடிட்டாங்க. நானும் கொல்லனும் மட்டுந்தான் அங்கயே நின்னுனுருந்தம். இதல கொடும என்னன்னா… கண்ணுமுன்னு தெரியாம ஓடன போண்டா மவன், நேரா போயி அக்பரான் கெணத்துல குதிச்சிட்டான். நல்லவேள, கரமேல கிரமேல குதிச்சி கை கால ஒடச்சிக்காம தப்பிச்சான்’’ என்றவர், எட்டி செவடன் வளை தோண்டுவதைப் பார்த்துவிட்டு தொடர்ந்தார்.
”கைல வச்சிருந்த சிமுரால ஓங்கி நாலு போடு போட்டான் கொல்லன்… ஒண்ணுமே ஆவல பாம்புக்கு. அதுபாட்டுனு மொல்லமா நவுந்து போச்சி. அதுக்கப்பறம் அந்த சிமுர தாடான்னு வாங்கி, அடிஅடின்னு அடிச்சி… பாம்போட ஒரு பக்கத்து தலய குத்தி நசுக்கனன். சட்டுனு இன்னொரு பக்கத்து தலயால நவுந்து போவுது. அத நசுக்கனா… இந்த தலய நீட்டினு நவுருது. இதென்னடா பெரிய ரோதனயா போச்சின்னு பாத்துனுருந்தன். இந்த கொல்லன் என்ன பண்ணன்… சட்டுனு பக்கத்துலருந்த மம்டிய எடுத்து ஒரே வெட்டா பாம்பு நடுவுல வெட்டிட்டான், ரண்டு துண்டா போச்சு. செரி அப்பயாது சாவுதான்னு பாத்தா… அப்பயும் சாவல. ரண்டு தலய நீட்டினு ரண்டு பக்கம் தனித்தனியா போவுது. அப்பதான் பீரிபீரியா ஓடனவுனுங்க மொல்ல கிட்ட வந்தானுங்க. ஆளுக்கொரு கல்லா தூக்கியாந்து பாம்பு மேல போட்டு, ஒருவய்யா நசுக்கி சாவடிச்சிட்டம். அதுகப்றமாது இந்த கொல்லன் சும்மா வுடுவான்னு பாத்தா, அதுவுமில்ல… என்ன பண்ணான் தெரிமா…? எங்க அப்டியே வுட்டுப்போனா மறுபிடியும் தலய நீட்டினு தேடினு வந்தாலும் வந்துடும்னு சொல்லி… கையோட தூக்கினுபோயி ஓடையாண்ட போட்டு நெருப்புவச்சி கொளுத்தி சுட்டு கரியாவறவரிக்கும் பாத்துனுருந்துட்டு… கரியானதும் அப்பயும் வுடாம அத எடுத்து பக்கத்துலயே ஒரு பள்ளம் நோண்டி பொதச்சிட்டு… மேல பெரிய கல்ல வேற தூக்கி வச்சிட்டு வந்தான்.’’
சொல்லிவிட்டு கவுண்டர் சத்தமாக சிரிக்க, கேட்ட பூரணியம்மாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. கூடவே சேர்ந்து அவரும் சிரித்தார்.
மொத்த வளையையும் தோண்டிவிட்டு எழுந்த செவடன், ”அம்மாந்தான்’’ என்று கையில் வைத்திருந்த மண்வெட்டியை ஏழுமலையிடம் தந்துவிட்டு, ”எப்டியும் அஞ்சாறு படி மல்லாட்ட ஆவும்ல…’’ என்று சொல்லிவிட்டு, ”இப்டி இன்னும் கொல்லில எத்தன வளிங்க கீதோ… அதல எம்மாம் மல்லாட்டிங்க கீதோ, தெர்ல’’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு நடந்தான்.
நான்கடி எடுத்துவைத்து நடந்திருப்பான். ”இதுள்ள மொத்தமே இந்த ரண்டு எலிங்கதான் இருந்திருக்குமா…?’’ என்றான், செவடனைப் பார்த்து மாணிக்கம்.
நின்று திரும்பிய செவடன், ”இன்னும் ரண்டு மூணு எலியாது இருந்திருக்கும்… நீ மொத வாட்டி குச்சிவுட்டு ஆட்டனப்பயே அதுங்க தெக்கால வளில ஓடிட்டிருக்கும்’’ என்று சொல்லிவிட்டு, கீழே குனிந்து காலி அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு வேகமாக நடந்துவந்து பேராமுட்டா கிழவியின் பக்கத்தில் உட்கார்ந்து, ”என்ன கெழ்வி, யார பாத்து மல்லாட்ட ஆயாம வெக்கப்பட்டுனு கீற…?’’ என்று வம்பளந்துகொண்டு மல்லாட்டை ஆய ஆரம்பித்தான்.
புட்டி எடுத்துவந்து எலி வளையிலிருந்து எடுத்த மல்லாட்டையை அள்ளிப்போய் களத்தில் தனியாக ஓரிடத்தில் கொட்டி வைத்துவிட்டு, ரவியையும் முருகனையும் இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அடித்த இரு எலியையும் தூக்கிப் போய் கிளைக் கால்வாயில் சுத்தம் செய்து, முடியனூரான் கொல்லி கல்லாக்குட்டையோரம் நெருப்பு மூட்டி குச்சியில் செருகிக் காட்டி சுட்டுத் தின்றுவிட்டு வந்தார்கள்.
எதுவும் பேசாமல் பக்கத்தில் வந்து உட்கார்ந்த முருகன், ”எலி தின்னா வவுறு ரம்பிடுமாய்யா…?’’ என்று கேட்டான்.
”ஓ’’ என்றுவிட்டு, புட்டியில் இருந்த மல்லாட்டையை எடுத்து அன்னக்கூடையில் கொட்டிவிட்டு செல்வியிடம், ”எம்மா செல்வி… போயி ரவ குடிக்க தண்ணி மொண்டுனு வா, தாயி’’ என்று சொல்லிவிட்டு, திரும்பி பூரணியம்மாவை பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு முருகனைப் பார்த்த கவுண்டர், ”அந்தக் காலத்துல நாங்களாம்… பஞ்சத்துல எலி குத்தியாந்து சுட்டு தின்னுட்டும், புலியாங்கொட்டயும் பலாக்கொட்டயும் வெய்ச்சி தின்னுட்டும் நாளுகணக்கா பசிபோக்கி காலத்த தள்ளிகீறம்’’ என்றார்.
பெரும் ரகசியத்தில் பாதியைக் கேட்டதுபோல் முகத்தை வியப்பாய் மாற்றியவன், ”வெறும் புளியாங்கொட்டய தின்னுட்டாய்யா…?’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டான்.
‘ஆமாம்’ என்று தலையாட்டிவிட்டு செல்வியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்த கவுண்டர், ”புளியாங்கொட்டயும் பலாக்கொட்டயும் எலியும் முருங்கக் கீரையும் மட்டும் இல்லனா… எம்மாம்பேரு பட்டினில செத்துப் போயிருப்பாங்க, தெரிமா…?’’ என்றார்.
சரியாக நேற்று வந்த அதே நேரத்திற்கு, அதே இடத்தில், அதேபோல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு வந்து நின்று, திரும்பி ஊதுவதை நிறுத்திவிட்டு மல்லாட்டை கொல்லியையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் சோலைக்கண்ணன்.
முந்தினம் போல் இல்லாமல் இன்று சட்டெனப் பார்த்துவிட்டு கையில் நான்கைந்து மல்லாட்டை கொடிகள் எடுத்து, ”எய்யா முருகா… இந்தா, இத எடுத்துனு போயி அதோ அங்க… காட்டுவா மரத்தாண்ட நிக்கறான் பாரு சோலக்கண்ணன்… அவன்கிட்ட தந்துட்டு வாய்யா’’ என்றார் கவுண்டர்.
வாங்கிக்கொண்டு பக்கத்தில் டீப்பன் மேல் போட்டு மூடி வைத்திருந்த தன் சின்ன சிவப்புத் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போய், ”இந்தா’’ என்று சோலைக்கண்ணனிடம் நீட்டினான்.
கண்ணடித்து சத்தமின்றி சிரித்துக்கொண்டு வாங்கிய சோலைக்கண்ணன், தன் டவுசர் பாக்கெட்டிலிருந்து நான்கு கொடுக்காய்ப்புளி காயையும் இரண்டு புளியம் பழத்தையும் எடுத்து முருகனின் தோள் மேல் போட்டிருந்த துண்டை விரித்துக் காட்டச்சொல்லி அதில் போட்டுவிட்டு, திரும்பி மேட்டுக்கொல்லி மரிசியோரம் உட்கார்ந்து மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்த கவுண்டரையும் பூரணியம்மாவையும் பார்த்துவிட்டு, தனக்குள் எதையோ சொல்லி முணுமுணுத்துக்கொண்டு கிடுகிடுவென ஊர்நோக்கி நடந்து, முடியனூரான் கொல்லி முடக்கு வளைந்து தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி வேகமாக போய்க்கொண்டிருந்தான்.
[இன்னும்]
*