முரம்பு – 21

மல்லாட்டை பயிரோடு சேர்ந்து ஊரும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது. இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும் வந்து வீடுகட்டி குடியேற ஆரம்பித்தார்கள்.
முத்துசாமிக் கவுண்டருக்கு அவ்வளவு சந்தோஷம். அதைவிட அதிகமாக பூரணியம்மாவும் செவடனும் மகிழ்ந்தார்கள்.
செப்புள் பிரிவதற்கு முன்னால் எழுந்து கொல்லிக்கு வந்து, மேட்டுத்துண்டு மரிசிமேல் குழந்தையைப் புதைத்த இடத்தருகில் போட்டிருந்த கல்லின்மேல் உட்கார்ந்துகொண்டு, கிழக்கு விடிவானையும் இரைதேடி கூட்டம் கூட்டமாகப் பறந்துபோகும் பறவைகளையும் யாரோ ஒருவர் முடியனூரான் கொல்லி முடக்கில் மூட்டை தூக்கிக்கொண்டு நடந்து போவதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர்.
பக்கத்து வேப்ப மரத்திலிருந்த நான்கைந்து சிட்டுக்குருவிகள் சட்டென ஒன்றன் பின் ஒன்றாகப் பறந்துபோய் நடுத்துண்டு மல்லாட்டை கொடிகளுக்குள் உட்கார்ந்துகொண்டு ஒருசேர கத்திக் கூச்சலிட்டு விளையாடிக்கொண்டிருந்தன.
வடக்கால பக்கமாக தோட்டக்காட்டுக்குப் போய்விட்டு, கிளைக் கால்வாயில் கால் கழுவிக்கொண்டு வந்து பக்கத்தில் உட்கார்ந்த செவடனிடம் செத்தநேரம் பேசிக்கொண்டிருந்த கவுண்டர், மெல்ல எழுந்துபோய் கிழக்கால பக்க மரிசியோரம் இருந்த ஒரு மல்லாட்டை கொடியைப் பிடுங்கிப் பார்த்தார். நன்றாகவே முற்றியிருந்தது. அதோடு, காய்களும் நன்கு பிடித்திருந்தது.
ஏழெட்டு மல்லாட்டை விட்டிருந்த கொடியிலிருந்து ஒரு மல்லாட்டையைப் பறித்து உரித்து வாயில் போட்டுக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்து செவடனை பார்த்த கவுண்டர், ”மல்லாட்ட நல்லாவே முத்திகீது செவடா, நாளமறுநாளு எடுத்துரலாம்’’ என்றார்.
கையில் வாங்கிய செவடன், ”மண்ணும் நல்லா ஈரப்பதமாதான் கீது கவுண்ர, நாளிக்கே ஈத்துரலாம்’’ என்றான்.
”செரி செவடா, வா வூட்டுக்குப் போவலாம்’’ என தலையாட்டிச் சொல்லிவிட்டு, எழுந்து பக்கத்திலிருந்த கொடிகளில் இன்னும் இரண்டு பிடுங்கி ஒன்றோடு ஒன்றை நன்றாகத் தட்டி மண்ணைக் கீழே உதிர்த்துவிட்டு எடுத்துக்கொண்டு, வெப்பால மர வழியாக நடந்து செவடனோடு பேசிக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
மூன்று மாதத்தில் கவுண்டரும் அவர் மச்சான் ராமு கவுண்டரும் வந்து வீடு கட்டியிருந்த இடமே அடியோடு மாறியிருந்தது. எதிரில் அண்ணன் தம்பிகளின் வரிசையான ஐந்து வீடுகளோடு சேர்த்து இன்னும் இருவரும், பக்கத்தில் மூவரும் ஊரிலிருந்த தம் வீட்டை காலிசெய்துகொண்டு வந்து வீடுகட்டி குடியேறியிருந்தார்கள்.
ஏழெட்டு முஸ்லீம்கள் முரம்புக் கொல்லியிலிருந்து மேட்டுக் கொல்லிக்குப் போகும் மண் பாதையின் இருபக்கமும் வந்து குடியேற வேகவேகமாக வீடு கட்டிக்கொண்டிருந்தார்கள்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு நாட்களுக்கு முன்னால் ஊரில் ஆற்றங்கரையோரம் வரிசையாக இருந்த புளியமரத்தில் ராமு கவுண்டரோடு போய் ஏறி புளி உலுக்கித் தந்துவிட்டு, அரைமூட்டை புளியை கூலியாக வாங்கிக்கொண்டு வந்த கவுண்டரிடம், எதிரில் வீடு கட்டி புதிதாகக் குடிவந்திருந்த பொன்னுசாமி ஆச்சாரியும் அவர் தம்பி கோபால் ஆச்சாரியும் வந்து, ”ஏன் முத்துசாமி, அதான் ஊரு ஒண்ணு இங்கயே உருவாயிடிச்சே… இன்னும் எதுக்கு காத்துனு… ஒரு கோயில நாமளே இங்க கட்டிக்கினு, சாமி கும்முட்டா என்ன…?’’ என்று கேட்டதுதான்.
தோளில் வைத்திருந்த சாக்குப்பையைக் கீழே இறக்கி கட்டுத்தெருவோரம் இருந்த கல்மேல் வைத்துவிட்டு, பக்கத்தில் நின்றிருந்த தன் மச்சானை அதிர்ச்சி தாளாமல் பார்த்தார் கவுண்டர்.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால், அதுவும் வரும் வழியில்தான் இதுபற்றி இருவரும் பேசிக்கொண்டு வந்தார்கள். அதுவும் ராமு கவுண்டர் வீட்டைத் தாண்டி மேற்காலப் பக்கம் பொர்ச மரத்தருகில் இருந்த சிறு ஆலமரத்தடியில் முதலில் ஒரு விநாயகர் சிலை வைத்து கும்பிடுவோம். கொஞ்சநாள் கழித்து பக்கத்தில் சிறிதாக ஒரு குடிசைக் கட்டி அதற்குள் மாரியம்மன் சிலை வைப்போம் என்று கிட்டத்தட்ட முடிவே எடுத்திருந்தார்கள்.
சரியாக அதே விஷயத்தை அப்படியே பொன்னுசாமி ஆச்சாரியும் அவர் தம்பியும் வந்து சொன்னது நினைத்து இருவரும் மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டு, ”செரி, செஞ்சிரலாம் பொன்னுசாமி’’ என்றார் கவுண்டர்.
”நானும் என் தம்பிங்களும் சேந்து திர்ணாமலிக்கி போயி புள்ளயார் செல ஒண்ணு வாங்கியாந்து தந்துடறம்… நீயும் ஒன் மச்சாங்காரனும் கூடி ஆவ வேண்டித பாருங்க’’ என்று தன் மொத்த பல்லும் தெரியக் காட்டி சிரித்து சொல்லிவிட்டு போனார் பொன்னுசாமி ஆச்சாரி.
கொண்டு வந்த புளியில் பேர்பாதிக்கும் சற்று குறைவாக அள்ளி தாழ்வாரத் திண்ணைமேல் போட்டுக்கொண்டு, சாக்குப்பையோடு மீதியை தன் மச்சானிடம் தந்தனுப்பிய கவுண்டர்… அவர் போனதும் மெல்ல நடந்ததை பூரணியம்மாவிடம் சொன்னார்.
கேட்டதும் மகிழ்ச்சியில், ”ஆமாந் தே, எனுக்கு கூட ரண்டுமூணு நாளாவே மனசுல பட்டுனு இருந்துச்சி’’ என்று சொன்னார்.
”ஆமா பூர்ணி, நாம மொதமொத இங்க குடுத்தனம் வந்தன்னிகே எனுக்கு பட்டுச்சு… செரி கொஞ்ச நாளாவட்டும், அப்பறம் பாத்துக்குலாம்னுதான் வுட்டுட்டன்’’ என்றவர், எறவானத்தில் செருகியிருந்த பெரிய கொடுவாளை எடுத்துக்கொண்டு திண்ணைமேல் உட்கார்ந்து, ”என் மச்சான் வூடு தாண்டி மேக்கால பக்கம்… மோட்டுக்கிட்ட பெரிய பொர்ச மரம் ஒண்ணு கீதுல்ல… அது பக்கத்துல கீற சின்ன ஆலமரத்து கீலதான், செல வக்கலாம்னு கீறம் பூர்ணி. அதும், அந்த மரத்த பாக்கறப்பலாம் எனுக்கென்னமோ… ஊரு மாரியாத்தா கோயில்ல கீற வேப்ப மரத்த பாக்கறமரே கீது, பூர்ணி’’ என்றார்.
கேட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பூரணியம்மாவை பார்த்து, ”கோயிலு இல்லாத ஊருல குடுத்தனும் இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க பெரிவுங்க. ஆனா, எங்கய்யா என்ன சொல்லுவாரு தெரிமா… கோயிலு இல்லாத ஊருல கூட குடுத்தனம் இருக்கலாம்டா… ஆனா, ஆலனும் அரசனும் இல்லாத ஊருல குடுத்தனம் இருக்கவே கூடாதுன்னு சொல்லுவாரு” என்றார்.
எதுவும் புரியாததுபோல், அதேநேரம் ‘ஏன்’ என்பதுபோல் முகத்தை வைத்திருந்தார் பூரணியம்மா.
அதைப் புரிந்துகொண்ட கவுண்டர், ”ஏன்னா, ஆல மரமும் அரச மரமும் பாலு வக மரங்க. பாலு மரம்னாலே, அத தாயி மரம்ன்னுவாங்க… அது கீற எடம் என்னிக்கும் வளத்திவுள்ள எடம்… நல்ல எடம்… வாழரத்துக்கு தோதுபட்ட எடம்னு சொல்லுவாங்க. அதான் பூர்ணி’’ என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியில் வந்து, கட்டுத்தெரு பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் பெரிய கோலமாவுக் கல்லோரம் இருந்த தீட்டுக்கல்லில் சிறு மண்கட்டி ஒன்றை எடுத்துவைத்து தட்டித் தூளாக்கி, அதில் கொடுவாளை சாய்த்து வைத்து நன்கு அழுந்தத் தேய்த்து கூராகத் தீட்டிக்கொண்டு போய் பூவரச மரத்தடியில் வெட்டிவந்து போட்டிருந்த விறகுச் சுமையை அவிழ்த்து ஒவ்வொரு விறகாக எடுத்து, துண்டுதுண்டாக வெட்டி அடுப்பில்வைத்து எரிக்கத் தோதாகப் பிளந்து போட்டார்.
அடுத்த நாள் காலையில் சீக்கிரம் எழுந்த கவுண்டர்… மாணிக்கத்தையும் ஏழுமலையையும் எழுப்பி கூட்டிக்கொண்டு வந்து, தெக்காலப் பக்க காட்டுவா மரத் துண்டில் வேலியோர மரிசிமேல் நின்று கையெடுத்து கண்மூடி மனதார நிலத்தைக் கும்பிட்டுவிட்டு, முதல் மல்லாட்டை கொடியைப் பிடுங்கினார்.
பின்னாலேயே ராமு கவுண்டரும் அவர் மகன் குப்புசாமியும், செவடனும் வர, ஆளுக்கு ஒரு மெனையாகப் பிடித்து பிடுங்க ஆரம்பித்தார்கள்.
அடுத்த கொஞ்ச நேரத்திலேயே ஊரிலிருந்து அஜ்ஜில்லா பாய் அவர் மகன் ஜீயாவுடன் வந்து, ”கெசா ஹய் கவுண்ர…?’’ என்று சிரித்துக்கொண்டு கவுண்டரிடம் நலம் விசாரித்துவிட்டு மல்லாட்டை பிடுங்க ஆரம்பித்தார்.
அஜ்ஜில்லா பாயும் கவுண்டரும் சிறு வயதிலிருந்தே நெருங்கின நண்பர்கள். அதுவும், ஒருவர் வீட்டில் ஒருவர் போய் சாதி மதம் பார்க்காமல் உரிமையுடன் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு நண்பர்கள். அதிலும் குறிப்பாக, அஜ்ஜில்லா பாயை கூப்பிடாமல் ஒரு தடவைகூட தன் கொல்லியில் மல்லாட்டை எடுத்தது கிடையாது கவுண்டர். அதேபோல், ஊரை ஒட்டியுள்ள அவர் மணங்கொல்லியிலும் கவுண்டரை கூப்பிடாமல் மல்லாட்டை பிடுங்கியது இல்லை.
வேக வேகமாகப் பிடுங்கி அரி அரியாக வைத்துக்கொண்டு போனவர்கள், ஒவ்வொரு கொல்லியாகப் பிடுங்கி முடித்ததும் அக்கொல்லியில் தாங்கள் பிடுங்கியதையெல்லாம் அள்ளிப்போய் ஓரிடத்தில் கும்பலாகச் சேர்த்து வைத்துவிட்டு, அடுத்த கொல்லியில் போய் பிடுங்க ஆரம்பித்தார்கள்.
முதல்நாள் மூன்று கொல்லியிலும், அடுத்தநாள் மூன்று கொல்லியிலும் பிடுங்கலாம் என்பதுதான் கவுண்டரின் திட்டம். வெயில் ஏறுவதற்குள் மூன்று கொல்லியில் பிடுங்கிவிட்டு வீட்டுக்கு போனவர்கள், காலை உணவை உண்டுவிட்டு மதியச் சாப்பாட்டை கையோடு டீப்பனியில் போட்டு எடுத்துக்கொண்டு, ஆளுக்கு ஓர் அன்னக்கூடையும் புட்டியும் கையில் பிடித்துக்கொண்டு, கொல்லிக்கு வந்து பிடுங்கி கும்பலாக வைத்திருந்த மல்லாட்டை கொடியைச் சுற்றி உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டு ஆயத் தொடங்கினார்கள்.
முருகனும் செல்வியும் அருகருகில் உட்கார்ந்து சின்னப் புட்டியில் போட்டி போட்டுக்கொண்டு ஆய்ந்து போட்டார்கள். கொஞ்ச நேரம்தான் ஆய்ந்திருப்பான் முருகன். எழுந்து போய் பக்கத்து துண்டில் தன் அம்மாவின் பக்கத்தில் ஆய்ந்த மல்லாட்டக் கொடியை மெத்தைபோல் போட்டு அதன்மேல் உட்கார்ந்துகொண்டு ஆயத்தெரியாமல் ஒவ்வொரு மல்லாட்டையாகப் பிய்த்துப் போட்டுக்கொண்டிருந்த ரவியை, ”ஏ ரவி, வாடா போயி வெளாடலாம்… அங்க மரத்தாண்ட அணிலுகாயிலாம் கீது, வா’’ என்று கூட்டிக்கொண்டு வேப்ப மரத்தடியில் சென்று உட்கார்ந்து மண்ணில் வீடு கட்டிக்கொண்டு விளையாடினான்.
”இந்த வாட்டி நல்லாவே மல்லாட்ட புடுச்சிகீது தே.’’
பூரணியம்மா சொன்னது கேட்டுவிட்டு, புட்டியில் ஆய்ந்த மல்லாட்டையை எடுத்து பக்கத்திலிருந்த பெரிய அன்னக்கூடையில் கொட்டிவிட்டு, ”ஆமா, பூர்ணி’’ என தலையாட்டி புன்னகைத்தார் கவுண்டர்.
”போன வருசம்தான் மழய நம்பி ஏமாந்துட்டம்… அதும் நல்லா முத்தர நேரத்துல போயி காஞ்சிபோச்சி. இந்த வாட்டி நமுக்கு நல்லநேரம் தே… காவா தண்ணி வந்ததால தப்பிச்சம். இல்லனா இந்தவாட்டியும் மழ நம்மல ஏமாத்தி… பெரியடிதான் வீந்திருக்கும்’’
”எல்லாம் இந்த செவடனாலதான் பூர்ணி.’’
”ஆமாந் தே, அவன்வூட்டு கொல்லிமரே நெனச்சி… கொஞ்சங் கூட சோராம காவா நோண்டனத நெனச்சா… இப்பியும் ஆச்சிரிமாதான் கீது, தே.’’
பூரணியம்மா சொல்லிவிட்டு தெக்கால பக்க மரிசியோரம் காட்டுவா மரத்து நிழலில், தன் மனைவியோடும் பேராமுட்டா கிழவியோடும் உட்கார்ந்து மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்த செவடனைப் பார்த்தார்.
அதேநேரம் தன்னை பார்த்து பேராமுட்டா கிழவி, ”எம்மாந்நாளு கய்ச்சி இப்டி கவுண்ரு மொகத்துலயும்… பூர்ணிமா மொகத்துலயும் இந்த சிரிப்ப பாக்குறன். நானு கும்பட்ற முண்டகண்ணியாத்தா… இப்டியே அவுங்கள என்னிக்கும் சந்தோசமா வச்சிரு தாயி…’’ என்று சொல்லிக்கொண்டு வானத்தைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுவதைப் பார்த்துவிட்டு மெல்ல திரும்பி, பூரணியம்மாவையும் கவுண்டரையும் பார்த்து புன்னகைத்தான் செவடன்.
சிறு குச்சி கொண்டு பள்ளம் தோண்டி விளையாடிக்கொண்டிருந்த முருகன், ”ஏய் இர்றா, நானு போயி மூத்தரம் பேஞ்சிட்டு வர்றன்’’ என்று ரவியிடம் சொல்லிவிட்டு, எழுந்து வேகமாக ஓடிப்போய் மரிசியோரம் உட்கார்ந்து டவுசரைத் தூக்கி சிறுநீர் கழிக்க, ”இர்றா இர்றா, நானும் வர்றன்’’ என்று சொல்லிக்கொண்டு பின்னாலேயே போன ரவி, அவன் பக்கத்தில் போய் உட்கார்ந்து தானும் கழித்தான்.
அருகருகில் உட்கார்ந்து கழித்த இருவரின் சிறுநீரும் மெல்ல ஓடிவந்து ஒன்றாகக் கலந்தது. அதைப் பார்த்துவிட்டு எழுந்த முருகன் கீழே கிடந்த சிறு கல் ஒன்றை எடுத்து அதில் போட்டு, ”சொட்டு மூத்தரம் சொட்டா மூத்தரம் ஏன்பேரு ரவி’’ என்று சொல்லிவிட்டு, ”ஏய் ரவி குவி… நீயும் நானு போட்டமரே ஒரு கல்லெடுத்துப் போட்டு… நானு சொன்னமரே சொல்ட்டு… ஒன்பேருக்கு பதலா ஏன்பேரு சொல்லு’’ என்றான்.
”ஏன்டா, அப்டி சொல்லனா என்னாவும்…?’’ என்று கேட்டான் ரவி.
”அப்டி சொல்லனா, ஒனுக்கு சொட்டு மூத்தரம் வந்து குஞ்சிலாம் எரியும்… அப்றம் குஞ்சி பெர்சாயி வெடிச்சி நீ செத்துருவ’’ என்றான் முருகன்.
”அய்யய்யோ, இர்றா நானுஞ் சொல்லிட்றன்’’ என்றுவிட்டு பக்கத்தில் கிடந்த சிறு கல் ஒன்றை எடுத்துப்போட்டு, ”சொட்டு மூத்தரம் சொட்டா மூத்தரம் ஏன்பேர் முர்கன்’’ என்றான்.
பூரணியம்மா பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, நடுநடுவில் எழுந்து போய் கொஞ்சம் கொஞ்சமாக கொடிகளை அள்ளி ஆய்வதற்கு ஏதுவாக பக்கத்தில் போட்டுவிட்டு வந்து ஆய்ந்துகொண்டிருந்த மாணிக்கமும் ஏழுமலையும் எழுந்துபோய், ஆளுக்கு இரண்டு நீளமான மிலார் எடுத்துவந்து கவுண்டருக்கும் பூரணியம்மாவுக்கும் பக்கத்தில் நட்டு, அதில் சாக்குப்பையும் உடைத்துவந்த வேப்பங் கொத்தும் கட்டித் தொங்கவிட்டு, அவர்கள் மேல் வெயில் அடிக்காத மாதிரி செய்தார்கள்.
அதைப் பார்த்துவிட்டு பக்கத்து துண்டில் ஆய்ந்துகொண்டிருந்த குப்புசாமியும் எழுந்துபோய், அதேமாதிரி இரு மிலார் எடுத்துவந்து அவன் அம்மா பக்கத்தில் நட்டு நிழல் செய்தான்.
செத்தநேரம் ஆய்ந்துவிட்டு எழுந்த கவுண்டர், செவடனைக் கைகாட்டி கூட்டிக்கொண்டு வந்து நடுத்துண்டு நடுவிலிருந்த ஈரப்பதம் குறைவான இடத்தில் புல் பூண்டுகளை வேரோடு பிடுங்கிப்போட்டுவிட்டு மண்வெட்டியால் செதுக்கி சமப்படுத்தி களம் அமைத்துப் போனதும், ஆய்ந்த மல்லாட்டையை எடுத்து வந்து ஒவ்வொருவரும் தனித்தனியாக அதில் கொட்டி அடையாளத்துக்கு அதன்மேல் மல்லாட்டக் கொடியும் வேப்பங் கொத்தும் ஆவாரங்கொத்தும் வெறும் குச்சியும் செருகி வைத்தார்கள்.
அதிக வெயில் இல்லாமல் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் மல்லாட்டை ஆய்வதற்கு தோதாகப் போனது. இல்லையென்றால் வெயிலில் காய்ந்துகொண்டும், மரத்தடி நிழலில் கொடிகளை அள்ளிப்போய் போட்டு உட்கார்ந்தும் ஆய்ந்திருக்க வேண்டும்.
மாணிக்கத்தையும் ஏழுமலையையும் கூப்பிட்டு, வீட்டுக்குப் போய் கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாட்டையும் கன்னுக்குட்டியையும் அவிழ்த்துப் பிடித்துவந்து பக்கத்து துண்டில் முளைக்குச்சி அடித்து கட்டச்சொன்ன கவுண்டர், ஊர் தலைவரும் மனைகாரும் தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி முடியனூரான் கொல்லி மொடக்கில் வளைந்து தம் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்து வருவதைப் பார்த்துவிட்டு செல்வியிடம், ”எம்மா செல்வி, அஞ்சாறு கொடி மல்லாட்ட எடுத்துனு போயி… அதோ வராங்க பாரு தலிவரும் மனேகாரும், அவுங்ககிட்ட தந்துட்டு வா தாயி… தின்னுனே போவுட்டும்’’ என்றார்.
சட்டெனத் திரும்பி அவர்களை பார்த்துவிட்டு, எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிப்போய் தந்துவிட்டு வந்தாள் செல்வி.
சங்கடத்தோடு வாங்கிக்கொண்ட மனைகார், ”இந்தாளுக்கு நாம எம்மாங் கெடுதலு பண்ணிகீறம். அதல்லாம் மறந்துட்டு… சந்தோசமா மவக்கிட்ட தர சொல்லி மல்லாட்ட தந்துகீறாரு பாரு… இவன்தாய்யா மனுசன்’’ என்றார் தலைவரிடம்.
கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் திரும்பி, மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருந்த கவுண்டரை பார்த்தார் தலைவர்.
”அந்த திருடனுக்கு பொறந்த பெட்டா மவுனுங்குளுக்கு போயி… எதுக்கிந்த கவுண்ரு, மல்லாட்ட தந்தாரு…?’’
செவடனைப் பார்த்து கோபம் கொப்பளிக்க கேட்டார் பேராமுட்டா கிழவி.
பதில் எதுவும் சொல்லாமல் மெல்ல தனக்குள் புன்னகைத்துக்கொண்டு மல்லாட்டை ஆய்ந்தான் செவடன்.
”ரண்டுபேரும் கூடினு ஊருல எம்மாங் குடிய கெடுத்திருப்பானுங்க, லவுடிக்க பாலுங்க… இவுனுங்குளுக்குலாம் நல்லசாவு வரவே வராது பாரு… சிக்கி சின்னாபின்னமாயிதான் சாவானுங்க, என் சாண்ட குடிச்சவுனுங்க… கட்டிய தின்னவுனுங்க…’’
தன் வாயில் வந்ததெல்லாம் சொல்லி வசைபாடிவிட்டு எழுந்த பேராமுட்டா கிழவி, வெறும் தரையில் ஆய்ந்துபோட்டிருந்த மல்லாட்டையை இரு கைகளால் அள்ளி பக்கத்திலிருந்த அன்னக்கூடையில் போட்டார்.
விளையாடிக்கொண்டிருந்த இடத்தருகில் நீளமாக கொடிவிட்டு, காய்த்திருந்த சுக்கங்கொடியிலிருந்து லேசான மஞ்சள் நிறத்தில் வரிவரியான கோடுகளோடிருந்த ஒரு பழத்தைப் பார்த்து ஆசையோடு பறித்துக்கொண்டு வந்து தன் தந்தையிடம் காட்டிக் கேட்டான் முருகன்.
”ஐய்யாய்யா, இது என்னா காயிய்யா…? இத நாம தின்னலாமாய்யா…?’’
”ஓ, தின்லாமே…” என்றுவிட்டு, ”இதுபேரு சுக்கம்பழம்’’ என சொல்லிக்கொண்டு கையில் வாங்கினார் கவுண்டர்.
தன் முன்னம் பல் விழுந்திருந்த ஒலப்பல்லைக் காட்டி பக்கத்தில் நின்றிருந்த ரவியைப் பார்த்து தலையாட்டி, ”பாத்தியா, நானு சொன்னன்ல்ல தின்லாம்னு’’ என்று சிரித்த முருகன், ”இத நறயா தின்லாமா…? இல்ல, கொஞ்சமா தின்லாமாய்யா…?’’ என்று கேட்டான்.
முருகனின் கேள்வியைக் கேட்டு சத்தமாக சிரித்துக்கொண்டு, பக்கத்திலிருந்த பூரணியம்மாவை பார்த்துவிட்டு மெல்ல திரும்பி, தன் கையில் வைத்திருந்த சுக்கம்பழத்தை அவனிடம் காட்டிய கவுண்டர், ”இதுமரே மஞ்சளா பய்த்திருந்தா, எம்மாம் வேணாலும் தின்னலாம்… ஒண்ணும் ஆவாது, ஒடம்புக்கு நல்ல குளிச்சி. இப்டில்லாம பச்சயா காயாருந்தா தின்னக்கூடாது… கசக்கும், அப்பறம் வவுத்தால போவும், செரியா…?’’ என்றார்.
”ம், செரிய்யா’’ என்று தலையாட்டிச் சொல்லிவிட்டு, அவர் கையிலிருந்த பழத்தை வாங்கி கடித்துத் தின்றுகொண்டு சுங்கங்கொடியிருந்த இடத்துக்கு ரவியைக் கூட்டிக்கொண்டு வேகமாக ஓடிவந்தான் முருகன்.
மேற்கால பக்கத்திலிருந்து பள்ளத்தில் இறங்கி புல்லாங்குழல் ஊதிக்கொண்டு வேகமாக நடந்து வந்த சோலைக்கண்ணன்… காட்டுவா மரத்தருகில் வந்து நின்று திரும்பி, ஊதுவதை நிறுத்திவிட்டு மல்லாட்டக் கொல்லிக்குள் ஆங்காங்கே உட்கார்ந்து ஆட்கள் மல்லாட்டை ஆய்ந்துகொண்டிருப்பதைப் பார்த்தான்.
மெல்ல தலை நிமிர்த்தி எதேச்சையாக அப்பக்கம் பார்த்த கவுண்டர், கையில் அஞ்சாறு கொடியை எடுத்து ஏழுமலையிடம் தந்து, ”எய்யா ஏழ்மல, இந்தா இத எடுத்துனு போயி… அதோ அங்க காட்டுவா மரத்தாண்ட நிக்கறான் பாரு சோலக்கண்ணன், அவன்கிட்ட தந்துட்டு வாய்யா’’ என்றார்.
தயக்கத்தோடு வாங்கிக்கொண்டு நின்றவன், ”அவனதான் எல்லாரும் பைத்திங்கிளின்னு சொல்றாங்களே… கிட்டப்போனா என்ன எதாது பண்ணிடுவானாய்யா…?’’ என்று கேட்டான்.
‘இல்லை’ என தலையாட்டி மெல்ல முறுவலித்தவர், ”அப்பிடிலாம் சொல்லக்கூடாது சாமி, பாவம் அவன்… ஒண்ணும் பண்ண மாட்டான், போயி தந்துட்டு வா’’ என்றார்.
வேகமாக ஓடிப்போய் ஒருவித பயந்தோடு அவன் பக்கத்தில் நின்று, ”இந்தா எங்கய்யா ஒனுகிட்ட தர சொன்னாங்க” என்று நீட்டினான்.
துலக்காமல் மஞ்சள் கறை படிந்திருந்த மொத்த பற்களையும் காட்டி சத்தமின்றி சிரித்துக்கொண்டு கைநீட்டி வாங்கிய சோலைக்கண்ணன், தனது கிழிந்த பச்சை நிற டவுசர் பாக்கெட்டில் கைவிட்டு சிவந்து பழுத்திருந்த தித்திப்பு கொடுக்காய்ப்புளி காய் ஒன்றை எடுத்து ஏழுமலையிடம் தந்தான்.
அதை சற்றும் எதிர்பாராதவன், கண்கலங்கியபடி வாங்கிக்கொண்டு வந்து கவுண்டரிடம் காட்டிவிட்டு எதுவும் பேசாமல் சிலைபோல் நின்றான்.
”இங்க வந்து ஒக்காரு சாமி’’ என பக்கத்தில் கூப்பிட்டு அவனை உட்காரவைத்த கவுண்டர், ”அவன் ஒண்ணும் பைத்தங்கிளி இல்லய்யா… அவன் நேரம் இப்டி ஆய்ட்டான். இனி ஊரு போடுமுட்டிங்க கூட கூடினு… அவனப் பாத்து கத்தி கூசப்போட்டு பைசி காட்டக்கூடாது, செரியா…?’’ என்றார்.
”செரிய்யா’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து போய் பூரணியம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொடுக்காய்ப்புளிக்காயின் தோலை மெல்ல உரித்து மாணிக்கத்துக்கும் செல்விக்கும் ஆளுக்கு இரண்டு சுளை தந்துவிட்டு, மீதமிருந்த மூன்று சுளையைத் தான் தின்றான்.
கையெழுத்து மறைவதற்குள் இழுத்த மல்லாட்டை கொடிகளையெல்லாம் ஆய்ந்துவிட்டு வந்து களத்தில் கொட்டினார்கள். கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து பக்கத்திலிருந்த மரிசிமேல் வைத்த கவுண்டர்… தன் தோள்மேல் போட்டிருந்த துண்டை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு உட்கார்ந்து, சின்ன புட்டியில் ஒவ்வொருவர் ஆய்ந்த கூரிலும் ஆறு புட்டிக்கு ஒரு புட்டி அளந்து கூலியாகப் போட்டுத் தந்தனுப்பினார்.
ஊரில் பெரும்பாலும் யார் கொல்லியில் மல்லாட்டை பிடுங்கினாலும் குறைந்தது நான்கு புட்டியிலிருந்து எட்டு புட்டிவரை தங்களுக்கு எடுத்துக்கொண்டு ஒரு புட்டியை கூலியாகத் தருவது வழக்கம். சில பேராசை பிடித்தவர்கள் ஒன்பது, பத்து புட்டி கூட எடுத்துக்கொண்டு தருவதுண்டு. ஆனால், கவுண்டர் ஆறு புட்டிக்கு மேல் இதுவரை ஒருதடவை கூட எடுத்தது கிடையாது. அப்படி எடுத்துக்கொண்டு தந்தால், அது அநியாய கூலி என்பார் கவுண்டர்.
மல்லாட்டையை பொறுத்தவரையில் பொதுவாக கொடி மல்லாட்டை, கொத்து மல்லாட்டை என இருவகை உண்டு என்பார்கள். அதிலும் உள்ளே பயிர்கள் வெள்ளையாக இருந்தால் அது நாட்டு மல்லாட்டை என்றும், சிவப்பாக இருந்தால் ஐயாரெட்டு மல்லாட்டை என்றும், இரண்டில் ஐயாரெட்டு மல்லாட்டையை காட்டிலும் நாட்டு மல்லாட்டையே மிக நல்லது என்றும் பெரியோர்கள் சொல்வதுண்டு.
அதனால் ஊரில் மல்லாட்டை விதைப்போரில் முக்காலுக்கு அதிகமாக, ஏன் தொண்ணூறு சதவிகிதம் பேர் நாட்டு மல்லாட்டை பயிரிடுவதையே விரும்புவார்கள். அதிலும் கவுண்டர், ‘நாட்டு மல்லாட்டதான் நம்முளோட மல்லாட்ட… ஐயாரெட்டு மல்லாட்டலாம் எவுனோ படிச்சவனுங்க வந்து செஞ்ச கலப்பட மல்லாட்ட’ என்பார்.
மெல்ல ஒவ்வொருவராக வீட்டுக்குப் போனபின், மாட்டையும் கன்னுக்குட்டியையும் அவிழ்த்துப் பிடித்துக்கொண்டு வந்த மாணிக்கத்தையும் ஏழுமலையையும் அங்கேயே களத்து மல்லாட்டைக்கு காவலாக உட்கார்ந்திருக்க சொன்ன கவுண்டர், அவர்கள் கையிலிருந்த மாட்டையும் கன்னுக்குட்டியையும் வாங்கிக்கொண்டு துரிஞ்ச மர வழியாக நடந்து வந்தார்.
சூரியன் மறைந்து நொடிக்கு நொடி இருட்டிக்கொண்டு வந்தது. துரிஞ்ச மரத்தடியில் பெரிய அன்னக்கூடையில் புண்ணாக்கு போட்டு கலக்கி வைத்திருந்த கஞ்சித்தண்ணியை மாட்டுக்கு காட்டிவிட்டு, கட்டுத்தெருவில் போய் கட்டிவிட்டு நேராக சாக்கடைக்குச் சென்று கை கால், முகம் கழுவிக்கொண்டு வந்த கவுண்டர்… வாசப்படியில் நின்று பூரணியம்மாவிடம் தண்ணீர் மொண்டு வரச்சொல்லி குடித்துவிட்டு, சுவர் ஓரமாகச் சாய்த்து வைத்திருந்த கட்டிலைத் தூக்கிக்கொண்டு கொல்லிக்கு வந்து களத்தருகில் போட்டு காவலுக்கு உட்கார்ந்துகொண்டு ஏழுமலையையும் மாணிக்கத்தையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
பூரணியம்மா முன்னிரவு எட்டு மணி அஜ்ஜான் கூவுவதற்கு முன்னால் டீப்பனியில் போட்டுத் தந்த கஞ்சிசோற்றை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையில் ராந்தலையும் சில்லாக்கோலையும் எடுத்துக்கொண்டு வெப்பால மர வழியாக சாமை கொல்லிக்குள் இறங்கி மெல்ல நடந்து களத்துக்கு வந்தான் செவடன்.
ராந்தலையும் சில்லக்கோலையும் வாங்கி கீழே வைத்துவிட்டு, ”ஏன் செவடா, நீ சாப்டியா…?’’ என்று கேட்டார் கவுண்டர்.
எதுவும் சொல்லாமல் மவுனமாக நின்றான்.
”ஏய் செவடா, ஒன்னதான்டா கேக்கறன்… சாப்டியா, இன்னும் இல்லியா…?’’
”இன்னும் இல்ல கவுண்ர.’’
தாழ்ந்த குரலில் ‘சொல்லலாமா வேணாமா?’ என்று தயக்கத்தோடு சொன்னான்.
”வா, வந்து ஒக்காரு… ஆளுக்கு ரவ சாப்டுவம்.’’
செவடன் கையிலிருந்த டீப்பனியை வாங்கிக்கொண்டு பக்கத்தில் உட்காரச் சொல்லி திறந்து, டீப்பன் மூடி நிறைய சோறள்ளிப் போட்டு அவனிடம் தந்து சாப்பிடச் சொன்னார் கவுண்டர்.
[இன்னும்]
*