முரம்பு – 17

மண்ணைப் பிளந்துகொண்டு ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக மல்லாட்டை பயிர் முளைத்து வந்திருந்தது.
முன்தினம் மாலை செவடனுடன் சேர்ந்து கால்வாய் தோண்டிவிட்டு கையெழுத்து மறைந்தபின் வந்து குளித்து சாப்பிட்டு அசதியில் படுத்த முத்துசாமிக் கவுண்டர், நன்கு பொழுதுவிடிந்து வெயில் வரும் வரைக்கும் படுத்திருந்துவிட்டு மெல்ல எழுந்து கொல்லிக்குப் போய் பயிர்கள் முளப்பு விட்டிருப்பதைப் பார்த்ததும் தன்னையறியாமல் கண்கலங்கிவிட்டார். உள்ளுக்குள் உற்சாகம் தாளவில்லை. மழைச்சாரலில் நனைந்த வெள்ளாடுபோல் சிலிர்த்துப்போனார்.
எத்தனை சோதனைகளுக்குப் பின் இட்ட பயிர்…? ஆற்றில் வெள்ளம் வந்து வீடிழந்தவர்களுக்குத் தன் மேட்டு நிலத்தைத் தந்தது முதல் குழந்தையைப் பறிகொடுத்தது வரை வரிசையாய் எத்தனை எத்தனை சோதனைகள்…? எல்லாவற்றையும் கடந்து செவடன் தந்த உத்வேகத்தில் போட்ட பயிரிது. இப்போது கண் முன்னால் துளிர் நம்பிக்கையாய் முளைவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் மானாவரி மல்லாட்டப் போட்டுவிட்டு மழைக்காகக் காத்திருந்த கவுண்டர், இம்முறை கால்வாய் தண்ணீர் தன் கொல்லியில் முதல் தடவையாக வந்து பாயப்போவது நினைத்து அவ்வளவு மகிழ்ந்தார். எல்லாவற்றுக்கும் காரணம் செவடன்தான் என்று அவனை நன்றியோடு நினைத்துக்கொண்டார்.
அதிலும், முன்தினம் மதியம் நெருப்பென கொட்டிய வெயிலைப் பார்த்துவிட்டு, ”வாடா செவடா… வூட்டுக்குப் போயி நெவுல்ல ஒக்காந்துனுருந்துட்டு செத்த வெயிலு தாந்ததும் வரலாம்’’ என கவுண்டர் கூப்பிட்டதற்கு, ”அட, இதல்லாம் ஒரு வெயிலா கவுண்ர…? அது பாட்டுனு அதோட வேலயப் பாக்குது… நாம பாட்டுனு நம்ம வேலயப் பாப்பம்…’’ என்றுவிட்டு சிரித்தவன், ”நீங்க வேணுன்னா வூட்டுக்கா போயி பொசாய்க்கா வாங்க கவுண்ர… நானு நோண்டினு கீறன்’’ என்று சொல்லிவிட்டு, முன்னைவிட இன்னும் உற்சாகத்துடன் மேலே நின்றுகொண்டு கடப்பாரையால் மண்ணைக் குத்தி பேர்த்துத் தள்ளினான்.
செவடனின் அசராத உழைப்பைக் கண்டு வியந்த கவுண்டர், இருபது வருடங்களுக்கு முன்னான தன்னை அவனில் பார்த்ததுபோல் உணர்ந்து உற்சாகமாகி… அவனுக்குப் போட்டியாக சரசரவென தானும் மண்ணள்ளிப் போட்டு இன்னுமொரு நாள் இழுத்திருக்க வேண்டிய கால்வாய் வேலையை நேற்று மாலையே முடித்துவிட்டு வந்தார்.
வரும் வைகாசி நான்கு வந்தால் பூரணியம்மாவுக்கு நாற்பத்தொன்று முடிந்து நாற்பத்தியிரண்டு வயது ஆரம்பம். இருபதாண்டு கால தம் குடும்ப வாழ்வில் படாத கஷ்டமே இல்லை என்பார் கவுண்டர். அதிலும் முதல் ஐந்தாண்டுகள் குழந்தையில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு, அந்த ஆண்டவனாய் பார்த்து நான்கு குழந்தைகளை அடுத்தடுத்து தந்ததாக மகிழ்வுடன் சொல்வார். கேட்டால், இப்போது போதும் என நினைத்தபோது ஐந்தாவது குழந்தையும் தந்து அதைத் தனக்கே வேண்டுமென அவ்வாண்டவன் பிடுங்கிக்கொண்டதாகவும் சொல்வார்.
முடியனூரான் கொல்லி முடக்கிலிருந்த கிளைக் கால்வாயிலிருந்து முரம்புக் கொல்லி சனிமூலை துண்டு காணிக்கல் வரை செவடனுடன் சேர்ந்து கால்வாய் தோண்டிவந்து விட்டுவிட்டு, மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வேப்பமரத்தடிக்கு வந்து நின்று மெல்லத் திரும்பி செவடனின் முகத்தைப் பார்த்த கவுண்டர்… வெகுநாள் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட கேள்வியைக் கேட்டார்.
”ஏன்டா செவடா, எனுக்கு ஒண்ணுனா மட்டும் எதப்பத்தியும் ஓசனப் பண்ணாம… இம்மாம் வேலய இஸ்துப்போட்டு பண்றவன்…?’’
தோள்மேல் சாய்த்துவைத்து தூக்கி வந்த கடப்பாரையை மெதுவாக எடுத்து மண்ணில் குத்தி நிறுத்திய செவடன், ”அன்னிக்கி அந்த கொட்டாக்கார சாயுப்மாருகிட்ட சொன்னீயே கவுண்ர… இவன் எங்க பூர்ணி வவுத்துல பொறக்காத மவன்னு. நீங்க சொல்ட்டீங்க… நானு சொல்லல…’’ என்று சொல்லிவிட்டு, குத்திய கடப்பாரையைப் பிடுங்கி எடுத்துக்கொண்டு தெக்கால போகும் மரிசிமேல் நடந்து போனான்.
முரம்புக் கொல்லி மொத்தமும் சிரிப்பது போல் இருந்தது கவுண்டருக்கு. மரிசி மேல் மெல்ல நடந்து போய் ஒவ்வொரு துண்டாகப் பார்த்துவிட்டு திரும்பி, மேற்கால பக்க வேலியோரமிருந்த வேப்ப மரத்தின் கிளையில் சிறு குச்சியை உடைத்து, அதன் ஒரு முனையைக் கடித்து பல்துலக்கியபடி வெப்பால மர வழியாக வீட்டுக்கு வந்தார்.
மாணிக்கமும் ஏழுமலையும் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் தன் டவுசர் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு நாலனா காசு எடுத்து தந்துவிட்டு வந்து, கட்டுத்தெரு பின்னால் நின்று பல் துலக்கிக்கொண்டு… முன்தினம் மாலை செவடன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளைத் தனக்குள் ஓட்டிப்பார்த்த கவுண்டர், ‘அப்ப, அன்னிக்கி நானு காவா நோண்றப்ப தவுலத்கான் சாயிபு கிட்ட சொன்னத மனசுல வச்சினு… அவன பெக்காத தவுப்பன் நானுன்னு சொல்லாம சொல்ட்டு போயிகீறான்ல, இந்த செவடன்…’ என்று உள்குரலில் தன்னிடம் சொல்லிக்கொண்டு மெல்ல உதடசைத்து சிரித்துவிட்டு, நடந்துபோய் சாக்கடையில் வாய் கொப்பளித்து கை கால், முகம் கழுவிக்கொண்டு தோள்மேல் போட்டிருந்த பச்சை துண்டால் முகத்தைத் துடைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
அடுப்பங்கரையில் மணைக்கட்டை மேல் உட்கார்ந்து தன் இரு உள்ளங்கால்களுக்கு நடுவில் பருப்பு சட்டியில் மத்து வைத்து முருங்கைக் கீரை கடைந்துகொண்டிருந்த பூரணியம்மா, கவுண்டர் வந்ததும் எழுந்து படிசொம்பில் ஊற்றிவைத்திருந்த நீசத்தண்ணியில் மாடத்திலிருந்த உப்புத்தட்டிலிருந்து செத்த உப்பள்ளிப் போட்டுக் கலக்கி எடுத்துவந்து, ”இந்தா தே… ரவ நீசத்தண்ணி குடி’’ என்று நீட்டினார்.
பக்கத்திலிருந்த திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அதை வாங்காமல் பூரணியம்மாவின் கண்களைப் பார்த்த கவுண்டர், ”நீசத்தண்ணில உப்பு மட்டும்தான் போட்டுத்தருவியா பூர்ணி…?’’ என்று வம்பிழுக்கும் நோக்கில் கேட்டுவிட்டு, கண்ணடித்து மெல்ல புன்னகைத்தார்.
தூய காலைமலர் போல் சட்டென வெட்கப்பட்டு சிரித்த பூரணியம்மா, ”ஏன்… கவுண்ரய்யாவுக்கு வேறென்ன போட்டுத் தரணுமாம்…?’’ என்று ஏட்டிக்கி போட்டியாகப் பதில்கேள்வி தொடுத்தார்.
உடனே, ”கிட்ட வந்தாதான் கவுண்ரு சொல்வாராம்’’ என்று கைகாட்டிப் பக்கத்தில் கூப்பிட்ட கவுண்டரிடம் பொய்க்கோபம் காட்டி முறைத்த பூரணியம்மா, திரும்பி வாசப்படி வெளியில் பார்த்துவிட்டு படிசொம்பின் பக்கவாட்டில் மெல்ல இதழ்பதித்து முத்தமிட்டு, ”இதான கேக்கறாரு கவுண்ரு…?’’ என்று நீட்டியதும் சத்தமின்றி பல்தெரிய சிரித்து வாங்கிக்கொண்ட கவுண்டர், ”கவுண்ரம்மாவோட முத்தத்தண்ணிக்கு ஈடெண உண்டா என்ன…?’’ என்று சொல்லிவிட்டு வாயில் வைத்து ஒரே மொடக்காக மொத்த நீசத்தண்ணியையும் குடித்துவிட்டு எழுந்தார்.
சரியாக அந்நேரம் சாக்கடையிலிருந்து ஏனம் கழுவி எடுத்துக்கொண்டு செல்வி உள்ளே வருவதை பார்த்த கவுண்டர், சட்டென்று கையில் வைத்திருந்த சொம்பை திண்ணையில் வைத்துவிட்டு எறவானத்தில் செருகியிருந்த கொடுவாளை எடுத்துக்கொண்டு அடுப்பங்கரையில் போய் உட்கார்ந்து கீரை கடைய ஆரம்பித்த பூரணியம்மாவிடம், ”ஏன் பூர்ணி, நானு அரசங்கல்லுக்கா போயி வெறவு வெட்டியாறன்… செத்தநேரம் கய்ச்சி பாப்பா கிட்ட பெரிபடியால ரண்டுபடி அரிசி தந்து செவடன் வூட்ல போயி தந்துட்டு வர சொல்லு… பாவம் சோத்துக்கு என்ன பண்றாங்க தெர்ல…’’ என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தார்.
நடு வீட்டுக்குள் சாமி படத்தின் கீழே பூரணியம்மாவின் செந்நிற சுசேட்டு புடவை போர்த்திக்கொண்டு படுத்திருந்த முருகன், எழுந்து தன் பொத்தான் பிய்ந்துபோன டப்பால் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு ஓட்டமாக வெளியில் ஓடிவந்து மேற்கு நோக்கி நடந்துபோன கவுண்டரிடம் போய், ”ஐய்யாய்யா… நானும் கூட வர்றன்யா’’ என்று சொன்னான்.
சட்டென நின்று முருகனைப் பார்த்த கவுண்டர், ”வேணாஞ் சாமி… நீ வூட்லயே அம்மாக்காரி கூட இரு. நானு, இன்னிக்கி ரம்ப தூரமா போறன்… இன்னொரு நாளிக்கி ஒண்ண கூட்டுனு போறன், செரியா…?’’ என்றார்.
முகத்தை நொடியில் சோகமாக்கிக்கொண்ட முருகன், ”இல்ல… நானு இன்னிக்கே வருவன்’’ என்றான், மெதுவாகத் தலையாட்டிக்கொண்டு.
”ஏஞ்சாமில்ல எய்யா… நானு சொல்ற பேச்சக் கேளுய்யா… ரம்ப தூரமா போறன்… முள்ளு பூச்சிபொட்டுலாம் அங்க நறயா இருக்கும். வூட்ல அக்காகூட வெளாடினிரு… ஏங்கண்ணுல்ல…’’
கவுண்டர் சொல்லி முடிக்கும் முன்னமே தரையில் உட்கார்ந்து, ”நானும் வருவன்’’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
அவன் முன்னால் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கையில் வைத்திருந்த கொடுவாளைப் பக்கத்தில் வைத்துவிட்டு தூக்கி நிப்பாட்டி கீழே கழட்டிக்கொண்டு வந்த டவுசரை ஏற்றிவிட்டு அதன்மேல் அரணாக்கயிறு எடுத்துவிட்ட கவுண்டர், ”செரி செரி, அய்வாத… போயி அம்மாக்காரிகிட்ட சொல்ட்டு, செத்த நீசத்தண்ணி ஊத்திதர சொல்லி குடிச்சிட்டு வா… கூட்டுனு போறன்’’ என்றார்.
உடனே உற்சாகமாகி கண்களைத் துடைத்துக்கொண்டு பல்லைக்காட்டி சிரித்துவிட்டு திரும்பி ஓடிப்போன முருகன், வீட்டுக்குள் போய் பூரணியம்மாவிடம் சொல்லிவிட்டு, ரோட்டா சொம்பில் நீசத்தண்ணி ஊத்தி தரச்சொல்லி குடித்துவிட்டு கொடிக்கையிலிருந்த சின்ன சிவப்புத் துண்டை இழுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு ஓடிவந்தான்.
முருகனைக் கூட்டிக்கொண்டு மெல்ல தன் மச்சான் வீட்டைத் தாண்டி கோனாமூட்டு தென்னந்தோப்பு வழியாக நடந்த கவுண்டர், புளிய மர மேடேறி மதுகு திட்டுமேல் பச்சை நிற துண்டு கட்டிக்கொண்டு மேற்குப் பார்த்து கால்களைக் கீழே தொங்கப்போட்டு உட்கார்ந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டிருந்த சோலைக்கண்ணனை பார்த்துவிட்டு, ‘அவன தொந்தரவு செய்ய வேணாம்’ என நினைத்து இடப்பக்கம் திரும்பி காவாங்கரையில் நடந்தார்.
இவ்வளவு நேரம் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக பின்னால் நடந்து வந்த முருகன், பாதை ஓரமாக அழகழகாக மஞ்சள் நிறத்தில் மலர்ந்திருந்த சிறு நெருஞ்சிப் பூக்களைப் பார்த்துவிட்டு குனிந்து அதில் ஒரு பூவைப் பறித்து கவுண்டரிடம் காட்டி, ”ஐய்யாய்யா, இது என்னா பூவுய்யா…?’’ என்று கேட்டான்.
நின்று கையில் வாங்கிப் பார்த்த கவுண்டர், ”நெருஞ்ச பூவு’’ என்றார்.
உடனே, ”இத ஏன்யா யாருமே வந்து பறிக்காம கீறாங்க…?’’ என்று கேட்டான்.
எல்லாப் பூக்களும் மனிதர்கள் பறிக்கத்தான் பூக்கிறது என்பது அவன் எண்ணம்.
மென்மையாகப் புன்னகைத்த கவுண்டர், ”அட மடயா… எல்லா பூவயும் பறிக்க மாட்டாங்கடா… எது தேவயோ அததான் பறிப்பாங்க” என்று சொல்லிவிட்டு, அவன் கையில் அப்பூவைத் தந்துவிட்டு முனியப்பன் கோயில் படிக்கட்டு தாண்டி நடந்தார்.
எதையோ தனக்குள் யோசித்தவன், ”அப்ப இது தேவல்லாத பூவாய்யா…?’’ என்று கேட்டான்.
முருகனின் கேள்வியைக் கேட்டுவிட்டு நின்ற கவுண்டர், பக்கத்தில் பாதையோரம் இருந்த நெருஞ்சிச் செடியிலிருந்து ஒரு முள்ளைப் பறித்தார்.
”எய்யா முருகா, இங்க வா சாமி… நானு சொல்றத நல்லா கவுனமா கேட்டுக்க… தேவயில்லாத்துன்னு ஒண்ணு இந்த பூமில கெடிவே கெடியாது. இங்கப் பாரு இந்த முள்ள, எம்மாம் அழவா கீது… இந்த முள்ளுதான் இதோட காயி. இத, பாலு கூட சேத்து வேவவச்சி வெயில்ல நல்லா காயப்போட்டு, தூளு பண்ணி பால்ல கலந்து குடிச்சம்னா… கொழந்த பொறக்காதவுங்களுக்கு கொழந்த பொறக்கும். அதலயும் ஆம்பிளிங்குளுக்கு நறயவே நல்லுது. இதோட தயய வெள்ளாட்டுப் பால்ல கலந்து சூடுபண்ணி நல்லா வடிக்கட்டி… தேனிருந்தா அதுகூட கலந்து குடிச்சம்னா, ஆண்ம பெருவும்…’’ என்று சொல்லிவிட்டு, முருகனின் கையிலிருந்த பூவை வாங்கிய கவுண்டர்,
”இதோட முள்ளு, தழ மட்டுல்ல… இந்த பூவும் மருந்துதான். நம்முளுக்கு மட்டுல்ல… ஆடு மாடு எல்லாத்துக்குந்தான். இப்டி நம்முள சுத்தி கீற எல்லாமே எதோ வகயில ஒதவறதுதான். நம்முளுக்கு அது தெரிலனா தேவயில்லாத்தா ஆய்டாது, பாத்துக்க…’’ என்றுவிட்டு கால்வாய் ஓரத்திலிருந்த இடுப்புமூட்டு உயர எருக்கன் செடியைக் காட்டி, அதன் இலை முதல் வேர் வரை ஒவ்வொரு பாகமும் எப்படியெல்லாம் மனிதர்களுக்குப் பயன்படுகிறதென சொல்லிக்கொண்டு நடந்தார்.
கிழக்கே பள்ளத்திலிருந்த பெரிய புங்கை மரத்தடியில் சாரைப்பாம்பும் நல்லபாம்பும் பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்த்த கவுண்டர், எங்கே அதைப் பார்த்தால் முருகன் பயந்துவிடுவானோ என நினைத்துக்கொண்டு… பார்த்தும் பார்க்காததுபோல் சத்தம்போடாமல் எட்டி அவனை கூட்டிக்கொண்டு வேகமாக நடந்துபோனார்.
ஊரில் பலரும் சொல்வார்கள். இதுபோல் சாரைப்பாம்பும் நல்லபாம்பும் பின்னிப் பிணைந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும், அப்பாம்புகளுக்குத் தெரியாமல் மஞ்சள்நிற துணியை எடுத்துப்போய் அவற்றின்மேல் போட்டுவிட்டு வந்தால் நாம் என்ன நினைத்தாலும் அது நிச்சயம் நடந்தே தீரும் என்றும், ஒருவேளை அப்படி போடப் போகும்போது அதன் பார்வையில் நாம் பட்டுவிட்டாலோ அதைத் தொந்தரவு செய்தாலோ வாழ்நாள் முழுக்க நம்மை துரத்தித் துரத்தி வந்து பழிவாங்கும் என்றும் சொல்வார்கள்.
கண்ணாறு தாண்டி ரங்கக் கவுண்டர் கொல்லி படிக்கட்டில், கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து மடித்துச் சுருட்டி கொடுவாளோடு சேர்த்து பிடித்துக்கொண்ட கவுண்டர்… குனிந்து இன்னொரு கையில் முருகனைத் தூக்கி தோள்மேல் உட்கார வைத்துக்கொண்டு இறங்கி, கழுத்துமூட்டு தண்ணீரில் நடந்து கால்வாயின் மறுகரைக்கு வந்தார்.
கன்னிமார் சுனை வழியாக ஈர டவுசரோடு சோமத்தைத் தோள்மேல் போட்டுக்கொண்டு அரசங்கல் மலைமேல் ஏற ஆரம்பித்தவர், சற்று தூரம் சென்றதும் வலதுபக்கத்தில் காட்டுமல்லிக்கொடி படர்ந்திருந்த பெரிய கள்ளி மரத்தருகில் இருந்த பாறைமேல் முருகனை உட்காரச் சொல்லிவிட்டு, சோமத்தையும் துண்டையும் அங்கேயே வைத்துவிட்டுப் போய் விறகு வெட்டத் தொடங்கினார்.
காரை, துரிஞ்சி, ஆவாரம், பூலா, சொத்துக்கிளா விறகாகப் பார்த்து வெட்டிக் கொண்டு நடுநடுவில் அவனைப் பார்த்துக்கொண்டிருந்த கவுண்டர், தட்டுப்பாறை பக்கத்திலிருந்த புதருக்குள் சூர வளச்சலில் கொம்புத்தேன் ஒன்று கட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு வந்து ஒவ்வொரு பாறையாக மெல்ல ஏற்றிக் கூட்டிப்போய், ”எய்யா முருகா… தோ பாரு சாமி பொதருவுள்ள, தேனு கூண்டு கட்டினுகீது… அதோ அங்க தெரிதா…? இதான் கொம்புத்தேனு’’ என்று கை நீட்டிக் காட்டினார்.
ஆச்சரியத்தோடு பார்த்த முருகன், ”ஏன்யா இந்த தேனு கூண்டு இம்மாஞ் சின்னதா கீது…? ஊர்ப்பாக்கத்து துலுக்கரு சுருகாடுகிட்ட புளியாமரம் நறயா கீதுல்ல… அதல ஒரு மரத்து மேல பெர்சா கீறத நானும் பெரியண்ணனும் பாத்தம்’’ என்று சொன்னான்.
கேட்டுவிட்டு சிரித்த கவுண்டர், ”அட மடயா, அது மலத்தேனு… அதான் அம்மாம் பெர்சா கீது. இது கொம்புத்தேனு… அதான் சின்னதா கீது’’ என்றார்.
”அப்ப நறயா தேனு கீதாய்யா…?’’ என்றான் முருகன்.
சத்தமாக சிரித்துவிட்டு, ”ஆமா’’ என தலையாட்டிய கவுண்டர், அங்கிருந்த கல் ஒன்றின் மேல் அவனைத் தூக்கி உட்கார வைத்து விரல் விட்டு எண்ணிக்காட்டி, ”மலத்தேனு… அடுக்குத்தேனு… கொம்புத்தேனுன்னு நறயா தேனு வக கீது. மலத்தேனு, மலயிலயும் பெரிய பெரிய மரத்தோட கெளயிலயும் ஒயரமான எடத்துங்கள்லயும் கட்டும். கொம்புத்தேனு, இதுமாரி சின்னச் சின்ன செடிங்களோட மரத்தோட கொம்புங்களாப் பாத்து கட்டும். அடுக்குத்தேனு, கல்லு சந்துங்குளுக்குள்ளயும் மர போரங்குளுக்குள்ளயும் ஒண்ணு பின்னால ஒண்ணா அடுக்கடுக்கா கட்டும். இதல ஆச்சிரியம் என்னனா… எல்லா தேனுமே சத்துங்க, பெரிய மருந்துங்க. நம்மூட்ல பொனக்கட்டயில சீசாவுள வூத்தி வச்சிகீறமே… அது மலத்தேனு. நானும் என் மச்சானும் மூணு மாசத்துக்கு முன்னால சட்டப்பாற சந்துல கீற பொடயிலருந்து அழிச்சாந்தது’’ என்றார்.
உடனே முருகன் ஆர்வமாகி, ”அப்ப இந்த தேனயும் நாம இப்ப அய்ச்சி குடிப்பமாய்யா…?’’ என்று கேட்டான்.
தேன் பக்கத்தில் போய் குனிந்து பார்த்த கவுண்டர், ”இந்த தேனு இப்பதான் கட்டிக்கீது. இன்னும் நாளானாதான் தேனு இருக்கும். அதில்லாம, அம்மாசிக்கி முன்னால வந்து அழ்ச்சாதான் தேனு நறயாருக்கும்… தேனீங்க குடிக்காம அப்டியே வச்சிருக்கும்’’ என்று சொல்லிவிட்டு அருகில் வந்தவர், ”இன்னொரு நாளு என்னிக்கினா வெறவு வெட்ட வரும்போது, அழிக்கலாம் செரியா…?’’ என்றார்.
”ம்… செரிய்யா’’ என்று வேகமாகத் தலையாட்டியவன், புதரில் இருந்த தேன் கூட்டையும் அதன்மேல் மொய்த்துக்கொண்டிருந்த சிறுசிறு தேனீக்களையும் பார்த்துவிட்டு எதையோ தனக்குள் யோசித்தவனாய் கேட்டான்.
”ஏன்யா, இம்மாம் தேனீங்க கீதே… தேனு அய்க்கும்போது நம்மள அது கடிக்காதாய்யா…?’’
மொத்த மலைக்கும் கேட்பதுபோல் சத்தமாகச் சிரித்த கவுண்டர், ”நீ இந்தக் கேள்விய கேப்பன்னு நெனச்சன்… அதேமரே கேட்ட’’ என்று சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவர், சற்று தள்ளி இரண்டாக வெடித்திருக்கும் பெரிய பாறையோரம் மஞ்சம்புல்லுக்கு நடுவிலிருந்த செடியில் போய் ஒரு கொத்து தழை உடைத்துவந்து முருகனிடம் காட்டி, ”எய்யா முருகா… எங்க, இந்த தயய பாத்து இது என்ன தயன்னு சொல்லு பாப்பம்?’’ என்று கேட்டார்.
கையில் வாங்கிப் பார்த்தவன், சட்டென தெரிந்து கொண்டவனாய் கவுண்டரை பார்த்து பல்லை காட்டி தலையாட்டி சிரித்துவிட்டு, ”இது கூட தெரியாதாய்யா எனுக்கு… கருப்பல’’ என்றான்.
முருகன் சொன்ன பதிலை கேட்டு கைகொட்டிச் சிரித்த கவுண்டர், ”நீ இதான் சொல்லுவன்னு எனுக்குத் தெரியும்’’ என்றுவிட்டு, ”செரி, இங்கயே ஒக்காந்துனிரு… தோ வந்துடறன்’’ என்று சொல்லிவிட்டு, தட்டுப்பாறை ஏறி இறங்கி மறுபக்க சூரப் புதருக்குள்ளிருந்த காட்டு கறிவேப்பிலை செடியிலிருந்து ஒரு கொத்து உடைத்து வந்து முருகனின் இன்னொரு கையில் தந்து கேட்டார்.
”இப்ப சொல்லு… அது கருப்பலன்னா, இதென்ன…?’’
இரண்டையும் மாறி மாறிப் பார்த்தவன், இரண்டின் இலைகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி இருப்பதைப் பார்த்துவிட்டு குழம்பிப் போனவனாய் கவுண்டரைப் பார்த்தான்.
‘ஹாஹா’ என சத்தமாகச் சிரித்த கவுண்டர், ”அட மடயா, தோ பாரு பீச கைல வச்சிகிறியே… இதான் கருப்பல. சோத்து கைல கீறது… ஞானாத் தய. பாக்க ரண்டும் ஒரேமாரி இருந்தாலும், வேற வேற…’’ என்று சொல்லிவிட்டு, அவன் கையிலிருந்த இரு கொத்திலுமிருந்து ஒரு ஒரு இலையைப் பறித்து அதை மடித்துக் கசக்கி, ”இப்ப மூந்துப் பாரு நல்லா… ரண்டுத்துக்கும் வித்தியாசம் தெரியும்’’ என்று தனித்தனியாகக் காட்டி புரியவைத்தார்.
வியப்பின் முகடுக்குப் போன முருகன், இரண்டு கையிலுமிருந்த தழைகளை மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான்.
முருகனையும் அவன் செய்கையையும் பார்த்துவிட்டு புன்னகைத்த கவுண்டர், ”கொஞ்ச நேரத்துக்கு முன்னால கேட்டியே என்னதது…? ஆங், தேனு அழிக்கும்போது தேனீங்க கடிக்காதான்னுதான கேட்ட…?’’ முருகன் கையிலிருந்த ஞானாக் கொத்தை வாங்கி அதன் இலைகளை உருவி பாறைமேல் கும்பளாகப் போட்டு, பக்கத்திலிருந்த சிறு கல்லையெடுத்து நசுக்கி பொடிப் பொடியாக்கி கையில் எடுத்துப் பூசிக்கொண்டு, ”தோ, இப்டி ஞானாத் தயய நசுக்கி ஒடம்புல பூசிக்கிட்டம்னா… தேனீ அந்த எடத்துல கடிக்கவே கடிக்காது’’ என்றார்.
கண்கள் அகல விரியப் பார்த்தான் முருகன்.
”இப்டி நம்மள சுத்தி கீற மரஞ்செடிங்க எல்லாமே நமுக்கு ஒதுவுது. ஆனா நாம அதுங்குளுக்கு ஒண்ணுமே பண்றதில்ல…’’ என்று சொல்லிவிட்டு, ”வா, எங்கூட’’ என்று கூட்டிக்கொண்டு அங்கிருந்து இறங்கி இன்னொரு பாறையில் ஏறி, அதற்கடுத்துள்ள பாறைக்குப் பக்கத்தில் சற்றுமுன் விறகு வெட்டிய இடத்துக்கு அழைத்து வந்தார்.
உருள் பாறையொன்றின் ஓரத்திலிருந்த புதருக்குள் வழிசெய்துகொண்டு போய் வெட்டிய காரை மரத்தின் அடிப்பகுதியைக் காட்டி, ”தோ பாரு, இங்கதான் அந்த அரி வெறவயும் வெட்டனன். ஆனா ஏன் எல்லாத்தயும் வெட்டன நான்… இந்த ஒரு வெறவ மட்டும் வெட்டாம வுட்டுகீறன் தெரிமா…?’’ என்று கேட்டார்.
விறகு வெட்டிய இடத்தில் விட்டிருந்த ஒற்றைக் கிளையையும் பக்கத்தில் வெட்டிப் போட்டிருந்த ஏழெட்டு விறகுகளையும் பார்த்துவிட்டு கவுண்டரின் முகத்தைப் பார்த்து, ”தெரில” என்று தனக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்லிக்கொண்டு தலையாட்டினான்.
மெல்ல முருகனின் முன்னாலிருந்த கல்லின் மேல் போய் உட்கார்ந்து, அவன் முகத்தை நேருக்குநேர் பார்த்து சொன்னார் கவுண்டர்.
”ஒரு மரத்தோட எல்லா கெளயயும் மொட்டயா வெட்டிட்டம்னா… சட்டுனு அது துளுத்து வராது. அதேமாரி செடிகொடிங்களோடத வெட்டி வுட்டாலும் வராது. சிலநேரம் துளுக்காம அப்டியே பட்டுப்போனாலும் போய்டும். அதான் ஒரு கெளய மட்டும் வுட்டுட்டு வெட்டிகீறன்.’’
கவுண்டர் சொன்னதைக் கேட்டதும் என்ன நினைத்தானோ முருகன், சட்டென எட்டி அவரை கட்டிக்கொண்டான்.
மகனின் அணைப்பில் மகிழ்ந்த கவுண்டர் அவனை மெதுவாக விலக்கிவிட்டு, ”ஏன்யா, சாமி… என்னாச்சி…?’’ என்று கேட்டார்.
கண்கலங்கி மெல்ல அழுதவன், ”இது தெரியாம நானும் ரவியும்… நம்மூட்டு பின்னாலருந்த வேப்ல செடிய முய்சா ஒடச்சிட்டம். அதுக்கப்றம் அது துளுத்தே வரலய்யா… காஞ்சிப்போயி செத்துப்போச்சி’’ என்று சொல்லிவிட்டு, திரும்பவும் அழ ஆரம்பித்துவிட்டான்.
ஏதேதோ சொல்லி அவனை சமாதானப்படுத்தியவர், ”வுடுய்யா சாமி… அன்னிக்கி தெரியாமதான அப்டி செஞ்சிட்ட… இனிமேலு தெரிஞ்சி அப்டி செய்யாத, செரியா…?’’என்று சொல்லிவிட்டு அவன் கண்களை துடைத்துவிட்டதும், ”செரிய்யா’’ என்று மெதுவாகத் தலையாட்டினான்.
மலை உச்சியிலிருந்த வெட்டு பொடையிலிருந்து ஏழெட்டு குரங்குகள் எதையோ பார்த்து பயந்துபோய் சத்தம் போட்டுக்கொண்டு வெளியில் வந்து, தம் பிள்ளைகளோடு வேகமாக ஏறி மேல் கல்லுக்குப் போய் பின்பக்கமாகத் தாவி இறங்கியோடின.
முருகனை அங்கிருந்து கூட்டிப்போய் தட்டுப்பாறை மேல் உட்கார வைத்துவிட்டுப் போன கவுண்டர், ஆங்காங்கே அரியரியாக வெட்டி வைத்திருந்த விறகுகளை அள்ளி வந்து ஓரிடத்தில் போட்டுவிட்டு, பக்கத்திலிருந்த பெரிய புதரில் போய் கட்டுக்கொடி எடுத்துவந்து கீழே போட்டு, அதன் மேல் ஒவ்வொரு விறகாக எடுத்துவைத்து நேர்த்தியாக அடுக்கி, இழுத்து இறுக்கி முடிச்சிட்டு சுமை கட்டினார்.
பாறைமேல் உட்கார்ந்திருந்த முருகன் சுமை கட்டிவிட்டு தன் தந்தை எழுந்ததைப் பார்த்துவிட்டு தானும் எழுந்து நின்று, ”ஐய்யாய்யா, எனுக்கு தண்ணி தாவமா கீதுய்யா’’ என்றான், தயக்கத்தோடு.
”இருய்யா வர்றன்’’ என்று சொல்லிவிட்டு போய் பாறைமேல் வைத்திருந்த சோமத்தை எடுத்து வெயிலில் காய்ந்திருந்த டவுசர் மேல் கட்டிக்கொண்டு வந்து, முருகனைக் கூட்டிப்போய் வடக்காலப் பக்க பள்ளப் பாறையின் நடுவில் இருந்த சிறு சுனையில் தண்ணீர் அள்ளி குடிப்பாட்டிவிட்டு, தானும் குடித்துவிட்டு மேலேறி வந்தார்.
சூரியன் நடுவானுக்கு வந்திருந்தது. அண்ணாந்து பார்த்த கவுண்டர், அங்கிருந்த வட்டப்பாறைமேல் ஏறி நின்றுகொண்டு சுற்றிலும் தெரிந்த மலைகளையும் ஊர்களையும் மரங்களையும் செடிகொடிகளையும் ஏரியையும் அசூர நீர்பாம்புபோல் வளைந்து வளைந்து வடக்கிலிருந்து தெற்கு நோக்கியோடும் கால்வாயையும் பார்த்துவிட்டு அத்தனை மகிழ்வாக அத்தனை நிறைவாக உணர்ந்தார்.
செத்தநேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு மெதுவாக இறங்கி விறகு சுமையிருக்கும் இடத்திற்கு வரும் வழியில் பாறைக்கு நடுவிலிருந்த சிறு வெடிப்பில் ஆழ்ந்த பசுமையுடன் உள்ளங்கவர் ஒளியுடன் தொடத்தூண்டும் மென்மையுடன் ஓரடி உயரமே வளர்ந்திருந்த சிறு கள்ளிச்செடியைப் பார்த்துவிட்டு, முருகனைக் கூப்பிட்டுக் காட்டி கீழே அதனருகே உட்கார்ந்து மெல்லத் தொட்டு வருடிப்பார்த்தார். சட்டென ஒருநொடி உயிரும் உயிரும் உரசிக்கொண்டதுபோல் இருந்தது கவுண்டருக்கு.
மனமின்றி எழுந்து தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து சிம்மாடு கொய்லி தலையில் வைத்துக்கொண்டு போய் விறகுச் சுமையைத் தூக்கி நேராக நிற்க வைத்து, குனிந்து நடு சுமையில் தலைவைத்து அடிப்பக்கம் பளுகொடுத்து தன்னிரு கைகளால் தூக்கிக்கொண்ட கவுண்டர், ”வா சாமி, போவலாம்’’ என முருகனைக் கூட்டிக்கொண்டு, கல்மேல் வைத்திருந்த கொடுவாளைக் கையில் பிடித்துக்கொண்டு மெல்ல பனை மர குட்டைக்கிணறு பக்கமாக இறங்கிக் கீழே வந்து பெங்களூரான் பாலம் வழியாக நடந்து கால்வாயின் மறுகரைக்கு வந்தார்.
சேவிக் கவுண்டரும் மாரி தாத்தாவும் தம் ஆடுகளை ஓட்டிக்கொண்டு கொட்டாக்காடு பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள்.
பொடியில் கிடுகிடுவென நடந்து முருகனுடன் பேசிக்கொண்டு கோனாமூட்டு தென்னந்தோப்பு வழியாக வீட்டுக்கு வந்த கவுண்டர், பக்கத்திலிருந்த துரிஞ்ச மரத்தடியில் தூக்கிவந்த விறகுக் கட்டை மெதுவாக கட்டுக்கொடி அறுந்துவிடாமல் இறக்கி வைத்துவிட்டு திரும்பி பின்னால் பார்த்தார்.
அங்கே பூவரச மரத்தடியில் போட்டிருந்த தென்னங்கீற்றில் உட்கார்ந்துகொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள் செல்வி.
[இன்னும்]
*