முரம்பு – 15

தோல் பிய்த்துக்கொண்டு வரும் அளவுக்கு வெயில் எரித்தது. மதியம் ஒரு மணி அஜ்ஜான் கூவும் வரைக்கும் கால்வாய் தோண்டிய முத்துசாமிக் கவுண்டரும் செவடனும், ”வூட்டுக்குப் போயி சாப்ட்டு… செத்த வெயில் தாந்ததும் வரலாம்’’ என மாரிமுத்துக் கவுண்டரை கூட்டிக்கொண்டு கடப்பாரை மண்வெட்டியை எடுத்து வந்து மேட்டுத் துண்டு மரிசிமீது குழந்தையை புதைத்த இடத்தருகில் இருந்த வேப்ப மரத்தடியில் வைத்துவிட்டு, சற்றுநேரம் நிழலில் நின்று பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.
கவுண்டரின் வீட்டெதிரில் இருந்த ஆச்சாரியின் கரம்பில் வரிசையாக அண்ணன் தம்பிகள் ஐந்து பேரும் ஊரிலிருக்கும் தம் வீடுகளைக் காலி செய்துகொண்டு வந்து கொல்லியிலேயே வீடு கட்டிக்கொண்டு குடியேற முடிவெடுத்து, கயிறுகட்டி இடத்தை அளந்து முளைக்குச்சி அடித்துக்கொண்டிருந்தார்கள்.
பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டு வீட்டின் பின்னாலிருந்த சாக்கடையில் போய் கை கால் முகம் கழுவிய கவுண்டரிடம், ”நீ நெனச்சமரே இந்த மொரம்பு மண்ணுல… கண்ணு முன்னாலயே ஊருவொண்ணு உருவாய்டிச்சில்ல…’’ என்றார் மாரிமுத்து கவுண்டர்.
தோள்மேல் போட்டிருந்த கட்டம்போட்ட துண்டை எடுத்து மெல்ல முகத்தைத் துடைத்துவிட்டு உதடுவிரிய சிரித்து, ‘ஆமாம்’ என மேலும் கீழும் தலையாட்டினார் கவுண்டர்.
பூவரச மரத்தடியில் பின்னிய இரட்டைத் தென்னங்கீற்று போட்டு உட்கார்ந்து முருகனுடன் விளையாடிக்கொண்டிருந்த பூரணியம்மா, எழுந்து வீட்டுக்குள் போய் மூவருக்கும் அடுக்குப்பானை மேல் வாழைநார் போட்டு கட்டி வைத்திருந்த தைத்த கல்யாணமுருங்கை இலைக் கட்டிலிருந்து மூன்று இலைகள் எடுத்து வைத்து, தண்ணீர் தெளித்து சோறுபோட்டு, பானையிலிருந்த கத்திரிக்கா குழம்பை சின்னக் கரண்டியால் மொண்டு ஊற்றினார்.
எதுவும் பேசாமல் வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்த செவடன், ”வூடு வரிக்கும் செத்த போயி எட்டிப் பாத்துனு வர்றன், கவுண்ர’’ என்று சொல்லிவிட்டு, வெளியில் வந்து கை கழுவிக்கொண்டு கட்டுத்தெரு பின்னாலிருந்த கொடிவழியில் வெயிலுக்குத் தோதாக தலைமேல் தன் துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு நடந்து போனான்.
மெல்ல பின்னாலேயே எழுந்து வந்து கை கழுவிவிட்டு, கட்டுத்தெருவில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் போய் ஆற அமர உட்கார்ந்து இருவரும் பேச ஆரம்பித்தார்கள்.
சட்டென பேச்சின் நடுவில், ”நீ என்ன சொன்னாலும் செரி… ஓட்டிப் பயிறு வச்சினிருந்த அம்மாம் பெரிய கொல்லிய போயி… ஊராருக்கு தூக்கித் தந்துட்டு வந்தத… இன்னுமும் என்னால ஜீர்ணிக்க முடில முத்துசாமி’’ என்றார் மாரிமுத்து கவுண்டர்.
ஒன்றும் சொல்லாமல் கட்டுத்தெருவின் மூலையில் கட்டியிருந்த கருப்பு மாட்டையும் அதன் பக்கத்தில் படுத்திருந்த செவுல் கன்னுக்குட்டியையும் நடுவில் போட்டிருந்த காய்ந்த மல்லாட்டக் கொடியையும் பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர்.
”வூட்ட மெரட்டி கேட்டன்னிக்கே அந்த துலுக்க நாய சட்டயப் புடிச்சி நாலு வுட்ருந்தனா… இம்மாம் நடந்திருக்குமா…? இந்த துலுக்கனுங்களே இப்டிதான்னு எம்மாவாட்டி ஒணுக்கு படிச்சிப் படிச்சி சொல்லிருப்பன், கேட்டியா…?’’
ஊர் தலைவர்தான் நடந்த அனைத்திற்கும் காரணம் என்பதை எப்படியோ தெரிந்துகொண்ட மாரிமுத்து கவுண்டர், வாயில் வந்ததெல்லாம் சொல்லி கோபம் கொப்பளிக்க அவனை வண்ட வண்டயாகத் திட்ட ஆரம்பித்தார்.
ஒருகட்டம் வரைக்கும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கவுண்டர் கடுகு வெடிப்பதுபோல் சட்டென்று கோபமாகி வெடித்து, ”ஏன்டா மாரிமுத்து, இப்டி சுதிமதி கெட்டவன் மாரி வாயில வந்ததலாம் பேசறவன்…? மொதல்ல துலுக்கன் பறையன் அம்ட்டன் குடியானவன்னு பிரிச்சிப் பேசறத நிப்பாட்டு. இங்கெல்லாரும் தாயா புள்ளயா… மாமன் மச்சானா… அண்ணன் தம்பியா… பேசிப் பழகினு கீறம். எவனோ ஒருத்தன் என்னிக்கோ புத்திகெட்டுப் போயி பண்ண தப்புக்கு… எல்லாரயும் குத்தஞ் சொல்லி ஓத்தாமுட்டு வுட்றது சரில்ல, பாத்துக்க’’ என்று சொல்லிவிட்டு எழுந்தவர், கட்டுத்தெருவின் வடக்கால மூலையிலிருந்த எட்டிமர தீட்டுக் கட்டையைத் தூக்கி வந்து கட்டிலருகில் நெடுங்காலொட்டி போட்டுவிட்டு, எறவானத்தில் செருகியிருந்த தன் பெரிய கொடுவாளை எடுத்துவந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து ரவ மண்ணள்ளிப் போட்டு, ‘சரக் சரக்’கென தீட்ட ஆரம்பித்தார்.
கவுண்டர் கோபங்கொண்டு பேசியதைக் கேட்ட மாரிமுத்து கவுண்டருக்கு ஒருமாதிரி சங்கடமாகப் போய்விட்டது. என்ன சொல்வதெனத் தெரியாமல் கட்டிலில் அமர்ந்திருந்தவர் மெதுவாக எழுந்து, கட்டியிருந்த சோமத்தை அவிழ்த்து இறுகக் கட்டிக்கொண்டு சற்றுதள்ளி விறகோரமாக இருந்த சிறு வேப்பங் கட்டையை எடுத்து வந்து கவுண்டரின் பக்கத்தில் போட்டு அதில் உட்கார்ந்தார்.
ஊரிலிருந்து புல்லாங்குழல் ஊதிக்கொண்டு கிடுகிடுவென நடந்து முரம்பு மேடேறி வந்துகொண்டிருந்த சோலைக்கண்ணன், என்ன நினைத்தானோ தெரியவில்லை. சட்டென்று கட்டுத்தெரு முன்னால் வந்து நின்று தான் பாட்டுக்கு தெற்கே திரும்பி எதையோ பார்த்து, ”எவன் வூட்டு கொல்லில வந்து எவன்டா மாடு மேக்கர்த்து… எவன்டா வூடு கட்டர்த்து…? வாயில்லா பூச்சியா போனதாலதான ஏமாத்தி வெண்டுல ஏறி மெதிச்சி, வக்கனயா சூத்தடிச்சிட்டு… ஏம்மூட்டு பீ மூத்தரத்த தின்றீங்க. என்னிக்கில்ல என்னிக்காது… ஓம்மூட்டு பொட்டச்சிங்கள இஸ்துப் போட்டு தெருல ஓக்காம வுடமாட்டன் பாத்துக்க. அன்னிக்கிதான் சோலக்கண்ணன் யாரு… அவனப் பெத்த அம்மாயி யாருன்னு இந்த ஊருக்கே தெரியபோது பாரு. வாயில்லாதவன் வூட்டுக்கு ஊரான் ராஜாவாம்… வக்கில்லாவன் காட்டுக்கு பூரான் ராஜாவாம்…’’ என்று சொல்லிவிட்டு, ”வாயில்லாதவன் வூட்டுக்கு ஊரான் ராஜாவாம்… வக்கில்லாவன் காட்டுக்கு பூரான் ராஜாவாம்…’’ என்று இரண்டு தடவை குரலைத் தாழ்த்தி தனக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் சொல்லிவிட்டு, மறுபடியும் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த புல்லாங்குழலை எடுத்து வாயில் வைத்து ஊதிக்கொண்டு மேற்கே திரும்பி, நடப்பதுபோல் வேகமாக ஓடிப்போனான்.
கட்டுத்தெருவுக்குள் உட்கார்ந்து அவன் சொல்லிவிட்டுப் போனதைக் கேட்டு தனக்குள் எதையோ நினைத்து லேசாகத் தலையாட்டிவிட்டு, தீட்டிய கொடுவாளின் இருபக்கமும் விரலால் தொட்டுப் பார்த்து கூர்மையைச் சோதித்துவிட்டு, எழுந்துபோய் எறவானத்தில் எடுத்த இடத்திலேயே செருகிவிட்டு பக்கத்திலிருந்த பெரிய ஆக்கருவாளையும் சின்னக் கொடுவாளையும் எடுத்து வந்து உட்கார்ந்த கவுண்டர், மண்ணள்ளிப் போட்டு ஒவ்வொன்றாகத் தீட்ட ஆரம்பித்தார்.
சோலைக்கண்ணனின் பேச்சைக் கேட்ட மாரிமுத்து கவுண்டருக்குதான் ஒன்றும் புரியவில்லை. அதுவும் பேச்சில் ஒலித்த ஆபாச வார்த்தைகளைக் கேட்டதும் அதிர்ந்துபோனார். இருந்தாலும் கவுண்டர் அதை பெரிதாகப் பொருட்படுத்தாமல் தன் பாட்டுக்கு எழுந்துபோய் ஆக்கருவாளையும் கொடுவாளையும் எடுத்துக்கொண்டு வந்து தீட்ட உட்கார்ந்ததைப் பார்த்துவிட்டு ‘செரி, பின்நேரத்துல எப்பயாது இதப்பத்தி கேப்பம்’ என நினைத்து விட்டுவிட்டார்.
சோலைக்கண்ணன் அளவுக்கு திறமைசாலி யாரும் இல்லை என்பார்கள் ஊரில். கப்பை பம்பரம் கோலி ஓரி குரங்காட்டம் கோட்டிப்புல் குச்சியாட்டம் கபடி பேய்பந்து லக்கோரி என எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, உடன் விளையாடுவோரை தோற்கடிப்பதில் படுகெட்டிக்காரன். அதுமட்டுமல்ல… அண்டை வெட்டுவது, சேடை ஓட்டுவது, ஈசல் பிடிப்பது, காட்டுவள்ளிக்கிழங்கு தோண்டுவது, எலி குத்துவது, தேனழிப்பது என எல்லா வேலையும் அவனுக்கு அத்துபடி. தாயின் வயிற்றில் இருக்கும்போதே தந்தையை இழந்தவன். ‘ஊராயி’ பட்டத்தோடு வெளியில் தலை காட்டமுடியாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்த அம்மாவின் அரவணைப்பில் வளர்ந்தவன். பாவாடை கவுண்டர் பனைமரத்தில் பருவாரத்தோடு கூடிக்கொண்டு போய் மட்டமத்தியானத்தில் நுங்கு வெட்ட ஏறிக் கீழே விழுந்து, பின்மண்டையில் அடிபட்டு புத்திசுவாதினம் இல்லாமல் ஆகிவிட்டான். அதுமுதல் தன் தாயோடு வீட்டுக்குள்ளேயே கிடந்தவன், தாயின் திடீர் சாவுக்குப் பின் அவர் தனக்காக ரயிண்டாபுரம் ஆற்றுத் திருவிழாவில் ஆசை ஆசையாக வாங்கிவந்து தந்த புல்லாங்குழலை துணிக் கயிற்றில் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு காடுமேடு எங்கும் ஊதிக்கொண்டு திரியத் தொடங்கினான். யாராவது விறகு வெட்டிவரச் சொன்னால் போய் வெட்டிவந்து தந்து, அவர்கள் தரும் அரிசிப்பருப்பை வாங்கிக்கொண்டு போய் பாழடைந்த தன் கூரை வீட்டுத் திண்ணையில் அடுப்புமூட்டி பொங்கித் தின்று உறங்குவான். புல்லாங்குழல் வழியாகத் தன் அம்மாவோடு பேசுவதாக நினைத்து, நாளின் பேர்பாதியை ஊதிக் கழிப்பவன். அடிக்கடி இதுபோல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு எங்காவது போய் நின்று வாய்க்கு வந்தபடி தெற்கே திரும்பி நின்று பேசிவிட்டு, திரும்பவும் ஊதியபடி அவன் பாட்டுக்கு போய்விடுவான். அப்படித்தான் இன்று கவுண்டரின் கட்டுத்தெரு முன்னால் வந்து நின்று பேசிவிட்டு போய்க்கொண்டிருக்கிறான்.
”நாலு புள்ளிக்கி தவுப்பனா இருந்துகினு… அவுங்கள பத்தி மருந்துக்கும் ஓசன பண்ணாம… கொல்லிய தூக்கித் தந்துட்டு வந்தியே… அந்த மக்கிங்குளுக்கு கொஞ்சமாது ஒன்மேல நன்றி கீதான்னு பாத்தியா…?’’
சற்றுநேரம் அமைதியாக இருந்த மாரிமுத்து கவுண்டர், மறுபடியும் பேச ஆரம்பித்து சொன்னதைக் கேட்டு தீட்டுவதை நிறுத்திவிட்டு, ‘என்ன?’ என்பதுபோல் தலையை நிமிர்த்திப் பார்த்தார் கவுண்டர்.
”முந்தாநேத்து சாங்கியாலம்… எங்கூரு பொன்னாத்தா வூட்ல போயி சாராயம் குடிச்சிட்டு… என் கொல்லி வழியா வந்தவுனுங்கள மடக்கி… ‘என்னப்பா ஒங்குளுக்குலாம் கவுண்டன் அவுரோட கொல்லிய வூடு கட்டிக்கத் தந்துட்டாரு போல?’ன்னு கேட்டன். ஒருத்தன மாத்தி ஒருத்தன் பாத்தவுனுங்க, ஈன்னு பல்லக்காட்டினு… ‘எந்த கவுண்டனும் தரல கிவுண்டனும் தரல… கவுருமண்ட்டு எடத்த வாங்கி ஊருதலிவன்தான் எங்குளுக்கு தந்தான்… கவுண்ராது மண்ணாது போயா’ன்னு மட்டுமதேரி இல்லாம பேசிட்டு, அவனுங்க பாட்டுனு போறானுவ.’’
படுத்திருந்த கருப்பு மாடு எழுந்து நின்று இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, சுவரோரமாக ஒதுங்கி நின்று சிறுநீர் கழித்துவிட்டு அங்கேயே சாணி போட்டது.
கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் கீழே குனிந்து தனக்குள் சிரித்துக்கொண்ட கவுண்டர், ஆக்கருவாளின் மறுபக்கம் திருப்பி மண்ணள்ளிப் போட்டு தீட்ட ஆரம்பித்தார்.
ராமு கவுண்டரின் சின்ன மகன் ரவியுடன் அவர் வீட்டின் பின்னாலிருந்த துரிஞ்ச மரத்தடியில் உட்கார்ந்து மணைக்கட்டையும் ஊதாங்கோலும் வைத்து விளையாடிக்கொண்டிருந்த முருகன், பக்கத்திலிருந்த திருநீறு பத்திரிகை செடியிலிருந்து நான்கைந்து இலைகளைப் பறித்து இரண்டாகப் பிய்த்து முகர்ந்து பார்த்துவிட்டு, அதன் மணம் பிடித்துப்போனதால் எடுத்துக்கொண்டு அங்கிருந்து வேகமாக ஓடி கட்டுத்தெருவுக்கு வந்தான்.
”ஐய்யாய்யா… இது என்னா தயய்யா…?’’ என கேட்டுக்கொண்டே வந்து கவுண்டரின் பக்கத்தில் நின்றான்.
ஆக்கருவாளைக் கீழே வைத்துவிட்டு கையில் வாங்கி முகர்ந்து பார்த்தவர், ”இதுவா… திர்நூறு பத்திரிக்க’’ என்றார்.
உடனே அவன், ”மாமா வூட்டு பின்னால இருந்துச்சி… எதுக்குய்யா இந்த தய…?’’ என்று கேட்டான்.
பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவன் கேட்டதைப் பார்த்து சத்தமாகச் சிரித்த மாரிமுத்து கவுண்டர், ”இங்க வாடா… நானு சொல்றன்’’ என்று முருகனைக் கை காட்டி கூப்பிட்டார்.
‘போலாமா வேணாமா?’ எனும் தயக்கத்தோடு பக்கத்தில் போனான்.
”தொளசி கீதுல்ல தொளசி… அதோட வகயில ஒண்ணுதான், இந்த திர்நூறு பத்திரிக்க.’’
சொல்லிவிட்டு முருகனின் கையிலிருந்த தழையை வாங்கி, கையை நீட்டச் சொல்லி தன் இடது உள்ளங்கையில் வைத்து வலது கையால் அழுந்தக் கசக்கி சாறாக்கி, அவன் கையில் விட்டார்.
”இந்த சாறு கீதுல்ல சாறு… இத காதுவுள்ள கட்டி, புண்ணுனு எது இருந்தாலும் வுட்டம்னா போரும்… சட்டுனு சரியாக்கிடும்.’’
மாரிமுத்து கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு, ”அப்பறம்…?’’ என்றான் முருகன்.
அதைக் கேட்டு சிரித்தவர், ”அப்றென்ன அப்றம்… அம்மாந்தான் போடா’’ என்றார்.
முகத்தை சட்டென்று ஒருமாதிரி கோணலாகச் சுருக்கி பைசி காட்டிவிட்டு திரும்பி கவுண்டரிடம் வந்து கேட்டான். ”ஐய்யாய்யா, நீ சொல்லுய்யா… அப்பறம் எதுக்கிந்த தய…?’’
தீட்டிய ஆக்கருவாளை பக்கத்தில் வைத்துவிட்டு சின்னக் கொடுவாளை தீட்ட எடுத்தவர், முருகனின் முகத்தைப் பார்த்து, ”காதுவுள்ள எறும்புகிறும்பு எது பூந்துச்சினாலும் இதக் கசக்கி வுட்டம்னா போரும்… அத சாவடிச்சி எதுவும் பண்ணாம வெளிய கொண்டாந்துடும்’’ என்றவர், குனிந்து கீழே சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, சற்று தள்ளி கட்டில் கீழே கிடந்த சிறு காய்ந்த சீந்தல் கொடியைக் கையில் எடுத்தார்.
பக்கத்தில் இருந்த மாரிமுத்து கவுண்டரைப் பார்த்து கண்ணடித்து முறுவலித்தவர், ”தோ பாரு… இம்மாம் பெர்சுதான் இருக்கும் சொய்யாம்பாம்பு. நாக்குப்பூச்சி மாரி வழவழன்னு கருப்பாருக்கும். அது நம்ம காதுள்ளார நோஞ்சிகிச்சினா… உண்டில்லன்னு ஆக்கி ஆளயே கொன்னாலும் கொன்னுடும். அப்பந்த தயய பறிச்சாந்து கசக்கி வுட்டம்னா போரும்… வுள்ளயே அத சாவடிச்சி, கொஞ்ச கொஞ்சமா வெளிய கொண்டாந்துரும். நம்முளுக்கு மட்டுல்ல… ஆடு மாடு காதுள்ளார போனாலும் இதான் மருந்து. காது வலிக்கும் இத நாம கசக்கி வுடலாம்’’ என்றார்.
கேட்டுவிட்டு திரும்பி மாரிமுத்து கவுண்டரைப் பார்த்த முருகன், ”அப்பறன்னு கேட்டுதுக்கு அம்மாந்தான்னு சொன்னீங்கள்ள… இப்ப பாத்தீங்களா எங்கய்யா எம்மாத்தறம் சொன்னாருனு…’’ என்று சொல்லிவிட்டு, ஈரு தெரிய பல்லைக் காட்டி சிரித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கேட்டான்.
”அப்ப நம்மூட்லயும் இத நடலாமாய்யா…?’’
சட்டென ‘ம்’ என தலையாட்டி சிரித்து கவுண்டர் சொன்னதும், ”ஏ… எங்கூட்ல திர்நூறு பத்திக்க நடப்போறன்… ஐ, ஜாலி ஜாலி…’’ என கத்திக்கொண்டு ஓடி, ராமு கவுண்டரின் வீட்டுத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து முறத்தில் கம்பு நேம்பிக்கொண்டிருந்த தன் அத்தை இசைவள்ளியின் கைபிடித்து கூட்டிக்கொண்டு போய், பின்னாலிருந்த திருநீறு பத்திரிகை செடிகளில் ஒன்றை வேரோடு பிடுங்கித் தரச் சொல்லி எடுத்துவந்து, தம் வீட்டின் பின்னால் சாக்கடையருகில் இருந்த காலி இடத்தில் சின்ன பாறக்குச்சி கொண்டு சிறுபள்ளம் தோண்டி அதில் நட்டுவைத்த முருகன், பெரிய பானையிலிருந்து கொட்டாங்குச்சியில் தண்ணீர் மொண்டுபோய் அதற்கு ஊற்றினான்.
துரிஞ்ச மரக்கிளையில் ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டிருந்த இரு அணில்கள், கீழே இறங்கி வந்து கட்டுத்தெருவின் பின்பக்க சுவர் சந்துவழியாக ஏறி உள்ளே சென்று கட்டிலுக்கடியில் கவிழ்த்துப் போட்டிருந்த தட்டுக்கூடையில் ஏறியிறங்கி வாசல்படி வழியாக மறுபக்கம் ஓடி சுற்றிக்கொண்டு திரும்பவும் துரிஞ்ச மரத்தில் போய் ஏறிக்கொண்டது.
வெயில் சற்று தாழ்ந்ததும் மாரிமுத்து கவுண்டர் எழுந்து, ”செரி முத்துசாமி… நானு அப்டியே கெளம்பறன். கொல்லில சாரதாவும் பொண்ணும் இன்னும் காணான்னு பாத்துனுருப்பாங்க. போயி மாட்டப் புடிச்சிக் கட்டி பால் கறந்து தந்தனுப்பணும்’’ என்றுவிட்டு வெளியில் போக வாசல்படிக்கு போனவர் நின்று திரும்பி, ”நாளபின்ன எப்பியாது வரமுடிஞ்சாக்கா வா… செம்மடன் கொட்டாயிக்கா போயி ஓரெட்டு கணி கேட்டுனு வருவம்’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார்.
தீட்டிய ஆக்கருவாளையும் கொடுவாளையும் எடுத்துப்போய் எறவானத்தில் செருகிவிட்டு, தீட்டுக்கட்டையை ஓரமாகத் தூக்கி வைத்துவிட்டு, மாட்டை வெளியில் பிடித்துவந்து துரிஞ்சமரத்தடி வேரில் கட்டிவிட்டு, கட்டுத்தெரு பின்னாலிருந்த கொடி போரில் போய் செத்த மல்லாக்கொடி இழுத்து அள்ளிவந்து போட்டுவிட்டு மெல்ல நடந்து முரம்புக் கொல்லிக்கு வந்த கவுண்டர், செவடன் வரும் வரைக்கும் நின்று ஏர் ஓட்டிய நிலத்தையும் குழந்தையைப் புதைத்த இடத்தையும் அங்கே நட்டுவைத்த வேப்பங்கன்றையும் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வந்ததும் கூட்டிக்கொண்டு போய் கால்வாய் தோண்ட ஆரம்பித்தார்.
மேலே பொடிமண்ணாகவும் செம்மண்ணாகவும் நடுநடுவில் சின்னச் சின்ன கோலமாவு கற்களுமாக இருந்த மண் வாட்டம், முட்டிமூட்டு ஆழம் தோண்டியதும் முழுக்க முழுக்க செட்டு மண்ணாக இருந்து தோண்ட வெகு சிரமமாக இருந்தது. வலுகொண்டு கடப்பாரையால் ஓங்கி ஓங்கிக் குத்தி செட்டு மண்ணை செவடன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேர்க்க, பின்னாலேயே அதை வாரிக் கொட்டிக்கொண்டு வந்தார் கவுண்டர்.
”இன்னா கவுண்ர… கொல்லிக்கி காவா தண்ணி பாச்ச வேலலாம் பலமா நடக்குது போல…?’’
பின்னால் வந்து நின்று யாரோ கேட்டதைக் கேட்ட கவுண்டர், அள்ளிய செட்டு மண்ணை மேலே கொட்டிவிட்டு திரும்பிப் பார்த்தார். தவுலத்கான் சாயுபு கையில் மஞ்சள் பையில் ஏதோ வைத்துக்கொண்டு தோண்டிய கால்வாய் மேட்டில் நின்றிருந்தார்.
மெல்ல புன்னகைத்த கவுண்டர், ”ஆமா சாயிபு… நாளிக்கி காவால தண்ணி வுட்றானாமே, அதான்…’’ என்றார்.
”நாளபின்ன நானே வந்து… ஏன் இன்னும் ஒரு காவா நோண்டாம கீறீங்கன்னு கேட்டு, நோண்ட சொல்லான்னு இருந்தன். அதுக்குள்ள நீங்கிளே வந்து நோண்றீங்க, நல்லது நல்லது…’’ என்ற சாயுபு, மேலே நின்றுகொண்டு வேலையே கண்ணாக கடப்பாரையில் ஓங்கிக் குத்தி செட்டு மண்ணை பேர்த்துத் தள்ளிக்கொண்டிருந்த செவடனைக் காட்டி கவுண்டரிடம் கேட்டார்.
”யாரு ஆளு… எங்கயோ பாத்தமரே கீதே…?’’
”காலரால செத்துப் போனான்ல பள்ளத்துதெருவு மண்டு… அவன் மவன். சின்னப் புள்ளிலருந்து கூடதான் கீறான். சூதுவாது தெரியாதவன்… அது இதுன்னு எதயும் வுட்டுவக்க மாட்டான். எல்லாத்தயும் ஈத்துபோட்டு செய்வான்… நல்ல பையன். எனுக்கு பூர்ணி வவுத்துல பொறக்காத மவன்.’’
கவுண்டர் சொன்னதைக் கேட்டுவிட்டு கண்கலங்கிய செவடனைப் பார்த்து சாயுபு புன்னகைத்துவிட்டு, ”இந்தக் காலத்துல யாரு கவுண்ர, இப்டிலாம் பாடிபரதேசிங்க கீறாங்க…? எப்ப என்ன கெடக்கும்… எத லவட்டினு போலான்னுதான் எல்லாரும் பாக்கறாங்க’’ என்றவர் எதையோ நினைத்தவராய், ”செரி, கவுண்ர… ஊரப்பாக்கம் வரிக்கும் போவணும்… நானு வர்றன்’’ என்று சொல்லிவிட்டு தெற்காலப் பக்கம் போகும் கொடிவழியில் இறங்கி நடந்து, முடியனூரான் கொல்லி மொடக்கு திரும்பி தன் கொட்டாவுக்குப் போனார்.
மேற்கே அரசங்கல்லுக்குப் பின்னால் இறங்கிய சூரியன், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருள ஆரம்பித்தது. செவடனிடம், ”போதும் செவடா… வுட்ட்டு ஏந்திரி போவலாம்’’ என்ற கவுண்டர், குத்திப் பேர்த்த வரைக்கும் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, கிளம்பி வீட்டுக்கு வந்து கடப்பாரை மண்வெட்டியை கட்டுத்தெருவோரம் வைத்துவிட்டு, நேராக தன் மச்சான் வீட்டுக்குப் போய் அவரையும் அவரது மனைவியையும் மறுநாள் காலையில் மல்லாட்டை போட வரச்சொல்லிவிட்டு வந்து, கை கால் முகம் கழுவிக்கொண்டு நடுவீட்டுக்குள் கதவுக்குப் பின்னால் சின்ன சாக்குப்பையில் காசிரிக்கா நார் போட்டு கட்டிவைத்திருந்த விதைப் பயிரை எடுத்து தாழ்வாரத் திண்ணைமேல் காலையில் எடுத்துப் போக தோதாக வைத்துவிட்டு, பூரணியம்மா கிண்ணியில் போட்டுவைத்த களியைத் தின்றுவிட்டு அதிலேயே கை கழுவிவிட்டு வெளியில்வந்து, சுவரோரம் சாய்த்துப் போட்டிருந்த கட்டிலை எடுத்துப்போய் வாசலில் நிமிர்த்திப் போட்டு படுத்துக்கொண்டார்.
அடுப்பங்கரையில் எல்லாம் ஏறக்கட்டி வைத்துவிட்டு கவுண்டரிடம் எதையோ சொல்ல நினைத்து வந்த பூரணியம்மா, அசதியில் அவர் படுத்ததும் தூங்கிவிட்டதைப் பார்த்துவிட்டு தொந்தரவு செய்யாமல் போய் பிள்ளைகளோடு தானும் நடுவீட்டுக்குள் படுத்துக்கொண்டார்.
விடிகாலை அஜ்ஜான் கூவுவதற்கு முன்னமே எழுந்த கவுண்டர், பக்கத்தில் சற்று தள்ளி கட்டிலில் படுத்திருந்த மாணிக்கத்தை எழுப்பி கூட்டிக்கொண்டு போய் தன் மச்சானின் மாட்டுப்பட்டியில் கட்டியிருந்த நான்கு ஏர் மாடுகளை அவிழ்த்து ஆளுக்கு இரண்டாகப் பிடித்துக்கொண்டு இருள்வெளிச்சத்தில் நடந்து கொல்லிக்கு வந்தார்.
அடுத்த செத்த நேரத்தில் ராமு கவுண்டர் தன் சாட்டிக்கோலை எடுத்துக்கொண்டு வந்துசேர, அவர் பின்னாலேயே பயிர்போட இரண்டு காலி புட்டியை எடுத்துக்கொண்டு அவர் மனைவி இசைவள்ளியும், விதைப்பயிர் வைத்திருந்த சாக்குப்பையை தூக்கிக்கொண்டு பூரணியம்மாவும், குடிக்க பித்தளைத் தவலையில் தண்ணீரும் ரோட்டா சொம்பும் எடுத்துக்கொண்டு செல்வியும், சின்ன மரக்காலில் பச்சப் பயிரும், பெரிபடியில் பைத்தம் பயிரும் எடுத்துக்கொண்டு ஏழுமலையும் துரிஞ்சி மர வழியாக வந்தார்கள்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் ஆளுக்கொரு மண்வெட்டியைத் தோள்மேல் மாட்டிக்கொண்டு ஊரிலிருந்து அம்மாசிப் பாட்டியின் மகன் பெரியசாமியும், சந்தா பாய் மகன் சலீமும் பட்ட கட்டி கால்வாய் கட்டுவதற்காக வந்தார்கள்.
பொழுது பல்லென விடிய ஆரம்பித்தது. இரண்டு ஏர் பூட்டி, ஒன்றை கவுண்டரும் இன்னொன்றை அவரது மச்சானும் ஓட்ட… கவுண்டருக்குப் பின்னால் பூரணியம்மாவும் ராமு கவுண்டருக்குப் பின்னால் அவர் மனைவியும் வேகவேகமாக பயிர் போட்டுக்கொண்டு வந்தார்கள்.
முதலில் தெற்கால காட்டுவா மரத் துண்டில் போட்டவர்கள், வெயில் ஏறுவதற்குள் அடுத்த இரண்டு துண்டில் போட்டுவிட்டு… மீதமுள்ள மூன்று துண்டிலும் வெயில் தாழ்ந்ததும் வந்து போட ஏதுவாக வேப்பமரத்தடியில் ஏர் கலப்பையை அவிழ்த்துப் போட்டுவிட்டு, வீட்டுக்குப் போய் சாப்பிட்டு செத்தநேரம் கட்டிலில் படுத்திருந்துவிட்டு வந்து ஏர்பூட்டி மற்ற மூன்று துண்டுகளிலும் பயிர் போட்டார்கள்.
ஒவ்வொரு துண்டாக ஓட்டிப் பயிர்போட்டு முடித்ததும், அடுத்த துண்டு ஓட்டுவதற்குள் பட்ட கட்ட ஓட்டி அதில் பச்சப்பயிரும் பைத்தம்பயிரும் போட்டிருந்த இடத்தில் பட்ட கட்டிவிட்டு, மரிசியோரம் தண்ணீர் பாய்ச்ச ஏதுவாக கால்வாயும் கட்டிக்கொண்டு வந்தார்கள்.
கிழக்கே முடியனூரான் கொல்லி மொடக்கில் செவடன் தனியாக மதிய வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏழுமலை கொண்டுபோய் தந்த சோற்றையும் கூழையும் காலையிலும் மதியமும் வைத்திருந்து உண்டுவிட்டு, பக்கத்திலிருந்த வேப்பமரத்தடி நிழலில் நடுநடுவில் செத்தநேரம் போய் உட்கார்ந்து ஓய்வெடுத்துவிட்டு வந்து கால்வாய் தோண்டிக்கொண்டிருந்தான்.
மாட்டை அவிழ்த்து மாணிக்கத்திடமும் ஏழுமலையிடமும் தந்து பிடித்துக்கொண்டு போகச்சொன்ன கவுண்டர், எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு கடைசியாக மரக்கிளையில் மடித்து வைத்திருந்த தன் சோமத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு செவடன் கால்வாய் தோண்டும் இடத்துக்கு வந்தார்.
கிளைக் கால்வாய்க்கும் முரம்புக் கொல்லி சனிமூலை காணி கல்லுக்கும் நடுவரை, கிட்டத்தட்ட பாதிதூரம் தாண்டி கால்வாய் தோண்டியிருந்தான் செவடன்.
”இன்னும் பாதிதான் கவுண்ர… நாளான்னிக்கி சாங்கியாலத்துக்குள்ளார நோண்டிறலாம்.’’
கவுண்டர் வந்ததும் முகம் மலர அவரைப் பார்த்து உதடு விரித்து பல்தெரிய சிரித்து சொல்லிவிட்டு, மண்வெட்டியை மேலே வைத்துவிட்டு வேகமாக ஏறினான் செவடன்.
”ஒருவழியா ஏருவோட்டி பயிரு போட்டுட்டம்டா செவடா… நாளிக்கி நானும் வர்றன், சேந்து நோண்டலாம்’’ என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் போன கவுண்டர், மண்ணில் குத்தியிருந்த கடப்பாரையை ஆட்டிப் பிடுங்கினார்.
மெல்ல இருளாள் வைத்த ஒளிப்பொட்டு போல கிழக்கு வானில் துளிர்நிலா இருள இருள ஒளிர ஆரம்பித்தது.
தோண்டிய கால்வாய் மேட்டில் நின்று சுற்றிலும் ஒருதடவை நோக்கிவிட்டு, ”செரி, பொய்து போச்சு பாரு… வா வூட்டுக்கு போவலாம்’’ என்று செவடனைக் கூட்டிக்கொண்டு இரைதேடி காலையில் போயிருந்த பறவைக்கூட்டம் தன் கூட்டுக்குத் திரும்பிப் போவதை அண்ணாந்து மேலே பார்த்துவிட்டு நடந்தார் கவுண்டர்.
[இன்னும்]
*