முரம்பு – 14

தன் கப்பை காலை வைத்துக்கொண்டு மூச்சு வாங்க மாணிக்கத்துடன் முடியனூரான் கொல்லி மொடக்கில் கால்வாய் தோண்டும் இடத்துக்கு ஓடிவந்த குப்புசாமி, ”மாமா மாமா… எங்க வூட்டுள்ள பாம்பு வந்துகீது… நல்லப்பாம்பு… ஒரக்கிமேல படுத்துகினு போவமாட்டுகிது. எங்கய்யா அன்னிக்கூடில தட்டி கூசப் போட்டாரு… கல்லுகூட எடுத்து அடிச்சிப்பாத்தாரு… கொஞ்சங்கூட அசயல, தெமோன்னு கீது… அதான் ஐய்யா, என்ன ஓடிப்போயி மாமாவ கையோட கூட்டுனு வான்னாரு… சட்டுனு வா மாமா’’ ஒரே மூச்சில் சொல்ல நினைத்ததைச் சொன்னான்.

கேட்ட கவுண்டர், தன் கையில் ஓட்டியிருந்த பொடி மண்ணைத் தட்டிவிட்டு பக்கத்தில் உண்ணிமில் புதர் மேல் வைத்திருந்த சோமத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு, ”நீ இங்கயே இருடா செவடா… நானு போயி என்னானு பாத்துனு வர்றன்’’ என்று சொல்லிவிட்டு கிடுகிடுவென அங்கிருந்து நடந்து வந்தார்.

வேகமாக வீட்டுக்குள் வந்தவர், அட்டண மேல் வைத்திருந்த சில்லாக்கோலை எடுத்துக்கொண்டு மேற்கே சற்று தள்ளி காட்டுவா மரத்தருகில் இருந்த தன் மச்சான் வீட்டுக்குப் போனார்.

ராமு கவுண்டரும் அவர் மனைவி இசைவள்ளியும் வெளியிலிருந்த மரத்தடியில் நின்றுகொண்டு, ‘கவுண்டர் வருகிறாரா இல்லையா’ என கிழக்குப் பக்கம் பார்த்துக்கொண்டு, நடுநடுவில் குனிந்து வீட்டுக்குள் உரை மேல் படுத்திருந்த பாம்பை உயிர் நடுங்க கவனித்துக்கொண்டிருக்க, இருவருக்கும் நடுவில் அம்மணக்கட்டையாக நின்றுகொண்டு ரவி வீட்டுக்குள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தான். 

பக்கத்தில் வந்த கவுண்டர், ”எங்கடா கீது…?’’ என தன் மச்சானிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, மெல்ல காலடி சத்தம் கேட்காதவாறு நடந்துபோய் தாழ்வாரத்தில் நின்று குனிந்து பார்த்தார். உள்ளே நடுவீட்டு மூலையில் நெல் ஒரைமேல் படுத்துக்கொண்டு தலையைக் கீழே தொங்கப்போட்டு வாசல்படியைப் பார்த்துக்கொண்டிருந்தது.

கண்டதும் நல்லபாம்பென கண்டுகொண்டார். அதோடு, அப்பாம்பு எதையோ விழுங்கியிருப்பதையும், அதனால்தான் அது அசையாமல் அங்கேயே படுத்திருப்பதையும் புரிந்துகொண்டார்.

இரண்டு மூன்று தடவை சில்லாக்கோலால் தரையிலும் அருகாலிலும் தட்டி சத்தம் போட்டுப் பார்த்தார். கொஞ்சமும் அசைவதாகத் தெரியவில்லை. மெல்ல உள்ளே போய் கதவோரம் நின்றுகொண்டு கையில் வைத்திருந்த சில்லாக்கோலால் ஓங்கி குறிபார்த்து ஒரே குத்தாக பாம்பின் தலைக்கருகில் குத்தி தூக்கிக்கொண்டு வெளியில் வந்தார்.

ஆறடி நீளமிருக்கும். கருகருவென லேசாக வெண்மை கலந்து நடுவயிற்றில் ஓரிடத்தில் மட்டும் பெரிதாக வீங்கியிருந்தது. சில்லாக்கோலில் வசமாகக் குத்துப்பட்டு, மறுபக்கம் வரைக்கும் இரு கூர் முனையும் வந்திருந்தது. வலியில் துடித்துக்கொண்டு அங்குமிங்கும் தப்பியோட நினைத்த பாம்பு, நடுநடுவில் கவுண்டரைப் பார்த்து சீறி படமெடுத்து தன் நாவை நீட்டி கடிக்க முற்பட்டது.

இன்னொரு கோலை எடுத்து வர சொன்ன கவுண்டர், ஓடிப்போய் பக்கத்திலிருந்த விறகு பட்டரையிலிருந்து குப்புசாமி எடுத்து வந்து தந்ததும் வாங்கி, பாம்பின் பின்னந் தலையில் ஓங்கி படத்தின் மீது அடித்து தரையில் வைத்து நசுக்கி சாகடித்தார்.

தன் அம்மாவின் பின்னால் நின்றுகொண்டு காலை இறுக கட்டிக்கொண்டு எட்டி எட்டிப் பாம்பைப் பார்த்த ரவி ஒருகட்டத்தில், ”பாவ்ம்பு… பாவ்ம்பு… ’’ என பயந்துபோய் கத்திக் கூச்சலிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

சத்தம் கேட்டு வீட்டின் பின்னாலிருந்த பூரணியம்மா முருகனைத் தூக்கிக்கொண்டு வந்து காட்டுவா மரத்தடியில் நின்று பார்க்க, பாம்பை சாகடித்துவிட்டு திரும்பிய கவுண்டர் தன் மச்சானிடம், ”ஏன்டா ராமு… சொம்புல ரவ பாலூத்தி எடுத்துக்கினு கெணத்து மோட்டுக்கா வா’’ என்று சொல்லிவிட்டு, பாம்பை சில்லாக்கோலிலிருந்து கையில் வைத்திருந்த கோலால் கீழே தள்ளி அதன் நடுவில் விட்டுத் தூக்கிக்கொண்டு பொர்சமரம் தாண்டியுள்ள கிணத்து மேட்டுக்கு வந்தார்.

”பாத்தியா எம்மாம்பெரி பாம்பு… அடிக்காம மட்டும் வுட்ருந்தா… எம்மாஞ் சோட்டுக்கு படம் எடுத்திருக்கும் தெரிமா…?’’

”போன வருசம் அம்மாசி பாட்டியூட்டு கட்டுத்தெருல அடிச்சாங்கல்ல பாம்பு… அதவுட ரண்டுமடங்கு பெர்சு தெரிமா இது…’’

”போடா இவன… ஆத்து மோட்டு பாய் வூட்டு பின்னால அடிச்ச பாம்பவுட இது சின்னதுதான்.’’

பின்னாலேயே வந்த மாணிக்கமும் குப்புசாமியும் பாம்பு குறித்து ஏதேதோ பேசிக்கொண்டு வந்தார்கள்.

கிணத்து மேட்டருகில் இருந்த கரம்புக்கு வந்த கவுண்டர், மாணிக்கத்தையும் குப்புசாமியையும் கூப்பிட்டு பக்கத்தில் வேலியோர கொடுக்காய்ப்புளி மரத்தருகேயிருந்த முட்புதரிலிருந்து காய்ந்த மிளார்களாகப் பார்த்து எடுத்துவந்து ஓரிடத்தில் கும்பளாக போடச் சொன்னார்.

ஓடிப்போய் அவர்களும் உடனே எடுத்துவந்து போட, செத்துப் போன பாம்பை அதன் மேலே போட்டு அடியில் நெருப்பிட்டு பற்ற வைத்து கொளுத்தினார் கவுண்டர்.

ஐந்து நிமிடம் எரிந்திருக்கும். உயிர் திரும்பவும் வந்ததுபோல் உடம்பை அசைத்து அசைத்து துள்ளித் தீயில் வெந்துக் கருகி நீளமான சுட்ட கருவாடு போல நடுவில் கிடந்தது பாம்பு. கையில் வைத்திருந்த கோலால் நெண்டி, அதை பக்கத்தில் தள்ளிய கவுண்டர், தன் மச்சான் கொண்டு வந்திருந்த பாலை வாங்கி அதன் தலைப்பகுதியில் முதலில் ஊற்றிவிட்டு, பின் உடல்முழுக்க ஊற்றினார்.

பக்கத்தில் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குப்புசாமி, கவுண்டர் பாம்புக்கு பால் ஊற்றிவிட்டு துக்கிப்போய் வேலிப் புதர்மேல் போட்டுவிட்டு வருவதைப் பார்த்துவிட்டு அருகில் வந்ததும் கேட்டான்.

”ஏன் மாமா பாம்ப நெருப்புல போட்டுக் கொளுத்திட்டு… அதுக்கு பாலு ஊத்தன…?’’

கையில் வைத்திருந்த சில்லாக்கோலை மாணிக்கத்திடம் தந்துவிட்டு தனக்குள் புன்னகைத்துக்கொண்டு குப்புசாமியின் முகத்தைப் பார்த்த கவுண்டர், ”நல்லபாம்ப அடிச்சம்னா… இதுமாரி கொளுத்தி பாலு ஊத்தனும்னு சொல்வாங்க. ஏன்னா பாம்புங்கள்ள நல்லபாம்பு கடவுளோட ரூவம். அது நம்ம மனுசங்கள்ள ஒருத்தருமாரி. அதால அத அடிச்ச பாவம் நம்மள வந்து தொத்திக்க கூடாதுல்ல… அதான்’’ என்றுவிட்டு திரும்பி, நான்கைந்தடி எடுத்துவைத்து நடந்துபோய் நினைவு வந்தவராய் நின்று பார்த்து, ”அதோட… மண்ணுளிப் பாம்புமாரி நல்லப்பாம்பு அம்மாம் சீக்கிரம் சாவவும் சாவது… அதாலயுந்தான்’’ என்றார்.

எதிரில் சோலைக்கண்ணன் கையில் கொடுவாளும் கயிறும் எடுத்துக்கொண்டு வேகமாக நடந்துவருவதைப் பார்த்துவிட்டு, மரிசியிலிருந்து இறங்கி கீழே கொல்லியில் பெரிய துரிஞ்ச மரத்தடி நிழலில் ஒதுங்கி நின்று அவன் போனதும் சொன்னார்.

”ஒரு தடவ, புத்தூரு போற வழில வூடு கட்டினு கீறான்ல ஐதரு சாயுபு… அவன் மவன், பேருகூட என்னுமோ சொன்னாங்களே… ஆங், முஸ்தபா. அவன் என்ன பண்ணான்… எங்கயோ போடுமுட்டிங்க கூட கூடினு போயி… ரவோண்டு கீற நல்லபாம்பு குட்டிய புடிச்சி ஒரு சீசாவுல போட்டு மூடி… உள்ளார காத்து போவர்துக்கும் பாலு ஊத்தர்துக்கும் ரவோத்தரம் ஓட்ட போட்டுவுட்டு… எடுத்துக்கினு வந்து ஊரெல்லாம் காட்டினு சுத்தினுருந்தான். யாரோ என்கிட்ட ஓடியாந்து சொன்னதும்… இதென்ன அக்குறும்புன்னு போயி நல்லா சண்டபோட்டு… ‘அத எங்கனா தூரமா தூக்கினு போயி வுட்டுடுடா பைய்யா’ன்னு படிச்சிப் படிச்சி சொல்ட்டு வந்தன். அந்த வெள்ளாரவோலி மவன், கொஞ்சமாது புத்திருந்தா என்பேச்ச அப்பயே கேட்ருப்பான். அதவுட்டு நல்லது சொல்ட்டு வந்த என்ன பாயி தெருவுலாம் சொல்லி பைசிய காம்சிருக்கான்.’’

மேற்கால கோனாமூட்டு தென்னந்தோப்போரம் ஏதோ சத்தம் கேட்க திரும்பிப் பார்த்த கவுண்டர், சோலைக்கண்ணன் கல்லெடுத்து அங்கே கூடிக்கொண்டிருந்த இரு நாய்களையும் அடித்துத் துரத்துவதைப் பார்த்துவிட்டு, ‘இந்த கோணமாணிக்கு எதுக்கிந்த வேல…?’ என்று மென்குரலில் தனக்கு மட்டும் கேட்பதுபோல் சொல்லிவிட்டு, மரிசியில் ஏறி நடந்துகொண்டு சொன்னார்.

”எங்க வுட்டன்… ஆங், என்ன பைசிய காம்ச்சான்ல… அடுத்த நாலாவது நாளு… அந்தப் பாம்பு சின்ன ஓட்டிக்குள்ளார எப்டியோ நொய்ஞ்சி வெளிய வந்து… பக்கத்துல தூங்கினிருந்த பெட்டா மவன கடிச்சிட்டு யாரு கண்லயம் படாம போயிகீது. அவன் அம்மாக்காரிதான் செத்த நேரத்துல பாத்துட்டு, ‘குய்யோ முறையோ’ன்னு கத்தினு ஓடியாந்து… ‘எம்புள்ளக்கி எதாது தயதண்ணி தந்து காபுந்து பண்ணுங்க சாமி’ன்னு அய்து கூட்டுனு போனா. போயி பாக்கறதுக்குள்ள வாயெல்லாம் நொர தள்ளி செத்துப்போயிருந்தான் பாவி…’’

கேட்ட குப்புசாமிக்கும் மாணிக்கத்துக்கும் பகீரென்றது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு பின்னால் திரும்பி, அடித்து எடுத்துப் போய் கொளுத்தித் தூக்கிப்போட்ட பாம்பு ஏதாவது தம்மை துரத்திக்கொண்டு பின்னாலேயே வருகிறதா என பயத்தில் பார்த்துவிட்டு, வேகமாக நடந்து கவுண்டரோடு வந்தார்கள்.

மெல்ல மேடேறி பொர்ச மரத்தடியில் வந்து நின்று திரும்பி இருவரையும் பார்த்த கவுண்டர், ”மத்த பாம்பமாரி நல்லபாம்ப… எடுத்தன் கவுத்தன்னு அடிச்சிரக் கூடாது. அதான் கூசப்போட்டு போவுதான்னு பாத்தன்… போவல. எதயோ மூங்கி வய்த்துள்ளார வச்சிகீது… அதான் அம்மாம் நேரமா பொட்டும் அசயாம இருந்துகீது. வேற வழி இல்லாமதான் அடிச்சன்’’ என்று சொல்லி கண்சிமிட்டி முன்பல் தெரிய சத்தமின்றி சிரித்துவிட்டு, அங்கிருந்து நடந்து தன் மச்சான் வீட்டுக்குப் போனார்.

காட்டுவா மரத்தடியில் நின்று உரை மேல் படுத்திருந்த பாம்பை பிருமனை எடுக்கப்போனபோது பார்த்து நடுங்கியதை அதிர்ச்சி சொற்களில் அங்கிருந்த பூரணியம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த தன் மச்சான் மனைவியிடம், ”ஏன் வள்ளி இன்னும் வெளிவே நின்னுனு கீற…? அதான் பாம்ப அடிச்சாச்சே… போயி ஆவற வேலயப் பாரு’’ என்று சொல்லிவிட்டு, பூரணியம்மாவையும் முருகனையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்தார்.

சாப்பாட்டு நேரம் ஆகியிருந்தது. திண்ணையில் பெரிய டீப்பனியில் கவுண்டருக்கும் செவடனுக்கும் சாப்பாடு போட்டு தந்தனுப்ப தயாராக வைத்திருந்தார், பூரணியம்மா.

போனதும் எடுத்துக்கொண்டு புறப்பட்ட கவுண்டரிடம், ”ஏந்தே… நீ இங்கயே ஒங்காந்து சாப்ட்டு… செவடனுக்கு எடுத்துனு போலான்ல…’’ என்றார் பூரணியம்மா.

உடனே, ”அதுவுஞ் சரிதான்’’ என்று சொல்லி டீப்பனியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வீட்டுக்குள் போன கவுண்டர், தாழ்வார மாடத்தில் கத்தையாக வெட்டிவந்து வைத்திருந்த கருவேலம் பல்லுக்குச்சியில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து, வாயில் வைத்து அதன் ஒரு பக்கத்தை மென்று கடித்து பல் துலக்கிக்கொண்டு பின்னால் போனவர், சற்றுநேரம் பூவரச மரத்தடியில் நின்று பல்துலக்கிவிட்டு பல்லுக்குச்சியை பல்லால் நடுவில் கடித்து இரண்டாகப் பிளந்து ஒன்றை கீழே போட்டுவிட்டு இன்னொன்றில் குனிந்து நாவை நன்றாக வழித்துத் துப்பிவிட்டு, சாக்கடையில் இருந்த பெரிய பானையில் தண்ணீர் அள்ளி வாய் கொப்புளித்துவிட்டு, கை கால் முகம் கழுவிக்கொண்டு வந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்து கிண்ணியில் போட்டுவைத்த சோறையும் முருங்கைக்காய் குழம்பையும் பிசைந்து ருசித்துச் சாப்பிட்டார்.

சில்லாக்கோலை எடுத்துவந்து வீட்டு வாசலோர சுவரில் சாய்த்து வைத்துவிட்டு பின்னால் போய் சாக்கடையில் கை கால் முகம் கழுவிக்கொண்டு உள்ளே வந்த மாணிக்கம், ”ஐய்யாய்யா… ஒங்க கூட்டாளி ஒருத்தரு தெவிடியாகுப்பத்துலருந்து வருவாருல்ல… கருப்பா குள்ளமா… அவரு வந்துனுகீறாரு’’ என்றான்.

கேட்ட கவுண்டர் மகிழ்ந்து தலையாட்டி, ”ஓ… மாரிமுத்தா…? வரட்டும் வரட்டும்…’’ என்று சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து கிண்ணியிலேயே கை கழுவிவிட்டு, எழுந்து துண்டில் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

ராமு கவுண்டர் வீட்டைத் தாண்டி சின்ன சாக்குப்பையில் கால்வாசி எதையோ கட்டி எடுத்துக்கொண்டு மிக மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார் மாரிமுத்து கவுண்டர்.

மெல்ல பக்கத்தில் வந்ததும், ”வா, மாரிமுத்து… நல்லாகீறயா…?’’ என்று வரவேற்று நலம் விசாரித்தார் கவுண்டர்.

”ஆங், வர்றன் முத்துசாமி… எனுக்கென்ன நல்லாதான் கீறன். நீ எப்டி கீறவன்…?’’

மாரிமுத்து கவுண்டர் பதிலுக்குப் புன்னகைத்து நலம் விசாரித்துவிட்டு, தலையில் வைத்து தூக்கிக்கொண்டு வந்திருந்த துவரம் பருப்பை திண்ணையில் இறக்கிவைத்து வீட்டுக்குள் இருக்கும் பூரணியம்மாவை, ”எம்மா பூர்ணி… செத்த வெளிய வா தாயி. ரவ தொவர கொண்டாந்துகீறன்… வந்து உள்ளார எடுத்து வையி தாயி’’ என்று சொல்லிவிட்டு கவுண்டரின் பக்கத்தில் வந்தார்.

பூரணியம்மா மோர் சொம்பில் தண்ணீர் மொண்டு வந்து மாரிமுத்து கவுண்டரிடம் தந்துவிட்டு நலம் விசாரித்துப் போனதும் உள்ளே போன முத்துசாமிக் கவுண்டர், செவடனுக்கு சின்ன டீப்பனியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்து மாரிமுத்து கவுண்டரைக் கூட்டிக்கொண்டு முரம்புக் கொல்லிக்கு நடந்து போனார்.

மாதத்தில் குறைந்தது ஒரு தடவையாவது இருவரும் சந்தித்து விடுவார்கள். பெரும்பாலும் மாரிமுத்து கவுண்டர்தான் வந்து பார்த்துவிட்டு போவார். முத்துசாமிக் கவுண்டர் குடும்பத்தோடு கொல்லிக்குக் குடுத்தனம் வந்தபிறகு சந்திப்பது இதுதான் முதல்தடவை.

ஆற்றில் வெள்ளம் வந்தது தொடங்கி அடுத்தநாள் கொல்லியில் மல்லாட்டப் பயிர் போடப்போவது வரை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு முன்னால் நடந்த கவுண்டர், தெக்கால துரிஞ்ச மர வழியாக நடந்து மேட்டுத் துண்டில் குழந்தையைப் புதைத்த இடத்தையும் அங்கே நட்டு துளிர்த்திலிருந்த வேப்பங்கன்றையும் காட்டிவிட்டு, முடியனூரான் கொல்லி மொடக்கில் செவடன் கால்வாய் தோண்டும் இடத்துக்கு கூட்டிவந்தார்.

தனியாக கால்வாய் தோண்டிக்கொண்டிருந்த செவடனிடம் டீப்பனியில் எடுத்துவந்த சாப்பாட்டையும் சொம்பில் மொண்டுவந்த தண்ணீரையும் தந்து சாப்பிடச் சொன்ன கவுண்டர், தன் நண்பரை அங்கிருந்த பெரிய கோலமாவு கல்லின்மேல் உட்காரச் சொல்லிவிட்டு, சோமத்தை அவிழ்த்து ஓரமாக மடித்து வைத்துவிட்டு பள்ளத்தில் இறங்கி நின்று பேசிக்கொண்டே மண்ணள்ளி மேலே போட்டார்.

சட்டெனப் பேச்சு, சற்றுமுன் அடித்துவிட்டு வந்த நல்லப்பாம்பிலிருந்து கடந்தாண்டு எல்லைச் சாமிக்கு கவுண்டர் பூசைவைக்க மாணிக்கத்தைக் கூட்டிக்கொண்டு போயிருந்த நாளுக்குப் போனது.

ஊர்க் கோயிலில் கூழ் ஊற்றுவதற்கு முன்தினம் அல்லது அத்தினம் காலையில் ஊர்க்காவல் தெய்வங்களான முனியப்பன், வேடியப்பன், ஊமை வேடியப்பன், பொறடியாத்தா, ஒத்த வேடியப்பன், ஐயனாரப்பன், எல்லைச் சாமி, கன்னிமார் போன்ற தெய்வங்களுக்கு பொங்கலிட்டு அவர்களின் அனுமதி பெற்று, அவர்கள் துணையோடு திருவிழாவை நடத்துவது வழக்கம்.

கூழ் ஊற்றுவது என்றில்லை. கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட எந்த பெரிய திருவிழாக்கள் ஊரில் நடந்தாலும் சரி, இதுபோல் ஊர்க்காவல் தெய்வங்களின் அனுமதி பெறுவது வழக்கம். அப்படி கடந்தாண்டு மழையின்றி கடும் வறட்சியில் மக்கள் தவித்தபோது, ஊரார் கூடிப் பேசி கூழ் ஊற்றலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.

கோயிலில் அதற்கான ஏற்பாடுகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க… இரண்டு இரண்டு பேர்களாகக் கூப்பிட்டு, அவர்களிடம் பொங்கலிடத் தேவையான பொருட்களைத் தந்து ஒவ்வொரு சாமிக்கும் பொங்கல் வைக்க அனுப்பிவைத்த கவுண்டர், கடைசியாக எல்லைச் சாமிக்கு பொங்கல் வைக்க தன் மகன் மாணிக்கத்தை உடன் கூட்டிக்கொண்டு தானே புறப்பட்டுப் போனார்.

எல்லைச் சாமி முத்துசாமிக் கவுண்டரின் ஊருக்கும் மாரிமுத்து கவுண்டரின் ஊருக்கும் நடுவில் இருக்கும் ஊர்க்காவல் தெய்வம். இருவூருக்கும் பொதுவானது. அதிலும் முக்கியமான விஷயம், அது இருப்பது மாரிமுத்து கவுண்டரின் கொல்லியை ஒட்டிய பாறைமேல், நூறாண்டைக் கடந்த முது துரிஞ்ச மரத்தடியில்.

அதனால் கவுண்டர் பொங்கல் வைக்கப் போனதும் முதல் வேலையாக பூசைக் கூடையை இறக்கி மரத்தடியில் வைத்துவிட்டு தன் நண்பர் கொல்லியில் இருக்கிறாரா என்று பார்த்தார். இல்லை. அவர் மனைவி சாரதாம்மாவும் மகள் கஸ்தூரியும் சற்று தூரத்திலிருந்த கிணற்றுக்கு அடுத்துள்ள மலையோர நாவல் மரத்தடியில் நின்றிருந்தார்கள். ஏதோ அவர்களுக்குள் பெரும் வாக்குவாதம் நடந்துகொண்டிருப்பது, அவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டு சண்டை போட்டுக்கொண்டிருப்பதில் தெரிந்தது.

நடுநடுவில் அவர்களைப் பார்த்துக்கொண்டு பொங்கல் வைத்த கவுண்டருக்கு, ஏதோ பெரும் தவறு ஒன்று நடக்கப்போவது போல் உள்ளுக்குள் தோன்றியது. அதனால் ஒருவித பதட்டத்தோடவே இருந்தார்.

வெகுநேரம் சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் சட்டென்று ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி நடந்தார்கள். தெக்கால பக்கமாக நடந்த கஸ்தூரி, வேகமாகப் போய் பனை மரம் வரிசையாக நின்றிருக்கும் மேல ஓடைக் கரையில் ஏறி இறங்கி, மறுகரை போகும்வரைக்கும் பார்வைக்குத் தெரிந்தது.

மேற்கால மலையோரமாக வண்டிப்பட்டையில் நடந்து ஊர் நோக்கி கிடுகிடுவென போன சாரதாம்மா, மலையைத் தாண்டியுள்ள முடக்கு வரைக்கும் சென்று என்ன நினைத்தாரோ… சட்டென்று திரும்பிப் பார்த்துவிட்டு, போன வழியே திரும்பி வேகமாக ஓடி வந்தார்.

அடுப்பிலிருந்த பொங்கல் பானையை இறக்கி கீழே வைத்துவிட்டு மாணிக்கத்தை அங்கேயே இருக்கச் சொன்ன கவுண்டர், கட்டியிருந்த சோமத்தை மடித்துக் கட்டிக்கொண்டு முட்டிமூட்டு வளர்ந்திருந்த எள் கொல்லியில் இறங்கி வேகமாக ஓடி ஓடையருகில் வந்தார்.

புதருக்கு நடுவில் சீர்செய்யாமல் முஷ்டக்கொடி படர்ந்திருந்த பெரிய ஆண் பனை மரத்தின் மட்டைகளில் தொங்கிய கூண்டுக்குள்ளிருந்து நான்கைந்து தூக்கணாங்குருவிகள் கவுண்டர் வந்த சத்தத்தைக் கேட்டு, ஒரே நேரத்தில் அரசங்கல் பக்கம் பறந்தோடியது.

வந்த வேகத்தில் ஓடைக் கரையில் ஏறி இறங்கி மறுகரைக்கு வந்த கவுண்டர், கரம்பில் நடந்து சட்டப்பாறை சந்துக்குப் போகும் கொடி வழியாகப் போகையில்… மேற்காலப் பக்கமிருந்த பெரிய கல்லாக்குட்டை பாறைமேல் வேப்ப மரத்து நிழலில் கஸ்தூரி படுத்துக் கிடப்பதைப் பார்த்தார்.

என்ன ஏதெனத் தெரியாமல் பதட்டத்தோடு பக்கத்தில் போன கவுண்டர், கண்மூடி அரை மயக்கத்தில் கஸ்தூரி பெனாத்திக் கொண்டிருந்ததையும், அவள் வாயிலிருந்து லேசாக நுரை வழிந்துவருவதையும், பக்கத்திலிருந்த பாறைமேல் ஏதோ தழை சற்றுமுன் அரைக்கப்பட்டிருப்பதையும் பார்த்துவிட்டு, குனிந்து அத்தழை மசியலை சுண்டு விரலால் தொட்டு முகர்ந்து பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.

‘இந்தப் புள்ள தாய்க்காரி கூட எதுக்கோ சண்டபோட்டுக்கினு… கோவத்துல ஓடியாந்து சாவ முடுவுபண்ணி… ஒட்டந்தழ பறிச்சி அரச்சித் தின்னுகீது.’

என்ன செய்வதெனத் தெரியாத குழப்பத்தில் சுற்றுமுற்றும் பார்த்தார். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாரும் இல்லை. முறிதொளசி செடியும், வரம்பிக் கொடியும் எங்காவது இருக்கிறதா என கல்லாக்குட்டையில் அங்கும் இங்கும் தேடிப் பார்த்தார். இருந்தால் அதன் இலைகளைப் பறித்துக் கசக்கி சிறிதளவு சாறினை வாயில் விட்டால் போதும். அடுத்த செத்த நேரத்தில் உள்ளே போன மொத்த விஷத்தையும் வெளியே கொண்டுவந்துவிடும். அதுவும் இல்லை.

சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய் கஸ்தூரியைத் தூக்கி தோள்மேல் போட்டுக்கொண்டு வேகமாக ஓடைக்கரை மூங்கில் புதர் ஓரமாக இருந்த பாவாடை கவுண்டர் கொட்டாய்க்கு ஓடி, பக்கத்து துண்டில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த தாயையும் பிள்ளையையும் பார்த்து, ”ஓடியாங்க ஓடியாங்க… இந்தப் புள்ள ஒட்டந்தழ அரச்சி தின்னுருச்சு… தோக்கிற சோப்புகீப்பு இருந்தா பட்டுனு கொண்டாங்க…’’ என்று கத்திக்கொண்டு போய் கொட்டாயின் முன்னால் மா மரத்தடியில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்கப் போட்டார்.

கையில் பிடித்திருந்த மாட்டை விட்டுவிட்டு பதறி ஓடிவந்த தாய்க்காரி, கொட்டா பக்கத்திலிருந்த சாக்கடையில் வாழை மரத்தடி கல்மேல் வைத்திருந்த பாதி கரைந்த துணி சோப்பை எடுத்துவந்து கவுண்டரிடம் நீட்ட, அதை வாங்கிக்கொண்டு பக்கத்திலிருந்த தொட்டிமேல் வைத்து கால்வாயில் கிடந்த ஈரக்கல்லெடுத்து நசுக்கி, அங்கிருந்த ஒடுக்கு சொம்பில் தண்ணீர் மொண்டு அதில் போட்டு கைவிட்டு கரைத்துக்கொண்டு வந்து நுரையோடு அந்நீரை கஸ்தூரியின் வாயைத் திறக்கச்சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்கு ஊற்றினார்.

சாரதாம்மா அதற்குள், ”அய்யோ அய்யோ… எம்புள்ளிக்கி என்னாச்சு…?’’ என்று மாரிலடித்து கத்திக்கொண்டு ஓடிவந்தார்.

மிடரு மிடராக சோப்புத் தண்ணீர் உள்ளே போனதும் கஸ்தூரிக்கு குமட்டிக்கொண்டு வாந்தி வர ஆரம்பித்தது. சற்று நேரத்தில் தின்ற மொத்த ஒட்டந்தழையும் வாந்தியாக வெளியில் வந்துவிட, மெல்ல கண் திறந்து எழ முற்பட்டாள்.

‘அப்பாடா’ என்றிருந்தது கவுண்டருக்கு. பக்கத்தில் உட்கார்ந்து சத்தம் போட்டு அழுதுகொண்டிருந்த சாரதாம்மா, ”ஏன்டி மவுள இப்டி பண்ண…? நானு ஒனுக்கு என்னடி கொற வச்சன்…?’’ என்று கோவமாகக் கேட்டுவிட்டு, கஸ்தூரியின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்துவிட்டு கட்டிக்கொண்டு அழுதார்.

நடுங்கும் குரலில், ”நானு… நானு… கோவத்துல… கோவத்துலதாம்மா…’’ என்று அழுதுகொண்டு ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னாள் கஸ்தூரி.

கூப்பிடு தூரத்திலிருந்த சட்டப்பாறை சந்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சேவிக் கவுண்டரும், மாரி தாத்தாவும் சத்தம் கேட்டு, மேய்த்துக்கொண்டிருந்த ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவந்து பார்த்துவிட்டு, ஒதுங்கி ஓரமாக இலுப்ப மரத்தடியில் நின்றிருந்த கவுண்டரிடம் போய் நடந்ததைக் கேட்டுத் தெரிந்துகொண்டு போனார்கள்.

”நல்ல நேரத்துல ஒங்க ஐய்யாரோட கூட்டாளி வந்தாரு… இல்லனா எம்புள்ளிய இந்நேரத்துக்கு பொணமாதான் பாத்திருப்பன்’’ என்று அழுதுகொண்டு எழுந்து வேகமாக வந்து கவுண்டரின் காலை பிடித்துக்கொண்டார் சாரதாம்மா.

இருவருக்கும் புத்திமதி சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பி வந்த கவுண்டர், நேராக எல்லைச் சாமியிடம் வந்து சாமியைக் கழுவி பொட்டிட்டு கற்பூரம் ஏற்றிக் கும்பிட்டுவிட்டு, திரும்பி ஊருக்கு வந்த செத்த நேரத்திற்குள்… வீட்டிலிருந்த மாரிமுத்து கவுண்டருக்கு தகவல் போய், கண்கலங்கி அழுதுகொண்டு பொடிநடையாக நடந்து பின்னாலேயே வந்துவிட்டார்.

”அன்னிக்கி மட்டும் நீ பொங்குலு வக்க வராமருந்தா… எம்பொண்ண பொணமாதான் பாத்திருப்பன்.’’

கண்கலங்க மாரிமுத்து கவுண்டர் சொன்னதும், பதிலுக்கு எதுவும் சொல்லாமல் மெல்ல உதடசைத்து சிரித்துவிட்டு, குனிந்து அடியிலிருந்த செட்டு மண்ணள்ளி மேலே கொட்டினார் கவுண்டர்.

”வர்ற பங்குனி மாசம் பத்தாந்தேதி, எம்பொண்ணுக்கு கலியாணம் வச்சிகீறன். மாப்பள தானிப்படி தாண்டி கீற வேப்பூருகாரன். சாரதாக்கு தூரத்து சொந்தக்காரன். ஒனுகிட்டதான் மொதமொத இந்த விசியத்த சொல்லிட்டு போவலான்னு வந்தன்.’’

சற்று தள்ளி உட்கார்ந்து ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டு சாப்பிட்ட செவடன், கை கழுவிவிட்டு கண்கலங்கியபடி மெல்ல எழுந்து அருகில் வந்து மண்ணில் குத்தி வைத்திருந்த கடப்பாரையை வேகமாக ஆட்டிப் பிடுங்கினான்.

[இன்னும்]

*

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=