முரம்பு – 13

எப்போது எப்படியென்றே தெரியவில்லை, கட்டுத்தெருவில் கட்டியிருந்த கருப்பு மாடு அறுத்துக்கொண்டு வந்து முரம்புக் கொல்லியில் குழந்தையைப் புதைத்த மேட்டுத்துண்டு மரிசி மீது வேப்பங்கன்றுக்குப் பக்கத்தில் படுத்திருந்தது. அதுவும் பேரிருளுக்கு நடுவில் சிற்றிருள் போல படுத்திருந்த மாட்டின் இரு ஒளிரும் கண்கள்தான் முதலில் முத்துசாமிக் கவுண்டருக்குத் தெரிந்தது. அதிலும் ராந்தல் வெளிச்சத்தை அப்படியே தன்னுள்வாங்கி பிரதிபளித்து இரட்டை விளக்குகளாய் ஒளிர்வதுபோல் இருந்தது.
கையில் வைத்திருந்த ராந்தலை மெல்ல கீழே வைத்துவிட்டு முருகனை இறக்கி நிற்கவைத்து, ”எம்மாடி கருப்புச்சி தாயே…” என்று சொல்லிக்கொண்டு மாட்டருகில் கவுண்டர் போனதும், வேகமாக எழுந்து நின்ற கருப்பு மாடு முருகனையும் பக்கத்திலிருந்த வேப்பங்கன்றையும் மாறி மாறிப் பார்த்தது.
பக்கத்தில் போய் மாட்டின் முன்னால் நின்று லேசாகக் குனிந்து தன் இரு கைகளாலும் அதன் முகத்தைப் பிடித்துக்கொண்ட கவுண்டர், ”தம்பி கூப்டது ஒனுக்கும் கேட்டுச்சா தாயி…?’’ என்று கேட்டார்.
எந்தவோர் அசைவுமின்றி கவுண்டரின் முகத்தைப் பார்த்தது மாடு.
”எனுக்குத் தெரியும் தாயி… தம்பி கூப்ட்டுதான் நீ ஓடியாந்துகீற… அவன் கொரலு கேட்டுதான் கட்டிருந்த கவுத்த அறுத்துக்குனு வந்துகீற… முருகன வெளாட கூப்டவன், ஒன்னய தொணக்கி கூப்டுகீறான்… அதான் நீ ஓடியாந்ட…’’
கவுண்டர் கருப்பு மாட்டிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே மேற்கால பக்கம் யாரோ வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார். சற்று தொலைவில் சிறுபொட்டு போல் தெரிந்த ராந்தல் வெளிச்சம் பக்கத்தில் வர வர விரிந்து, அதன் பின்னால் வரும் உருவமும் மங்களாகத் தெரிய ஆரம்பித்தது.
வந்தவர் வருவதற்குள் அவரது குரல் வந்து சேர்ந்தது.
”ஏன்டா முத்துசாமி… ஒனுக்கு கொஞ்சமாது சுதிமதி கீதாடா…? நீ பாட்டுனு அறுவுகெட்டவன் மாரி புள்ளய தூக்கினு இந்நேரத்துல போயி இங்க வந்துகீற பாரு…?’’
கவுண்டரின் மச்சான் ராமு கவுண்டர். பூரணியம்மா பதறிப்போய் ஓடி என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டு வாசலில் கட்டிலில் படுத்திருந்தவரிடம் சொல்லியிருக்கிறார். உடனே அவரும் எழுந்து தாழ்வாரத்தில் மாட்டியிருந்த ராந்தலை எடுத்துக்கொண்டு, ”அய்வாத தாயி… நானு போயி என்னான்னு பாக்கறன்’’ என்று சொல்லிவிட்டு, பின்னாலேயே தேடி வந்திருக்கிறார்.
சற்று வேகமாக பக்கத்தில் வந்தவர், ”அவன்தான் எதோ அறியாப்புள்ள கனவுகினவு கண்டு பயிந்துபோயி சொல்றான்னா… ஒனுக்கெங்கடா போச்சு புத்தி…? நடு ராத்திரின்னு கூட பாக்காம புள்ளய தூக்கினு வந்துகீற பாரு… ஒண்ணலாம்…” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து நின்றவர், குழந்தையைப் புதைத்த இடத்தருகில் கருப்பு மாடு முட்டமுட்ட முழித்தபடி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தார்.
சிலநொடி பேச்சின்றி கல்போல் நின்றவர், அதிர்ச்சிக் குரலில் கவுண்டரிடம் கேட்டார், ”மாடு எப்டிடா இங்க வந்துச்சு…?’’
மெதுவாகத் திரும்பி மெல்லொளியில் தெரிந்த தன் மச்சானின் அகல முகத்தைப் பார்த்து நடந்ததை கவுண்டர் சொல்ல, அவரால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
யாரோ நான்கைந்து பேர் கையில் ராந்தல் எடுத்துக்கொண்டு முடியனூரான் கொல்லி மொடக்கு தாண்டியுள்ள புத்தூரான் கரம்பில் எலி குத்திக்கொண்டு ஓடும் சத்தம் கேட்டது.
பக்கத்தில் நின்றிருந்த முருகனையும் மாட்டையும் குழந்தையைப் புதைத்த இடத்தில் நட்டிருந்த வேப்பங் கன்றையும் ஒருதடவை குழப்பத்தோடு பார்த்த ராமு கவுண்டர், என்ன செய்யலாம் என தனக்குள் யோசித்து ஒருவாறு முடிவுக்கு வந்தவராய், ”செரி, முத்துசாமி… மாட்ட இங்கயே வுட்டுட்டு புள்ளய தூக்கினு வா, வூட்டுக்குப் போவலாம்’’ என்றார்.
எதுவும் பேசாமல் திரும்பி நின்று குழந்தையைப் புதைத்த இடத்தையும் வேப்பங்கன்றையும் உயிர்மூச்சு கொப்பளிக்க பார்த்துக்கொண்டிருந்தார் கவுண்டர்.
”டேய் முத்துசாமி… ஒன்கிட்டதான்டா சொல்றன். அங்க பூர்ணியும் புள்ளிங்களும் என்ன ஏதுன்னு துடிச்சினுருப்பாங்க… ஏன்ச்சி ஒய்ங்குமதேரியா என்கூட வா.’’
மாட்டையும் பக்கத்தில் நின்றிருந்த முருகனையும் திரும்பிப் பார்த்த கவுண்டர், ‘சரி’ என தலையாட்டிவிட்டு, மாட்டின் இரு கண்களுக்கு நடுப்பட்ட நெற்றிப் பகுதியில் வலதுகையால் தொட்டு வருடிவிட்டு முருகனை ஒரு கையில் தூக்கி மார்போடு அணைத்துக்கொண்டு, மறுகையில் கீழே வைத்திருந்த ராந்தலை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி யோசனையுடன் நடக்க, பின்னாலேயே அவர் மச்சானும் பேச்சின்றி நடந்து வந்தார்.
வேலியோர வெப்பால மரப் புதரில் இருந்து நான்கைந்து நொல்லக் குருவிகள் மனிதர்களின் காலடிச் சத்தம் கேட்டு பயத்தில் கத்துவது கேட்டது.
முருகன் அதைக் கேட்டு பயந்து நடுங்கி தேய்ந்த குரலில் கவுண்டரின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு, ”என்னுமோ அங்க கத்துதுய்யா…?’’ என்றான்.
”அது ஒண்ணுல்லய்யா… நொல்லக்குருவி… அன்னிக்கி சாம போடும்போது காமிச்சன்ல… அதான்’’ என்று சொல்லிக்கொண்டு நடந்து கட்டுத்தெரு தாண்டியுள்ள வீட்டு வாசலுக்கு வந்த கவுண்டர், வாசப்படியோரம் செல்வியோடு உட்கார்ந்திருந்த பூரணியம்மா தன்னைக் கண்டதும் மகிழ்ச்சி துளிர எழுந்து நிற்பதையும், சற்று தள்ளியுள்ள கோழிக் கூண்டுமேல் மாணிக்கமும் பக்கத்திலிருந்த கல்லின் மீது ஏழுமலையும் தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும் பார்த்துவிட்டு நேராகப் போய் முருகனை பூரணியம்மாவிடம் தந்துவிட்டு, பக்கத்திலிருந்த சிறு திண்ணையில் கையில் வைத்திருந்த ராந்தலை வைத்துவிட்டுத் திரும்பி, தான் படுத்திருந்த கட்டிலில் வந்து உட்கார்ந்துகொண்டார்.
பின்னாலேயே வந்த ராமு கவுண்டர் பூரணியம்மாவிடம் போய் நடந்ததை சுருங்கச் சொல்லிவிட்டு கவுண்டரிடம் வந்து, ”செரி முத்துசாமி… எதயும் நெனிக்காம படுத்துத் தூங்கு. எதுவாருந்தாலும் காலில பேசிக்கலாம்’’ என்று சொல்லிவிட்டு மெல்ல இருளைக் கிழித்துக்கொண்டு மேற்க நடந்து தன் வீட்டுக்குப் போனார்.
எதுவும் சொல்லாமல் அப்படியே தோளில் சாய்ந்து தூங்கிவிட்ட முருகனை அசாமல் தூக்கிக்கொண்டு, செல்வியையும் மாணிக்கத்தையும் ஏழுமலையையும் போய் படுக்கச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போன பூரணியம்மா, முருகனைத் தன்னருகில் துப்பிட்டியில் படுக்கப் போட்டு வெறுந்தரையில் புடவையை விரித்து தானும் படுத்துக்கொண்டார்.
வெகுநேரம் ஆகியும் பூரணியம்மாவுக்கு தூக்கம் வரவில்லை. ராந்தல் வெளிச்சத்தில் சுவரில்லா ஓவியம்போல் தெரிந்த வீட்டுள் கொடிக்கையையும் அட்டணையையும் நெடுங்காலையும், எறவானத்தில் தொங்கிக்கொண்டிருந்த உரியையும் பொனக்கட்டையையும் சொரபுடுக்கையும் ஆப்பக்கூண்டையும் பார்த்துக்கொண்டு நடந்ததையெல்லாம் தன்னுள் நினைத்துப்பார்த்தவர், ‘ஏன்தான் நம்முளுக்கு மட்டும் இப்டிலாம் நடக்குதோ…?’ என கண்கலங்க உள்குரலில் தன்னிடம் கேட்டும் கொண்டார்.
அதேநேரம், வாசலில் கட்டிலில் வெறுமே படுத்துக்கொண்டு கேள்விக்குழியில் அமிழ்ந்து வானத்தையும் அதில் ஆங்காங்கே விட்டுவிட்டு ஒளிர்ந்த மீன்நிலாவையும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்த கவுண்டர், ஒருகட்டத்தில் பதட்டம் தணிந்து தன்னையறியாமல் சட்டென அசதியில் தூங்கிவிட்டார்.
அதிகாலை ஐந்தரை இருக்கும். பூரணியம்மா எழுந்துபோய் கட்டுத்தெருவில் சாணி அள்ளிவந்து தோண்டியில் போட்டுக் கரைத்து வாசலில் போடுவதற்கு முன், ”ஏந்தே… ஏந்தே…’’ என கூப்பிட்டபோதுதான் கவுண்டர் தூக்கம் களைந்து எழுந்து உட்கார்ந்தார்.
தூரத்தில் எங்கோ கோழி கூவும் சத்தம் விட்டுவிட்டு கேட்டது. பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடிக்கொண்டு விடிவானில் இரைதேடி கிழக்கு நோக்கி பறந்துபோயின. வானம் ஓரளவுக்கு வெளுத்திருப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக எழுந்து, கட்டியிருந்த தன் களைந்த சோமத்தை அவிழ்த்து கவுண்டர் ஒழுங்காகக் கட்டவும், செவடன் முன்தினம் மாலை பூரணியம்மா சோறு போட்டுத் தந்த சின்ன டீப்பனை கழுவி எடுத்துக்கொண்டு தலைமேல் தன் வாழைக்கறை படிந்த சிவப்புத் துண்டை போட்டுக்கொண்டு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
”என்ன கவுண்ர… இப்பதான் பொய்து விடிஞ்சமாரி கீது…? காவா நோண்ட இப்பயே போலாமா…? இல்ல, இன்னும் நேரங்கய்ச்சி போவலாமா…?’’
கொண்டு வந்த டீப்பனியைக் கட்டில்மேல் வைத்துவிட்டு விளையாட்டாகக் கேட்டான் செவடன்.
ஏதோ யோசனையோடவே, ”ம்… போவலாம் செவடா’’ என்று உணர்வற்ற தட்டையான குரலில் கவுண்டர் சொன்னதைக் கேட்ட செவடனுக்கு, எதையோ நினைத்து அவர் கலக்கத்தில் இருக்கிறார் என்பது சட்டென்று புரித்துவிட்டது.
வானம் முன்னைவிட இன்னும் நன்றாகவே வெளுத்திருந்தது. அதோடு, சற்று நேரத்தில் சூரியன் வரப்போவதை கிழக்கே அடிவானத்தில் தெரிந்த இளஞ்செந்நிற வெளிச்ச வெள்ளம் சொல்லாமல் சொன்னது.
செவடன் முதலில் போய் கட்டுத்தெருவோரம் படுக்கப் போட்டிருந்த கடப்பாரையை எடுத்துக்கொண்டு முன்னால் நடக்க, பின்னாலேயே போன கவுண்டர் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு உற்சாகமின்றி நடந்தார்.
வெப்பால மரம் வழியாகக் கொல்லிக்குள் இறங்கிய செவடன், குழந்தையைப் புதைத்த இடத்தில் கருப்பு மாடு படுத்திருப்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு, ‘இந்த நேரத்துல ஏன் மாடு வந்து இங்க படுத்துனு கீது…?’ என தனக்குள் கேட்டுக்கொண்டு, ‘செரி, கவுண்ரா சொல்ற வரிக்கும்… நாமளா எதயும் கேக்கக் கூடாது’ எனும் முடிவோடு, தன் அவிழ்ந்துவந்த நீலநிற கட்டம்போட்ட லுங்கியை ஒரு கையால் பிடித்துக்கொண்டு நடந்துபோனான்.
முன்தினம் மாலை ஏர் ஓட்டிய புழுதி மண்ணில் நடந்து மேட்டுத்துண்டு வழியாக குழந்தையைப் புதைத்த இடத்தையும், அங்கே பக்கத்தில் படுத்திருந்த கருப்பு மாட்டையும், வேப்பங்கன்றையும் சற்று தொலைவிலிருந்தே எண்ணங்கள் அரித்துத் தின்ன பார்த்துக்கொண்டு போன கவுண்டர், முடியனூரான் கொல்லி மொடக்கில் கால்வாய் தோண்டுமிடம் போகும் வரைக்கும் ஒரு வார்த்தைகூட செவடனிடம் பேசவில்லை.
மெதுவாக மேலெழுந்து வந்த கதிரவனின் முன்னொளி தொண்டானூர் மலைக்குப் பின்னாலிருந்து வருவதைப் பார்த்த கவுண்டர், மண் அள்ளிப்போட ஏதுவாகத் தான் கட்டியிருந்த வெண்ணிற சோமத்தை அவிழ்த்து ஓரமாக இருந்த சிறு உண்ணிமில் புதர்மேல் வைத்துவிட்டு, காக்கி டவுசரோடு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு முன்தினம் செவடன் தோண்டிய கால்வாய் பள்ளத்தில் இறங்கினார்.
மண்ணள்ளி மெல்ல மேட்டில் போட்டுக்கொண்டு நள்ளிரவு நடந்ததில் பேர்பாதியை செவடனிடம் சொன்ன கவுண்டர், கேட்டுவிட்டு என்ன சொல்வதெனத் தெரியாமல் குழப்பத்தில் நின்றவனின் முகம் பார்த்து, ”நல்லபடியா புள்ள பொறந்தாக்கா… வேடிப்பனுக்கும் முனிப்பனுக்கும் கெடாவெட்டி பொங்க வக்கிறன்னு பூர்ணி பெராத்தன பண்ணிருந்தா. அதுக்குள்ள என்னன்னமோ ஆயிப்போச்சு’’ என்றார்.
கொஞ்சநேரம் கழித்து, ”செரி ஆனது ஆயிப்போச்சு… இனி அதப்பத்தி பேசி ஒண்ணும் ஆவப்போறதில்லதான்… ஆனாலுஞ் செவடா, முனிப்பனுக்கு மட்டும் நம்ம சத்துக்கேத்தமாரி கெடாவெட்டி பொங்குலு வச்சிடலான்னு படுது… ஏன்னா, குளிகுளிச்சப்ப சாவக்கெடந்த பூர்ணிய… பேராமுட்டா கெழ்வி ரூவத்துல வந்து நல்லபுடியா காபுந்து பண்ணி வுட்டான்ல முனிப்பன், அதுக்காக…’’ என்றுவிட்டு, ”நீ என்னடா செவடா சொல்ற…?’’ என்று செவடனிடம் அவன் விருப்பத்தைக் கேட்டார் கவுண்டர்.
செவடனுக்கும் கவுண்டர் சொல்வதுதான் சரியெனப் பட்டது. அதனால் உடனே, ”செரிதான் கவுண்ர…’’ என்றான்.
பகலவனின் கிரணங்கள் மெல்ல கால்வாய் மேட்டிலிருந்த பெரிய வேப்பமரக் கிளையிடுக்குகள் வழியே வந்து கவுண்டரின் முகத்தில் பட்டு கண்களை கூசச் செய்ய, சட்டென்று விலகி நின்றார்.
”புள்ள உசுரு எங்கியும் போவாம… இங்க நம்ம மொரம்புக் கொல்லிலதான் சுத்தினு கீது. நேத்து அவன் கூப்டது… சின்னவனுக்கும் கருப்புச்சிக்கும் கேட்டுகீது. பாவம் புள்ள… எப்டிலாம் பொறந்து, எப்டிலாம் இருக்கவேண்டிவன்… இப்டி பொறக்கறப்பயே போயி சேந்துட்டான்.’’
சொல்லிவிட்டு லேசாகக் கண்கலங்கிய கவுண்டர், கையில் வைத்திருந்த மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு, ”இந்த தையி போயி மாசி நடுகூறு தாண்னதும்… குடும்பத்தோட போயி முனிப்பனுக்கு பொங்கவச்சி கெடாவெட்டி… நடந்ததலாம் மனம்வுட்டு சொன்னம்னா போரும்… அவன் பாத்துப்பான் செவடா, எம்புள்ளிய…’’ என்றார்.
நா தழுதழுக்க கவுண்டர் சொன்னதும் கடப்பாரையை ஓங்கி மண்ணில் குத்திவிட்டு அவர் பக்கத்தில் போய் நின்ற செவடன், ”நீங்க எப்பியும் என்னுகிட்ட சொல்றதான் கவுண்ர… எல்லாம் நல்லதுக்குனு வுட்டுட்டு வேலயப் பாப்பம்… எல்லாத்தயும் மேலகீற அந்த ஆண்டவன் பாத்துப்பான். ஒங்க மனசுக்கு எல்லாமே நல்லதாதான் நடக்கும்’’ என்று சொன்னான்.
இப்படித்தான் ஐந்தாண்டுகளுக்கு முன் முருகன் பிறந்ததும் ஊரிலிருந்து குடும்பத்தோடு கிளம்பி முனியப்பன் கோயிலுக்கு கிடாவெட்டி பொங்கல் வைக்கப் போயிருந்தார்கள். அதுவும் மதியம் சாப்பிட்டுவிட்டு, சற்று வெயில் தாழ்ந்ததும் பொங்கலிடத் தேவையான பொருட்களை சாணி மொழுகி காயவைத்து பூசையிட்ட புட்டுக்கூடையில் வைத்து சிம்மாடு கொய்லி தூக்கிக்கொண்டு கவுண்டர் முன்னால் நடக்க, அவரோடு பிறந்து ஐந்து மாதமே ஆன முருகனைத் தூக்கிக்கொண்டு தண்ணீர் மொள்ள காலி பித்தளைத் தவலையை எடுத்துக்கொண்டு பூரணியம்மாவும் செல்வியும் நடந்தார்கள்.
பின்னாலேயே செவடன் வாதநாராயண மரத்தில் கட்டியிருந்த பெராத்தன கிடாவைப் பிடித்துக்கொண்டு நடக்க, அவனோடு கதை பேசிக்கொண்டு மாணிக்கமும் ஏழுமலையும் கழுவி பூசையிட்டு பொட்டிட்ட கவுண்டரின் பெரிய கொடுவாளை எடுத்துக்கொண்டு நடந்து வந்தார்கள்.
வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் வெயில் அவ்வளவாக இல்லாமல் இருந்தது. மெல்ல தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி முரம்புக் கொல்லி கொட்டா முன்னால் இருந்த கல்லின்மேல் கவிழ்த்து வைத்திருந்த சின்ன அன்னக்கூடையை எடுத்துக்கொண்டு, கோனாமூட்டு தென்னந்தோப்புக்குள் நுழைந்து புளியமர மேடேறி பெரிய கால்வாய் மதகுப்படியில் இறங்கி மறுகரை சென்று, அங்குள்ள கல்மேட்டில் உட்கார்ந்து தான் பாட்டுக்கு வருவோர் போவோரை கவனியாமல் புல்லாங்குழல் ஊதிக்கொண்டிந்த சோலைக்கண்ணனைக் கண்டும் காணாமல் நடந்து, மண்ணாங்கட்டி கவுண்டர் கொல்லியொட்டி சிறு காடுபோல் மரங்கள் அடர்ந்திருக்கும் இடத்தின் நடுவில் இருக்கும் முனியப்பன் கோயிலுக்கு முன்னாலிருந்த இடுப்புமூட்டு உயர பாறையில் ஏறியிறங்கி, இருபக்கமும் புதர்போல் மண்டியிருந்த செடிகொடிகளை விளக்கிவிட்டு, சற்றுதூரம் போனதும் ஆளுமூட்டு உயரத்தில் துரிஞ்சிமரத்தடியில் நின்றிருக்கும் உடைந்துபோன இரு குதிரைகளை ஒட்டிய காலியிடத்தில் காலில் முள் எதுவும் பொத்துவிடாமல் பார்த்து கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து, தலையில்லா முண்டமாய் கம்பீரமாய் வீற்றிருக்கும் முனியப்பன் சாமி பக்கத்தில் சென்று, ”எப்பா முனிப்பா…” என்று சொல்லிக்கொண்டு பூசைக்கூடையை இறக்கி வைத்தார் கவுண்டர்.
குதிரை எதிரிலுள்ள பெரிய ஞானா செடியில் பிடித்துவந்த கிடாவைக் கட்டிவிட்டு, செல்வியிடம் இருந்த தவலையை வாங்கிக்கொண்டு மாணிக்கத்தை சின்ன அன்னக்கூடை எடுத்துவர சொல்லி கூட்டிக்கொண்டு சாமிக்குப் பின்பக்க கல்யாணமுருங்கை மரத்து வழியாக நடந்துபோன செவடன், சித்தேரி அடிவாரத்திலிருந்த மண்ணாங்கட்டி கவுண்டர் கிணற்றில் இறங்கி தண்ணீர் மொண்டு வந்தான்.
பக்கத்திலிருந்த புதர்களிலிருந்தும் மரத்தடியிலிருந்தும் மாணிக்கமும் ஏழுமலையும் பொறுக்கி வந்த காய்ந்த சுள்ளி விறகு கொண்டு அடுப்புமூட்டி பொங்கல் வைத்த கவுண்டர், சாமி சிலையையும் வேலையும் கழுவி பொட்டிட்டு, கெதம்பொடி தூவி வேலின் நுனியில் எலுமிச்சம் பழம் செருகி, உடைத்து வந்த வேப்பங்கொத்தை முன்னால் வைத்து அதன்மேல் வெற்றிலைப் பாக்கையும் சுருட்டையும் சாராயத்தையும் வருத்த கருவாட்டையும் வைத்துவிட்டு, அதன் பக்கத்தில் ஏரிக்கரையிலிருந்து பறித்துவந்த ஓணான்கொடி இலைகள் ஐந்தில் அடுப்பிலிருந்து இறக்கிய பொங்கல் சோறு போட்டு வரிசையாக வைத்து, கற்பூரமும் வத்தியும் ஏற்றி தேங்காய் உடைத்து, இடது கையால் மணியாட்டிக்கொண்டு வலதுகையில் திருநீறு தட்டில் ஆரத்தி காட்ட, எல்லோரும் வரிசையாக நின்று சாமி கும்பிட்டார்கள்.
மணியையும் திருநீறு தட்டையும் கீழே சாமியின் முன்னால் வைத்துவிட்டு சிறு சொம்பில் மஞ்சள் தூளும் வேப்பிலையும் போட்டு கரைத்து வைத்திருந்த மஞ்சத்தண்ணியை எடுத்துக்கொண்டு குதிரைக்குப் பக்கத்தில் இருந்த காலியிடத்தில் செவடன் அவிழ்த்துப் பிடித்துக்கொண்டிருந்த கிடாவிடம் போன கவுண்டர், அதன் தலையிலும் உடலிலும் கையில் சாய்த்துத் தெளித்து உத்தரவு கேட்டார்.
”எப்பா முனிப்பா… ஒணுக்காக இந்த ஏழபாழங்க பெராத்தன பண்ணினு… எங்களால முடிஞ்சத கொண்டாந்துகீறம். சந்தோசமா அத ஏத்துக்கினு… உத்தரவு கொடுப்பா சாமி…’’
சற்றும் தாமதிக்கவில்லை. சட்டென உடல் குலுக்கித் தலையாட்டி உத்தரவு தந்தது. கையெடுத்துக் கும்பிட்ட கவுண்டர், குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூரணியம்மாவையும் செல்வியையும் ஏழுமலையையும் சாமி பக்கத்திலிருக்கும் சிறு பாறைக்கு போகச் சொல்லிவிட்டு, கையில் வைத்திருந்த சொம்பை ஓரமாக குதிரை அருகில் வைத்துவிட்டு, அங்கிருந்த தன் பெரிய கொடுவாளை எடுத்துவந்து முனியப்பனை கண்மூடி மனதார வேண்டிக்கொண்டு ஒரே வெட்டாக ஓங்கி கிடாவின் கழுத்தில் வெட்டினார். மறுநொடியே தலை வேறு உடல் வேறாகப் போய் விழுந்தது.
ஓடிப் போய் மாணிக்கத்தை கல்யாணமுருங்கை இலையில் கொஞ்சம் சோறு போட்டு எடுத்து வந்து செவடனிடம் தர சொன்னார் கவுண்டர். எடுத்து வந்ததும் வாங்கி, அதில் ஆட்டின் உடலிலிருந்து பீரிட்டு வந்த ரத்தத்தைப் பிடித்துப்போய் சாமிக்கு நேராக சூரப் புதர் ஓரமாக இருந்த துரிஞ்ச மரத்தடி கல்மீது வைத்துவிட்டு வந்தான் செவடன்.
வெட்டிய கொடுவாளைக் கீழே ஓரமாக வைத்துவிட்டு, மீதமிருந்த மஞ்சத்தண்ணியை அதன்மேல் ஊற்றிவிட்டு, சின்ன அன்னக்கூடையில் இருந்த தண்ணீரில் தன் இரு கைகளையும் கழுவிக்கொண்ட கவுண்டர், மேற்கால பக்க குதிரையிலிருந்து பேர்சொல்லாத்து கத்தும் சத்தத்தைக் கேட்டுவிட்டு, ”எப்பா, முனிப்பா…’’ எனச் சொல்லி கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு சாமியிடம் போனார்.
வெட்டிய கிடாவின் உடலையும் தலையையும் மாணிக்கத்தை துணைக்குக் கூட்டிக்கொண்டு தூக்கிப் போய் வரும் வழியில் இருந்த பெரிய பாறை மேல் ஓரமாக வைத்த செவடன், அதைத் தோலுரித்து வெட்ட வரச்சொல்லியிருந்த ஆட்களுக்காக அங்கேயே காத்திருந்தான்.
சாமியிடம் வந்து திருநீறு தட்டிலிருந்து பிடி எடுத்து பூரணியம்மாவின் கையில் படுத்துக்கொண்டு கண்மூடி எதையோ நினைத்து உதடசைத்து சிரித்துக்கொண்டிருந்த முருகனை எழுப்பச்சொல்லி அவன் தலையில் போட்டுவிட்டு நெற்றியில் பொட்டிட்ட கவுண்டர், எல்லோருக்கும் வரிசையாகப் பொட்டு வைத்துவிட்டு கடைசியாகத் தன் நெற்றியில் கை நிறைய அள்ளி தேய்த்து பூசையிட்டுக்கொண்டார்.
”எப்பா முனிப்பா… எப்பயும் எம்புள்ளிங்குளுக்கு நீதான்யா தொணயா இருந்து… நல்லவழி காட்டணும். என் சின்னப் புள்ளக்கி முருகன்னு பேரு வச்சிகீறன்… மொத மொத ஒன் கோயிலுக்குதான் தூக்கியாந்துகீறன். நீதான் கண்ணுங்கருத்துமா இருந்து அவனப் பாத்துக்கணுஞ் சாமி’’ என கையெடுத்துக் கும்பிட்டு, கண்மூடி வேண்டிக்கொண்ட கவுண்டர், சற்றுநேரம் கழித்து சாமி முன்னால் படையல் போட்டிருந்த இலைகளில் ஒன்றை மட்டும் விட்டுவிட்டு மற்ற நான்கையும் எடுத்து செல்வியிடமும் பூரணியம்மாவிடமும் ஆளுக்கொன்றை தந்துவிட்டு, ஒன்றை மாணிக்கத்தையும் ஏழுமலையையும் ஆளுக்குப் பாதி சாப்பிடச் சொல்லிவிட்டு, இன்னொன்றை எடுத்துப் போய் பாறையில் இருக்கும் செவடனிடம் தந்துவிட்டு வர சொன்னார்.
பின்னால் ஏரிக்கரையிலிருந்த உடைந்த மலவேப்ப மரத்திலிருந்து குயில் ஒன்று ‘க்கூ… க்க்கூ… க்க்கூ…’ என்று விட்டு விட்டுக் கூவும் சத்தம் கேட்டு பூரணியம்மாவின் மடியில் படுத்திருந்த முருகன் உதடசைத்து தானாய் சிரிப்பதைப் பார்த்து செல்வி, கவுண்டரிடம் காட்டக் கூப்பிட்டாள்.
”பாருடா இந்த ராஸ்கோலு பையன்… அதுக்குள்ள குயிலு கூவர்த்த கேட்டுனு சிரிக்கறத…’’
ஆசையாகப் பக்கத்தில் வந்து பார்த்துவிட்டு அவன் கன்னத்தில் செல்லமாகத் தொட்டுவிட்டுப் போன கவுண்டர், கொண்டுவந்த பொருட்களில் சுருட்டு, சாராயம், கருவாடை மட்டும் விட்டுவிட்டு, மற்றதையெல்லாம் கவனமாகப் பார்த்து எடுத்து புட்டுக்கூடையில் வைத்துக்கொண்டார்.
கடைசியாக அங்கிருந்து புறப்படும்போது, சாமியின் முன்னாலிருந்த கல்லின்மேல் வைத்து இன்னொரு தடவை கற்பூரம் ஏற்றிக் கும்பிட்ட கவுண்டர், புட்டுக்கூடையை தூக்கிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் எல்லோரையும் கிடுகிடுவென முன்னால் போகச்சொல்லிவிட்டு, நடந்து இருட்டுவதற்குள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
வெயில் கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டிருந்தது. பேச்சை அதோடு விட்டுவிட்டு இருவரும் கால்வாய் தோண்ட ஆரம்பித்தார்கள்.
மேலே நின்று கடப்பாரையில் குத்தி மண்ணை அசைத்து அசைத்து பேர்ப்பது செவடன் வேலை. கீழே பள்ளத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் அதை வாரி வாரி இருபக்கமும் வரிசையாகக் கொட்டுவது கவுண்டரின் வேலை.
இரண்டு மணி நேரம் தோண்டியிருப்பார்கள். மாணிக்கமும் ஏழுமலையும் ஆளுக்கொரு சொம்பில் நீசத்தண்ணீ எடுத்துக்கொண்டு நடுத்துண்டில் நடந்து வருவதைப் பார்த்துவிட்டு, கையில் வைத்திருந்த மண்வெட்டியை ஓரமாக மண்மேட்டில் வைத்துவிட்டு, ஏறி மேலே வந்தார் கவுண்டர். செவடனும் கடப்பாரையை மண்ணில் ஓங்கிக் குத்தி நிற்கவைத்துவிட்டு பக்கத்தில் வந்து கீழே உட்கார்ந்தான்.
ஆளுக்கொரு சொம்பை வாங்கி வறுத்த மோர் மிளகாயை கடித்துக்கொண்டு குடித்தவர்கள், காலி சொம்பை பிள்ளைகளிடம் தந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, விட்ட இடத்திலிருந்து திரும்பவும் தோண்ட ஆரம்பித்தார்கள்.
எண்ணி அரை மணி நேரம் கூட தோண்டியிருக்க மாட்டார்கள். அதற்குள் மாணிக்கமும் ராமு கவுண்டரின் மூத்த மகன் குப்புசாமியும் வெப்பால மர வழியாக இறங்கி, ‘ஐய்யா… ஐய்யா…’, ‘மாமா… மாமா…’ என கத்திக்கொண்டு ஓடி வருவதை பார்த்துவிட்டு, என்னமோ ஏதோ என பதறிப்போய் கையில் வைத்திருந்த மண்வெட்டியைக் கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார் கவுண்டர்.
[இன்னும்]
*