முரம்பு – 12

காகிதத்தில் தனித்தனியாக மடித்த மஞ்சள், சிவப்பு, கெதம்பொடி, திருநீறோடு வெற்றிலை பாக்கு, கற்பூரம், வத்தி, வெல்லம், பொரிகடலையும் காலி சொம்பும், வத்திப்பெட்டியும் வைத்து புட்டியில் எடுத்து வந்திருந்த தன் மச்சான் ராமு கவுண்டரின் மனைவி இசைவள்ளி கண்கலங்கியபடி வந்து வாசலில் நிற்பதைப் பார்த்துவிட்டு முத்துசாமிக் கவுண்டர் கேட்டார்.
”ஏன் என்னாச்சு வள்ளி… எதுக்கிப்டி மூச்சி வாங்க வந்துகீற…?’’
கவுண்டர் கேட்டதும் மென் சத்தத்தில் அழுத இசைவள்ளி, மெல்ல தன் புடவைத் தலப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு, ”சின்னவன் நேத்து பொசாயலருந்து காயலா கீறாண்ணா… ஒங்க மச்சானும் என்னலாமோ பண்ணிப் பாத்துட்டாரு… புள்ள எங்க எதப் பாத்து பயிந்தான்னு தெர்ல… அப்பப்ப ஒடம்பு வேற தூக்கித் தூக்கிப் போட்டு அய்வறான். அதான் மாணிக்கத்துகிட்ட தந்து பச்ச வச்சார சொல்வம்னு வந்தன்’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு பெரும் சங்கடமாக இருந்தது. தன்னால்தான் தன் மச்சான் ஊரிலிருந்த வீட்டைக் காலி செய்துகொண்டு மனைவி மக்களோடு கொல்லிக்குக் குடுத்தனம் வந்ததாகவும், யாருமில்லாத இந்த கொல்லிக்காட்டில் பிள்ளை எதையோ பார்த்து பயந்து காயலாகிவிட்டதாகவும், முழுக்க முழுக்க அதற்கு தான் மட்டுமே காரணம் என்றும் நினைத்துக்கொண்டு தாழ்ந்த குரலில், ”செரி வள்ளி, புள்ளிக்கி ஒண்ணும் ஆவாது பயுப்புடாத… மாணிக்கத்த கூப்டாறன் இரு’’ என்று சொல்லிவிட்டு, கட்டுத்தெரு வாசப்படியில் போய் நின்று கட்டிலில் ஏர் ஓட்டிய அசதியில் படுத்திருந்த மாணிக்கத்தைக் கூப்பிட்டார்.
தன் தந்தையின் குரல் கேட்டு எழுந்து வேகமாக வந்த மாணிக்கம், ”கூப்டியாய்யா…?’’ என்று கேட்டுக்கொண்டே வெளியில் வந்தான்.
‘ஆமாம்’ என தலையாட்டிய கவுண்டர், ”ஒன் அத்தக்காரி மவன் சின்னவன், காயலாகீறானாம்… நீயும் நள்ளுவனும் போயி காவாங்கரக்கா பச்ச வச்சாந்து கொடுங்க’’ என்று சொல்லி கூட்டிவந்து, வாசலில் நின்றுகொண்டு பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்த இசைவள்ளியிடமிருந்த புட்டியை வாங்கி மாணிக்கத்திடம் தந்தார்.
மகிழ்வோடு வாங்கிக்கொண்டு வீட்டின் பின்னாலிருந்த பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பீப்பி செய்து ஊதிக்கொண்டிருந்த ஏழுமலையைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு, மேற்கே காவாய்க்குப் போகும் ஒத்தையடிப் பாதையில் நடந்தான் மாணிக்கம்.
மெல்ல கோனாமூட்டு தென்னந்தோப்பு வழியாக காற்றில் அசையும் தென்னை ஓலைகளைக் கடந்து சூரியனின் மென் கதிர்கள் தொட நடந்து, காவாங்கரை புளியமர மேடேறி இடதுபக்கம் திரும்பி மண் பாதை வழியாக கொல்லியோரம் வரிசையாக இருந்த துரிஞ்சி வெப்பாலை புங்கை பனை ஆலம் எட்டி அவிஞ்சி மரங்களையும்… வலதுபக்கம் காவா ஒட்டிய மேட்டிலிருந்த கல்யாணமுருங்கை வேம்பு புளியம் எலந்தை பேத்தி மரங்களையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு கண்ணாறு அருகில் போய் நின்று அங்குள்ள காலியான இடத்தில் உண்ணிமில் புதர் ஓரமாக கொண்டுபோன புட்டியைக் கீழே வைத்துவிட்டு, அதிலிருந்த சொம்பை ஏழுமலையிடம் தந்து கண்ணாறில் போய் தண்ணீர் மொண்டு வர சொல்லிவிட்டு, காவா ஓரமாக இருந்த கல்கூண்டிலிருந்து சற்று நீட்டமாக இருக்கும் மூன்று சிறு கற்களாகப் பார்த்து எடுத்துவந்த மாணிக்கம், அதை கிழக்கு நோக்கி பார்ப்பதுபோல் ஓரிடத்தில் வரிசையாக நிற்கவைத்து, கொண்டுவந்த நீரை வாங்கி அவற்றின் மேல் ஊற்றி நன்றாகக் கழுவிவிட்டு, இன்னொரு தடவை சென்று நீர் மொண்டுவரச் சொன்னான்.
ஏழுமலை போய் கண்ணாறில் இறங்கி, புங்கை மர குளிர்நிழலில் தெளிந்த நீரில் தெரிந்த தன்முகத்தைப் பார்த்தும் பார்க்காமல் நீர் மொண்டுகொண்டு ஏறி வருவதற்குள், பக்கத்திலிருந்த சிறு வேப்ப மரத்திலேறி இரண்டு கொத்து வேப்பிலை உடைத்து வந்த மாணிக்கம், அதை ஓரமாக வைத்துவிட்டு, கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து கழுவிய மூன்று கல்லுக்கும் காகிதத்தில் மடித்து வைத்திருந்த மஞ்சள் தூளை எடுத்து கையில் கொட்டி சிறிது நீர்விட்டு குழப்பி பொட்டுவைத்து, அதன்மேல் ஈரம் காய்வதற்குள் சிவப்பிட்டு கெதம்பொடி தூவிவிட்டான்.
பின்னர் உடைத்து வந்த வேப்பங் கொத்தை எடுத்து பொட்டு வைத்த கற்களின் முன்னால் கீழே பரப்பி வைத்துவிட்டு, அதன்மேல் வெற்றிலை பாக்கையும், சொம்பு நீரில் வெல்லத்தை சிறுசிறு துண்டாக உடைத்துப் போட்டு கலக்கிவிட்டு பொரிகடலை கொட்டி செய்த பானகத்தையும், திருநீறு மடித்து வைத்திருந்த காகிதத்தை அப்படியே பிரித்தும் வைத்துவிட்டு எழுந்த மாணிக்கம்… கற்பூரத்தையும் வத்தியையும் முதலில் ஏற்றிவிட்டு, தேங்காயை எரியும் கற்பூரத்தில் ஒருதடவை காட்டிவிட்டு போய் பக்கத்திலிருந்த கருங்கல்லில் தட்டி இரண்டாக உடைத்து அதன் குடுமியை அடியோடு பிய்த்துப்போட்டுவிட்டு வந்து, வேப்பிலைமேல் வெற்றிலை பாக்குக்கு இருபக்கமும் பக்கத்துக்கொன்றாய் வைத்து கைகூப்பிக் கும்பிட்டு, கண்மூடி உடல்நலம் சரியில்லாத தன் அத்தை மகனுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் என மனதார வேண்டிக்கொண்டான்.
கற்பூரம் அணையும் வரை காத்திருந்தவர்கள், அணைந்ததும் சொம்பில் கரைத்து வைத்திருந்த பானகத்தில் ஒரு மிடரை தரையில் ஊற்றிவிட்டு, மீதத்தை ஆளுக்குப் பாதியாகக் குடித்துவிட்டு, காலி சொம்பை வத்திப்பெட்டியுடன் பிரித்து வைத்திருந்த திருநீறை அப்படியே மடித்து திரும்பவும் புட்டியில் வைத்துக்கொண்டு, உடைத்த தேங்காய் மூடியில் ஆளுக்கொன்றாகக் கையில் எடுத்து கரண்டித் தின்றுகொண்டு, கிடுகிடுவென திரும்பிப் பார்க்காமல் நடந்து புளியமர மேட்டு நிழலில் வந்து நின்றார்கள்.
ஊரில் யாருக்கு உடம்பு சரியில்லை என்றாலும் அதற்கான காரணத்தை யோசித்துப் பார்ப்பார்கள். எதுவும் பிடிபடவில்லை என்றால், நிச்சயம் அது எதையோ பார்த்து பயந்ததால்தான் வந்ததாக முடிவெடுத்து, ஊரிலிருக்கும் பருவாரத்தில் இரண்டு மூன்று பேரை கூப்பிட்டு அவர்களிடம் வேண்டிய பொருட்களை வாங்கித்தந்து பச்சை வைத்துவர சொல்வார்கள். அவர்களும் பானகமும் தேங்காயும் கிடைக்கும் சந்தோசத்தில் போய் வைத்துவிட்டு வந்து திருநீறு தர, அத்திருநீறை உடல்நிலை சரியில்லாதவரின் தலையில் செத்த போட்டுவிட்டு, நெற்றியிலும் கழுத்திலும் தடவிவிட்டால் போதும் உடனே சரியாகிவிடும் என்பது மூத்தோர் நம்பிக்கை.
அதிலும் ஈராண்டுகளுக்கு முன், அல்லாகோயில் தெரு சாயினா பாட்டி, தன் பத்து வயது பேத்தி ஃபர்ஜானா எதையோ பார்த்து பயந்துபோய் காயலாகக் கிடப்பதாக வந்து கவுண்டரிடம் சொன்னபோது… பச்சை வைக்கத் தேவையான பொருட்களை வாங்கிவரச் சொல்லி அவற்றை மாணிக்கத்திடம் தந்து, போய் பச்சை வைத்துவர சொன்னார்.
அவனும் பருவாரம் இருவரை செட்டு சேர்த்துக்கொண்டு ஆத்தங்கரையோர புளியமரம் தாண்டிப் போய் பீவேல மரக் காட்டில் பச்சை வைத்துவிட்டு வந்து திருநீறை பாட்டியிடம் தர, மகிழ்வோடு பெற்றுக்கொண்டு கண்கள் இடுங்க முன்பற்களும் ஈரும் தெரிய சிரித்து, ”நல்லாரு பைய்யா’’ என்று சொல்லி அனுப்பினார்.
சட்டென எதையோ உள்ளூர நினைத்த மாணிக்கம், அங்கிருந்து நேராக புள்ளாகோயில் வில்வ மரத்தடியில் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்துக்கொண்டிருந்த தன் தந்தையிடம் சென்று, ”ஏன்யா யார்க்குனா ஒடம்பு சரில்லனா போயி பச்ச வச்சார சொல்றாங்க…?’’ என்று கேட்டான்.
மெல்ல தலை உயர்த்தி மாணிக்கத்தைப் பார்த்து அவன் கேட்ட கேள்விக்கான பதில்போல் உதடுகுவித்து சிரித்துவிட்டு கவுண்டர் சொன்னார். ”எங்கனா எதனா பாத்து பயிந்துகியிந்து போயி காயலு வந்தவுங்குளுக்கு… ஊரவுட்டு எட்டிகீற கொல்லிக்காட்டுல மட்டமத்தியானத்துல போயி பச்ச வச்சம்னா… எதப் பாத்து அவுங்க பயிந்தாங்களோ, அதுக்கே நாம வக்கற பச்ச போய் சேருன்னு சொல்வாங்க. அப்டி சேந்ததும் சந்தோசப்பட்டு அவுங்கள வுட்டுப் போயிடும்… அதாலதான் பச்ச வக்கிறம்.’’
கேட்ட மாணிக்கத்துக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே மனத்தில் இன்னொரு கேள்வியும் உதித்தது. நொடியும் தாமதிக்காமல் கேட்டான்.
”நம்ம குடியானவுங்குளுக்கு செரிய்யா… துலுக்கருதான் திர்நூறுலாம் வக்க மாட்டாங்களே… அவுங்குளுக்கு ஏன்யா என்ன போயி பச்ச வச்சார சொன்ன…?’’
மாணிக்கம் கேட்ட கேள்வியைத் தனக்குள் ஒருதடவை சொல்லிப்பார்த்து சிரித்துக்கொண்டு, கிழே குனிந்து பக்கத்திலிருந்த சுள்ளி விறகில் இரண்டை எடுத்து உடைத்து எரியும் அடுப்புக்குள் வைத்துவிட்டு தலை நிமிர்த்தி, ”இந்த சாதி மயிரு மட்டலாம் நம்மளமாரி ஈனங்கெட்ட மனுசங்குளுக்குதான… எந்த பேயி பிசாசுங்குளுக்கும் இல்லயே…?’’ என்று சொல்லிவிட்டு எதையோ யோசித்தவர், ”துலுக்கரு நம்மளமாரி திர்நூற நெத்தில வக்கலனா என்ன… ரவ தண்ணில போட்டு குடுப்பாட்டனா போரும், சரியாப்புடப்போது’’ என்றார்.
தன் கேள்விக்குத் தக்க விடை கிடைத்த மகிழ்ச்சியில் உதடுகூட்டி பல் தெரியாமல் சிரித்த மாணிக்கம், இதுவரை தான் பருவாரத்தோடு கூடிக்கொண்டு போய் வைத்துவிட்டு வந்த ஏழெட்டு பச்சைகளையும், அதனால் உடல்நிலை சரியானவர்களையும் தன் மன அடுக்கில் ஓட்டிப் பார்த்துக்கொண்டே நடந்து வீட்டுக்கு வந்தான்.
மேகக்கூட்டம் சட்டென்று மலைபோல் கூடிநின்று செத்தநேரம் சூரியனை மறைத்திருந்தது. சுற்றிலும் ஓரமாக கரண்டித் தின்றிருந்த தேங்காய் மூடியை அங்கிருந்த பெரிய கல்லின் மீது பின்பக்கமாக ஓங்கி வேகமாகத் தட்டி சின்னச் சின்னதாக உடைத்தெடுத்து ஒவ்வொன்றாகத் தின்றுகொண்டு, கோனாமூட்டு தென்னந்தோப்பு வழியாக நடந்து நேராக கவுண்டரின் மச்சான் வீட்டுக்குப் போய், தாழ்வாரத்தில் மணக்கட்ட போட்டு உட்கார்ந்து மோர் சிலிப்பிக்கொண்டிருந்த இசைவள்ளியிடம் திருநீறையும் காலிசொம்பையும் வத்திப்பெட்டியையும் வைத்திருந்த புட்டியைத் தந்துவிட்டு, பக்கத்தில் துப்பிட்டியை நான்காக மடித்து அதன்மேல் படுக்கப் போட்டிருந்த ரவியையும் ஓர் எட்டு பார்த்துவிட்டு வேகமாக ஓடி கட்டுத்தெருவுக்கு வந்தார்கள் மாணிக்கமும் ஏழுமலையும்.
கட்டுத்தெரு மூலையில் சாக்குப்பை விரித்துப் போட்டு உட்கார்ந்து சிறு சட்டி, ஊதாங்கோல், டிப்பிடிப்பி, வர்ணக்கோல், பம்பரம், கொய்யாங்கல் எல்லாம் வைத்து பக்கத்தில் படுத்திருந்த கன்னுக்குட்டியோடு பேசிக்கொண்டு முருகன் தனியாக விளையாடிக்கொண்டிருந்தான்.
பச்சை மீது மாணிக்கத்துக்கு நம்பிக்கை இருப்பதுபோல் ஏழுமலைக்கு இல்லை என்றாலும், அதை பானகத்திற்காகவும் தேங்காய்க்காகவும் செய்த சிறு வேலையாக நினைத்து அதோடு மறந்துவிட்டு, கட்டுத்தெரு கட்டிலில் போய் படுத்துக்கொண்ட மாணிக்கத்தின் பின்னாலேயே தானும் சென்று, பின்னிய தென்னங்கீற்றை எடுத்துப் போட்டு சற்று தள்ளி கீழே படுத்துக்கொண்டான்.
செத்த நேரம் கண்ணயர்ந்து தூங்கியவர்கள், மெல்ல எழுந்து பூரணியம்மா கொண்டுவந்து பக்கத்தில் டீப்பனியில் வைத்துவிட்டுப் போயிருந்த கம்மங்கூழில் ஆளுக்கொரு சொம்பு ஊற்றி வெங்காயம் கடித்துக்கொண்டு குடித்துவிட்டு, வெயில் தாழும் வரை உட்கார்ந்தும் படுத்தும் கதைகள் பேசிக்கொண்டிருந்துவிட்டு, தாழ்ந்ததும் மாட்டைப் பிடித்துக்கொண்டு கொல்லிக்குப் போய் அங்கே கிழக்கே முடியனூரான் கொல்லி மொடக்கில் செவடனுடன் சேர்ந்து காவா தோண்டிக்கொண்டிருந்த தன் தந்தையை கத்திக் குரல் கொடுத்து கூப்பிட்டார்கள்.
மாணிக்கமும் ஏழுமலையும் மாட்டைப் பிடித்துக்கொண்டு அந்தி ஏர் ஓட்ட வந்திருப்பதைப் பார்த்த கவுண்டர், ”இருடா செவடா… போயி ஏரு பூட்டி புள்ளிங்ககிட்ட வுட்டுட்டு வர்றன்’’ என்றதும், ”இல்ல கவுண்ர… நீங்க போயி ஏரு ஓட்டுங்க. புள்ளிங்க தனியா ஓட்ட மாட்டாங்க’’ என்று சொல்லி அவரை அனுப்பிய செவடன், தனியாக கடப்பாரையில் முதலில் சிறிது தூரம் குத்தி மண்ணைப் பேர்த்துவிட்டு வந்து, பிறகு மண்வெட்டியால் அதை அள்ளிப் போட்டென சிறுகச்சிறுக கால்வாய் தோண்டிக்கொண்டிருந்தான்.
கவுண்டருக்கு ஒருபக்கம் தான் நினைத்தது நிஜமாகப் போவது குறித்து சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் செவடன் மட்டுமே தனியாக கஷ்டப்பட்டு கால்வாய் தோண்டுவது நினைத்து சங்கடமாகவும் இருந்தது. அதையே நினைத்தபடி வந்தவர், காலையில் போன்று இரண்டு ஏர் பூட்டி ஒன்றை மாணிக்கத்திடம் தந்துவிட்டு இன்னொன்றை தான் ஓட்ட, பின்னாலேயே ஆங்காங்கே கிடந்த பெரிய பெரிய பூண்டுகளையும் கற்களையும் பார்த்து எடுத்துப் போய் வேலியோர மரிசி மீது கும்பலாகப் போட்டான் ஏழுமலை.
கையெழுத்து மறைவதற்குள் வேக வேகமாக அடுத்த மூன்று துண்டையும் ஓட்டி முடித்து, ஏர் கலப்பையை அங்கேயே ஓரமாக வேப்ப மரத்தடியில் போட்டுவிட்டு, மாட்டை மாணிக்கத்திடமும் ஏழுமலையிடமும் பிடித்துக்கொண்டு கட்டுத்தெருவுக்குப் போகச்சொன்ன கவுண்டர், அவிழ்த்து மரத்தின் கீழ்க் கிளையில் வைத்திருந்த தன் சோமத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு எதிர்திசையில் நடந்து செவடனிடம் போனார்.
ஊர் அல்லாகோயிலில் மாலை ஆறு மணி அஜ்ஜான் கூவும் சத்தம் காற்றுவாக்கில் கேட்டது. சரியாக அதேநேரம், சேவி கவுண்டரும் மாரி தாத்தாவும் ஆடுகளை முடியனூரான் கொல்லி மொடக்கு தாண்டி ஓட்டிப்போனார்கள்.
தலையில் வெண்ணிற தலப்பா கட்டிக்கொண்டு யாரோ செவடனிடம் சத்தமாகப் பேசிவிட்டுப் போவது தெரிந்தது. பக்கத்தில் போன கவுண்டர், தவுலத்கான் சாயுபு கொட்டா தாண்டி நடந்துபோகும் தலப்பாக்காரரைக் காட்டி, ”யாருடா செவடா, அது…? பாத்தா முடினூரான் மாரி தெரிது’’ என்று கேட்டார்.
‘ஆமாம்’ என தலையாட்டிய செவடனின் முகம் ஒருமாதிரி வாட்டமாக இருப்பதைப் பார்த்த கவுண்டர், ”ஏன் என்னாச்சு, செவடா…? மொகம்லாம் ஒருமாரி கீது’’ என்று கேட்டதும், ‘சொல்லலாமா வேணாமா?’ எனும் தயக்கத்தோடு சொன்னான்.
”முடினூராரு வந்து ஏன் எதுக்குன்னு கேக்காம… ஏன்டா நாயே, யாருவூட்டு கொல்லில வந்து நோண்டினு கீறன்னு… வாய்ல வந்தமாரி கேட்டாரு கவுண்ர’’ என்றவன் சிறிதுநேரம் மெளனித்து, ”அப்பறம் கவுண்ரூட்டு கொல்லிக்கு காவா தண்ணி போவ… கவுண்ரு சொல்லிதான் நோண்றன்னு சொன்னதுக்கப்றம்தான்… எதுவும் போசாம கம்முனு போறாரு” என்றான்.
கேட்ட கவுண்டருக்கு சுர்ரென கோபம் வந்தது. ‘இந்த முடினூரானுக்கு எம்மாம் அதப்பிருந்தா… வந்து செவடன வாய்ல வந்தமாரி கேட்டிருப்பான். அடுத்தவாட்டி மட்டும் என் கண்ல படட்டும்… அவன உண்டில்லன்னு ஆக்காம வுடமாட்டன்’ என தனக்குள் சொல்லிக்கொண்டவர், மெல்ல குரலைத் தாழ்த்தி செவடனிடம் சொன்னார்.
”வுடு செவடா… அவன்தான் புத்திகெட்டுப்போயி எதோ சொல்லிட்டான். மலயப் பாத்து நாயி கொலச்சதுன்னு வுட்டுட்டு ஏன்ச்சி வா… பொய்து போச்சுப்பாரு, வூட்டுக்குப் போவலாம்.’’
கவுண்டர் சொன்னதைக் கேட்டு தன்னுள்ளே புன்னகைத்துக்கொண்ட செவடன், தோண்டிய சிறுதூர கால்வாயை ஒருதடவை திரும்பிப் பார்த்துவிட்டு கடப்பாரையையும் மண்வெட்டியையையும் எடுத்துக்கொண்டு மெதுவாக மேலே ஏறி வந்தான்.
பக்கத்தில் போன கவுண்டர் செவடன் கையிலிருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ”ஏன்டா செவடா தனியா வந்து கஷ்டப்படறவன்… நாளிலருந்து நானும் கூட வர்றன்… வேணும்னா என் மச்சாங்காரனயும் புள்ளிங்களயும் கூப்டுக்கலாம்’’ என்றார்.
கேட்டுவிட்டு பழுத்தங்காய் வெடிப்பது போல் சிரித்த செவடன், ”கஷ்டன்னு நானு சொன்னனா கவுண்ர…? என் சாமிக்கு செய்றத நானு சந்தோசமா செய்யிறன்’’ என்றான்.
மகிழ்ச்சியில் கண்கலங்கிய கவுண்டர், ”அதில்ல செவடா… நானும் கூடருந்தா ஒனுக்கு தெம்பாருக்கும்ல… அதான் சொன்னன்’’ என்றார்.
”அதெல்லாம் செரிதான் கவுண்ர… நீங்க ஏரு ஓட்டி பயிரு போட்ற வேலயப் பாருங்க… நானு காவா நோண்ற வேல பாக்கறன்’’
சருகுகள் சலசலப்பது போல் செவடன் சொன்னதும், ”இன்னிக்கி நானும் மாணிக்கமும் கூடினு ஒருசாலு ஓட்டிட்டம். நாளிக்கி வுட்டு நாளான்னிக்கி இன்னொரு சாலு ஓட்டி பயிரு போட்ருவம்’’ என்ற கவுண்டர், ”நீ என்ன சொன்னாலும் செரி செவடா… நாளிக்கி காலில நானும் வருவன்’’ என்று சொல்லிவிட்டு இருளில் தெரிந்த சின்னஞ்சிறு வெளிச்சத்தில் வெப்பால மர வழியாக நடந்து கவுண்டர் முன்னாலும் செவடன் பின்னாலும் வீட்டுக்கு வந்தார்கள்.
கடப்பாரையை கட்டுத்தெரு ஓரமாக கீழே படுக்க வைத்துவிட்டு செவடன் தன் வீட்டுக்குப் புறப்பட்டதைப் பார்த்து நிற்கச்சொன்ன பூரணியம்மா, வீட்டுக்குள் போய் சின்ன டீப்பனியில் சுடுசோறும் குழம்பும் போட்டுவந்து தந்தனுப்பினார்.
கவுண்டர் மண்வெட்டியை வீட்டோரமாக வைத்துவிட்டு, சாக்கடையில் போய் கை கால் முகம் கழுவிக்கொண்டு வந்து வாசலில் உட்கார்ந்து முருகனிடம் பேசிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் கேட்டார்.
”ஏன் பூர்ணி… என் மச்சான் மவுனுக்கு, காயலு எப்டிகீதுன்னு செத்த ஒரு எட்டு போயி பாத்துனு…’’
கவுண்டர் முடிக்கும் முன்னமே, ”இப்பதான் ஒங்க மாச்சாரு வந்து புள்ளக்கி ரவ மாதிரியா கீதுன்னு சொல்ட்டு… சின்ன பாரக்குச்சி எடுத்துனு போனாரு தே’’ என்றார் பூரணியம்மா.
திசைகள் தெரியாத அளவுக்கு வானம் இருள் கவிந்து கோலப்புள்ளி போல் நட்சத்திரங்கள் ஆங்காங்கே ஒளிர ஆரம்பித்திருந்தன. நடுவீட்டுக்குள் வட்டமாக உட்கார்ந்து சீமெண்ணை விளக்கு வெளிச்சத்தில் செல்வி முதல்தடவையாக வைத்திருந்த நெத்திலி கருவாட்டுக் குழம்பை சுடுசோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டுவிட்டு, வெளியில் வந்து வாசலில் உட்கார்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு படுக்கப் போனார்கள்.
செல்வியும் முருகனும் ஏழுமலையும் பூரணியம்மாவுடன் வீட்டுக்குள் படுத்துத் தூங்க, மாணிக்கம் கட்டுத்தெருவில் இருந்த கட்டிலைத் தூக்கி வந்து வாசலில் கவுண்டரின் கட்டில் பக்கத்தில் போட்டுப் படுத்துக்கொண்டான்.
”அண்ணா… அண்ணா… ஏன்ணா என்கூட வெளாட வரமாட்ற…?”
வேப்ப மரத்தடியில் விழுந்து கிடந்த வேப்பம் பழங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி சாப்பிட்டுக்கொண்டிருந்த முருகனுக்கு சட்டென்று ஒரு குரல் கேட்டது. இதுவரை கேட்டிராத புதுக்குரல். எனினும் மனத்திற்கு மிக நெருக்கமான குரல்.
”முருகண்ணா… முருகண்ணா… என்னப் பாருண்ணா… தோ, இங்க நிக்கறன் பாருண்ணா…”
யாரோ அவன் பெயர் சொல்லி கூப்பிட்டார்கள். மெல்ல திரும்பி குரல் வந்த திசையில் பார்த்தான். யாரும் இல்லை. ஆனால் யாரோ இருப்பது போன்ற உணர்வு இருந்தது அவனுக்குள்.
”முருகண்ணா… முருகண்ணா… நானிங்க கீறது ஒனுக்கு தெர்லயாண்ணா…?”
குரல் மெல்ல மெல்ல உடைந்தது. கையில் வைத்திருந்த வேப்பம் பழத்தை கீழே போட்டுவிட்டு ஒவ்வொரு அடியாக முன்னால் எடுத்துவைத்து நடந்து போனான்.
”முருகண்ணா… முருகண்ணா… நானுதான் இங்க நிக்கிறனேணா… ஏன்ணா என்னப் பாக்காம நீ பாட்டுனு போயினே கீற…?’’
உள்ளம் நடுங்கியது முருகனுக்கு. சுற்றிலும் பார்த்தான், யாரும் இல்லை.
”தோ, பாருண்ணா… முருகண்ணா… ஒன் முன்னாலதான் நிக்கறன்… இங்க பாருண்ணா… இங்க… இங்க…’’
இப்போதுதான் கவனித்தான். குரல் வந்தது அவன் தம்பியின் உடலைப் புதைத்த இடத்திலிருந்து. மண்ணில் வேர்பற்றித் துளிரிலை விட்டிருந்த வேப்பங்கன்றிலிருந்து.
திடுமெனத் தூக்கிப்போட்டது முருகனுக்கு. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டான். பக்கத்தில் படுத்திருந்த பூரணியம்மா என்னாச்சோ ஏதாச்சோ என பதறிப்போய் எழுந்து, ”எப்பா சாமி… என்னடாய்யா…? ஒண்ணுல்லடா… என் சாமில்ல… படுத்துத் தூங்குடாய்யா… தூங்கு…’’ என்று தன் மடியில் படுக்கவைத்து தட்டிக்கொடுத்தார்.
அழுதுகொண்டே திரும்பவும் எழுந்து உட்கார்ந்த முருகன், ”அவன் என்ன அண்ணா அண்ணான்னு கூப்டான்’’ என்றான்.
கேட்ட பூரணியம்மாவுக்கு அவன் யாரைச் சொல்கிறான், என்ன சொல்கிறான் எதுவும் புரியவில்லை.
உடனே, ”யாருடா முருகா… ஒன்ன அண்ணான்னு யாரு கூப்டது…?’’ என்று கேட்டார்.
”அவன்தாம்மா, தம்பி… நம்ம தம்பி’’ அழுகையை அடக்கமுடியாமல் நா தழுதழுக்க அழுதுகொண்டே சொன்னான்.
”யாரு… நம்ம தம்பியா…?’’ பூரணியம்மா அதிர்ச்சி தாளாமல் கேட்டதும், ”ஆமாம்மா… நம்ம தம்பிதான்’’ என்றான் முருகன்.
உடல் நடுங்கியது பூரணியம்மாவுக்கு. என்ன செய்வதெனத் தெரியாமல் முருகனைத் தூக்கிக்கொண்டு வேகமாக வெளியில் வந்து கட்டிலில் படுத்திருந்த கவுண்டரை, ”ஏந்தே… ஏந்தே…’’ என்று எழுப்பி கண்கலங்கி ஈரக்குரலில் சொன்னார்.
கேட்டுவிட்டு கண்கள் விரிய முருகனைப் பார்த்த கவுண்டர், ”எய்யா சாமி… அதலாம் ஒண்ணுல்லயா… போயி படு சரியாப்புடும்’’ என்றார்.
குரல் விக்கித்து அழுதுகொண்டிருந்த முருகன், ”நானு கேட்டன்யா… தம்பி என்கூட பேசனான்… முருகண்ணா முருகண்ணான்னு சொல்லி, என்ன வெளாட வான்னு கூப்டான்’’ என்றான்.
”அதலாம் சும்மாடா சாமி… போயி அம்மாக்காரி கூட படுத்துத் தூங்கு… காலில ஏன்ச்சதும் போயி தம்பியப் பொதச்ச எடத்துல பாப்பம், செரியா’’ என்றார் கவுண்டர்.
”இல்லய்யா இப்பயே பாக்கணும்… அவன் என்ன கூப்டான்… பொதச்ச எடத்துல நின்னுனு கூப்டான்… முருகண்ணா முருகண்ணான்னு கூப்டான்… அவுனுக்கு தனியாகீறது பயிமாகீதுன்னு சொன்னான்… இப்பயே போவ்னும்… தம்பி பாவம்… அங்கதான் நின்னுனுகீறான்… என்ன முருகண்ணா முருகண்ணான்னு கூப்புட்றான்… நானு போவ்னும்…’’
திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிச் சொல்லி அழுதான் முருகன்.
எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். அவன் கேட்பதாக இல்லை. வேறு வழி தெரியாத கவுண்டர், ”செரி, இப்பென்ன… ஒனுக்கு தம்பிய போயி பாக்கணும், அதான…? அங்கமட்டும் அவன் இல்லனா அடம்புடிக்காம என்கூட வூட்டுக்கு வந்து படுத்துத் தூங்கணும், செரியா…?’’ என்று கேட்க, முருகன் ‘சரி’ என தலையாட்டியதும், ”வா, போயி பாப்பம்’’ என்று சொல்லிவிட்டு எழுந்த கவுண்டர், பூரணியம்மாவை வீட்டுக்குள் போய் படுக்கச் சொல்லிவிட்டு முருகனை ஒரு கையால் தூக்கி மாரோடு இறுக அணைத்துக்கொண்டு, இன்னொரு கையில் ராந்தல் எடுத்துக்கொண்டு மெதுவாக முரம்புக் கொல்லிக்கு நடந்தார்.
வெப்பால மரம் வழியாக மெல்ல இறங்கி நடந்து மேட்டுத் துண்டு மரிசி மீது குழந்தையைப் புதைத்த இடத்தருகில் போய் பார்த்ததும் கவுண்டருக்கு தன்னையறியாமல் கண்கள் இரண்டும் சட்டென்று கலங்கி சாரை சாரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
[இன்னும்]
*