முரம்பு – 11

செல்விதான் முதலில் பார்த்தாள். அதுவும் கட்டுத்தெருவுக்குள் இருந்தவர்களுக்கு காய்ச்சிய பாலை எடுத்துப்போய் சொம்பில் ஊற்றித் தந்துவிட்டு வெளியில் வரும்போது, கருப்பு மாடு கட்டியிருந்த முளைக்குச்சியைப் பிடுங்கிக்கொண்டு கொல்லிக்குள் ஓடுவதைப் பார்த்துவிட்டு உள்ளே உட்கார்ந்திருந்த மாணிக்கத்தை, ”எண்ணா… எண்ணா… இங்க கொஞ்சம் வாண்ணா’’ என்று கூப்பிட்டாள்.
தான் கூப்பிடக் கேட்டு வேகமாக எழுந்து வெளியில் வந்த மாணிக்கத்திடம் கிழக்காலப் பக்கம் கொல்லியைக் காட்டி, ”அங்க பாருண்ணா… நம்ம கருப்புச்சி வேகமா அவுத்துனு எங்கயோ ஓடுது…’’ என்று செல்வி சொன்னதும் எட்டிப் பார்த்தான்.
நடுத்துண்டு மரிசியோரமாக ஓடி, மேட்டுத் துண்டு மரிசியில் நேற்றிரவு தன் தம்பியை புதைத்துவிட்டு வந்த இடத்தில் சரியாகப் போய் நின்றது மாடு.
மாணிக்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. ‘மாடெதுக்கு அங்க போயி நிக்குது…? இந்நேரம் பாத்து ஐயா வேற இல்லாமப் போய்ட்டாரு… செவடன் இருந்திருந்தாலாவது பரவால்ல’ என்று நினைத்தவன், சட்டென கட்டுத்தெருவுக்குள் போய் அடுக்கிவைத்திருக்கும் விறகுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, மெல்ல ஊதிஊதி பால் குடித்துக்கொண்டிருந்த பேராமுட்டா கிழவியிடம் சொன்னான்.
”நல்லா பாத்தியா கண்ணு… அங்கதான் போயி நிக்கிதா…?’’ உறுதிசெய்ய பேராமுட்டா கிழவி கேட்டார்.
”ஆமா பாட்டி, நல்லா பாத்தன்… அங்கதான் போயி நிக்குது’’ மாணிக்கம் உறுதியாகச் சொன்னான்.
சிலநொடி யோசித்தவர், ”செரி கண்ணு… நீயும் ஒன் தம்பிகாரனும் அசாம போயி என்ன பண்ணுதுன்னு பாருங்க… பின்னாலயே நானும் என் பேத்திகாரியும் வர்றம்’’ என்றார்.
”செரி பாட்டி’’ என்றுவிட்டு, தன் தம்பி ஏழுமலையைக் கூட்டிக்கொண்டு சத்தம் போடாமல், அதேநேரம் கொஞ்சம் வேகமாக வெப்பால மர வழியாக மேற்குத் துண்டில் இறங்கி நடந்து நடுத்துண்டு மரிசியில் போய் நின்று பார்த்தான்.
சரியாக மாடு குழந்தையைப் புதைத்த இடத்தின் அருகில் போய் நின்று மண்மேட்டையும், நடுவில் நட்ட சிறு வேப்பங் கன்றையும் பார்வையைப் பொட்டும் திருப்பாமல் பார்த்துக்கொண்டிருந்தது.
அதற்குள் கொட்டாவுக்குப் போன செல்வி, முருகனை எழுப்பி உட்காரவைத்து அவனுக்கு ரோட்டா சொம்பில் தந்துவிட்டுப் போன பாலை குடிப்பாட்டிக்கொண்டிருந்த பூரணியம்மாவிடம் விஷயத்தைச் சொல்ல, என்ன நினைத்தாரோ… சட்டென்று எழுந்து வெளியில் வந்தார்.
அதேநேரம் பேராமுட்டா கிழவியும் அவரது பேத்தியும் குடித்துக்கொண்டிருந்த பாலை அப்படியே ஓரமாக வைத்துவிட்டு, அதனுள் பூச்சிபொட்டு எதுவும் போகாமல் இருக்க கட்டில்மேல் மடித்துவைத்திருந்த கவுண்டரின் துண்டை எடுத்து மூடிவிட்டு, கட்டுத்தெருவின் முன்னால் வந்து நின்று முரம்புக் கொல்லியை பார்த்துக் கொண்டிருக்க, உடல் வலியோடு மெதுவாக நடந்து அவர்கள் பக்கத்தில் போய் நின்றார் பூரணியம்மா.
முன்னிரவு பதினொரு மணி இருக்கும். பூரணியம்மா கட்டியிருந்த புடவையைக் கூட மாற்றாமல் அப்படியே போய் கொட்டா நெடுங்காலில் சாய்ந்தவர், கட்டைபோல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு மனம் கேட்காமல் எழுந்து வந்த கவுண்டர் கட்டுத்தெருவில் இருந்த பேராமுட்டா கிழவியிடம், ”கொட்டாவுள்ளார கீற அட்டண மேல மாத்துப்பொடவ வச்சிகீறா பூர்ணி… செத்த போயி எடுத்துக் கட்டிவுடுங்க… புள்ளபெத்தவ ரத்தக்கற பொடவயோட பாவம் எம்மாந்நேரந்தான் ஒக்காந்துனுருப்பா…’’ என்று கண்கலங்கச் சொல்லி அனுப்பிவைத்தார்.
கேட்ட பேராமுட்டா கிழவி, தானும் கண்கலங்கி தன் பேத்தியைக் கூட்டிக்கொண்டு எட்டி வேகமாகப் போய், அட்டணையில் இருந்த மாத்துப் புடவையில் பச்சை பூ போட்ட புலுவாயில் புடவையை எடுத்துக் கட்டிவிடப்போனதும் வேண்டாமென மறுத்த பூரணியம்மாவை, எப்படியோ பேசி சம்மதிக்கவைத்து கட்டிவிட்டு வந்தார்கள். அதன்பிறகுதான் கவுண்டரோடு சேர்ந்து கட்டுத்தெருவில் இருந்த முருகன் கொட்டாய்க்குப் போய் தன் அம்மா மடியில் படுத்துக்கொண்டது.
பூரணியம்மாவை அங்கே சற்றும் எதிர்பார்த்திடாத பேராமுட்டா கிழவிக்கு, அவர் அங்கு வலியோடு நடக்கமுடியாமல் நடந்து வந்து நின்றதைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டது. சட்டென தன் புடவை தலப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டு, ”நீ ஏந்தாயி… இந்த பனில ஏன்ச்சி வெளிய வந்த…? போயி உள்ள ஒக்காரு… நானும் என் பேத்தியும் போயி என்னனு பாத்துனு வர்றம்’’ என்றார்.
கேட்ட பூரணியம்மா மெல்ல முறுவலித்து, ”அதலாம் ஒண்ணுல்லம்மா… நானு நல்லாதான் கீறன்’’ என்று சொல்லிவிட்டு முன்னால் நடக்க, அவர் பின்னாலேயே பேராமுட்டா கிழவியும் அவரது பேத்தியும் நடந்து போனார்கள்.
தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்து பால் குடித்துக் கொண்டிருந்த முருகன், பசியில் முழுப் பாலையும் குடித்துவிட்டு சொம்பை டம்மென கீழே போட்டுவிட்டு தன் அம்மாவைத் தேடி வெளியில் வர, அவனைக் கூட்டிக்கொண்டு அவர்கள் பின்னாலேயே செல்வி நடந்தாள்.
குழந்தையைப் புதைத்த இடத்தையும் அதன் நடுவில் நட்டிருந்த வேப்பங் கன்றையும் பார்த்துக்கொண்டிருந்த கருப்பு மாட்டை, நடுத்துண்டு மரிசியில் நின்று என்ன செய்கிறதென போனவர்கள் பார்க்க, பின்னால் வேகமாக ஓடிவந்த கவுண்டரும் செவடனும் அவர்களிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் கடந்து மாட்டிடம் போனார்கள்.
அங்கே குழந்தையைப் புதைத்திருந்த மண்மேடு ஒருபக்கம் லேசாக தோண்டப்பட்டிருப்பதை பார்த்த கவுண்டருக்கு பகீரென்றது. பக்கத்தில் போய் உட்கார்ந்து பார்த்ததும் புரிந்துகொண்டார். அது காட்டுப்பன்றி தோண்டியது, அதுவும் சற்று முன்னர்தான்.
பக்கத்திலிருந்த செவடனைப் பார்த்து கவுண்டர், ”என்னமோ பொதச்சிகீறாங்கன்னு காட்டுப்பன்னி வந்து நோண்டறத… எப்டியோ மாடு தெரிஞ்சிக்கினு, அங்கருந்து ஓடியாந்துகீது. ஆளுதான் யாரோ நம்மள அடிக்க வர்றாங்கன்னு சத்தங்கேட்டு பன்னி நோண்டாம வுட்டுட்டு ஓடிட்ருக்கு… நல்லவேள மாடு ஓடியாந்தது… இல்லனா புள்ளய நோண்டி சின்னாபின்னமா ஆக்கிருக்கும். நீ என்ன பண்ற… அஞ்சாறு கல்லு கட்டிய எடுத்தாந்து போட்டு நல்லா மூடிவுட்டு… அஞ்சாறு முள்ளு மெளாறு வெட்டியாந்து மேல போட்டுவுடு. அப்பதான் பன்னிகின்னி எதும் வந்து நோண்டாது’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து அருகில் நின்றிருந்த மாட்டிடம் போனார்.
”எம்மா கருப்புச்சி தாய… எப்டிம்மா அங்கருந்த ஒணுக்கு பன்னி வந்து நோண்டன்து தெரிஞ்சி ஓடியாந்த…?’’ என்று கேட்டுக்கொண்டு அதன் முகத்திலும் கழுத்திலும் தடவிக்கொடுத்தார்.
தள்ளி நின்று நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த பூரணியம்மா, மெல்ல பக்கத்தில் வந்து தன் பிள்ளையைப் புதைத்த இடத்தைப் பார்த்ததும் கண்கலங்க ஆரம்பித்துவிட்டார். உடனே கவுண்டர் பேராமுட்டா கிழவியை பார்த்து கண்காட்ட, அவர் பூரணியம்மாவின் கையைப் பிடித்து, ”ஒண்ணுல்ல, வா தாயி… நாம கொட்டாய்க்கி போவம்’’ என்று சொல்லி மெதுவாகக் கூட்டிப்போனார்.
அடுத்த இரு வாரங்களுக்குள் கவுண்டர் ஊரிலிருந்த தன் வீட்டை விற்றுவிட்டு, பொருட்களையெல்லாம் பக்கத்து வீட்டு சாயுபுமார் மாட்டுவண்டியில் இரண்டு நடை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றிக்கொண்டு கொட்டாய்க்கு குடுத்தனம் வந்துவிட்டார். அதற்குள் காட்டுத்தீயென ஊரெங்கும் செய்தி பரவியிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசிக்கொண்டார்கள்.
‘ஊர்லருந்த எம்மாம் பெரிய வூட்ட வித்துட்டு… யாருமே இல்லாத கொல்லிக்காட்டுக்கு குடுத்தனம் போயிகீறான் பாரு, இந்த கவுண்டன். இவுனுக்கு கிறுக்கு கிறுக்கு எதனாதான் புடிச்சிருக்கும்… அதான் இப்டிலாம் பண்ணினுகீறான்.’
‘பாவம் இந்த முத்துசாமிக் கவுண்ரு. மொதல்ல கொல்லி போச்சு… இப்ப புள்ள போச்சு… அதான் ஊரும் வேணா ஒரு மண்ணும் வேணான்னு ஊரவுட்டு கொல்லிக்கி குடுத்தனம் போய்ட்டாரு. அவர அந்த அல்லாதான் காப்பாத்தணும்.’
‘செத்துப்போன புள்ளய போயி எந்த சம்சாரின்னா கொல்லில பொதிப்பானா…? பொதிச்சதும் இல்லாம புள்ளக்குட்டிங்கள கூட்டுனு அங்கயே குடுத்தனம் போயிகீறான் பாரு… இதெல்லாம் எங்க போயி முடியப்போதோ, தெர்ல.’
இன்னும் என்னவெல்லாமோ பேசிக்கொண்டார்கள். சிலர் கவுண்டரிடம் நேரடியாகவே கேட்டும் விட்டார்கள். எதுவும் சொல்லாமல் அவர் பாட்டுக்கு பதிலுக்கு புன்னகைத்துவிட்டு கடந்துவந்துவிட்டார்.
அம்மாசி பாட்டிதான் கவுண்டரை ஒருவழி பண்ணாமல் விடக்கூடாது என நினைத்துக்கொண்டு, தன் மகன் பெரியசாமியை துணைக்குக் கூட்டிக்கொண்டு இரண்டு நாட்களுக்கு முன், காலையில் எழுந்ததும் பொடிநடையாக நடந்து கொல்லிக்கே வந்துவிட்டார்.
கட்டுத்தெரு முன்னால் உட்கார்ந்து தீட்டுக்கல்லில் சின்ன ஆக்கருவாளை தீட்டிக்கொண்டிருந்த கவுண்டரிடம் நேராக வந்த அம்மாசி பாட்டி, ”ஏன்டா முத்துசாமி… நீ என்னதான் நெனச்சினுகீற ஒன் மனசுல…? புள்ள பெத்தவ எளம் ஒடம்புக்காரின்னுகூட பாக்காம… இந்த கொல்லிக்காட்டுக்கு ஈத்தாந்துகிறியே… இது ஒனுக்கே நல்லாகீதா சொல்லு…? யாரும் ஒண்ண கேக்க ஆளில்லன்னு ஒன் இஷ்டத்துக்கு ஆடினுகீறல்ல… அன்னிக்கி என்னடான்னா, எடத்த கேட்டாங்கன்னு ஊராருக்கு தூக்கி இந்தான்னு தந்துட்டு வந்து நிக்கிற… இன்னிக்கி என்னடான்னா, நீ பாட்டுக்கு ஊர்லருந்த வூட்ட வித்துட்டு இம்மாந்தொலவுல கீற கொல்லிக்கு குடுத்தனம் வந்துகீற… தெரியாமதான் கேக்கறன், கிறுக்கு கிறுக்கு எதனா புடிச்சிப்போச்சா ஒனுக்கு…? ஏன் இப்டிலாம் பண்ற…? இதெல்லாம் நல்லதுக்கில்ல பாத்துக்க…’’ என்று நிறுத்தாமல் அவர் பாட்டுக்கு வாயில் வந்ததெல்லம் சொல்லிக்கொண்டிருந்தார்.
உள்ளே அடுப்பங்கரையில் உட்கார்ந்திருந்த பூரணியம்மா, அம்மாசி பாட்டியின் குரல் கேட்டு எழுந்து வெளியில் வந்து, சத்தம் போடாமல் சுவரோரமாக நின்று அவர் பேசிமுடிக்கும் வரை காத்திருந்தவர் மெல்ல பக்கத்தில் போய் சொன்னார், ”இது ஒண்ணும் அவுரெடுத்த முடுவில்ல ஆயி… என் முடுவுதான். நானுதான் அவுருகிட்ட புள்ளய பொதச்ச இங்கயே குடுத்தனம் வந்துரலாம்னு சொன்னன்… அவுரும் செரின்னிட்டாரு. திட்றதுன்னா நீ என்னய திட்டு… அவுர ஒண்ணும் சொல்லாத.’’
பூரணியம்மா சொன்னதைக் கேட்டதும் சுர்ரென்று முகம் மாறியது அம்மாசி பாட்டிக்கு. மெல்ல பக்கத்தில் வந்தவர், ”ஓ… எல்லாம் ஒன் வேலதானா…? நடத்துடியம்மா… நீ நல்லா நடத்து. நானு எதுக்கு ஒண்ண போயி திட்டப்போறன்’’ என்று கோவமாகச் சொல்லிவிட்டு, திரும்பி கவுண்டரும் பூரணியம்மாவும் கூப்பிடக் கூப்பிட காதில் வாங்காமல், தன் மகனைக் கூட்டிக்கொண்டு வேகமாக நடந்து ஊர் நோக்கிப் போனார்.
இங்கே ஆச்சரியம் என்னவென்றால், கவுண்டர் தன் குடும்பத்தோடு கொல்லிக்கு குடுத்தனம் வந்த அடுத்த இரண்டாவது நாளே அவர் மச்சான் ராமு கவுண்டரும் ஊரிலிருந்த தன் வீட்டை காலி செய்துகொண்டு கவுண்டரின் கொட்டாய்க்கு மிக அருகில் சிறு கொட்டாய் போட்டுக்கொண்டு குடுத்தனம் வந்ததுதான்.
இன்னோர் ஆச்சரியம், ஊரிலிருந்த கவுண்டரின் வீட்டையும் இடத்தையும் எப்படியாவது பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் விடவேண்டுமென கங்கணம் கட்டிக்கொண்டு விலைக்கு கேட்டும் மிரட்டியும் பார்த்த ஊர் தலைவரிடமே கவுண்டர் வீடு தேடிப்போய் தன் வீட்டை விற்றுவிட்டு வந்ததுதான்.
அதிலும் அன்று, கவுண்டர் தன்னைத் தேடி வீட்டுக்கு வந்திருப்பதை வீட்டின் பின்னாலுள்ள திண்ணையில் உட்கார்ந்திருந்த தலைவரிடம் போய் அவரது மூத்த மகள் சொல்ல… பதறியடித்து எழுந்து வேகமாக வந்து பார்த்தவரால் முதலில் நம்பவே முடியவில்லை. திண்ணையில் உட்காரச் சொல்லி விஷயத்தைக் கேட்டதும் கலங்கிப் போனவர், ”கவுண்ர… அன்னிக்கு எதோ புத்தி கெட்டுப்போயி கேட்டுட்டன். அதப்போயி மனசுல வச்சினிருந்து வந்து, இன்னிக்கி தந்துட்டு போறன்னு சொல்றீங்களே… வேணாங் கவுண்ர… நாலஞ்சி புள்ளக்கார்ரு நீங்க. ஊருல எடம்னு ஒண்ணு இருக்குணும்… அது இன்னிக்கில்லனாலும் நாள பின்ன என்னிக்காது ஒதவும்’’ என்றார்.
தலைவர் சொன்னதைக் கேட்டுவிட்டு சிரித்த கவுண்டர், ”அதெல்லாம் எனுக்கு நல்லாவே தெரியும். இப்ப நானே வூட்ட விக்கணும்… அதுவும் வித்தா ஒன்கிட்டதான் விக்கணுன்னு வந்துகீறன், மறுக்காம வாங்கிக்க’’ என்று சொன்னார்.
எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் தலைவர். கவுண்டர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். கடைசியில் வேறு வழியின்றி வாங்க சம்மதித்தார். கூடவே ஒரு நிபந்தனையை, அதுவும் அன்புக் கோரிக்கையாக கவுண்டரிடம் வைத்து, அதற்கு ஒத்துப்பட்டால் மட்டுமே தான் வாங்கிக்கொள்வேன் என்றும் சொல்லிவிட்டார்.
”இன்னிக்கி நீங்க சொல்றீங்களேன்னு ஒங்க பேச்ச மீறாம வாங்கிக்கறன் கவுண்ர. நாள பின்ன எப்ப ஒங்குளுக்கு அந்தெடம் வேணுன்னு வந்து கேட்டாலும் தந்துருவன்… அதும் இன்னிக்கி என்ன வெல கொடுத்து வாங்கறனோ, அதே வெலக்கி அப்பயும் தருவன். இத நானு ஒங்குளுக்கு செஞ்ச கொடுமிக்கிலாம் பரிகாரமா நெனச்சி செய்யிறன்… இதுக்கு மட்டும் சம்மதன்னா சொல்லுங்க, இப்பயே வாங்கிக்கறன்’’ என்றார்.
கேட்ட கவுண்டருக்கு சட்டென்று கண்கலங்கிவிட்டது. மெல்ல புன்னகைத்துவிட்டு, ”செரி” என்றதும் தலைவர் வீட்டுக்குள் போய் எண்ணூறு ரூபாய் பணம் எடுத்துவந்து கவுண்டர் கையில் தந்துவிட்டு, கையோடு பேசியதை அப்படியே பக்கத்தில் உட்கார்ந்து பத்திரமாக எழுதி அதில் கையெழுத்தும் வாங்கிக்கொண்டார்.
முருகனைக் கூட்டிக்கொண்டு போய் மேட்டுத் துண்டு மரிசியில் குழந்தையைப் புதைத்த இடத்தருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த கவுண்டரைத் தேடிக்கொண்டு செவடன் வெப்பால மர வழியாக இறங்கி வேகமாக நடந்து வந்தான்.
பார்த்த கவுண்டர், செவடன் பக்கத்தில் வந்ததும் கேட்டார்.
”என்னடா செவடா… காலிலயே கால்ல சுடுதண்ணி ஊத்தனவன் மாரி ஓடியாரவன்…?’’
மூச்சு வாங்க பக்கத்தில் வந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்த செவடன் சொன்னான்.
”விசியம் தெரிமா கவுண்ர… நாளான்னிக்கி காவால தண்ணி வுட்ராங்களாம்… மூணு மாசம் வருமாம்… ராத்திரிதான் தண்ரா போட்டு சொன்னாங்க. நாளமறுநாளு ஓட்டி மல்லாட்டப் போட்டம்னா… இந்தவாட்டி மழய நம்பினில்லாம நல்ல மல்லாட்ட புடுங்கிரலாம், பாத்துக்குங்க’’ என்றான்.
கேட்ட கவுண்டருக்கு சிரிப்புதான் வந்தது. சத்தமாக சிரித்துவிட்டு கேட்டார், ”ஏன்டா செவடா, காவால தண்ணி வுட்றாங்க செரி… நம்ம கொல்லிக்கி காவா தண்ணி எப்டிடா வரும்…?’’
உடனே செவடன், ”அதலாம் ஓசன பண்ணாமயா வந்து சொல்வன் கவுண்ர’’ என்று சொல்லிவிட்டு, எழுந்து நின்று கிழக்காலப் பக்கம் பார்த்து, ”அதோ அங்க முடினூரான் கொல்லி மொடக்க வரிக்கும் கெள காவா தண்ணி வருதுல்ல… அங்கருந்து ஒரு காவா நோண்டி நம்ம கொல்லிக்கிக் கொண்டாந்துட்டா அப்ப தண்ணி வரும்ல…’’ என்றான், மெல்ல தலையாட்டி லேசாகச் சிரித்துக்கொண்டு.
கேட்ட கவுண்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. கீழே குனிந்து எதையோ யோசித்தவர், மெல்ல தலையை தூக்கி செவடனைப் பார்த்துக் கேட்டார்.
”ஓசனலாம் நல்லாதான் கீது… இம்மாந்தூரம் எப்டி காவா நோண்டியார்றது…?’’
”அந்தக் கவல ஒங்குளுக்கெதுக்கு கவுண்ர…? அத நானு பாத்துக்குறன். நாளக்கே ஏரு பூட்டி ஓட்டுங்க… மண்ணுலாம் நல்லா ஈரமாதான் கீது. பயிரு போட்ட நாலான்நாத்து பயிருங்குளுக்கு வுட காவாலருந்து உயிருதண்ணி வரும்… அது ஏம்பொறுப்பு.’’
செவடன் அவ்வளவு உறுதியாகச் சொன்னதைக் கேட்ட கவுண்டருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பல தடவை தனக்குள் நினைத்திருக்கிறார், ‘இந்த மொரம்புக் கொல்லில மட்டும் என்னிக்கில்ல என்னிக்காது காசு சேத்துவச்சி ஒரு கெணறு வெட்டிட்டம்னா போரும்… வருசம்பூரா பயிரு வக்கலாம். இல்லனா, காவா தண்ணி கொண்டாற வழிவாக்கியாவாது பண்ணிட்டம்னா போரும்… மழய நம்பினில்லாம மல்லாட்ட போட்டு புடிங்கிரலாம்’.
தான் நினைத்தது செவடன் வழியாக இப்போது நிஜமாகப்போவதை நினைத்து உள்ளுக்குள் துள்ளி மகிழ்ந்தார் கவுண்டர். அதை அவர் முகத்திலும் கண்ணிலும் கண்ட செவடன், அவரைக் காட்டிலும் அதிகமாக மகிழ்ந்திருப்பான்.
”செரிடா செவடா… நாளிக்கே ஏரு பூட்டி ஓட்டிர்றன்.’’
கவுண்டர் சொன்னதைக் கேட்டு புன்னகைத்த செவடன், ”செரி கவுண்ர… நானு வூட்டு வரிக்கும் போயி வரன்’’ என்று சொல்லிவிட்டு திரும்பி, வந்த வழியே நடந்து வேகமாகப் போனான்.
அடுத்த நாள் காலையில் அஜ்ஜான் கூவுவதற்கு முன்னால் எழுந்த கவுண்டர், மாணிக்கத்தை எழுப்பிக் கூட்டிக்கொண்டு தன் மச்சான் மாட்டுப்பட்டிக்குப் போய் நான்கு ஏர் மாடுகளைப் பிடித்துக்கொண்டு வந்து, இரண்டு ஏர் பூட்டி ஒன்றை தானும் இன்னொன்றை மாணிக்கமும் ஓட்டினார்கள்.
தெற்கால காட்டுவா மரத் துண்டில் முதலில் ஓட்டியவர்கள், அடுத்து துரிஞ்சி மரத் துண்டையும், அதற்கடுத்து எலந்தமரத் துண்டையும் வெயில் ஏறுவதற்குள் ஓட்டிவிட்டு கலப்பையையும் நுகத்தடியையும் காட்டுவா மர நிழலில் அவிழ்த்துப் போட்ட கவுண்டர், மாணிக்கத்தையும் ஏழுமலையையும் மாட்டைப் பிடித்துக்கொண்டு போய் வீட்டுக்குப் பின்னாலிருக்கும் தொட்டியில் தண்ணீர் காட்டிவிட்டு கட்டுத்தெருவில் கட்டி மல்லாட்டக்கொடி அள்ளிப் போடச் சொன்னார்.
”செரிய்யா’’ என்றுவிட்டு அவர்களும் பிடித்துப்போக, மெல்ல அங்கிருந்து மேட்டுக் கொல்லி மரிசிக்கு வந்து அங்கே வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த முருகனிடம் போய், ”எய்யா முருகா… வாய்யா சாமி வூட்டுக்கு போவலாம்’’ என்று கூப்பிட்டார் கவுண்டர்.
மண்ணில் வீடுகட்டி அதன் நடுவில் வர்ணக்கோல் நட்டு விளையாடிக் கொண்டிருந்த முருகன் தன் தந்தையின் குரல் கேட்டு தலையை நிமிர்த்திப்பார்த்து கேட்டான், ”ஏன்யா நம்மக் கொல்லிய எல்லாரும் மொரம்புக் கொல்லின்னு சொல்றம்…?’’
மகனின் கேள்வியைக் கேட்டு ரசித்துச் சிரித்த கவுண்டர், ”எங்க நீயே ஏன்னு சொல்லு பாப்பம்…?’’ என்றார்.
”எனுக்குத் தெரியாமதான கேக்கறன்… நீயே சொல்லுய்யா” என்றான்.
கவுண்டருக்கு எப்படியாவது அவனையே பதில் கண்டுபிடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால், ”அட மடயா… எங்க ஏன்ச்சி நின்னு நம்ம மொரம்புக் கொல்லிய ஒருவாட்டி சுத்தினும் பாரு’’ என்றார்.
எழுந்து நின்று சுற்றிலும் ஒருதடவை பார்த்தான்.
உடனே கவுண்டர் கேட்டார், ”எங்க, நம்ம கொல்லிலாம் சமமாவா கீது…?’’
இன்னொரு தடவை பார்த்துவிட்டு, ‘இல்லை’ என்று தலையாட்டினான்.
அடுத்ததாக, ”கீள குனிஞ்சி கை நெறயா மண்ண அள்ளிப் பாரு’’ என்றார்.
கீழே குனிந்து இரண்டு கையிலும் மண்ணை அள்ளிப் பார்த்தான்.
உடனே கவுண்டர், ”எங்க, நல்லா பாத்துச் சொல்லு… ஒன் கைல கீற மண்ணுலாம் எப்டி கீது…?’’ என்று கேட்டார்.
சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு மெல்ல தலை நிமிர்த்தி, ”கல்லுமரேவும் கீது… மண்ணுமரேவும் கீது’’ என்றான்.
மெல்ல உதடசைத்து சிரித்த கவுண்டர் கேட்டார், ”எங்க இப்ப சொல்லு பாப்பம்… ஏன் நம்ம கொல்லிய மொரம்புன்னு சொல்றம்…?’’
கொல்லியையும் கையில் வைத்திருந்த மண்ணையும் ஒருதடவை பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் கவுண்டரின் முகத்தை பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான்.
சத்தமாக சிரித்த கவுண்டர், கிழே குனிந்து குத்துக்காலிட்டு உட்கார்ந்து முருகனின் முகத்தைப் பார்த்துவிட்டு, கொல்லியையும் அவன் கையில் வைத்திருந்த மண்ணையும் காட்டி, ”அட மடயா… இப்டி பூமி சமமா இல்லாம மோடும் பள்ளமா கீதுல்ல… அதேமாரி மண்ணு பொடிசாவும் இல்லாம கல்லுமரே கெட்டிசாவும் இல்லாம நடுமத்திமா கீதுல்ல… அதாலதான் இத மொரம்புன்னு சொல்றம். நம்ம கொல்லி மட்டுல்ல… இத சுத்தினி கீற எடம்லாமே இதேமாரி கீறதாலதான், இந்த எடத்தயே எல்லாரும் மொரம்புன்னு சொல்றாங்க’’ என்றார்.
கண்கள் விரிய கேட்ட முருகன், ”அப்ப மொரம்புன்றது மண்ணுதானாய்யா…?’’ என்று கேட்டான்.
மெல்ல தலையசைத்து ‘ஆமாம்’ என்றுவிட்டு, நட்டுவைத்திருந்த வர்ணக்கோலை கையில் எடுத்துக்கொண்டு, ”வா போவலாம்’’ என்று திரும்பி வீடு நோக்கி நடந்தார் கவுண்டர்.
கேட்டு புன்னகைத்த முருகன், கவுண்டரின் பின்னால் நடந்துகொண்டு, ஏர் ஓட்டிய புழுதியில் இருந்து இரு மண்கட்டியை கையில் எடுத்து கைக்கொன்றாய் பிடித்துக்கொண்டு டப்பென ஒன்றோடொன்று தட்டிப் பார்த்தான். உடைந்து தூள் தூளாக உதிர்ந்தன. தெரியாத ஒன்றைத் தெரிந்துகொண்ட உற்சாகத்தில் ஆடிக்கொண்டு நடந்தான்.
மேற்குத் துண்டில் நடந்து, பீவேல மரத்தருகில் இருந்த சிறு வழியாகக் கீழே கிடந்த முள்ளை எடுத்து ஓரமாகப் புதரில் போட்டுவிட்டு ஏறி, நேராக வீட்டின் பின்னால் போய் சாக்கடையில் முகம், கை கால் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் போனார்கள்.
பூரணியம்மா வெங்காயம், தக்காளி, கத்திரிக்கா வெட்டிப்போட்டு ஒண்ணாவூத்தன சோறு பொங்கி வைத்திருந்தார். சுடச்சுட சாப்பிட்டுவிட்டு, கை கழுவ படிசொம்பில் வைத்திருந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு எழுந்து கவுண்டர் வெளியில் வரவும், அவர் மச்சானின் மனைவி இசைவள்ளி புட்டியில் எதையோ எடுத்துக்கொண்டு கண்கலங்கியபடி வேகமாக வந்து வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது.
[இன்னும்]
*